Monday, 19 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 17 மார்ச் 2012

1. கர்தினால் பெர்த்தோனே:கிறிஸ்தவர்கள் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை

2. Al Jazeera என்ற அராபியத் தொலைக் காட்சிக்கு கர்தினால் Tauran பேட்டி

3. திருத்தந்தையின் திருப்பயணம், நம்பிக்கையின் பயணம் - திருப்பீடப் பேச்சாளர்

4. மனிதாபிமானப் பணிகள் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பு சிரியத் திருப்பீடத் தூதர்

5. திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் முக்கியமான ஆவணங்கள் இணையதளத்தில்...

6. சவுதி அரேபியாவில் வீட்டுவேலை செய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டவரில் 70 விழுக்காட்டினர் உடல் மற்றும் மன ரீதியான வன்முறைகளால் துன்புறுகின்றனர் ஓர் ஆய்வு

7. இந்தியாவில் 18 வயதிற்குள் தாயாவோர் 22 விழுக்காடு

8. இலங்கையின் வடக்கில் இராணுவமயமாக்கல் வன்முறையை தூண்டலாம் - பன்னாட்டு மனித உரிமைகள் குழு எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் பெர்த்தோனே:கிறிஸ்தவர்கள் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை
மார்ச்17,2012. லூர்து நகர் மற்றும் பிற அன்னைமரியா திருத்தலங்களுக்குத் திருப்பயணங்களை மேற்கொள்ளும் போது கிடைக்கும் ஆழமான விசுவாசத்தின் ஆழமான ஆன்மீக அனுபவம், அந்தத் திருப்பயண நாள்களோடு முடிந்து விடுவதில்லை என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே கூறினார்.
இத்திருப்பயணங்களின் போது நாம் கிறிஸ்துவின் அன்பைக் கொடையாகப் பெறுகிறோம், அத்துடன் திருப்பயணிகளுக்கு இடையே ஓர் ஆழமான நட்புணர்வும் பிணைப்பும் ஏற்படுகின்றன என்றும் கர்தினால் பெர்த்தோனே மேலும் கூறினார்.
லூர்து நகருக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் OFTAL என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதன் 80ம் ஆண்டு நிறைவையொட்டி அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு இச்சனிக்கிழமை காலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
கல்வாரியில் சிலுவையடியில் நின்ற அன்னைமரியா மற்றும் சிலுவையில் இறந்த இயேசு பற்றிய சிந்தனைகளை வழங்கிய கர்தினால் பெர்த்தோனே, கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை, உண்மையில் சிலுவையில் தொங்கிய இயேசு, அன்னைமரியாவுக்கும் யோவானுக்கும் செய்தது போல, நம்மை ஒருவர் மற்றவருக்குக் கொடையாகக்  கொடுக்கிறார் என்று கூறினார்.
நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருப்பயணிகளை லூர்து நகருக்கும், பிற அன்னைமரியா திருத்தலங்களுக்கும் புனிதபூமிக்கும் அழைத்துச் செல்லும் OFTAL என்ற அமைப்பானது 1932ம் ஆண்டு பேரருட்திரு Alessandro Rastelli என்பவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது.
 
2. Al Jazeera என்ற அராபியத் தொலைக் காட்சிக்கு கர்தினால் Tauran பேட்டி
மார்ச்17,2012. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணருகிறார்கள் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் பெருமளவாக வெளியேறுதல், புனிதபூமியின் நிலைமை, ஐரோப்பாவில் முஸ்லீம்களுக்கு எதிரான பாகுபாடு, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான உறவு, அரபு நாடுகளின் அண்மை எழுச்சி, பல்சமய உரையாடல் எனப் பல தலைப்புக்களில் Al Jazeera என்ற அராபியத் தொலைக் காட்சிக்குப் பேட்டியளித்த கர்தினால் Tauran இவ்வாறு கூறினார். இந்தப் பேட்டியானது இச்சனிக்கிழமையிலிருந்து நாளொன்றுக்கு நான்கு தடவைகள் என மூன்று நாள்களுக்கு ஒளிபரப்பப்படும் எனக் கூறப்படுகிறது.
கலாச்சார மோதல்களைத் தவிர்ப்பதில் வெற்றி கண்டுள்ள நாம், அறியாமையின் மோதலைத் தவிர்ப்போம் என்று பேசிய கர்தினால் Tauran, ஐரோப்பாவில் முஸ்லீம் மதம் பற்றிக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது முக்கியம் என்றும், ஐரோப்பாவில் இசுலாம் குறித்த பயம் இருக்கின்றது, இதற்கு அறியாமையே காரணம் என்றும் குறிப்பிட்டார்.
அறியாமை எனும் மோதலை தவிர்ப்பதற்காக, மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு மதங்களின் கூறுகள் பற்றிக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் இப்பேட்டியில் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் Tauran.
கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் என்றே சொல்லப்படாமல், மதநம்பிக்கையற்றவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கும் பாடப்புத்தகங்களும் இருக்கின்றன, இது சரியல்ல என்றும் பேசியுள்ள கர்தினால், ஐரோப்பாவுக்கும், கிறிஸ்தவம் பற்றி மீண்டும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இப்பிரச்சனை, சமயக் கல்வியறிவற்றதன்மையின் வெளிப்பாடாகும், இக்கால இளையோர் தங்களது மதங்கள் குறித்து தெரிந்திருக்கவில்லை எனவும் கர்தினால் தவ்ரான் கூறினார்.

3. திருத்தந்தையின் திருப்பயணம், நம்பிக்கையின் பயணம் - திருப்பீடப் பேச்சாளர்
மார்ச்17,2012. மெக்சிகோ மற்றும் கியூபாவுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மேற்கொள்ளும் திருப்பயணம், அந்நாடுகளின் மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் பயணமாக இருக்கின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
Octava Dies என்ற வத்திக்கான் தொலைக்காட்சி வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அருள்தந்தை லொம்பார்தி, இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கங்கள் பல தடவைகள் பேசப்பட்டிருந்தாலும், இப்பயணம் இந்நாடுகளுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாய் அமையும் என்று தெரிவித்தார்.
கடும் பிரச்சனைகளை எதிர்நோக்கி வரும் மெக்சிகோ நாட்டிற்கு இத்திருப்பயணம் இக்காலத்திலும் வருங்காலத்திலும் நம்பிக்கையை வழங்கும் என்றுரைத்த அவர், புதிய சகாப்தத்தின் பாதையில் நுழைந்து கொண்டிருக்கும் கியூப மக்களுக்கு இத்திருப்பயணம் மேலும் ஊக்கமூட்டுவதாய் இருக்கும் என்று கூறினார்.
இலத்தீன் அமெரிக்கா முழுவதும் புதிய நற்செய்திப்பணியில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் திருத்தந்தையின் இத்திருப்பயணம், அக்கண்டத்தின் பணிகளுக்கும் தூண்டுகோலாய் அமையும் என்றும் திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.
மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம் இம்மாதம் 23 முதல் 28 வரை இடம் பெறும்.


4. மனிதாபிமானப் பணிகள் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பு சிரியத் திருப்பீடத் தூதர்

மார்ச்17,2012. வன்முறைகள் நிறைந்துள்ள சிரியாவுக்கு மனிதாபிமானப் பணிகள் தொடங்கப்படவிருப்பதை ஓர் ஆசீர்வாதமாகக் கருதுவதாக அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ ஜெனாரி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனம், சிரிய அரசு, இசுலாமிய பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து சிரியாவுக்கு மனிதாபிமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முயற்சி செய்து வருவது குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் ஜெனாரி இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிறுவனங்களின் முயற்சி குறித்த விவரங்கள் தெரியவில்லையெனினும், இத்தகைய முயற்சிக்காகத் தாங்கள் நீண்ட காலமாகக் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார் பேராயர் ஜெனாரி.
கடந்த 12 மாதங்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களில் மக்கள் சோர்ந்து போயுள்ளார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையே, சிரியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஐ.நா.பொதுச் செயலர் Kofi Annan, சிரிய அரசுத்தலைவரிடம் தான் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து மேலும் கலந்து பேசுவதற்கென ஒரு குழுவை அந்நாட்டிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் இதுவரை எட்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. கணக்கிட்டுள்ளது.


5. திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் முக்கியமான ஆவணங்கள் இணையதளத்தில்...

மார்ச்17,2012. திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் முக்கியமான ஆவணங்கள், இலத்தீன் உட்பட பல்வேறு மொழிகளில் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
www.doctrinafidei.va  என்ற அப்பேராயத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இலத்தீன், ப்ரெஞ்ச், ஆங்கிலம், இத்தாலியம், போர்த்துக்கீசியம், இஸ்பானியம், ஜெர்மானியம், போலந்து ஆகிய மொழிகளில் அப்பேராயத்தின் முக்கியமான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சில ஆவணங்கள்,  ஹங்கேரியம், சுலோவாக்கியம், செக், டச்சு ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

6. சவுதி அரேபியாவில் வீட்டுவேலை செய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டவரில் 70 விழுக்காட்டினர் உடல் மற்றும் மன ரீதியான வன்முறைகளால் துன்புறுகின்றனர் ஓர் ஆய்வு

மார்ச்17,2012. அரபு நாடுகளில், குறிப்பாக சவுதி அரேபியாவில் வீட்டுவேலை செய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டவரில் 70 விழுக்காட்டினர் உடல் மற்றும் மன ரீதியான வன்முறைகளால் துன்புறுகின்றனர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
வேலைக்கு அமர்த்தும் தலைவர்களால் குறைந்த ஊதியம், தவறாகப் பயன்படுத்தப்படல் போன்ற துன்பங்களை எதிர்நோக்குகின்றனர் எனவும், எந்தவிதமான வேலைக்கும் சான்றிதழ் இல்லாமல் இருப்பவர்களும் குடும்பங்களைக் கண்காணிப்பவர்களும் உடல் மற்றும் மன ரீதியான வன்முறைகளால் தொடர்ந்து துன்புறுகின்றனர் எனவும் வெளிநாட்டுப் பணியாளர்கள் நலவாழ்வுக் குழு எடுத்த ஆய்வு கூறுகிறது.
சவுதி அரேபியாவில் வேலை செய்யும் ஒரு கோடிக்கு மேற்பட்ட வெளிநாட்டவரில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிகம் இருப்பவர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டவர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
2008ம் ஆண்டில் மட்டும் 6 இலட்சத்துக்கு மேற்பட்ட பிலிப்பீன்ஸ் நாட்டவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.


7. இந்தியாவில் 18 வயதிற்குள் தாயாவோர் 22 விழுக்காடு

மார்ச்17,2012. இந்தியப் பெண்களில், 22 விழுக்காட்டினர் 18 வயதிற்குள் தாயாகி விடுவதாகவும், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை, குறைந்த எடை கொண்டதாக உள்ளதாகவும் யுனிசெப் என்ற ஐ.நா குழந்தைநல அமைப்பு அறிவித்தது.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், 43 விழுக்காட்டுக் குழந்தைகள் குறைந்த எடை உள்ளவர்களாகவும், 16 விழுக்காட்டுக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாகவும், 48 விழுக்காட்டுக் குழந்தைகள் வயதிற்கேற்ற வளர்ச்சி இல்லாத நிலையிலும் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் சேரிப்பகுதிகளில் பிறக்கும் குழந்தை, தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முன்னதாகவே, குறைந்த எடை அல்லது இரத்தசோகை காரணமாக இறந்து விடுவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


8. இலங்கையின் வடக்கில் இராணுவமயமாக்கல் வன்முறையை தூண்டலாம் - பன்னாட்டு மனித உரிமைகள் குழு எச்சரிக்கை

மார்ச்17,2012. இலங்கையின் வடபகுதியில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கலும், பொறுப்பான அரசு இல்லாமையும், அப்பகுதியில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதோடு, எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று ஒரு பன்னாட்டு மனித உரிமைகள் குழு எச்சரித்தது.
இலங்கையின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மை உரிமைகள் குறித்தும், வடக்கில் இராணுவத்தின்கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் குறித்தும் இவ்வெள்ளியன்று அறிக்கை வெளியிட்ட Brussels ஐ மையமாகக் கொண்ட International Crisis Group என்ற பன்னாட்டு மனித உரிமைகள் குழு இவ்வாறு எச்சரித்துள்ளது.
இனமோதலின் மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்ட தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடபகுதி இலங்கை இராணுவத்தின் மறைமுக ஆட்சியின் கீழ் தொடர்ந்து இயங்குவதாக இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
கொழும்பில் இருக்கும் சிங்கள அதிகாரிகளே முக்கிய முடிவுகளை எடுப்பதாக கூறும் இவ்வமைப்பு, படிப்படியாக இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களவர்கள், அந்நாட்டின் வடபகுதியில் அரசின் உதவியுடன் குடியேற்றப்படுவதாகவும், இத்தகைய சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் வடபகுதி தமிழர்கள் மத்தியில் நிலவிய பழைய மனக்குறைகளை மீண்டும் தூண்டுவதாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை அரசே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ள இவ்வமைப்பு, இது தொடர்பில் இலங்கையில் செயற்படும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தொண்டு அமைப்புக்களும், இலங்கைக்கு நன்கொடை வழங்கும் நாடுகளும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.
தங்களின் சேவைகள் மற்றும் நிதிஉதவிகள் பாதிக்கப்பட்டவர்களின் விருப்பத்துக்கேற்ப அவர்களுக்கு நேரடியாகச் சென்று சேரும் வகையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது சர்வதேச சமூகத்தின் பொறுப்பு என்றும் அந்த மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...