Saturday, 13 October 2012

Catholic News in Tamil - 11/10/12

1.  ஆயர்கள் மாமன்றத்தில் குவாத்தமாலா பேராயர் : மனித வாழ்வைப் புரிந்து கொள்வதற்கு உதவுவது, இயேசு கிறிஸ்துவும் அவரது நற்செய்தியுமே

2.   ஆயர்கள் மாமன்றத்தில் ஆங்லிக்கன் பேராயர் : இன்றைய தன்னிலை மறந்த உலகில் வாழ்வதற்குத் தியானம் முக்கியமானது

3. அமெரிக்காவின் ஒன்பது மாநிலங்களில் மத சுதந்திரத்திற்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது
4.   கருக்கலைப்பு மற்றும் பெண்சிசுக்கொலைகள் தொடர்பாக இந்தியாவில் 30 இலட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்

5.   தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை என்கிறார் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

6.   இறுதிக் கட்ட போரின் போது புலி உறுப்பினர்கள் சரணடைய விரும்பினர்: விக்கிலீக்ஸ்

7.   "நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க இலங்கை அரசு முற்பட வேண்டும்", சர்வேதேச நீதித்துறை

------------------------------------------------------------------------------------------------------

1.  ஆயர்கள் மாமன்றத்தில் குவாத்தமாலா பேராயர் : மனித வாழ்வைப் புரிந்து கொள்வதற்கு உதவுவது, இயேசு கிறிஸ்துவும் அவரது நற்செய்தியுமே

அக்.11,2012. நித்திய வாழ்வுக்கு கடவுள் நம் அனைவருக்கும் விடுக்கும் அழைப்பின் கண்ணோட்டத்தில் மனித வாழ்வைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு முதலில் உதவுவது இயேசு கிறிஸ்துவும் அவரது நற்செய்தியுமே என்று 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கூறினார் குவாத்தமாலாவின் லாஸ் ஆல்த்தோஸ் பேராயர் மாரியோ ஆல்பெர்த்தோ மொலினோ பால்மா.
மனித வாழ்வின் பொருளையும் அதன் கூறுகளையும் விழுமியங்களையும் இழக்கச் செய்யும் மரணம் குறித்த பிரச்சனைகளுக்குப் பதில் அளிப்பது இயேசு கிறிஸ்துவும் அவரது நற்செய்தியுமே என்றும் பேராயர் மொலினோ பால்மா கூறினார்.
இந்த ஒரு கண்ணோட்டமே தங்களது மேய்ப்புப்பணிகளுக்கு மிகவும் உதவுகின்றன என்றுரைத்த பேராயர் மொலினோ பால்மா, மனிதர் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இலத்தீன் அமெரிக்காவில் பல மேய்ப்புப்பணி முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று கூறினார்
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து வத்திக்கானில் நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் இப்புதன் மாலை பொது அமர்வில் 250 பேரவைத் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னிலையில் தொடங்கிய இந்தப் பொது அமர்வில், உள்ளூர் நேரம் மாலை 6 மணியளவில் இங்கிலாந்து ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் உட்பட 16 மாமன்றத் தந்தையர்கள் உரையாற்றினர்.

2.   ஆயர்கள் மாமன்றத்தில் ஆங்லிக்கன் பேராயர் : இன்றைய தன்னிலை மறந்த உலகில் வாழ்வதற்குத் தியானம் முக்கியமானது

அக்.11,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னிலையில் இப்புதன் மாலையில் இடம்பெற்ற 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 5வது பொது அமர்வில் உரையாற்றிய இங்கிலாந்து ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ், இன்றைய தன்னிலை மறந்த உலகில் வாழ்வதற்குத் தியானம் முக்கியமானது என்று கூறினார்.
பள்ளிச் சிறாரும், எந்தவித மதப் பின்னணியும் இல்லாதவர்களும், கிறிஸ்தவத்தைப் புரிந்து கொள்ள உதவுவதற்கு ஒரு கருவியாக, தியானம் செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பேராயர் வில்லியம்ஸ் கூறினார்.
விளம்பரங்கள், பணம் சேர்க்கும் வங்கி அமைப்புகள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட நுகர்வுத்தன்மை கொண்ட பித்துப்பிடித்த ஓர் உலகத்தில்வாழும் காரணத்தினால், இன்றைய நவீன உலகின் மக்கள் ஒரு குழப்பமான உணர்ச்சிகளோடு போராடி வருகின்றனர் என்றும் பேராயர் வில்லியம்ஸ் பேசினார்.
தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இன்றைய நிதி அமைப்பு முறைகள் மற்றும் விளம்பரக் கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்ட இவ்வுலகுக்குத் தியானமும், அமைதியான செபமுமே பதில் சொல்வதாக இருக்கும் என்றும் உரைத்த பேராயர், தியான வாழ்வைப் பயிற்சி செய்வதற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் அன்புடனும் வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தினார்.
6வது பொது அமர்வு இவ்வியாழன் மாலை தொடங்கியது.

3. அமெரிக்காவின் ஒன்பது மாநிலங்களில் மத சுதந்திரத்திற்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது
அக். 11, 2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மதச் சுதந்திரத்தை பாதுகாக்கும் புதியக் கொள்கைகளை வடிவமைப்பதை வலியுறுத்தும் நோக்கில் அந்நாட்டின் 9 மாநிலங்களைச் சேர்ந்த சமூகத்தலைவர்கள் ஒன்றிணைந்து தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
மதச் சுதந்திரத்தில் அக்கறை காட்டிவரும் இத்தலைவர்கள், அந்தந்த மாநிலத்தின் சட்டமன்றம், மதத்தலைவர்கள் மற்றும் ஏனைய சமூகத்தலைவர்களுடன் இணைந்து மத சுதந்திரம் மதிக்கப்படுதல் குறித்த புதிய கொள்ககளை வகுத்தல், அதற்கான கையேடுகளைத் தயாரித்தல் போன்றவற்றில் உதவுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத சுதந்திரம் மதிக்கப்படவேண்டியதன் தேவை குறித்து ஏற்கனவே அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒன்பது மாநிலங்களில் உருவாக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கான அமைப்பு, 2013ம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து 50 மாநிலங்களிலும் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

4.   கருக்கலைப்பு மற்றும் பெண்சிசுக்கொலைகள் தொடர்பாக இந்தியாவில் 30 இலட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்

அக். 11, 2012. பெண்குழந்தைகளைக் கருவிலேயே கண்டறிந்து கொல்லுதல் மற்றும் பெண் சிசுக்கொலைகள் காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 30 இலட்சம் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக வாழ்விற்கான பாப்பிறைக் கழகத்தின் உறுப்பினர் Pascoal Carvalho கூறினார்.
பெண் சிசுக்கொலைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள‌ புள்ளி விவரக் கணக்கைச் சுட்டிக்காட்டிய Carvalho, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக மதம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களில் காணப்படும் போக்குகளே இதற்கு முக்கியக் கார‌ணங்களாக இருந்துள்ளன‌ என்றார்.
கருக்கலைப்பும் பெண்சிசுக்கொலையும் மரணக்கலாச்சாரத்தின் வெளிப்பாடு எனவும் கூறினார் அவர்.
இந்நிலை தொடர்ந்தால், இன்னும் 20 ஆண்டுகளில் மணப்பெண்களுக்கு பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும் என்ற வாழ்விற்கான பாப்பிறைக்கழக உறுப்பினர் Carvalho, வாழ்வுக் கலாச்சாரத்தை எப்போதும் ஊக்குவிக்கும் திருஅவை, பெண்களுக்கான கல்வி, நல ஆதரவு, முன்னேற்றம் மற்றும் வாழ்வை என்றும் வலியுறுத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.

5.   தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை என்கிறார் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

அக். 11, 2012. இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தமிழ் மக்களை அரசு கைவிட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்கும் எண்ணமும் அரசிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய ஊடகம் ஒன்றுக்கு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியதையொட்டி இவ்வாறு கூறியுள்ளார்  வெளியுறவு துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்.
அரசியல் தீர்வு வழங்குவதாக்க் கூறி காலம் கடத்தும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தி இருந்தது தொடர்பாகவும் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசியல் தீர்வினை வழங்கும் பொருட்டே, நாடாளுமன்ற தெரிவுக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் இணைந்து கொண்டு தீர்வினை வழங்க உதவிபுரிய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

6.   இறுதிக் கட்ட போரின் போது புலி உறுப்பினர்கள் சரணடைய விரும்பினர்,- விக்கிலீக்ஸ்

அக். 11, 2012. இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சரணடைய விரும்பியதாக முன்னாள் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
2009 மே மாதம் 17, 18ம் தேதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தபோது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அல்லது வேறு சர்வதேச நிறுவனமொன்றின் ஊடாக இறுதி நேரத்தில் சரணடைய புலிகள் விரும்பியது தெரியவந்த்தாகக் கூறினார் அமைச்சர்.
இறுதி நேரத்தில் சர்வதேச சமூகமோ அல்லது புலம்பெயர்த் தமிழர்களோ தலையீடு செய்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என மரபு ரீதியில் போரை முன்னெடுத்து வந்த புலிகள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் நிறுவனம் தன் அறிக்கையில் கூறியுள்ளது.

7.   "நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க இலங்கை அரசு முற்பட வேண்டும், சர்வேதேச நீதித்துறை

அக். 11, 2012. இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண ஆயுததாரிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை எடுத்து இலங்கை அரசு நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று சர்வேதேச நீதித்துறை வல்லுனர்கள் அமைப்பு கூறியுள்ளது.
மஞ்சுளா திலகரட்ண மீதான தாக்குதல் நீதித்துறையின் சுதந்திரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகும் என்றுரைத்த அனைத்துலக நீதித்துறை வல்லுனர்கள் அமைப்பின் ஆசிய இயக்குனர் சாம் ஜாப்ரி, நாட்டில் உள்ள நீதிபதிகள் பாதுகாப்பாகவும், அச்சுறுத்தலுக்கு ஆளாகாமலும் பணியாற்றக்கூடிய ஒரு சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்குச் சுதந்திரமான ஒரு நீதி அமைப்புத் தேவை என்று கூறியுள்ள ஜாப்ரி, அரசு ஊடகம் மூலமாக நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுப்பது நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாரபட்சமற்ற தன்மையையும் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...