Monday, 1 October 2012

Catholic News in Tamil - 01/10/12

1. திருத்தந்தை : கத்தோலிக்கரல்லாதவர் நல்லது செய்யும் போது அகமகிழுங்கள்

2. திருத்தந்தை காங்கோ சனநாயக குடியரசில் அமைதிக்காக அழைப்பு

3. உலகை மாற்ற‌ விரும்புவோர் முதலில் தங்களுக்குள் மாற்றத்தைக் காணவேண்டும்

4. நைரோபியில் கிறிஸ்தவச் சிறார்கள் மீது தாக்குதல்

5. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகின்றன

6. கேப்பாபிலவு மக்களுக்கான உதவிகளை இராணுவம் தடுக்கிறது

7. புகைப்பழக்கத்தை ஒரு மாதம் கைவிடுங்கள்: பிரிட்டன் அரசு விளம்பரம்

8. இந்தியாவில் வாரத்திற்கு 4 சிறுத்தைகள் வேட்டையாடப்படுகின்றன

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கத்தோலிக்கரல்லாதவர் நல்லது செய்யும் போது அகமகிழுங்கள்

அக்.01,2012. கத்தோலிக்கரல்லாதவர் நல்லதைச் செய்யும்போது அல்லது உண்மையானதைத் தழுவிக்கொள்ளும்போது கத்தோலிக்கர் மகிழ்ச்சியடைய வேணடுமெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இயேசுவின் சீடராக இல்லாத ஒருவர், இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, இளமையும் இயேசுவின்மீது தீவிரப்பற்றும் கொண்ட திருத்தூதர் யோவான் அவரைத் தடுக்கப் பார்த்தார், ஆனால் இயேசு அதற்கு அனுமதிக்கவில்லை. இந்த நிகழ்வு குறித்து விவரிக்கும் புனித மாற்கு நற்செய்திப் பகுதியை விளக்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடைவிடுமுறை இல்ல வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு ஆற்றிய மூவேளை செப உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவையில் கத்தோலிக்கம் இல்லாத ஒன்றை ஒருவர் கண்டறிய முடிவது போல, கத்தோலிக்கத் திருஅவைக்கு வெளியே கத்தோலிக்கமாக இருப்பதை ஒருவரால் கண்டறிய முடியும் என்று புனித அகுஸ்தீன் சொன்னதையும் சுட்டிக் காட்டினார்.
திருஅவைக்கு வெளியே இருக்கும் யாராவது கிறிஸ்துவின் பெயரால் நன்மையானதைச் செய்யும்போது திருஅவையின் உறுப்பினர்கள் பொறாமை கொள்ளாமல் அகமகிழ வேண்டும், அதேசமயம் இவ்வாறு நல்லதைச் செய்பவர்கள் சரியான எண்ணத்தோடும் மரியாதையோடும் செய்ய வேண்டுமெனக் கூறினார் திருத்தந்தை.
ஒரு மறைபோதகருக்கு ஒரு குவளைத் தண்ணீர்க் கொடுப்பது போன்ற சிறிய சிறிய செயல்களால் இறையாட்சியோடு மற்றவர்கள் ஒத்துழைக்கும்போது நல்லதும் அற்புதம் நிறைந்த செயல்களும்கூட திருஅவைக்கு வெளியே நடக்கும் என்று இயேசு தம் திருத்தூதர்களுக்கு விளக்க விரும்பினார் எனவும் திருத்தந்தை கூறினார்.
உடனிருக்கும் சமயத்தவர் தூய்மைத்தனத்தையும் நன்மைத்தனத்தையும் அடையும்போது கத்தோலிக்கர் கோபம் கொள்ளக்கூடும், எனவே திருஅவைக்குள்ளே பொறாமைப்படுவதை விட்டுவிட்டு ஒருவர் ஒருவரை எப்பொழுதும் புகழவும் மதிக்கவும் வேண்டும், திருஅவையிலும் உலகிலும் நம் ஆண்டவர் ஆற்றும் அருஞ்செயல்களுக்காக அவரைப் புகழ்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. திருத்தந்தை காங்கோ சனநாயக குடியரசில் அமைதிக்காக அழைப்பு

அக்.01,2012. காங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் அமைதி இடம்பெறுமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
காங்கோ சனநாயக குடியரசில் ஏற்கனவே பிரச்சனகள் நிறைந்த கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டு இராணுவம் முயற்சித்துவரும்வேளை, ஒரு புரட்சிக் குழுவுக்கும், சட்டத்துக்குப் புறம்பேயான உப இராணுவப் படைகளுக்கும் இடையே இந்த செப்டம்பரில் தொடங்கியுள்ள வன்முறை குறித்தும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
ஆப்ரிக்க நாடாகிய காங்கோ சனநாயகக் குடியரசில் இடம்பெற்றுவரும் தற்போதைய வன்முறைகளால் இந்த செப்டம்பரின் மத்தியில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றுரைத்த திருத்தந்தை, புலம்பெயர்ந்துள்ள மக்களோடு தான் ஆன்மீகரீதியில் ஒன்றித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்பாவி மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் விதத்தில் அமைதியான வழிகளில் உரையாடல் இடம்பெறவும், நீதியின் அடிப்படையில் விரைவில் அமைதி கிட்டவும் தான் செபிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, காங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியிலும், மற்றும் அந்நாடு முழுவதிலும் சகோதரத்துவ இணக்கவாழ்வு ஏற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த ஏப்ரலுக்கும் ஜூலைக்கும் இடைப்பட்ட நாள்களில் இடம்பெற்ற வன்முறையால் 25 ஆயிரம் பேர் நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்தனர் மற்றும் அண்டை நாடுகளான ருவாண்டாவுக்கும் உகாண்டாவுக்கும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர்.

3. உலகை மாற்ற‌ விரும்புவோர் முதலில் தங்களுக்குள் மாற்றத்தைக் காணவேண்டும்

அக்.01,2012. ஒவ்வோர் இளைஞரும் நல்ல பலன் தரும் தலைவராகச் செயல்பட்டு, தேசத்தைக் கட்டி எழுப்புவதில் உதவ வேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்தியாவின் பெல்லாரி ஆயர் ஹென்றி டி சூசா.
கர்நாடக இளையோர்க்கென நடத்தப்பட்ட மூன்று நாள் கருத்தரங்கின் துவக்க விழாவில் உரையாற்றிய ஆயர், உலகை மாற்ற‌ விரும்புவோர் முதலில் தங்களுக்குள் மாற்றத்தைக் காண வேண்டும் என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஆயர் டி சூசா.
இதே கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட மறைப்பணிக் கழகத்தின் தேசிய இயக்குனர் அருள்பணி Faustine Lobo, இன்றைய இளையோர் தங்கள் வேலைப்பளுவின் காரணமாக ஆன்மீக நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இழந்து வருவது குறித்து கவலையை வெளியிட்டார்.
Belthangadyயில் இடம்பெற்ற இந்த மூன்று நாள் கருத்தரங்கில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளையோர் கலந்து கொண்டனர்.

4. நைரோபியில் கிறிஸ்தவச் சிறார்கள் மீது தாக்குதல்

அக்.01,2012. கென்ய தலைநகரில் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது, மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நைரோபியின் புனித போலிகார்ப் கோவிலில் இச்சனிக்கிழமையன்று தாக்குதல் நடத்தியவர்கள், சொமாலி நாட்டைச் சேர்ந்த இசுலாமிய தீவிரவாதக் குழு எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்த வெடிகுண்டு தாக்குதலால் கோபமுற்ற ஒரு குழு, கோவிலுக்கு அருகே வாழும் சொமாலிய மக்களைத் தாக்கியதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

5. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகின்றன

அக்.01, 2012.  இறைவாக்கினர் முகமதுவை கேலி செய்யும் "The Innocence of Muslims," என்ற திரைப்படத்திற்கு எதிரான வன்முறைகளில் பாகிஸ்தானின் Mardan நகர் தூய பவுல் கோவில் தாக்கப்பட்டுள்ளதுடன், பிரிந்த கிறிஸ்தவ சபை ஆயர் ஒருவரும் படுகாயப்படுத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் இத்திரைப்படத்தை வன்மையாக கண்டித்துள்ளபோதிலும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
பிரிந்த கிறிஸ்தவ சபை ஆயர் Naeem Samuel பலமாகத் தாக்கப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரானத் தாக்குதலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்து கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
6. கேப்பாபிலவு மக்களுக்கான உதவிகளை இராணுவம் தடுக்கிறது

அக்.01, 2012.  இலங்கையில் மனிக்பாம் முகாம் மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து சீனியாமோட்டை என்ற காட்டுப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட கேப்பாபிலவு மக்களுக்கு வெளியாரின் நிவாரண உதவிகள் கிடைப்பதிலும் இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சொந்த இடத்தில் குடியேற்றப்படாது வேறு இடத்துக்கு அனுப்பப்பட்ட இந்த மக்களுக்கு இன்னும் எந்தவிதமான அரசு உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் அக்கட்சியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.
அரசின் உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையில், அம்மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இஞ்ஞாயிற்றுக்கிழமை தாங்கள் ஏற்பாடு செய்திருந்தபோது, அதற்காக காத்திருந்த மக்களிடம் அப்படி நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படாது என்று கூறி இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் கூறினார்.
மக்கள் தாங்களாகவே வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அம்மக்களின் பிரச்சனைகள் வெளியுலகுக்குத் தெரியாதவாறு தடுக்கும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

7. புகைப்பழக்கத்தை ஒரு மாதம் கைவிடுங்கள்: பிரிட்டன் அரசு விளம்பரம்

அக்.01,2012. இங்கிலாந்தில் புகைப்பழக்கம் உள்ளவர்களை இலக்குவைத்து ஒரு புதிய பிரச்சார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திங்களன்று தொடங்கியுள்ள 'ஸ்டாப்டோபர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பிரச்சாரம் 28 நாட்களுக்கு நடக்கிறது.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒரு மாதத்துக்காவது புகைப் பழக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்பது இந்தப் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் கஷ்டப்பட்டு ஒரு மாத காலத்துக்கு அந்த மோசமான பழக்கத்தைக் கைவிடுகிறார் என்றால், அவர் அப்பழக்கத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பிடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள் மூலமாகவும், தினசரி செய்தியஞ்சல் சேவை மூலமாகவும், வீதி நிகழ்ச்சிகள் மூலமாகவும் பிரிட்டன் முழுவதும் இந்த அக்டோபரில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
புற்றுநோயினால் உயிரிழப்பவர்களில் நான்கில் ஒருவருக்கும், புற்றுநோய் வருபவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் புகைப்பழக்கம் காரணமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

8. இந்தியாவில் வாரத்திற்கு 4 சிறுத்தைகள் வேட்டையாடப்படுகின்றன

அக்.01, 2012.  இந்தியாவின் தேசிய விலங்கான புலியைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு சிறுத்தைப் புலிகளின் நிலை கவலையளிப்பதாக உள்ளதாகவும், வாரத்திற்கு நான்கு சிறுத்தைப் புலிகள் வேட்டையாடப்படுவதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறுத்தைப் புலியை வேட்டையாடுவதோ அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலை இருக்கின்றபோதிலும், 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுக்கு இடையே 420 சம்பவங்களில் சிறுத்தையின் உடல் பாகங்கள், தோல், எலும்புகள் முதலியவை பிடிபட்டுள்ளன என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
வட இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்தில் சிறுத்தைகள் அதிகளவு வேட்டையாடப்படுவதாகவும் சிறுத்தைத் தோல், எலும்புகள் உள்ளிட்ட பாகங்கள் கைமாறும் மையமாக டில்லி இருப்பதாகவும் இந்த ஆய்வுக் கண்டறிந்துள்ளது.
இந்த நூற்றாண்டில் முதல் 10 ஆண்டுகளில் 2,294 சிறுத்தைப் புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.




No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...