Saturday, 13 October 2012

Catholic News in Tamil - 10/10/12


1. 13வது உலக ஆயர்கள் மாமன்றம் : இறைவார்த்தையின் முக்கியத்துவம்

2. 13வது உலக ஆயர்கள் மாமன்றம் : திருஅவையில் பெண்களின் பங்கு

3. ஆயர்கள் மாமன்றத்தில் பிலிப்பீன்ஸ் பேராயர்:நற்செய்தியை அறிவிப்பவர் ஏழைகளின் ஏழ்மையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்

4. சிரியாவில் அமைதி ஏற்பட ஒப்புரவினால் மட்டுமே இயலும் : முதுபெரும் தலைவர் லஹாம்

5. அமெரிக்கர்களில் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் பாதிக்கும் குறைவே: புதிய ஆய்வு

6. அனைத்துலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

7. பாகிஸ்தானில் தலிபான்களால் சிறுமி தாக்கப்பட்டதற்கு ஐ.நா.அதிகாரி கண்டனம்

8. உலகில் 87 கோடிப் பேர் ஊட்டச்சத்துக் குறையுள்ளவர்கள், ஐ.நா.அறிக்கை

9. விண்ணில் பிரமாண்ட கருந்துளை, இந்திய அறிவியலாளர் கண்டுபிடிப்பு
------------------------------------------------------------------------------------------------------

1. 13வது உலக ஆயர்கள் மாமன்றம் : இறைவார்த்தையின் முக்கியத்துவம்

அக்.10,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து வத்திக்கானில் நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் பிரதிநிதிகள் இப்புதன் காலையில் சிறு குழுக்களாகப் பிரிந்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இம்மாமன்றத்தின் 5வது பொது அமர்வு இப்புதன் மாலையில் தொடங்கியது. இதில் இங்கிலாந்து ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த ஆங்லிக்கன் சபையின் கண்ணோட்டம் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், "Verbum Domini" என்ற இறைவார்த்தை பற்றிய அப்போஸ்தலிக்க ஏடு உலகில் வரவேற்கப்பட்டுள்ள விதம் குறித்த விரிவான அறிக்கையை, ஆயர்கள் திருப்பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, இச்செவ்வாய் மாலை நடைபெற்ற 4வது பொது அமர்வில் சமர்ப்பித்தார்.
2008ம் ஆண்டில் இடம்பெற்ற இறைவார்த்தை குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் கனியாக இவ்வேடு திருத்தந்தையால் வெளியிடப்பட்டது எனவும், இத்தாலியத்தில் அறுபதாயிரம் பிரதிகள் உட்பட உலகில் 20 கோடி பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் கர்தினால் Ouellet கூறினார்.
இறைவார்த்தைக்கும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பு குறித்தும் கர்தினால் விளக்கினார். இப்பொது அமர்வில் 253 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.

2. 13வது உலக ஆயர்கள் மாமன்றம் : திருஅவையில் பெண்களின் பங்கு

அக்.10,2012. திருஅவையில் பெண்களின் பங்கு, சுற்றுச்சூழலில் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் முக்கியத்துவம், விசுவாசத்துக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே உரையாடல் உட்பட பல தலைப்புக்களில் இச்செவ்வாய் மாலை பொது அமர்வில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
திருஅவையில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்களாக இருக்கின்றபோதிலும், அவர்களில் பலர் தாங்கள் பாகுபடுத்தப்படுவதாக உணர்வதால், பெண்கள் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்படாததற்கான காரணம் தெளிவாக விளக்கப்பட வேண்டும் என இப்பொது அமர்வில் கூறப்பட்டது.
பெண்கள் திறமையற்றவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் எனபதற்காக அவர்கள் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்படவில்லை என்பது அர்த்தமல்ல, மாறாக, குருவானவர், மனித சமுதாயத்தை மணப்பதற்காக இவ்வுலகுக்கு வந்த கிறிஸ்துவின் பிரதிநிதி என்பது மட்டுமே காரணம் என்றும் இப்பொது அமர்வில் கூறப்பட்டது.
எனவே புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குப் பெண்களின்  முக்கியத்துவம் தெளிவாகக் குறிக்கப்பட வேண்டும், ஏனெனில், திருஅவையில் தங்களது இருப்பையும் தங்களது பங்கையும் மகிழ்ச்சியோடு ஏற்கும் பெண்கள் இன்றி புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி செய்வது இயலாத ஒன்று எனவும் இச்செவ்வாய் பொது அமர்வில் மாமன்றத் தந்தையர் கூறினர்.

3. ஆயர்கள் மாமன்றத்தில் பிலிப்பீன்ஸ் பேராயர்:நற்செய்தியை அறிவிப்பவர் ஏழைகளின் ஏழ்மையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்

அக்.10,2012. நற்செய்தியை அறிவிப்பவர் ஏழைகளின் ஏழ்மையைப் பகிர்ந்து கொள்ளும்வரை ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பது இயலக்கூடியதே என்று இச்செவ்வாய் பொது அமர்வில் கூறினார் பிலிப்பீன்ஸ் Lingayen-Dagupan பேராயர் Socrates Villegas.
நற்செய்தி அறிவிப்பவர்க்குத் தாழ்மையும் ஒருமைப்பாட்டுணர்வும் அவசியம் என்றுரைத்த பேராயர்  Villegas, காலியான வயிறுகளுக்கு நற்செய்தியைப் போதிக்க முடியும், ஆயினும் போதகரின் வயிறும் தனது பங்கு மக்களின் வயிறுகளைப் போன்று காலியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இன்னும், இச்செவ்வாய் பொது அமர்வில் உரையாற்றிய நியுயார்க் கர்தினால்  திமோத்தி டோலன், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் முதல் திருவருள்சாதனம் ஒப்புரவு திருவருள்சாதனம் என்று கூறினார்.

4. சிரியாவில் அமைதி ஏற்பட ஒப்புரவினால் மட்டுமே இயலும் : முதுபெரும் தலைவர் லஹாம்

அக்.10,2012. சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டுமானால் ஒப்புரவு ஒன்றினால் மட்டுமே இயலக்கூடியது என்று மெல்கித்தே கிரேக்கரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் 3ம் Grégoire Laham ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து சண்டை இடம்பெறுகிறது, குழப்பம் மேலோங்கி இருக்கிறது, இந்தப் பிரச்சனைகளுக்குரிய சரியான தீர்வுகள் அரசிடமோ, எதிர்தரப்பிடமோ அல்லது பன்னாட்டுச் சமுதாயத்திடமோ யாரிடமும் கிடையாது என்றும் முதுபெரும் தலைவர் லஹாம் கூறினார்.
திருஅவை சிரியா அரசுக்கு எதிராகவோ சார்பாகவோ இல்லை, ஆனால் திருஅவை அன்புக்குச் சாட்சியாக இருக்கவும் சிரியாவைக் காப்பாற்றவும் விரும்புகிறது எனவும் அவர் கூறினார்.

5. அமெரிக்கர்களில் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் பாதிக்கும் குறைவே: புதிய ஆய்வு

அக்.10,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 48 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர், 22 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் மற்றும் ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் எம்மதத்தையும் சாராதவர்கள் என்று மதம் மற்றும் பொது வாழ்வு குறித்த Pew அமைப்பு எடுத்த புதிய ஆய்வு கூறுகிறது.
1972ம் ஆண்டில் 62 விழுக்காட்டு அமெரிக்கர்கள் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் என்றும், 26 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் என்றும், 7 விழுக்காட்டினர் எம்மதத்தையும் சாராதவர்கள் என்றும் தங்களைக் காட்டிக் கொண்டனர், ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

6. அனைத்துலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

அக்.10,2012. மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என உலகின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருவதை வரவேற்கும் அதேவேளை, மரண தண்டனையை இன்னும் நிறைவேற்றும் நாடுகள் அதனை இரத்து செய்யுமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்டோபர் 10, இப்புதனன்று அனைத்துலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி பிரான்சில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒலி-ஒளிச் செய்தி அனுப்பிய பான் கி மூன், மரண தண்டனை நிறைவேற்றுவது, வாழ்வதற்கான உரிமை உட்பட அனைத்து மனித உரிமைகளுக்கும் எதிரானது என்று பேசினார்.
தற்போது உலகில் 155 நாடுகள் தங்களது அரசியல் அமைப்பிலிருந்து மரண தண்டனையை நீக்கியுள்ளன மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் இத்தண்டனையை நிறைவேற்றாமலும் இருக்கின்றன என்றும்  ஐ.நா.பொதுச்செயலர் குறிப்பிட்டுள்ளார்.

7. பாகிஸ்தானில் தலிபான்களால் சிறுமி தாக்கப்பட்டதற்கு ஐ.நா.அதிகாரி கண்டனம்

அக்.10,2012. பாகிஸ்தானின் வடமேற்கேயுள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கு பழங்குடியினப் பகுதியில் சிறுமிகளின் கல்விக்காகக் குரல்கொடுத்துவந்தவரும், தலிபான்களின் கொடுமைகளை வெளிக்கொணர்ந்தவருமான Malala Yousufzai என்ற 14 வயதுச் சிறுமி மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஐ.நா. அதிகாரி Leila Zerrougui.
சண்டை இடம்பெறும் இடங்களில் சிறாரின் பாதுகாப்புக்கான  ஐ.நா.பொதுச்செயலரின் சிறப்புப் பிரதிநிதி Zerrougui, பாகிஸ்தானின் Tehrik-i-Taliban என்ற குழுவால் இச்செவ்வாயன்று சுடப்பட்ட இரண்டு பள்ளிச் சிறுமிகளும் விரைவில் குணமடைய வேண்டுமென்ற தனது ஆவலைத் தெரிவித்துள்ளார்.
கல்வி, சிறாரின் அடிப்படை உரிமை என்று கூறிய Zerrougui, இந்த தலிபான் குழு அனைத்துச் சிறாரும் கல்வி பெறுவதற்குரிய உரிமையை மதிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். 
ஸ்வாத் பகுதியின் முக்கிய நகரமான மின்கோராவில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு வாகனத்தை தலிபான்கள் வழியில் நிறுத்தியதாகவும், அந்தக் வாகனத்தில்  சிறுமி மலாலா இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு பின்னர் துப்பாக்கிசூடு நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
"கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் இடமாக தனது நாடு வரவேண்டும் என்பதே எனது கனவு" என்ற நோக்குடன் மலாலா எழுதிய  தினசரி குறிப்புகளுக்காக, பாகிஸ்தானின் தீரச் செயலுக்கான தேசிய விருது அவருக்கு ஏற்கனவே கிடைத்திருக்கிறது.
மலாலாவுக்கு தலையிலோ அல்லது கழுத்திலோ குண்டு பாய்ந்ததாகவும், ஆனால் உயிராபத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுவிட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
தலிபான்கள் ஸ்வாத் பள்ளத்தாக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது மலாலாவுக்கு வெறும் 11 வயதுதான். அந்தப் பகுதியிலுள்ள பெண்கள் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென தலிபான்கள் அப்போது உத்தரவிட்டிருந்தனர். அந்த நேரத்தில் ஆயுதம் தாங்கியவர்களால் தங்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களை மலாலா வெளியுலகுக்கு தெரிவித்துவந்தார்.

8. உலகில் 87 கோடிப் பேர் ஊட்டச்சத்துக் குறையுள்ளவர்கள், ஐ.நா.அறிக்கை

அக்.10,2012. உலகில் ஏறத்தாழ 87 கோடிப் பேர் அதாவது எட்டுப் பேருக்கு ஒருவர் வீதம் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் துன்புறும்வேளை, உலகில், குறிப்பாக வளரும் நாடுகளில் பசிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று இச்செவ்வாயன்று ஐ.நா. வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் துன்புற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் சிறிது குறைந்துள்ளதாகக் கூறிய இப்புதிய அறிக்கை, கடந்த 20 ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து 2015ம் ஆண்டுவரை ஒவ்வோர் ஆண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் வளரும் நாடுகளில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையுள்ளவர்களை 12.5 விழுக்காடாகக் குறைக்கலாம் என்றும் கூறுகிறது.
இன்றைய உலகில் இவ்வளவு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வாய்ப்புகள் இருக்கின்றபோதிலும், 5 வயதுக்குட்பட்ட 10 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் எடை குறைவாகவே உள்ளனர் என்றும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் ஆண்டுதோறும் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் இறக்கின்றனர் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

9. விண்ணில் பிரமாண்ட கருந்துளை, இந்திய அறிவியலாளர் கண்டுபிடிப்பு
அக்.10,2012. கன்னிராசி விண்மீன் மண்டலத்திற்கு கோடிக்கணக்கான கிலோ மீட்டருக்கு அப்பால், விண்ணில் உள்ள வாயு, தூசி, ஒளி போன்றவற்றை, தன்பக்கம் ஈர்க்கும் பிளாக் ஹோல்ஸ் என்ற கருந்துளையை இந்திய அறிவியலாளர் தலைமையிலான குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
பிரிட்டன் கேம்ப்ரிட்ஜை சேர்ந்த, இந்திய அறிவியலாளர் Manda Banerji தலைமையிலான குழுவினர் "ULASJ1234+0907' என்ற சக்தி வாய்ந்த கருந்துளையை கண்டறிந்துள்ளனர்.
விண்ணில் இருக்கும் இந்த கருந்துளைகள், அடர்த்தியான தூசியால் மூடப்பட்டிருப்பதால், இதற்கு முன் இதனைக் கண்டறிவதில் சிரமம் இருந்தது. ஆனால், தற்போது அதிநவீன தொலைநோக்கியைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி செய்ததில், இவை, அதிகளவில் கதிர் வீச்சை வெளியிடுவது தெரிந்தது என்று பானர்ஜி கூறினார்.
இது பூமியிலிருந்து மிகவும் தொலைவில் இருப்பதால், இதன் ஒளி, பூமியை வந்தடைய 1100 கோடி ஆண்டுகள் ஆகும். இது, சூரியனைவிட ஆயிரம் கோடி மடங்கு அதிக அடர்த்தியானது. நமது பால்வழி மண்டலத்தை விட, பத்தாயிரம் மடங்கு அடர்த்தி மிக்கது. இதுபோன்ற சக்தி வாய்ந்த, நானூறு கருந்துளைகள் விண்ணில் இருக்கக்கூடும். அனைத்து விண்மீன் மண்டலங்களிலும், இவ்வகை பெரியக் கருந்துளைகள் இருக்கும். அவை, அருகிலுள்ள விண்மீன் மண்டலங்களோடு மோதி, அந்த விண்மீன் துகள்களை, தன்னுள் இழுத்துக் கொள்ளும் என்றும் பானர்ஜி கூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...