Thursday, 1 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 28 பெப்ரவரி 2012

 
1. உண்மையைக் கண்டறியும் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இலங்கை ஆயர்கள் வேண்டுகோள்

2. மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஸ்காட்லாந்து கர்தினால் அழைப்பு

3. அச்சம் காரணமாக அகமதாபாத் கிறிஸ்தவர்கள் குடிபெயர்வு

4. தென்கொரிய ஆயர்: புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் தென் கொரியக் குழந்தைகளுக்கு ஈடான உரிமைகளைப் பெறுவதற்கு திருஅவை எப்போதும் பாடுபடும்

5. ஒலிம்பிக் பந்தயங்களின்போது இலண்டன் மாநகரில் மனித வர்த்தகம் அதிகமாகும் ஆபத்து பெருகியுள்ளது

6. இரண்டாயிரம் தமிழ் குடும்பங்களுக்கு உலர் உணவு உதவி திடீர் நிறுத்தம்

7. அப்பாவி மக்களை மனநலம் சரியில்லாதவர்கள் என்று மனநல காப்பகத்தில் அடைத்து வைக்கும் சீன அரசு

------------------------------------------------------------------------------------------------------

1. உண்மையைக் கண்டறியும் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இலங்கை ஆயர்கள் வேண்டுகோள்

பிப்.28,2012. அரசுத்தலைவரின் 'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின்' பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென இலங்கை ஆயர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை கூறும் பரிந்துரைகளை அமுல்படுத்துவதே சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்கு சிறந்த பதிலாக அமையும் என ஆயர் பேரவைத்தலைவர் கர்தினால் மால்கம் இரஞ்சித் மற்றும் செயலர் ஆயர் நார்பர்ட் அந்த்ராடி கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின்' ப‌ரிந்துரைக‌ள், வ‌ருங்கால‌த்திற்கான‌ ந‌ம்பிக்கைக‌ளைத் தாங்கிய‌வைக‌ளாக‌ உள்ள‌ன‌ என்று கூறும் இல‌ங்கை ஆய‌ர்க‌ளின் அறிக்கை, தேசிய‌ ஒப்புர‌வை நோக்கி மேற்கொள்ளப்படும் முய‌ற்சியில் இப்ப‌ரிந்துரைக‌ள் ஒரு ந‌ல்ல‌ அடித்த‌ள‌த்தை வ‌ழ‌ங்க‌ முடியும் என‌வும் ந‌ம்பிக்கையை வெளியிட்டுள்ள‌து.
பழைய காயங்களை அகற்றுவதுடன், போரில் பாதிக்கப்பட்டோருடன் ஒப்புரவை உருவாக்குவதன் மூலம் தேசிய ஒன்றிப்பு, அமைதி மற்றும் இணக்க வாழ்வுக்குச் சிறப்புப் பங்காற்ற முடியும் எனவும் இலங்கை ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
அமைதியும் ஒப்புரவுமே இன்றைய இலங்கையின் உடனடித் தேவை என்பதை மனதிற்கொண்டு, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை கூறும் பரிந்துரைகளைச் செயல்படுத்த அரசு உடனடியாக முன்வர வேண்டும் என ஆயர்கள் அரசை மேலும் விண்ணப்பித்துள்ளனர்.


2. மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஸ்காட்லாந்து கர்தினால் அழைப்பு

பிப்.28,2012. மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வொருவரும், பாகிஸ்தான் நாட்டு அரசியல்வாதியும் மனித உரிமை நடவடிக்கையாளருமான Shahbaz Bhattiயின் கொலைக்கு நீதி கிடைக்க உழைக்க முன்வரவேண்டும் என்றார் ஸ்காட்லாந்து கர்தினால் Keith Patrick O’Brien.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி கொல்லப்பட்ட Shahbaz Bhattiயின் முதலாம் ஆண்டு நினைவு மார்ச் 10ம் தேதி, சனிக்கிழமையன்று இலண்டனில் அமைதி ஊர்வலத்துடன் சிறப்பிக்கப்பட உள்ளதையொட்டி அனுப்பியுள்ள செய்தியில் இவ்விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார் கர்தினால்.
மத உரிமைக்காக அவர் விடுத்த அழைப்பு, மனித மாண்பில் அக்கறையுடைய ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய ஒன்று எனக் கூறும் கர்தினால் Patrick O’Brienன் செய்தி, Shahbaz Bhattiயின் சாட்சிய வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது எனக் கூறுகிறது.
கத்தோலிக்கர்களுக்காக மட்டுமல்ல, மதநிந்தனைச் சட்டத்தின் துணைகொண்டு பொய்யான குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அனைத்து மத சிறுபான்மையினருக்காகவும் Shahbaz Bhatti குரல் எழுப்பினார் என கர்தினாலின் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.


3. அச்சம் காரணமாக அகமதாபாத் கிறிஸ்தவர்கள் குடிபெயர்வு

பிப்.28,2012. சுவரால் சூழப்பட்ட அகமதாபாத் நகரில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள், அச்சம் காரணமாக அந்நகரின் மேற்குப்பகுதியில் குடியேறி வருவதாக தலத்திருஅவை தெரிவிக்கின்றது.
குஜராத்தின் கோத்ரா தாக்குதல்களுக்குப் பின், கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 65 விழுக்காட்டு கிறிஸ்தவர்கள் அகமதாபாத் நகருக்குள்ளேயே மேற்கு பகுதியில் குடிபெயர்ந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது கலகங்கள் வெடிப்பதால், தங்கள் குழந்தைகளும் வன்முறைகளைப் பின்பற்றக்கூடும் என்று அஞ்சும் கிறிஸ்தவர்கள், நகரின் மேற்கு பகுதிக்குக் குடிபெயர்ந்து வருவதாக ஹன்சோல் பங்கு குரு Joseph Appaeoo கூறினார்.
அகமதாபாத்தின் புனித ஜோசப் காலனி, கோம்டிபூர் மற்றும் மிர்சாபூர் ஆகிய பகுதிகளில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள் தற்போது அச்சம் காரணமாக நகரின் மேற்கு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதாக தலத்திருஅவை அதிகாரிகள் தெரிவித்தனர்.


4. தென்கொரிய ஆயர்: புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் தென் கொரியக் குழந்தைகளுக்கு ஈடான உரிமைகளைப் பெறுவதற்கு திருஅவை எப்போதும் பாடுபடும்

பிப்.28,2012. கொரியாவுக்குப் புலம்பெயர்ந்த பிறநாட்டினரின் குழந்தைகள் இறைவன் இந்த நாட்டிற்கு வழங்கிய கொடைகள் என்றும், அவர்கள் கொரியாவுக்கும் உலகிற்கும் தேவைப்படும் முக்கியமானவர்கள் என்றும் தென்கொரிய ஆயர் ஒருவர் கூறினார்.
தென் கொரியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ள குடும்பங்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைத்த கொரிய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவரும் Daejeon மறைமாவட்டத்தின் ஆயருமான Lazarus You Heung-sik, புலம்பெயர்ந்தோர் மட்டில் திருஅவை காட்டும் அக்கறையை அரசும் காட்டவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்.
கொரிய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு ஒவ்வோர் ஆண்டும் நான்கு முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் Heung-sik, இந்த அவை புலம்பெயர்ந்தோருக்குச் செய்யும் கல்விப் பணி, மருத்துவ உதவிகள், ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
தென் கொரியாவுக்குப் புலம் பெயர்ந்தோரிடையே, சீனா, பிலிப்பின்ஸ், வியட்நாம் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களே அதிகம் என்பதைச் சுட்டிக் காட்டிய  ஆயர் Heung-sik, புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் தென் கொரியக் குழந்தைகளுக்கு ஈடான உரிமைகளைப் பெறுவதற்கு திருஅவை எப்போதும் பாடுபடும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.


5. ஒலிம்பிக் பந்தயங்களின்போது இலண்டன் மாநகரில் மனித வர்த்தகம் அதிகமாகும் ஆபத்து பெருகியுள்ளது

பிப்.28,2012. இலண்டன் மாநகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் பந்தயங்களின்போது அந்நகரில் மனித வர்த்தகம் அதிகமாகும் ஆபத்து பெருகியுள்ளது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் ஆலோசகர் ஒருவர் கூறினார்.
இவ்வாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பந்தயங்கள், அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளிகளின் ஒலிம்பிக் பந்தயங்களின்போது, இலண்டன் நகரில் மனித வர்த்தகங்கள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதென்று ஆயர் பேரவையின் ஆலோசகர் Cecilia Taylor-Camara கூறினார்.
இந்த ஆபத்தைத் தடுக்கும் ஒரு முயற்சியாக, ஆயர் பேரவையின் ஆலோசகர், ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் Jorge Nuño Mayerஐ அண்மையில் சந்தித்துப் பேசினார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையும், இலண்டன் மாநகரக் காவல்துறையும் இணைந்து இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கத்தோலிக்கத் திருஅவை மக்கள்மீது காட்டி வரும் அக்கறையை, ஆயர் பேரவையின் இந்த முயற்சி சுட்டிக்காட்டுகிறது என்று காரித்தாஸ் பொதுச்செயலர் Mayer எடுத்துரைத்தார்.


6. இரண்டாயிரம் தமிழ் குடும்பங்களுக்கு உலர் உணவு உதவி திடீர் நிறுத்தம்

பிப்.28,2012. திரிகோணமலை மாவட்டத்தின் மூதூரில் அகதி முகாம்களில் தங்கியுள்ள சம்பூரைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உலர் உணவு உதவி நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே போர் நடந்த பொழுது, சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த இந்த மக்கள் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு மூதூர் பகுதியில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமது சொந்த இடங்களில் மாத்திரமே மீள்குடியேறுவோம் என்று மக்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற நிலையில், மக்களுக்கான உலர் உணவு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாற்றிடங்களில் குடியேற சம்மதிக்கவில்லையெனில் உலர் உணவு நிறுத்தப்படும் என்று இந்த மக்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கிணங்க தற்பொழுது உலக உணவுத் திட்டத்தை அரசு நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், வேறு இடங்களில் குடியேறுவதற்கு மக்கள் தொடர்ந்து சம்மதிக்க மறுத்தால், மூதூர் அகதி முகாங்களில் இயங்கும் தற்காலிகப் பள்ளிகளும் அடுத்து மூடப்படுமென அரசு தரப்பு எச்சரித்துள்ளது.


7. அப்பாவி மக்களை மனநலம் சரியில்லாதவர்கள் என்று மனநல காப்பகத்தில் அடைத்து வைக்கும் சீன அரசு

பிப்.28,2012. சீனாவில் குற்றமற்ற அப்பாவி மக்களை மனநலம் சரியில்லாதவர்கள் என்று கூறி, அவர்களை மன நல காப்பகத்தில் அடைத்து வைக்கும் அரசின் போக்கைக் கண்டித்து, அந்நாட்டில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வருகிற மார்ச் மாதம் சீனாவில் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ள இச்சூழலில், Civil Rights and Livelihood Watch என்ற மனித உரிமைகள் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அரசின் இந்தப் போக்கு அண்மைய காலங்களில் அதிகமாகி வருவதைப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய இவ்வமைப்பின் பேச்சாளர் Liu Feiyue, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் பலரும் இத்தகையக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று கூறினார்.
அரசின் இந்த அடக்கு முறையால், அப்பாவி பொதுமக்களின் வாழ்வு சீர்குலைவதொடு, அவர்கள் இந்தக் காப்பகங்களில் இருந்து திரும்பி வந்த பிறகும் அவர்களை சமுதாயம் சரிவர நடத்துவதில்லை என்று Liu Feiyue எடுத்துரைத்தார்.
சீனாவில் தற்போது 1 கோடியே 60 இலட்சம் மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை, அந்நாட்டின் நல வாழ்வு துறைக்கு பெரும் பாரமாக அமைந்துள்ளது என்றும்  WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.



No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...