Thursday, 4 October 2012

Catholic News in Tamil - 02/10/12


1. கர்தினால் ஃபிலோனி : நற்செய்தி அறிவிப்புப்பணி ஒருபோதும் எளிதாக இருந்தது கிடையாது

2. திருப்பீட உயர் அதிகாரி : புதிய அறிவின் இலக்கு, பொதுநலனைக் கருதியதாய் அமைய வேண்டும் 

3. பேராயர் மம்பர்த்தி : சிரியாவின் பிரச்சனைகளுக்கு அனைத்துலக சட்டத்தின்கீழ் தீர்வு  

4. கென்யாவில் கிறிஸ்தவர்கள் சமயச் சண்டையை விரும்பவில்லை

5. இந்தியாவில் மிகப்பெரிய இயேசு கிறிஸ்துவின் திருவுருவம்

6. அனைத்து ஆயுதங்களையும் அழிப்பதற்கான நேரம் வந்துள்ளது : பான் கி மூன்

7. அனைத்துலக வன்முறையற்ற தினம் அக்டோபர் 02

8. இலங்கையில் உடனடியாக அரசியல் தீர்வை முன்வைக்க பான் கி மூன் வலியுறுத்தல்

9. புவி வெப்பமடைவதால் மீன்வளம் குறையும்: அறிவியலாளர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் ஃபிலோனி : நற்செய்தி அறிவிப்புப்பணி ஒருபோதும் எளிதாக இருந்தது கிடையாது

அக்.02,2012. நற்செய்தி அறிவிப்புப்பணி ஒருபோதும் எளிதாக இருந்தது இல்லை, சில நாடுகளில் இப்பணியை ஓர் உறுதியான துணிச்சலுடன் செய்ய வேண்டியிருக்கின்றது என்று நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni கூறினார்.
நற்செய்தி அறிவிப்புக்குத் துணிச்சல் தேவைப்படுகின்றது என்பதற்குத் திபெத்தை ஓர் எடுத்துக்காட்டாக விளக்கிய கர்தினால் Filoni, திபெத்தில் இன்று மட்டுமல்ல, அங்கு முதலில் நற்செய்தி அறிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதே உறுதியுடன்கூடிய துணிச்சல் தேவைப்பட்டது  என்று கூறினார்.
பிரான்ஸ் நாட்டுப் பாரிசில் தொடங்கிய மறைபோதகப் பணி குறித்த கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய போது இவ்வாறு கூறினார் கர்தினால் Filoni.
திபெத்தில் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய மறைபோதகர்கள் மறைப்பணியைத் தொடங்கிய கடினமான சூழல்களையும், 1846ம் ஆண்டு மார்ச் 27 வரை திபெத்தில் பாரிஸ் மறைபோதக சபையினர் அப்பணியைச் செய்து வந்ததையும் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Filoni, இம்மறைபோதக சபையின் முதல் மூன்று மறைப்பணியாளர்கள் தென்கொரியாவின் செயோலில் கொல்லப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் திபெத்தில் மறைப்பணியாற்றிய பின்னர் 1950ம் ஆண்டில் திபெத் சீனாவின் ஒரு பகுதியாக மாறிய போது பல மறைபோதகர்கள் வெளியேற்றப்பட்டதையும் கொல்லப்பட்டதையும் குறிப்பிட்டார் நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.

2. திருப்பீட உயர் அதிகாரி : புதிய அறிவின் இலக்கு, பொதுநலனைக் கருதியதாய் அமைய வேண்டும் 

அக்.02,2012. சமுதாய முன்னேற்றத்துக்கும், ஆய்வாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நீதியான இழப்பீடு வழங்கப்படுவதற்கும்  அறிவுச்சொத்துப் பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதைத் திருப்பீடம் ஏற்கிறது என்று பேராயர் சில்வானோ தொமாசி ஐ.நா.வில் தெரிவித்தார்.
WIPO என்ற உலக அறிவுச்சொத்து நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இத்திங்கள் முதல் இம்மாதம் 9ம் தேதி வரை நடத்திவரும் 50வது கூட்டத்தில் உரையாற்றிய ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார்.
பன்னாட்டு அளவில் அறிவுச்சொத்தைப் பாதுகாத்து ஊக்குவிப்பதில் சமநிலை காக்கப்படுவதற்கு கடந்த ஆண்டில் ஐ.நா. எடுத்த முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார் பேராயர் தொமாசி.
ஒரு சமுதாயத்தின் கலாச்சார வாழ்வில் அனைவரும் சுதந்திரமாகப் பங்கு பெற்று கலைகளை அனுபவிப்பதற்கு அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் எண் 27 அனுமதியளிக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய பேராயர் தொமாசி, தகவல் பெறவும், கலாச்சாரம் மற்றும் கல்வி பெறவும் மாற்றுத்திறானாளிகள் சமவாய்ப்புகள் பெறுவதற்கு, உரிமங்கள் தடையாய் இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார். 
வளர்ந்த நாடுகளில் கண்பார்வை பாதிக்கப்பட்டோர் 5 விழுக்காட்டு நூல்களையே வாசிக்க முடிகின்றது என்றும் உரைத்த அவர், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள அதிகம் முன்னேறிய நாடுகளில்கூட இந்நிலை இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

3. பேராயர் மம்பர்த்தி : சிரியாவின் பிரச்சனைகளுக்கு அனைத்துலக சட்டத்தின்கீழ் தீர்வு 

அக்.02,2012. சிரியாவில் இடம்பெற்றுவரும் பிரச்சனைகளுக்கு, அனைத்துலகச் சட்டம் மற்றும் மனிதாபிமானச் சட்டத்தின் விதிமுறைகளைத் தவிர வேறு வழிகளில் தீர்வு காணப்பட முடியாது என்று பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஐ.நா.வில் கூறினார்.
சிரியாவில் இடம்பெறும் சண்டையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளும் கிடைப்பதற்கு வழிசெய்யப்படுமாறும் கேட்டுக் கொண்ட பேராயர் மம்பர்த்தி, சிரியாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர்கள், அந்நாட்டில் ஆயுதங்களுக்குப் பதிலாக, சமய சுதந்திரம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் ஆகியவைகளை வலியுறுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
நியுயார்க்கில் ஐ.நா.பொது அவையின் 67வது பொதுக் கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் மம்பர்த்தி, தற்போதைய பன்னாட்டுச் சூழலுக்கு ஒத்துப்போகும் வகையில் ஐ.நா.வில் மாற்றங்கள் இடம்பெற வேண்டுமென்றும் கூறினார்.
ஐ.நா. உருவாக்கப்பட்ட பின்னர், இந்த 67 ஆண்டுகளில் உலகில் மிகப்பெரும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், செல்வந்தருக்கும் வறியவர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பெரிதாகியுள்ளது எனவும், இதற்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சி பெரிதும் உதவியுள்ளது எனவும் சுட்டிக் காட்டினார் பேராயர் மம்பர்த்தி.

4. கென்யாவில் கிறிஸ்தவர்கள் சமயச் சண்டையை விரும்பவில்லை

அக்.02,2012. கிறிஸ்தவர்கள் சமயச் சண்டையை விரும்பவில்லை, ஆனால் தங்களது வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவது குறித்து பொறுமையிழந்துவிட்டோம் என்று கென்யாவின் தலத்திருஅவை வட்டாரங்கள் கூறுகின்றன.  
நைரோபியின் ஆங்லிக்கன் சபையின் புனித பொலிக்கார்ப்பு ஆலயத்துக்கு எதிரானத் தாக்குதல்களில் இரண்டு சிறார் கொல்லப்பட்டது குறித்து பிதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய கிறிஸ்தவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல்கள் சிறார்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாகவும், கென்ய மக்கள் மட்டுமல்ல, அந்நாட்டுக்கு அகதிகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சொமாலியா, சூடான் மற்றும் எத்தியோப்பிய நாடுகளின் மக்களும் பாதுகாப்பின்மையை உணருவதாகவும் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.
   
5. இந்தியாவில் மிகப்பெரிய இயேசு கிறிஸ்துவின் திருவுருவம்

அக்.02,2012. இந்தியாவில் மிகப்பெரிய இயேசு கிறிஸ்துவின் திருவுருவம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.
33.5 அடி உயரமுடைய இயேசுவின் திருவுருவத்தை சீரோ மலங்கரா ரீதித் தலைமைப் பேராயர் Mar Baselios Cleemis Catholicos  திறந்து வைத்தார்.
பிரேமச்சந்திரன் என்ற சிற்பியால் செய்யப்பட்ட இத்திருவுருவத்தை நிலைநிறுத்த ஏறத்தாழ 30 பணியாளர்கள் 35 நாள்கள் வேலை செய்தனர்.
இந்த உருவத்தை அமைப்பதற்கு 15 இலட்சம் ரூபாய்ச் செலவானதாகச் சொல்லப்பட்டுள்ளது.
29 அடி உயரம் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருவுருவம் ஏற்கனவே பெங்களூரில் உள்ளது.  

6. அனைத்து ஆயுதங்களையும் அழிப்பதற்கான நேரம் வந்துள்ளது : பான் கி மூன்

அக்.02,2012. உலகில் வேதிய ஆயுதங்கள் உட்பட அனைத்து ஆயுதங்களையும் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான நேரம் வந்துள்ளது என்று ஐ.நா.பொது செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
உலகில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட வேதிய ஆயுதங்களில் நான்கில் மூன்று பாகம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இவைகளை அழிப்பது குறித்த உடன்பாட்டில் 188 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன எனவும் இத்திங்களன்று நிருபர்களிடம் கூறினார் பான் கி மூன். 
எனினும், சிரியா உட்பட எட்டு நாடுகள் இன்னும் அந்த உடன்பாட்டில் இணையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வேதிய ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் 15ம் ஆண்டு இவ்வாண்டில் இடம்பெறுவதால், 21ம் நூற்றாண்டில் வேதிய ஆயுதங்களுக்கு இடமே இல்லை என்று சொல்லி அவை அனைத்தும் அழிக்கப்படுமாறு கேட்டுக் கொண்டார் ஐ.நா.பொது செயலர்.

7. அனைத்துலக வன்முறையற்ற தினம் அக்டோபர் 02.

அக்.02,2012. மகாத்மா காந்தி பிறந்த தினம், பன்னாட்டு அளவில் வன்முறையற்ற தினமாக இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது.
காந்திஜி பிறந்த அக்டோபர் 2ம் தேதி அனைத்துலக வன்முறையற்ற தினமாக கடைப்பிடிக்கப்படுமாறு இரானிய நொபெல் விருதாளர் Shirin Ebadi 2004ம் ஆண்டு சனவரியில் பரிந்துரைத்தார்.
2007ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி ஐ.நா.பொது அவை, அக்டோபர் 2ம் தேதி அனைத்துலக வன்முறையற்ற தினமாக கடைப்பிடிக்கப்படுவதற்கு இசைவு தெரிவித்தது.
இச்செவ்வாயன்று இந்தியாவில் மகாத்மா காந்தியின் 143வது பிறந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும், இச்செவ்வாயன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் புளோரிடா மாநிலத்தில், மகாத்மா காந்தி சிலையை, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திறந்து வைத்தார்.
அமெரிக்காவின், புளோரிடா மாநிலத்தின் டேவி நகரில், பால்கம் லியா பார்க் என்ற இடத்தில், கேரள கழகத்தின் சார்பில், ஏழு அடி உயரமுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச்சிலை நிறுவப்பட்டு உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடு சென்றுள்ள அப்துல் கலாம், இந்த சிலையைத் திறந்து வைத்துள்ளார்.
புளோரிடா மேயர் ஜுடி பால் இவ்விழாவில் பங்கேற்றார் என்றும் ஊடகச் செய்தி கூறுகின்றது.

8. இலங்கையில் உடனடியாக அரசியல் தீர்வை முன்வைக்க பான் கி மூன் வலியுறுத்தல்

அக்.02,2012. இலங்கையில் தாமதமின்றி உடனடியாக அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று ஐ.நா. பொது செயலர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்தபோது அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
போருக்குப் பின்னர் இலங்கை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் குறித்து அவ்வமைச்சர், பான் கீ மூனிடம் விளக்கியுள்ளார்.
அதேநேரம், இலங்கை அரசு, சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வினை மேலும் தாமதிக்காமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தினார்.
9. புவி வெப்பமடைவதால் மீன்வளம் குறையும்: அறிவியலாளர்கள்

அக்.02,2012. புவி வெப்பமடைந்து வருவதன் காரணமாக உலகப் பெருங்கடல்களில் மீன்வளம் ஏறக்குறைய 24 விழுக்காடு குறைந்துவிடும் எனத் தெரிவதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடல் நீர் வெப்பமடைவதால் 2001ம் ஆண்டு தொடங்கி 2050ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அறுநூறுக்கும் அதிகமான மீன் இனங்களில் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணினிகள் துணைகொண்டு ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள பிராணவாயுவின் அளவு குறைந்துவிடுவதால் மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்துபோய்விடுகிறது என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்கனவே கணிக்கப்பட்டதைவிட மிகவும் அதிகம் என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
கடலில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க ஆண்டுக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் மீன்கள் துருவப் பகுதிகளை நோக்கி தங்களது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் என்று தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...