Saturday, 6 October 2012

Catholic News in Tamil - 05/10/12

1. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் 262 மாமன்றத் தந்தையர்கள்

2. விசுவாச ஆண்டு பரிபூரண பலன்

3. அனைத்துலக காரித்தாஸ் தலைவர் : ஏழ்மை அமைதிக்கு மிகப்பெரும் எதிரி

4. மொசாம்பிக்கில் சனநாயகத்தை வலுப்படுத்துமாறு ஆயர்கள் வலியுறுத்தல்

5. பசிபிக் பகுதியில் மின்னஞ்சல்வழி நற்செய்தி

6. மடகாஸ்கரில் இயேசு சபை அருள்தந்தை ஒருவர் படுகொலை

7. ஷங்கய் மறைமாவட்டத்தில் குருக்களும் துறவிகளும் மறுகல்வி பயிற்சிக்குச் செல்லுமாறு அரசு வலியுறுத்தல்

8. பங்களாதேஷில் வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு உச்ச நீதிமன்றம் ஆணை

9. ஐன்ஸ்டீனைவிட அதிக அறிவுத்திறன் கொண்ட 12 வயது சிறுமி
------------------------------------------------------------------------------------------------------

1. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் 262 மாமன்றத் தந்தையர்கள்

அக்.05,2012 வருகிற ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கான் பேதுரு பசிலிக்காவில் நிகழ்த்தும் திருப்பலியோடு ஆரம்பமாகும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் 262 மாமன்றத் தந்தையர்கள் பங்கு கொள்வார்கள் என்று இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் இம்மான்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச்.
உலக ஆயர்கள் மாமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை அதிகமான தந்தையர்கள் பங்கு கொள்வார்கள் என்றுரைத்த பேராயர் எத்ரோவிச், 103 பேர் ஐரோப்பாவிலிருந்தும், 63 பேர் அமெரிக்காவிலிருந்தும், 50 பேர் ஆப்ரிக்காவிலிருந்தும், 39 பேர் ஆசியாவிலிருந்தும் 7 பேர் ஓசியானியாவிலிருந்தும் எனப் பேரவைத் தந்தையர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறினார்.
இந்த மாமன்றத் தந்தையர்களுள் 182 பேர், 172 ஆயர் பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், 10 பேர் துறவு சபைகளின் அதிபர்கள் என்றும், 3 பேர் கீழைரீதி கத்தோலிக்கச் சபைகளின் தலைவர்கள் என்றும், 37 பேர் தங்களது பணியினிமித்தம் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் என்றும், 40 பேர் திருத்தந்தையால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் பேராயர் தெரிவித்தார்.
45 வல்லுனர்கள் மற்றும் 49 பார்வையாளர்கள் கலந்து கொள்ளவுள்ள இம்மான்றத்தில், கத்தோலிக்கத் திருஅவையோடு ஒன்றிப்பு இல்லாத 15 சபைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ, சென்னை-மயிலைப் பேராயர் மலையப்பன் சின்னப்பா, கோவா பேராயர் பிலிப்நேரி ஃபெராவோ கொல்லம் ஆயர் ஸ்டான்லி ரோமன், இலங்கையின் பதுல்லா ஆயர் ஜூலியன் வின்ஸ்டென் செபஸ்தியான் பெர்னான்டோ உட்பட 5 கண்டங்களிலிருந்து ஆயர் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்கு கொண்டவர்களில் இன்னும் உயிரோடிருக்கும் 69 தந்தையரில் 12 பேர் இப்போதைய மாமன்றத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் பேராயர் கூறினார்.
கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்கான புதிய நற்செய்திப்பணி என்ற தலைப்பில் இம்மாதம் 7 முதல் 28 வரை வத்திக்கானில் 13வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளது. இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில், மக்களின் விசுவாசத்தை, குறிப்பாக விசுவாசம் பலவீனமடைந்துள்ள அல்லது விசுவாசம் இல்லாமல் இருக்கின்ற பகுதிகளில் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்குப் புதிய வழிகள் மற்றும் புதிய முறைகளைக் காண்பது குறித்து மாமன்றத் தந்தையர்கள் கலந்து பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. விசுவாச ஆண்டு பரிபூரண பலன்

அக்.05,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவு நாளான இம்மாதம் 11ம் தேதியன்று தொடங்கும் விசுவாச ஆண்டுக்குப் பரிபூரண பலனை அறிவித்துள்ளது திருப்பீட பாவமன்னிப்புச்சலுகைத் துறை.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று தொடங்கி 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும் விசுவாச ஆண்டில் வழங்கப்படும்  பரிபூரண பலன் மூலம் பாவங்களுக்கானத் தற்காலிகத் தண்டனைகளிலிருந்து  மன்னிப்புப் பெற முடியும்.
தங்களது பாவங்களுக்காக உண்மையிலே மனம் வருந்தி ஒப்புரவு திருவருட்சாதனத்தைப் பெற்று திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிக்கும் அனைத்து விசுவாசிகளும் இந்தப் பலனைப் பெறலாம்.
மேலும், நற்செய்திப் போதனைகளில் குறைந்தது மூன்று தடவைகளும் அல்லது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் கொள்கைத்திரட்டுகள் மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு குறித்து ஆலயத்தில் அல்லது தகுதியான இடத்தில் இடம்பெறும் வகுப்புக்களில்  குறைந்தது மூன்று தடவைகள் பங்கெடுத்தாலும் இந்தப் பரிபூரண பலனைப் பெறலாம்.
விசுவாச ஆண்டில் தல ஆயரால் குறிக்கப்பட்ட ஒரு பசிலிக்கா அல்லது ஒரு பேராலயத்துக்கும், கிறிஸ்தவக் கல்லறைக்கும், ஒரு திருத்தலத்துக்கும் திருப்பயணமாகச் சென்று, நம் ஆண்டவர் கற்றுக் கொடுத்த செபம், அதிகாரப்பூர்வ விசுவாச அறிக்கை, அன்னைமரியா அல்லது திருத்தூதர்கள் அல்லது பாதுகாவலர் புனிதரை நினைத்துச் செபத்திலும் தியானத்திலும் சிறிது நேரம் செலவிட்டாலும் இந்தப் பரிபூரண பலனைப் பெறலாம்.
இந்தப் பரிபூரண பலனுக்கு இன்னும் சில செயல்முறைகளையும் கொடுத்துள்ளது திருப்பீட பாவமன்னிப்புச்சலுகைத் துறை.

3. அனைத்துலக காரித்தாஸ் தலைவர் : ஏழ்மை அமைதிக்கு மிகப்பெரும் எதிரி

அக்.05,2012. வறுமை அமைதிக்கு மிகப்பெரும் எதிரி என்றும், தோழமையுணர்வே ஏழ்மைப் பிரச்சனையை அகற்றுவதற்கான வழி என்றும் அனைத்துலக காரித்தாஸ் தலைவரான ஹொண்டுராஸ் கர்தினால் ஆஸ்கார் ஆந்ரெஸ் ரொட்ரிகெஸ் மாராதியாகா கூறினார்.
இஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில் "Mensajeros de la Paz" அதாவது அமைதியின் தூதர்கள் என்ற அமைப்பின் 50வது ஆண்டு விழாவில் இச்செவ்வாயன்று உரையாற்றிய கர்தினால் மாராதியாகா, பசிதாகத்தினாலும், தடுப்பூசிகள் போடப்படாததாலும் கல்வியறிவு இல்லாததாலும் உலகின் பல பகுதிகளில் எண்ணற்ற மக்கள் இறப்பது குறித்து கடுமையாய்ச் சாடினார்.
நாம் குகைகளில் வாழும் கற்காலத்துக்குச் சென்றுகொண்டிருப்பது போல் தோன்றுகிறது என்றுரைத்த கர்தினால், இலட்சக்கணக்கான மக்கள் தங்களது எதிர்கால வாழ்க்கை குறித்து கனவு காணவோ திட்டமிடவோ முடியாத நிலையில் உள்ளனர் என்றும் கூறினார்.

4. மொசாம்பிக்கில் சனநாயகத்தை வலுப்படுத்துமாறு ஆயர்கள் வலியுறுத்தல்

அக்.05,2012. ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியிருக்கும் இவ்வேளையில் அந்நாட்டின் சனநாயகத்தை வலுப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்று அந்நாட்டு ஆயர்கள் கூறினர்.
மொசாம்பிக்கில் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தம் உரோமையில் கையெழுத்திடப்பட்டதன் இருபதாம் ஆண்டை இவ்வியாழனன்று நினைவுகூர்ந்த ஆயர்கள் உறுதியான சனநாயகத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
சனநாயகத்தைக் காப்பதற்காகச் செயல்படுகிறோம் என்றுரைக்கும் அரசியல் கட்சிகள் நடைமுறையில் உள்ளும் புறமும் சர்வாதிகாரப்போக்கைக் கொண்டுள்ளன என்றும் குறைகூறிய மொசாம்பிக் ஆயர்கள், நாடு பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், ஆன்மீகத்திலும்  மாற்றம் அடையுமாறு கேட்டுக் கொண்டனர்.

5. பசிபிக் பகுதியில் மின்னஞ்சல்வழி நற்செய்தி

அக்.05,2012. கத்தோலிக்கர் மிகப்பரந்த விழுமியங்களுடன் தங்களது விசுவாசத்தை ஆழப்படுத்துவதற்கு விசுவாச ஆண்டு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பசிபிக் தீவுகளின் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Paul Donoghue கூறினார்.
பசிபிக் பகுதியில் அமைந்திருக்கும் தீவுகளுக்கு இடையே, அப்பகுதியின் கத்தோலிக்கச் சமூகங்களுக்கு இடையே இருக்கும் நீண்ட பயண தூரங்கள் பற்றி ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் விளக்கிய, கூக் தீவுகளின் Rarotonga ஆயர் Paul Donoghue, எடுத்துக்காட்டாக Penrhyn என்ற சிறிய தீவுக்குத் தனது இடத்திலிருந்து விமானத்தில் செல்வதற்கு 4 மணி நேரம் எடுக்கும் என்று கூறினார்.
குருக்கள் இல்லாமல் வேதியரின் உதவியுடன் 70 கத்தோலிக்கர் தங்களது விசுவாச வாழ்வை வாழ்ந்து வருகின்றனர் என்றும், இத்தீவுகளில் சிறிய கத்தோலிக்கக் குழுக்கள் தங்களது விசுவாச ஒளியைத் தொடர்ந்து காத்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.
தங்களது மேய்ப்புப்பணித் திட்டங்களை இணைக்கும் பாலமாகப் புதிய தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன என்றுரைத்த ஆயர் Donoghue, மின்னஞ்சல் மூலமாகத் தங்களது நற்செய்திப்பணிகளைச் செய்து வருவதாகவும் உரைத்தார்.

6. மடகாஸ்கரில் இயேசு சபை அருள்தந்தை ஒருவர் படுகொலை

அக்.05,2012. மடகாஸ்கர் நாட்டுத் தலைநகர் Antananarivo விலுள்ள இயேசு சபையினரின் இல்லம் சூறையாடப்பட்டுள்ளதுடன் இயேசு சபை அருள்தந்தை Bruno Raharison கொடூரமாய்த் தாக்கப்பட்டு இறந்தார் என்று அந்நகரின் திருஅவை வட்டாரங்கள் தெரிவித்தன.
வாகனத்தில் சென்று கொண்டிருந்த அருள்தந்தை Brunoவை வழிமறித்தக் கொள்ளையர்கள் அவரைத் துப்பாக்கியால் பலதடவைகள் சுட்டும், ஆயுதங்களால் நெஞ்சிலும் முதுகுத்தண்டுவடத்திலும் தலையிலும் பலமாய்க் குத்தியும் கொலை செய்துள்ளனர்.
இதற்கிடையே, அக்குருவோடு எப்பொழுதும் பயணம் செய்யும் ஒரு சிறுவனும் இன்னும் இருவரும் இக்கொலை சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
அருள்தந்தை Brunoவின் அடக்கச்சடங்கு இவ்வியாழனன்று இடம்பெற்றது.

7. ஷங்கய் மறைமாவட்டத்தில் குருக்களும் துறவிகளும் மறுகல்வி பயிற்சிக்குச் செல்லுமாறு அரசு வலியுறுத்தல்

அக்.05,2012. சீனாவின் ஷங்கய் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கரை ஒடுக்கும் அரசின் முயற்சியின் ஒரு கட்டமாக அம்மறைமாவட்டத்தின் எல்லாக் குருக்களும் துறவிகளும் மறுகல்விப் பயிற்சிக்குச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
சீன அரசு ஆதரவு பெற்ற கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலையில் ஷங்கய் துணை ஆயர் Thaddeus Ma Daqin பொதுப்படையாக அறிவித்ததைத் தொடர்ந்து சீன அரசு இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மத விவகாரங்களில் அரசின் அணுகுமுறை, கம்யூனிசக் கோட்பாடுகள் ஆகியவைகளைக் கொண்ட தொடர் வகுப்புகளில் குருக்களும் அருள்சகோதரிகளும் சேருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வகுப்புகளை அரசு அதிகாரிகளே எடுக்கின்றனர் என்று ஊடகச் செய்தி கூறுகின்றது.


8. பங்களாதேஷில் வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு  வழங்கப்படுமாறு உச்ச நீதிமன்றம் ஆணை

அக்.05,2012. பங்களாதேஷில் புத்த மற்றும் இந்துமதச் சமூகங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதையடுத்து அந்நாட்டில் வழிபாட்டுத் தலங்களுக்குரிய பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உள்துறை அமைச்சகத்துக்கும் காவல்துறை தலைமை அதிகாரிக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.
புனித நூலான குரான் எரிந்த நிலையில் காட்டப்படும் படம் ஒன்று, ஒரு புத்தமதத்தவரால் ஃபேஸ் புக்கில் பிரசுரம் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சிட்டகாங் மற்றும் கோக்ஸ் பஜார் மாவட்டங்களில் எழுந்த வன்முறைகளில் 19 கோவில்கள், 100 வீடுகள் மற்றும் பல கடைகள் எரிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன.
பங்களாதேஷ் அரசியல் அமைப்பு, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்கும் சமய சுதந்திரத்துக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு உறுதியளிக்கின்றது என்றுரைத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் யூனுஸ் அலி அக்காந்த், அண்மையில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றுள்ளதால் அவர்களுக்குப் பாதுகாப்பு அவசியம் என்று கூறினார்.
பங்களாதேஷின் 15 கோடியே 20 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 90 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். 

9. ஐன்ஸ்டீனைவிட அதிக அறிவுத்திறன் கொண்ட 12 வயது சிறுமி

அக்.05,2012. இங்கிலாந்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கைவிட அதிகளவு அறிவுத்திறன்(IQ) இருப்பது தெரியவந்துள்ளது.
லிவர்ஃபூல் பகுதியைச் சேர்ந்த 12 வயதான ஆலிவியா மேனிங், அறிவுத்திறன் போட்டியில் கலந்து கொண்டு 162 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் உலகின் மிகவும் பழமையானதும், பெரியதுமான அதிக அறிவுத்திறன் பெற்ற சமூகமான மென்சாவில் இணையும் வாய்ப்பையும் ஆலிவியா பெற்றுள்ளார்.
அறிவியல்மேதைகள் ஐன்ஸ்டீன், ஹாக்கிங் ஆகியோரைவிட இவர் 2 மதிப்பெண்கள் அதிகம் பெற்று உலகில் அதிக நுண்ணறிவு கொண்டவர்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
இது குறித்து ஆலிவியா கூறுகையில், என்னுடன் படிக்கும் மாணவ, மாணவிகளில் நிறையப்பேர் என்னிடம் வந்து அவர்களது வீட்டுப்பாடங்களைச் செய்து தரும்படி கேட்பார்கள். இதை ஒரு சவாலாக எடுத்து என்னுடைய நினைவுத்திறனை வளர்த்துக் கொண்டேன் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...