Friday, 19 October 2012

Catholic News in Tamil - 13/10/12

1. FABCன் நவம்பர் பொதுக் கூட்டத்துக்குத் திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி

2. திருத்தந்தை : ஆயர்கள் மாமன்றம் எம்மாவு அனுபவம்

3. மாமன்றத் தந்தையர் : திருஅவைக்குள்ளே ஒரு சுயமதிப்பீட்டுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி அழைப்பு விடுக்கின்றது

4. மாமன்றத் தந்தையர் : பல்சமயச் சமூகங்களில் கத்தோலிக்கர் வாழும் முறைகள்

5. குஜராத் மொழியில் ப்ரெய்ல் புதிய ஏற்பாட்டு நூல்

6. பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்ட 14 வயதுச் சிறுமி குணமடைய செபம்

7. ஐ.நா. அதிகாரிகள் : இயற்கைப் பேரிடர்கள் குறைப்பில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் முக்கிய பங்கு

8. ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளில் இன்னும் பத்தாயிரம் உள்ளன

9. இந்திய நிலமற்ற விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி

------------------------------------------------------------------------------------------------------

1. FABCன் நவம்பர் பொதுக் கூட்டத்துக்குத் திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி

அக்.13,2012. வருகிற நவம்பர் 19 முதல் 25 வரை வியட்நாமில் நடைபெறவிருக்கும் FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் பத்தாவது பொதுக் கூட்டத்துக்கு, பிலிப்பீன்சின் மனிலா பேராயர் கர்தினால் Gaudencio B. Rosalesஐ தனது சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வியட்நாம் கம்யுனிச நாட்டில் இத்தகைய கூட்டம் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.
வியட்நாமின் Xuân Lȏc மறைமாவட்ட மேய்ப்புப்பணி மையத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தின் நிறைவு நிகழ்வு Ho Chi Minh நகரப் பேராலயத்தில் இடம்பெறும்.  
19 ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான FABCன் பொதுச்செயலாளராக இருப்பவர் மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
21ம் நூற்றாண்டில் ஆசியத் திருஅவை எதிர்கொள்ளும் மேய்ப்புப்பணி சவால்கள் குறித்து நடைபெறவுள்ள இந்த நவம்பர் கூட்டத்தில் ஆயர்கள், இறையியலாளர்கள், திருஅவைத் தலைவர்கள் என ஏறக்குறைய நூறு பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2012ம் ஆண்டில் இந்த FABC கூட்டமைப்பு தனது 40ம் ஆண்டைச் சிறப்பிக்கிறது.

2. திருத்தந்தை : ஆயர்கள் மாமன்றம் எம்மாவு அனுபவம்

அக்.13,2012. கிறிஸ்தவ ஒன்றிப்பில் வெளிப்படையாக முன்னேறுவதற்கு இயேசு ஆண்டவர் உதவுவார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்வோர், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்து கொண்டோர், உலக ஆயர் பேரவைகளின் தலைவர்கள் என ஏறக்குறைய 500 பேருடன் இவ்வெள்ளியன்று மதிய உணவை அருந்திய பின்னர் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இந்த மதிய உணவின்போது, தனக்கு ஒருபக்கம் ஆங்லிக்கன் பேராயரும், அடுத்த பக்கம் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தலைவரும் அமர்ந்து உணவருந்தியதை மகிழ்ச்சியோடு குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த ஒன்றிப்பானது, நாம் ஒன்றிப்பை நோக்கிச் சேர்ந்து நடக்கிறோம் என்பதைக் காட்டுகின்றது என்று கூறினார்.
Synodus என்பது சேர்ந்து நடப்பதாகும், அன்று எம்மாவுசுக்கு நம் ஆண்டவர் இரண்டு சீடர்களோடு சேர்ந்து நடந்ததை இந்த ஆயர்கள் மாமன்றம் தனக்கு நினைவூட்டுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
மேலும், இந்த மதிய விருந்து காரணமாக, அன்றைய மாலைப் பொது அமர்வு 4.30 மணிக்குப் பதிலாக 5.45 மணிக்குத் தொடங்கும் எனவும் திருத்தந்தை அறிவித்தார்.

3. மாமன்றத் தந்தையர் : திருஅவைக்குள்ளே ஒரு சுயமதிப்பீட்டுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி அழைப்பு விடுக்கின்றது

அக்.13,2012. இச்சனிக்கிழமை காலை திருத்தந்தையின் முன்னிலையில்  செபத்துடன் தொடங்கிய 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 9வது பொது அமர்வில் 241 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.
கேரளாவின் சீரோ-மலபார்ரீதித் திருஅவைத் தலைவரான Ernakulam-Angamaly பேராயர் கர்தினால் George ALENCHERRY, சீரோ-மலங்கராரீதித் திருஅவைத் தலைவரான திருவனந்தபுரம் பேராயர் Baselios Cleemis THOTTUNKAL, C.M.I துறவு சபையின் அதிபர் அருள்தந்தை Jose PANTHAPLAMTHOTTIYIL, அரபுப் பகுதியின் இலத்தீன்ரீதி ஆயர் பேரவைத் தலைவரும் எருசலேம் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவருமான Fouad TWAL, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் Peter TURKSON உட்பட 24 பேர் இவ்வமர்வில் உரையாற்றினர்.
திருஅவைக்குள்ளே ஒரு சுயமதிப்பீட்டுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி அழைப்பு விடுக்கின்றது என்றுரைத்த கர்தினால் George ALENCHERRY, கிறிஸ்து யார், அவரது சீடர்களாக இருக்க வேண்டுமானால் எதையெல்லாம் அவர்கள் எதிர்கொள்ள வேண்டுமெனத் தெரியாமல் திருஅவைக்குள்ளே பலர் இருக்கின்றார்கள் என்று கூறினார்.
உலகாயுதப்போக்கு, தனிப்பட்டக் கிறிஸ்தவர்களையும் திருஅவைச் சமூகங்களையும் பாதித்துள்ளது என்றுரைத்த கர்தினால் ALENCHERRY, தனிப்பட்டக் கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வைப் புதுப்பிக்கவும், திருஅவையின் அமைப்புமுறைகள் மறுமதிப்பீடு செய்யப்படவும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி வலியுறுத்துகிறது என்று கூறினார்.
மேலும், பேராயர் Baselios Cleemis THOTTUNKAL பேசியபோது,  உலகின் 60 விழுக்காட்டு மக்கள் ஆசியாவில் வாழ்கின்றனர், கிறிஸ்தவம் உட்பட பல உலக மதங்களின் பிறப்பிடமாகவும் ஆசியா இருக்கின்றது, அறிவிப்பு, நற்செய்தி அறிவிப்பு போன்ற சொற்கள் இக்கண்டத்தில் வரவேற்புப் பெறுவதுபோல் தெரியவில்லை, ஆனால் சான்று பகரக்கூடியவர்களே மக்களுக்குத் தேவைப்படுகிறார்கள் என்று விளக்கினார்.
திருவழிபாடுகள், எம்மாவுஸ் அனுபவத்தை எடுத்துச் சொல்வதாகவும், மனித வாழ்வையும் மனித மாண்பையும்  ஊக்குவிக்கும் நீதி, சனநாயக விழுமியங்களை வளர்த்தல் போன்றவைகளுக்காகத் திருஅவை பணிசெய்வது இயேசுவின் விருப்பத்துக்குப் பணிந்த நடப்பதாக இருக்கும் எனவும் பேராயர் THOTTUNKAL கூறினார்.  
அருள்தந்தை Jose PANTHAPLAMTHOTTIYIL பேசியபோது, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குச் சமூகத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்துவதற்குத் தீவிர முயற்சிகள் எடுக்கப்படுமாறு பரிந்துரைத்தார்.

4. மாமன்றத் தந்தையர் : பல்சமயச் சமூகங்களில் கத்தோலிக்கர் வாழும் முறைகள்

அக்.13,2012. 232 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்ட இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இவ்வெள்ளி மாலைப் பொது அமர்வில் உரையாற்றிய சுவிட்சர்லாந்து நாட்டின், பேசில் பல்கலைக்கழக நுண்உயிரியல் பேராசிரியரும் திருப்பீட அறிவியல் கழகத்தின் தலைவருமான Werner Arber, அறிவியலுக்கும் மதநம்பிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விளக்கினார்.
இப்பொது அமர்வில் பேசிய கானடா நாட்டு ஆயர் Brian J. Dunn, குருக்களின் பாலியல் முறைகேடுகளால் திருஅவைமீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை மற்றும் ஏமாற்றங்களைப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி அகற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இம்மாமன்றத்தில் பேசிய திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான், கத்தோலிக்கருக்கு, குறிப்பாக, பல்சமயச் சமூகங்களில் வாழும் கத்தோலிக்கருக்குத் தங்களது மதத் தனித்துவம் குறித்த தெளிவான புரிதல் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
இன்னும், இப்பொது அமர்வில் பேசிய வல்லுனர் ஒருவர், புனிதம், நிதானம் மற்றும் விசுவாசத்துக்குப் பொதுப்படையாகச் சான்று பகருவதற்கான துணிவு ஆகியவற்றில் வளர, உலகாயுதப்போக்கு மேலோங்கி நிற்கும் மேற்குலகுக்கு, முஸ்லீம் குடியேற்றதாரர்கள் உதவுகிறார்கள் என்று தெரிவித்தார்.

5. குஜராத் மொழியில் ப்ரெய்ல் புதிய ஏற்பாட்டு நூல்

அக்.13,2012. பார்வையற்றவர்கள் வாசிக்கும் ப்ரெய்ல் எழுத்தில் குஜராத் மொழியில் புதிய ஏற்பாட்டு நூலை இவ்வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது குஜராத் தலத்திருஅவை.
உலகளாவியக் கத்தோலிக்கத் திருஅவையில் இவ்வியாழனன்று விசுவாச ஆண்டு தொடங்கியிருக்கும்வேளை, குஜராத் மாநிலத்தின் காந்திநகர் உயர்மறைமாவட்டம் இந்த விசுவாச ஆண்டைத் தொடங்கிய திருப்பலியில் இந்தப் புதிய ஏற்பாட்டு நூலை வெளியிட்டார் காந்திநகர் பேராயர் Stanislaus Fernandes.
பேராயர் Fernandesடன் சேர்ந்து, பங்களூரு புனித பேதுரு பாப்பிறை குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அருள்பணி செபஸ்தியான் பெரியண்ணா, குஜராத் மாநில இயேசு சபை அதிபரின் பிரதிநிதி அருள்தந்தை இலாரன்ஸ் தர்மராஜ், பார்வையற்றவர்க்கான இந்தப் புதிய ஏற்பாட்டு நூலைத் தயாரித்த இயேசு சபை அருள்தந்தை கிரிஷ் சந்தியாகு போன்றோர் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தினர்.
இதில், குஜராத் மாநில அரசின் பிரதிநிதிகள், பிறசமயப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டி கொடுத்த அருள்தந்தை கிரிஷ், இந்நூல் தயாரிப்பதற்குக் கிடைத்த உள்தூண்டுதல், இது தயாரிக்கப்பட்ட விதம் மற்றும் குஜராத்திலுள்ள ஏறக்குறைய அறுபதாயிரம் பார்வையிழந்தோருக்கு இந்நூல் உதவுவது குறித்து விளக்கினார்.
இயேசு சபை அருள்தந்தை கிரிஷ் சந்தியாகு, குஜராத் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பணி செய்து வருகிறார்.

6. பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்ட 14 வயதுச் சிறுமி குணமடைய செபம்

அக்.13,2012. தலிபான்களால் தாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைத் தனது தினசரிக் குறிப்பேட்டில் எழுதி, சிறுமிகளின் கல்விக்காக முயற்சித்த பாகிஸ்தான் நாட்டு 14 வயதுச் சிறுமி Malala Yousafzai தலிபான்களால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்வேளை, அச்சிறுமி விரைவில் குணம்பெறுவதற்கு அந்நாட்டினர் இவ்வெள்ளியன்று செபித்தனர்.
மேலும், பாகிஸ்தானின் கராச்சியில் தேவநிந்தனைச் சட்டத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 15 வயது கிறிஸ்தவச் சிறுவன் Ryan Brian Patus குறித்து கவலை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்.
இசுலாமிய அடிப்படைவாதிகளால் இச்சிறுவனின் வீடு தீ வைக்கப்பட்டுள்ளதுடன் அவனது குடும்பமும் துன்பத்துக்குள்ளாகியுள்ளது.
தனக்கு வந்த எஸ்.எம்.எஸ். செய்தியை என்னவென்றே அறியாமல் மற்றவர்களுக்கு அனுப்பியதாக அச்சிறுவன் கூறியுள்ளான்.
பாகிஸ்தானில் இந்த ஆண்டில் மட்டும் ரிம்ஷா மாசிக் உட்பட 22 பேர் தேவநிந்தனைக் குற்றம்  சாட்டப்பட்டுள்ளனர். 
இதற்கிடையே, ரிம்ஷா மாசிக் பொய்யாகக் குற்றம்சாட்டப்படக் காரணமான முஸ்லீம் குரு சிறையிலிருந்து பிணையலில் வெளிவந்துள்ளார் எனச் செய்திகள் கூறுகின்றன.

7. ஐ.நா. அதிகாரிகள் : இயற்கைப் பேரிடர்கள் குறைப்பில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் முக்கிய பங்கு

அக்.13,2012. உலகை அச்சுறுத்தும் இயற்கைப் பேரிடர்களின் ஆபத்துக்களைக் குறைப்பதற்கும், அப்பேரிடர்களின் கடும் விளைவுகளை எதிர்கொள்வதற்கும் பெண்களும் சிறுமிகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று ஐ.நா.அதிகாரிகள் கூறுகின்றனர்.
அக்டோபர் 13, இச்சனிக்கிழமையன்று அனைத்துலக இயற்கைப் பேரிடர்கள் குறைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், இநதப் பேரிடர் குறைப்பு நடவடிக்கைகளில் குடும்பங்களிலும் சமூகங்களிலும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இருக்கின்ற முக்கிய பங்கைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இயற்கைப் பேரிடர்களால் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய இருபது கோடி இளையோர் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இப்பேரிடர்களில் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர் மற்றும் காயமடைகின்றனர் என்றும் ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி கூறுகிறது.
இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து பங்களாதேஷில் பெண்களும், தென்னாப்ரிக்காவில் சிறுமிகளும் விழிப்புணர்வுக் கல்வியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் ஐ.நா.பொதுச்செயலர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
அனைத்துலக இயற்கைப் பேரிடர்கள் குறைப்பு தினம் அக்டோபர் 13ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேண்டுமென ஐ.நா.பொது அவை 2009ம் ஆண்டில் தீர்மானித்தது.

8. ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளில் இன்னும் பத்தாயிரம் உள்ளன

அக்.13,2012. இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளில் இன்னும் பத்தாயிரம் குண்டுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டு ஒன்று, ஜெர்மனியின் Potsdam என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டு அதைச் செயலிழக்கச் செய்துள்ளனர் வெடிகுண்டு நிபுணர்கள்.
இரண்டாம் உலகப்போர் முடிந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இவ்வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 250 கிலோகிராம் எடையுள்ள இந்தக் குண்டு, வெடிக்கும் தன்மையுடன் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள்.
இன்றும்கூட ஜெர்மனியின் பல பகுதிகளில் நிலத்துக்கடியில் ஏறத்தாழ பத்தாயிரம் வெடிக்காத குண்டுகள் புதையுண்டு கிடப்பதாக வெடிகுண்டு அகற்றும் பிரிவினரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

9. இந்திய நிலமற்ற விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி

அக்.13,2012. டெல்லி நோக்கி பேரணி நடத்திய மத்திய பிரதேச மாநிலத்தின் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட நிலமற்ற மற்றும் வீடற்ற விவசாய மக்களுக்கு நிலம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதன்பேரில் தங்களது போராட்டத்தை இவ்வெள்ளியன்று அவர்கள் நிறுத்திக் கொண்டனர்.
நிலச்சீர்திருத்தம் கோரி இம்மக்கள் நடத்திய போராட்டத்திற்குத் தலைமை வகித்த P. V. Rajagopal, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் இரமேசைச் சந்தித்ததையொட்டி இம்மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
கிராமப்புறச சமூகங்களின் நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகள் சார்பாக நிலம் மற்றும் வன உரிமைகளைத் தங்களுக்கு வழங்கக் கோரி Ekta Parishad என்ற நிலம் மற்றும் வன உரிமைகள் சமூக இயக்கம் 50,000 விவசாயிகளுடன் குவாலியரிலிருந்து டெ‌ல்‌லி நோக்கி நீண்ட பேரணியை மேற்கொண்டது.
வறுமை குறைப்பு, நிலம் மற்றும் வாழ்வாதார உரிமைகள், அனைத்து மக்களின் சுதந்திர‌ம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திய அவர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...