Wednesday, 10 October 2012

Catholic News in Tamil - 09/10/12



1. சிரியாவில் அமைதி நிலவ உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர்கள் அழைப்பு

2. ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் கிரேசியஸ்

3. கர்தினால் Wuerl  நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதாக அமைய வேண்டும்

4. அரபு மொழியிலும் திருத்தந்தையின் புதன்பொது மறைபோதகம்

5. அக்டோபர் 11ம் தேதி விசுவாச ஆண்டு ஆரம்பம்

6. கத்தோலிக்கத் தலைவர்கள் மருத்துவ நொபெல் விருது அறநெறியியலுக்கு கிடைத்த வெற்றி

7. வெனெசுவேலாவின் புதிய அரசுத்தலைவருக்குத் தலத்திருஅவை வரவேற்பு

8. பழங்குடி மக்கள் ஊதியம் கேட்டுப் போராட்டம்

------------------------------------------------------------------------------------------------------

1. சிரியாவில் அமைதி நிலவ உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர்கள் அழைப்பு

அக்.09,2012. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்றாவது பொது அமர்வு இச்செவ்வாய் காலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னிலையில் காலை செபத்துடன் ஆரம்பமானது.
இம்மாமன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் ஒருவரான மெக்சிகோ நாட்டு குவாதலஹாரா பேராயர் கர்தினால் தலைமையில் தொடங்கிய இம்மாமன்றத்தில் 142 மாமன்றத் தந்தையர்கள் உட்பட 255 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காலை 9 முதல் பகல் 12.30 வரை நடைபெற்ற காலை பொது அமர்வில் 21 மாமன்றத் தந்தையர்கள் உரையாற்றினர்.
சிரியாவில் அமைதி நிலவ வேண்டுமென்று இச்செவ்வாய் காலை பொது அமர்வில் அழைப்பு விடுத்த மாமன்றத் தந்தையர்கள்சிரியாவில் கடும் சண்டையினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தனர்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் சவால்கள் குறித்தும் பேசிய மாமன்றத் தந்தையர்கள், குடியேற்றதாரர்க்கு நற்செய்தி அறிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
மேலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முன்னிலையில் இத்திங்கள் மாலை 4.30 மணிமுதல் 7 மணிவரை இடம்பெற்ற இந்த ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது பொது அமர்வில் ஆசியாவுக்கெனஆசிய ஆயர்கள் பேரவையின் கூட்டமைப்பின் பொதுச்செயலர் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் உட்பட ஒவ்வொரு கண்டத்திற்கும்அக்கண்டத்தின் ஆயர்கள் பேரவையின் கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர்.
ஐரோப்பாவுக்கென எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் Péter ERDÖ,  ஆப்ரிக்காவுக்கென Dar es Salaam பேராயர் கர்தினால்Polycarp PENGOஇலத்தீன் அமெரிக்காவுக்கென Tlalnepantla பேராயர் Carlos AGUIAR RETESஓசியானியாவுக்கென நியுசிலாந்தின் வெல்லிங்டன் பேராயர் John Atcherley DEW ஆகியோர் உரையாற்றினர்.
256 பேர் கலந்து கொண்ட இந்தப் பொதுஅமர்வில் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

2. ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் கிரேசியஸ்

அக்.09,2012. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது பொது அமர்வில் உரையாற்றிய மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்சில ஆசிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் மீதான அடக்குமுறைத் துன்பங்கள் அதிகரித்து வந்தாலும்இத்துன்பங்களுக்கு மத்தியிலும் வீரத்துவமான சான்று வாழ்க்கையை அந்நாடுகளில் காண முடிகின்றது என்று கூறினார்.
விசுவாசத்தை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு அதனை இன்னும் உண்மையுடன் வாழ்ந்து அதிக நம்பிக்கையுடன் அதனை அறிவிப்பதற்கு ஆசிய மக்கள் விசுவாச ஆண்டை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.
ஆசிய மக்களுக்கு மதம் என்பது கோட்பாடுகளுக்கு அல்லது சட்ட விதிமுறைகளுக்குப் பணிவதைவிட ஒருவரின் சீடத்துவத்தை அதிகமாகக் கொண்டிருப்பதாகும் என்றும்இயேசு என்ற மனிதரும் அவரது வாழ்வுமரணம்உயிர்ப்பு ஆகியவையும் மிகுந்த கவர்ச்சியைக் கொடுப்பதாகவும் கூறினார் அவர்.
ஆசிய மக்களின் மனநிலைஆய்வுமுறையான தியானத்தைவிட ஆழ்நிலை தியானத்தில் அதிகமான அர்த்தத்தைக் கண்டுகொள்வதால்,திருவழிபாடுகளிலாவது ஆழ்நிலைத் தியானங்களில் கவனம் செலுத்தப்பட்டால் அவற்றில் மக்கள் இறைப்பிரசன்னத்தை உணருவதற்கு ஓர் ஆழமான திருப்தியை அளிக்கும் என்றும் கர்தினால் கிரேசியஸ் பரிந்துரைத்தார்.
உலகத் தாராளமயமாக்கல் ஆசிய மக்கள் வாழ்வின் ஒவ்வொரு கூறிலும் தற்போது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் உரைத்த மும்பை கர்தினால்ஆசியாவில் உலகாயுதப் போக்கும்பொருளே முக்கியம் என்ற கொள்கையும் அதிகமாகப் பரவி வருகின்றது என்றும்,திருமணமுறிவுகள் சமூகக் கலாச்சாரத்தில் தடைசெய்யப்பட்டிருந்த ஆசியாவில் தற்போது இவைப் பொதுவான ஒன்றாக இருக்கின்றன என்றும்உறுதியான குடும்ப அமைப்புகளும் சிதைந்து வருகின்றன என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.

3. கர்தினால் Wuerl  நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதாக அமைய வேண்டும்

அக்.09,2012. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது பொது அமர்வில் இத்திங்கள் மாலை உரையாற்றிய வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald W. Wuerl, விசுவாசம் இன்றைய காலத்துக்குப் பொருத்தமாக இருக்கும் விதத்தைக் கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து விலகியிருப்பவர்களுக்கு காட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இக்காலத்தில் நற்செய்தி அறிவிப்புப்பணி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசிய கர்தினால் Wuerl, நற்செய்தி அறிவிப்புப்பணி,திருஅவையின் பாரம்பரிய விசுவாச வாழ்வில் வேரூன்றப்பட்டதாய்இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்றுரைத்தார்.
இலத்தீனில் 45 நிமிடங்களுக்குமேல் உரையாற்றிய கர்தினால் Wuerl, உலகின் எல்லாப் பகுதிகளையும் உலகப்போக்கின் சுனாமி அடித்துச் சென்று, கடவுளின் இருப்பை மறுக்கின்ற போக்கை விட்டுள்ளது என்றும் கூறினார்.
மனிதராக இருப்பது என்பதன் புரிந்து கொள்ளுதலே கடவுள் இன்றி திசைமாறும் என்றும் அவர் ஆயர்கள் மாமன்றத்தில் எடுத்துரைத்தார்.

4. அரபு மொழியிலும் திருத்தந்தையின் புதன்பொது மறைபோதகம்

அக்.09,12. அக்டோபர் 10ம் தேதி இடம்பெறும் புதன் பொது மறைபோதகத்தில் அரபு மொழியிலும் திருத்தந்தையின் உரை வழங்கப்படும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி இச்செவ்வாயன்று அறிவித்தார்.
திருத்தந்தை தனது புதன் பொது மறைபோதக உரைகளைப் பல்வேறு மொழிகளில் நிகழ்த்தி வருகிறார். இப்புதன்கிழமையிலிருந்து ஒவ்வொரு புதன் பொது மறைபோதகத்திலும் அவரது உரை அரபு மொழியிலும் இடம்பெறும் என அறிவித்தார் அருள்தந்தை லொம்பார்தி.
திருத்தந்தையின் புதன் பொது மறைபோதக உரையையும் வாழ்த்தையும் ஒருவர்  அரபு மொழியில் வாசிப்பார் என்றும்அண்மையில் திருத்தந்தை லெபனனுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவர்களுக்குத் தனது தொடர்ந்த ஆதரவை அளிக்கும் நோக்கத்திலும்அப்பகுதியின் அமைதிக்குத் தொடர்ந்து உழைக்கவும் அதற்காகச் செபிக்கவும் அனைவருக்கும் இருக்கும் கடமையை நினைவுபடுத்தவும் இப்புதிய முயற்சியைத் திருத்தந்தை தொடங்கவுள்ளார் எனவும் அருள்தந்தை லொம்பார்தி மேலும் கூறினார்.

5. அக்டோபர் 11ம் தேதி விசுவாச ஆண்டு ஆரம்பம்

அக்.09,2012. இக்காலத்தில் கிறிஸ்தவ விசுவாசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குப் பதில் சொல்லும் விதமாகஅக்டோபர் 11ம் தேதி வருகிற வியாழனன்று தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டு அமையும் என்று புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella அறிவித்தார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டின் நிறைவையொட்டித் திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள விசுவாச ஆண்டின் கொண்டாட்டங்கள் குறித்து இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் பேசிய பேராயர் Fisichellaஇந்த விசுவாச ஆண்டை திருத்தந்தை 16ம் பெனடிக்ட்வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தி தொடங்கி வைக்கிறார் என்றார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பெரும்பங்காற்றிய தந்தையர்களுள் இன்னும் வாழும் தந்தையரும்உலகின் ஆயர்கள் பேரவைகளின்  தலைவர்களும்தற்போது வத்திக்கானில் இடம்பெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தந்தையரும் இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் பேராயர் Fisichella அறிவித்தார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பெரும்பங்காற்றிய தந்தையர்களுள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் 70 தந்தையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் உரைத்த பேராயர் Fisichellaவிசுவாசம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்தவும் இந்த விசுவாச ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கினார்.

6. கத்தோலிக்கத் தலைவர்கள் மருத்துவ நொபெல் விருது அறநெறியியலுக்கு கிடைத்த வெற்றி

அக்.09,2012. உடலின் முதிர் உயிரணுக்களைக்கூட வளருகின்றஉடலில் எந்த இடத்திலும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்தக்கூடிய உயிரணுக்களாக மாற்றியமைக்க முடியும் என்ற கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டுள்ள மருத்துவ நொபெல் விருது அறவியலுக்கு கிடைத்த வெற்றி என்று ஐரோப்பியக் கத்தோலிக்கத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த John B. Gurdon, ஜப்பானைச் சேர்ந்த Shinya Yamanaka ஆகிய இரு அறிவியலாளர்களின் மனித முதிர் உயிரணுக்கள் குறித்த ஆய்வு முடிவுகள் முக்கியமான மைல்கல் என்று ஐரோப்பிய சமுதாய அவையின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் கத்தோலிக்கத் திருஅவைக்கு உதவிபுரியும் Anscombe Bioethics மையமும் இந்த நொபெல் விருதை,மாபெரும் ஒழுக்கநெறியியல் சாதனையின் விருது எனப் பாராட்டியுள்ளது.
இவ்விரு அறிவியலாளரும் இணைந்து முதிர் உயிரணுக்கள் குறித்தும்உடல் உறுப்புகள் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என்பதும் குறித்தும் ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு அறிவியலாளர்களின் ஆராய்ச்சிக்கும்,மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
குடலிலிருந்து உயிரணு மாதிரியொன்றை எடுத்து அதன்மூலம் தவளைகளை குளோனிங் மூலம் உருவாக்கியவர் பேராசிரியர் ஜான் குர்டோன்.
அதேபோல பேராசியர் யமானாகா உயிரணுக்களின் செயல்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்தும் நோக்கோடு மரபணுக்களையே மாற்றிச் சாதனை புரிந்தவர்.
மேலும்பிரான்ஸைச் சேர்ந்த செர்ஜி ஹரோச்சிஅமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வினிலேன்ட் ஆகியோர் நொபெல் இயற்பியல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கணனித் துறையில் மிக முக்கியமான குவாண்டம் இயற்பியல் குறித்து ஆராய்ச்சி செய்துள்ள இவர்களின் ஆராய்ச்சியேபுதிய வகையிலான சூப்பர் பாஸ்ட் கணனிகளைத் தயாரிக்கும் ஆராய்ச்சிக்கு முதல்படி என்று நொபெல் விருது அறிவிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இது மட்டுமல்லாமல்புதிய வகையிலான கடிகாரங்களைத் தயாரிக்க இவ்வாய்வு  முன்னோடியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. வெனெசுவேலாவின் புதிய அரசுத்தலைவருக்குத் தலத்திருஅவை வரவேற்பு

அக்.09,2012. தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் 54.42 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று நான்காவது தடவையாக அந்நாட்டின்  அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹூகோ சாவேஸ் ஃபிரியாசை Chiquinquirá அன்னைமரி விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளது தலத்திருஅவை.
2019ம் ஆண்டு வரை பதவியில் இருக்கவுள்ள அரசுத்தலைவர் ஹூகோ சாவேஸ்வருகிற நவம்பர் 18ம் தேதி நடக்கவுள்ள Chiquinquiráஅன்னைமரி விழாத் திருப்பலியில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று அப்பசிலிக்கா அதிபர் அருள்பணி Eleuterio Cuevasதெரிவித்தார்.
வெனெசுவேலா தனது சனநாயக சோசலிஸ பாதையில் தொடர்ந்து வீறுகொண்டு பயணிக்கும் என்று ஹூகோ சாவேஸ்வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இலத்தீன் அமெரிக்காவிலிருந்துஅமெரிக்கா ஐக்கிய நாட்டுக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் தலைவர்களில் 58 வயதான ஹூகோ சாவேஸ் அதிபர் சாவேஸ் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.
எண்ணெய்வளம் மற்றும் இயற்கை வாயு என உலகின் பெரும்பங்கு இயற்கைவளப் படிமங்களை கொண்ட நாடு வெனெசுவேலா என்பது குறிப்பிடத்தக்கது.

8. பழங்குடி மக்கள் ஊதியம் கேட்டுப் போராட்டம்

அக்.09,201. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தங்களின் உழைப்புக்கு ஊதியம் தரப்படவில்லை என்று கூறி ஏறக்குறைய 15 ஆயிரம் பழங்குடி மக்கள் Barwaniல் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். 
மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் தாங்கள் செய்த வேலைக்கு ஊதியம் தரப்படவில்லை என்ற இம்மக்களின் புகார்களை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லவிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் புகாரை இம்மாதம் 15ம் தேதி ஐ.நா.வில் சமர்ப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள். 
மத்திய பிரதேச மாநிலத்தின் 50 மாவட்டங்களில் ஒன்றான Barwaniல் 15 ஆயிரம் மக்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...