Thursday, 22 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 19 மார்ச் 2012

1. தவக்காலத்தின் பாலைவனத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் குரலைக் கேட்குமாறு திருத்தந்தை அழைப்பு

2. மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருப்பயணத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

3. எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் முதுபெரும் தலைவர் 3ம் Shenouda வின் இறப்புக்குத் திருத்தந்தை இரங்கல்

4. எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் துணிவு கொண்டவர்கள் - காப்டிக் ரீதி கத்தோலிக்கத் தலைவர்

5. கிழக்கு Timor நாட்டில் நடைபெற்ற அமைதியான தேர்தலுக்கு, திருஅவையும், ஐ.நா.வும் பாராட்டு

6. ஞாயிற்றுக்கிழமையைச் சிறப்புடன் பேணவேண்டும் - இங்கிலாந்தில் சமய அமைப்புக்களின் முயற்சி

7. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்குவதற்கு தமிழக அரசு உதவும்

8. அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கலாம்-மன்மோகன் சிங்

9. இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் உருவாகும் தொழிநுட்பக் கருவிகளின் கழிவு மிக அதிகமாக இருக்கும்

------------------------------------------------------------------------------------------------------

1. தவக்காலத்தின் பாலைவனத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் குரலைக் கேட்குமாறு திருத்தந்தை அழைப்பு

மார்ச்19,2012. தவக்காலத்தின் பாலைவன நாள்கள் முழுவதும் கிறிஸ்தவர்கள், இயேசுவோடு நடந்து, இறைவனின் குரலை உற்றுக்கேட்டு, நம் ஒவ்வொருவருக்குள்ளும் பேசும் சோதனைகளை விலக்கி நடக்குமாறு கேட்டுக் கொண்டார்   திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தவக்காலத்தில் பாலைவனம் வழியாக இயேசுவோடு எப்படிப் பயணம் செய்வது என்பது குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் விளக்கிய திருத்தந்தை, பாலைவனத்தின் விளிம்பில் திருச்சிலுவை சுடர்விடுகின்றது என்று கூறினார்.
இதுவே தமது பணியின் உச்சகட்டம் என்பதையும் இயேசு அறிந்திருந்தார் என்றும், உண்மையில் கிறிஸ்துவின் சிலுவையே அன்பின் உன்னதநிலை, இவ்வன்பே நமக்கு மீட்பை வழங்கியது என்றும் திருத்தந்தை கூறினார்.
மார்ச் 19ம் தேதியான இத்திங்களன்று புனித வளன் திருவிழா சிறப்பிக்கப்படுகின்றது, தனது நாம விழா நாளான இந்நாளில் தன்னை நினைத்துச் செபிப்பவர்களுக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இயற்பெயர் ஜோசப் ராட்சிங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வருகிற வியாழனன்று சிறப்பிக்கப்படும் உலகத் தண்ணீர் தினம் குறித்தும் பேசிய திருத்தந்தை, அனைவருக்கும் சமமான, பாதுகாப்பான மற்றும் போதுமான தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படுவதன் மூலம், ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கான உரிமையும், உணவும் கிடைப்பது ஊக்குவிக்கப்படும். இக்காலத்திலும் வருங்காலத்திலும் வாழ்வோரின் நலனுக்காக இப்பூமியின் நன்மைகள் பொறுப்புடன் பயன்படுத்தப்படும்என்று கூறினார்.


2. மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருப்பயணத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

மார்ச்19,2012. இவ்வாரத்தில் மெக்சிகோ மற்றும் கியூபாவுக்குத் தான் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்திற்காகச் செபிக்குமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்நாடுகளிலும், இலத்தீன் அமெரிக்கா முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், மெக்சிகோவிலும் கியூபாவிலும் இடம் பெறும் விசுவாசப் பதுப்பித்தலுக்கு உந்துதல் கொடுக்கவும் அந்நாடுகளுக்குச் செல்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.
85 வயதை விரைவில் அடையவிருக்கும் திருத்தந்தையின் இத்திருப்பயணத்தை முன்னிட்டு இவ்வாரப் புதன் பொது மறைபோதகம் இடம் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெக்சிகோவில் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ளும் நாட்களில் வன்முறைகளை நிறுத்திக் கொள்வதாக அந்நாட்டின் போதைப்பொருள் வியாபாரக் கும்பல் ஒன்று விளம்பரங்களை நகரத் தெருக்களில் ஒட்டியுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம் இம்மாதம் 23 முதல் 28 வரை நடைபெறும்.


3. எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் முதுபெரும் தலைவர் 3ம் Shenouda வின் இறப்புக்குத் திருத்தந்தை இரங்கல்

மார்ச்19,2012. எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் திருத்தந்தையும், அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவருமான 3ம் Shenouda இறைபதம் அடைந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சனிக்கிழமையன்று தனது 88வது வயதில் இறந்த முதுபெரும் தலைவர் 3ம் Shenouda, எகிப்தில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பதட்ட நிலைகள்  அதிகரித்து வரும் நிலைகளுக்கு மத்தியில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டுக் கிறிஸ்தவர்களைப் பாதுகாத்து வழிநடத்தி வந்தவர்.
முதுபெரும் தலைவர் 3ம் Shenouda ஐ கடவுளின் விசுவாசமுள்ள பணியாளர் என்று குறிப்பிட்டு, அவரின்  சேவையைப் பாராட்டுவதாக அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, எகிப்தின் சுமார் ஒரு கோடிக் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதுபெரும் தலைவர் 3ம் Shenouda, 1973ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பவுலை வத்திக்கானில் சந்தித்துள்ளார். திருத்தந்தை 2ம் ஜான் பால், கெய்ரோவுக்கு 2000மாம் ஆண்டில் சென்ற போது முதுபெரும் தலைவர் 3ம் Shenouda ஐச் சந்தித்துள்ளார். 
மேலும், எகிப்தில் தற்போது ஆட்சியிலிருக்கும் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியும், முதுபெரும் தலைவர் 3ம் Shenouda எகிப்தில் ஆற்றி வந்த அருஞ்சேவையைப் பாராட்டியுள்ளது.
எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை வெளிப்படையாய்க் கண்டித்துப் பேசியவர் முதுபெரும் தலைவர் 3ம் Shenouda.


4. எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் துணிவு கொண்டவர்கள் - காப்டிக் ரீதி கத்தோலிக்கத் தலைவர்

மார்ச்,19,2012. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் துணிவு கொண்டவர்கள், அவர்கள் போராடவும் கடமைப்பட்டுள்ளனர் என்று எகிப்தில் உள்ள காப்டிக் ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் நிர்வாகப் பொறப்பைத் தற்காலிகமாக ஏற்றிருக்கும் ஆயர் Kyrillos William Samaan கூறினார்.
கெய்ரோவின் முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கடும் நோயுற்றிருப்பதால், திருஅவையின் தலைமைப் பொறுப்பைத் தற்போது ஏற்றிருக்கும் ஆயர் William, Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்புக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.
திருஅவையுடன் இணைந்து, எகிப்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்களும் தங்கள் கோவில்களைக் காக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள் என்று ஆயர் William கூறினார்.
இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறையாளர்களுக்குப் பயந்து அதிகமான கிறிஸ்தவர்கள் எகிப்தை விட்டு வெளியேறுவதாக அறிக்கைகள் வந்த வண்ணம் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் தங்கள் மத உரிமைகளுக்காகப் போராடி வருவதையும்  தன்னால் காண முடிகிறதென்று ஆயர் William எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவர்கள் எகிப்து நாட்டில் அந்நியர்கள் அல்ல என்றும், தலைமுறை, தலைமுறையாக இங்கு வாழும் பல கிறிஸ்தவர்கள் இஸ்லாம் இந்நாட்டிற்குள் வருவதற்கு முன்பிருந்தே இங்கு வாழ்பவர்கள் என்றும் ஆயர் William தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.


5. கிழக்கு Timor நாட்டில் நடைபெற்ற அமைதியான தேர்தலுக்கு, திருஅவையும், ஐ.நா.வும் பாராட்டு

மார்ச்,19,2012. கிழக்கு Timor (Timor Leste) நாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம், மற்றும் மக்கள் வாக்களிப்பு அனைத்தும் எவ்வித வன்முறையும் இன்றி முடிவுற்றதற்காக அந்நாட்டின் ஆயர் ஒருவர் அனைவரையும் பாராட்டினார்.
கடந்த சனிக்கிழமையன்று கிழக்கு Timorல் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இஞ்ஞாயிறன்று வெளியானது. இம்முடிவின்படி, தற்போது அரசுத் தலைவராக இருக்கும் Jose Ramos-Horta தனது தோல்வியை ஒப்புக் கொண்டதால், தற்போது அதிக வாக்குகள் பெற்றுள்ள வேறு இரு வேட்பாளர்கள் மட்டும் வருகிற ஏப்ரல் மாதம் அரசுத் தலைவர் தேர்தலில் நேருக்கு நேர் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு முறையில் மக்கள் இந்த மாற்றங்களைக் கொணர்ந்தது குறித்து தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளார் Dili ஆயர் Alberto Ricardo da Silva.
மிகச் சிறுமையான, வறுமையான நாடு எனினும், கிழக்கு Timor (Timor Leste), குடியரசின் நல்ல அம்சங்களை உலகிற்கு பாடமாகத் தந்துள்ளது என்று ஆயர் Ricardo da Silva பெருமையுடன் சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையே, அந்நாட்டில் அமைதியான முறையில் தேர்தல்கள் நடைபெற்றதற்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், இத்தேர்தல்களை எவ்வித வன்முறையும் இன்றி நடத்தித் தந்த அரசு அதிகாரிகளுக்கும், அங்கு பணி புரிந்து வரும் ஐ.நா.அமைதிப் படையினருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.


6. ஞாயிற்றுக்கிழமையைச் சிறப்புடன் பேணவேண்டும் - இங்கிலாந்தில் சமய அமைப்புக்களின் முயற்சி

மார்ச்,19,2012. ஞாயிறன்று பகுதிநேர உழைப்பைக் கடைப்பிடித்து வரும் பிரித்தானிய அரசின் சட்டத்தில் மாற்றங்களைக் கொணர விழையும் அரசு உயர் அதிகாரி George Osborneன் முயற்சிக்கு இங்கிலாந்தில் உள்ள சமய அமைப்புக்களும், பிற அமைப்புக்களும் கவலை தெரிவித்துள்ளன.
இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படும் பகுதிநேர கட்டுப்பாட்டை நீக்கி, முழு நேரமும் கடைகள் திறக்கப்படுவது நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்கும் என்று அரசு உயர் அதிகாரி Osborne கூறினார்.
Osborne கூறிய இந்தப் பரிந்துரை இப்புதனன்று பிரித்தானிய பாராளும் மன்றத்தில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், இந்த பரிந்துரைக்கு பல சமய அமைப்புக்களும், குடும்ப நலனில் அக்கறை கொண்ட பல சமுதாய அமைப்புக்களும் தங்கள் கவலையையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக் கிழமையைச் சிறப்புடன் பேணவேண்டும் (Keep Sunday Special Campaign) என்ற மையக்கருத்துடன் துவக்கப்பட்டுள்ள ஒரு விளம்பர முயற்சிக்கு பல கிறிஸ்தவ சபைகளும் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
ஐரோப்பாவிலேயே, குடும்பங்களை மையப்படுத்திய ஒரு நாடாக இங்கிலாந்து விளங்கும் என்ற வாக்குறுதியுடன் பதவியேற்ற தற்போதைய  பிரித்தானிய அரசு, இப்போது இந்தப் பரிந்துரையைச் செயல்படுத்த முயல்வது குடும்ப நலனுக்குப் பாதகமாக அமையும் என்று இந்த விளம்பர முயற்சியில் வலியுறுத்தப்படுகிறது.


7. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்குவதற்கு தமிழக அரசு உதவும்

மார்ச்,19,2012. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்குவதற்கு தமிழக அரசு உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திங்களன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
கூடங்குளம் பிரச்சனை குறித்து ஆராய்வதற்கு, மத்திய, மாநில அரசுகள் அமைத்த வல்லுநர் குழுக்களின் அறிக்கைகள், அணுமின்நிலையத்தை எதிர்ப்பவர்களின் மனு இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்த பிறகு அணுமின் நிலையம் செயல்படவேண்டும், அது பாதுகாப்பானதே என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"கூடங்குளம் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கமோ, சுனாமியோ ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை" என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்ற சூழலில் மின் உற்பத்தியினை அங்கே துவங்கலாம் என அரசு முடிவு செய்திருக்கிறது எனவும் அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
அணுமின்நிலையத்தின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் அரசு இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, கூடங்குளம் பகுதிமக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, மின் நிலையக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.


8. இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கலாம்-மன்மோகன் சிங்

மார்ச்,19,2012. ஐ.நா. அவையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கொண்டுவந்துள்ள இத்தீர்மானம், இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்கால நலன்களைப் பிரதிபலிக்குமாயின் அத்தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க இசைந்துள்ளது என்று இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.
சமத்துவத்துடன் கூடிய கண்ணியமான ஓர் எதிர்காலம் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் எனும் இந்திய இலட்சியங்களை அமெரிக்கத் தீர்மானம் சாதிக்குமானால், அதற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க தயாராக உள்ளது என்றும் கூறிய் அவர், இலங்கையில் தமிழர்களுக்கு நீதியும் சுயகௌரவமும் கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும் போதே இந்தியப் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது எனவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


9. இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் உருவாகும் தொழிநுட்பக் கருவிகளின் கழிவு மிக அதிகமாக இருக்கும்

மார்ச்,19,2012. இன்னும் ஐந்து ஆண்டுகளில், ஆப்ரிக்காவில் பயன்படுத்தாமல் குப்பையில் போடப்படும் செல்லிடப் பேசிகள் போன்ற தொழிநுட்பக் கருவிகளின் கழிவு ஐரோப்பிய நாடுகளில் உருவாகும் தொழில் நுட்பக் கழிவுகளை விட அதிகமாக இருக்கும் என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டம் என்ற அமைப்பு (UNEP) அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, அண்மைக் காலங்களில் ஆப்ரிக்க நாடுகளில் பெருகி வரும் தொழிநுட்பக் கருவிகளின் அதிகரிப்புக்கு ஏற்ப, அங்கு உருவாகும் தொழில் நுட்பக் கழிவுகளும் கூடிக்கொண்டே செல்கிறது என்று சொல்லப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் செல்லிடப் பேசியின் பயன்பாடு 100 மடங்கும், கணனியின் பயன்பாடு 10 மடங்கும் அதிகரித்துள்ளது என்று சுட்டிக் காட்டும் இவ்வறிக்கை, Benin, Ivory Coast, Ghana, Liberia, Nigeria ஆகிய 5 நாடுகளில் கடந்த ஆண்டு மட்டும் 10 இலட்சம் டன் தொழில்நுட்பக் கழிவுகள் உருவாக்கப்பட்டன என்று கூறுகிறது.
தற்போது இந்தக் கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்படுவதால், நச்சு கலந்த காற்று மக்களின் நல வாழ்வுக்குப் பெரும் பாதகங்களை விளைவிக்கின்றன என்று இவ்வறிக்கை தன் கவலையை வெளியிட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...