Tuesday, 27 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 26 மார்ச் 2012

1.  கியூபாவில் மத விடுதலை மற்றும் மனித உரிமைகள் இடம்பெற அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்

2.  அமெரிக்க அரசு நிர்வாகம் மதத்துடன் சுமுகமான நிலையைக் கொண்டில்லை என்கின்றனர் அந்நாட்டு கத்தோலிக்கர்

3.   2006ம் ஆண்டு பாக்தாத் நகர் குண்டு வெடிப்பில் தாக்கப்பட்ட அன்னை மரியா ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது

4.  காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறார் ஐ நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

5.  ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்பட்ட 54 அணுசக்தி நிலையங்களில், ஒரே ஒரு நிலையம் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது

6.    2014ல் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் தொலைபேசி வசதி

7.    இந்திய இரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2011ல் அதிகரிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1.  கியூபாவில் மத விடுதலை மற்றும் மனித உரிமைகள் இடம்பெற அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்

மார்ச்,26,2012. கம்யூனிச நாடான கியூபாவில் மத விடுதலை மற்றும் மனித உரிமைகள் இடம்பெற அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அனைவரும் இணைந்து வலியுறுத்துவதாக அறிவித்தார் அமெரிக்க ஆயர் Richard Pates.
இவ்வாரம் திங்கள் பிற்பகல் முதல் புதன் மாலை வரை இடம்பெறும் திருத்தந்தையின் கியூபா நாட்டுத் திருப்பயணத்தை முன்னிட்டு, அமெரிக்க  ஆயர்களின் அனைத்துலக நீதி மற்றும் அமைதி அவையின்  தலைவர் ஆயர் Pates வெளியிட்டுள்ளச் செய்தியில், கியூபாவில் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மத விடுதலையை பலப்படுத்தவும், சமூக மேம்பாட்டிற்கும், திருஅவை எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்க ஆயர்கள் தங்கள் உதவிகளை வழங்குவதாகக் கூறினார்.
மக்களைத் தனிமைப்படுத்தி வைக்காமல், பேச்சுவார்த்தைகளையும் தொடர்புகளையும் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே மத விடுதலை மற்றும் மனித உரிமைக்களுக்கான மதிப்பை ஊக்குவிக்க முடியும் என்ற கியூப ஆயர்களின் கண்ணோட்டத்தை தாங்களும் ஆதரிப்பதாக அறிவித்தார் அமெரிக்க ஐக்கிய நாட்டின் Des Moines மறைமாவட்ட ஆயர் Pates.
திருத்தந்தையின் திருப்பயணம் இடம்பெறும் இவ்வேளையில், மனித வாழ்வின் மதிப்பிற்காகவும் மாண்பிற்காகவும் திருத்தந்தையோடு இணைந்து அமெரிக்க ஆயர்களும் குரல் கொடுப்பதாக மேலும் அறிவித்தார் ஆயர் Pates.

2.  அமெரிக்க அரசு நிர்வாகம் மதத்துடன் சுமுகமான நிலையைக் கொண்டில்லை என்கின்றனர் அந்நாட்டு கத்தோலிக்கர்

மார்ச்,26,2012. அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவின் நிர்வாகம் மதத்துடன் சுமுகமான நிலையைக் கொண்டிராதது போல் அந்நாட்டின் கத்தோலிக்கர்கள் உணர்வதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
நலக்காப்பீட்டுத் திட்டங்களில் கருத்தடை முறைகளையும் உள்ளடக்கி அதற்கு நிதியுதவிச் செய்யும் அரசின் கொள்கைக் குறித்த கேள்வியில் பதிலுரைத்த அமெரிக்க கத்தோலிக்கர்கள், அரசின் அண்மை நிலைப்பாடுகள் மத விரோதப்போக்குகள் போல் தோன்றுவதாக தெரிவித்துள்ளனர்.
மதத்துடன் ஒபாமா அரசு நட்புணர்வு பாராட்டாமல் செயல்படுவதாக கருதும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மத வேறுபாடின்றி அனவரிடமும் நடத்தப்பட்ட பிறிதொரு ஆய்வில், ஒபாமா நிர்வாகம் மத நட்புணர்வு இன்றி செயல்படுவதாக 23 விழுக்காட்டினரும், நட்புணர்வுடன் செயல்படுவதாக 39 விழுக்காட்டினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

3.  2006ம் ஆண்டு பாக்தாத் நகர் குண்டு வெடிப்பில் தாக்கப்பட்ட அன்னை மரியா ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது

மார்ச்,26,2012. ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிலவி வரும் வன்முறைகளால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தற்போது நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு பெருமைக்குரியதாய் உள்ளது என்று Kirkukல் உள்ள கல்தேய ரீதிப் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார்.
2006ம் ஆண்டு பாக்தாத் நகர் குண்டு வெடிப்பில் தாக்கப்பட்ட அன்னை மரியா ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, அண்மையில் இவ்வாலயத்தில் மீண்டும் திருப்பலி நிகழ்த்திய பேராயர் சாக்கோ கூடியிருந்த மக்களிடையே இவ்வாறு கூறினார்.
2006ம் ஆண்டு சனவரி 29ம் தேதி இவ்வாலயம் தாக்கப்பட்டபோது, Fadi Raad Elias என்ற 13 வயது சிறுவன் கொல்லப்பட்டான். திருப்பலியில் பீடச்சிறுவனாக அடிக்கடி பங்கேற்ற Elias, தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த கோவிலுக்குச் சென்றிருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நடந்ததால், அவ்விடத்திலேயே அவன் கொல்லப்பட்டான்.
சிறுவன் Elias தன் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு சாட்சியாக இறந்தான் என்பதைக் கூறிய பேராயர் சாக்கோ, Elias மற்றும் பல கிறிஸ்தவர்களின் மரணம் ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது என்று கூறினார்.

4.  காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறார் ஐ நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

மார்ச்,26,2012. வயதிற்கு வந்தவர்களின் மரணங்களுக்கு இரண்டாவது காரணமாக இருக்கும் காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
எய்ட்ஸ் நோய்க்கு அடுத்து மக்களின் உயிர்களை அதிகமாகப் பலிவாங்கும் காச நோயின் அச்சத்திலிருந்தும் அந்நோயின் பாதிப்பிலிருந்தும் உலக மக்கள் அனவரையும் காப்பாற்ற, ஒன்றிணைந்த ஒருமைப்பாட்டுணர்வுத் தேவைப்படுவதாக அறிவித்தார் அவர்.
இம்மாதம் 24ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சிறப்புச் செய்தி வெளியிட்ட பான்கி மூன், காச நோய் குறித்த பாராமுகத்தை விட்டொழித்து, நாம் வாழும் இக்காலத்திலேயே இந்நோயை ஒழித்துவிடும்  முயற்சிகளை அதிகப்படுத்த‌ வேண்டும்  என அதில் கேட்டுள்ளார்.
2010ம் ஆண்டில் ஏறத்தாழ 90 இலட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டதில், 14 இலட்சம் பேர் உயிரிழந்தனர். இதில் 95 விழுக்காட்டு மரணங்கள் வளரும் நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
காச நோய்க்கெதிரான ஒன்றிணைந்த நடவடிக்கைகளால் 1995ம் ஆண்டிலிருந்து இதுவரை 4 கோடியே 60 இலட்சம் பேர் குணம்பெற்றுள்ளனர், 70 இலட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்கிறார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...