Friday, 16 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 14 மார்ச் 2012

 
1. அகில உலக திருநற்கருணை மாநாட்டின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட உள்ள ஆலய மணி திருத்தந்தையிடம் கொடுக்கப்பட்டது

2. திருத்தந்தையின் கியூபா நாட்டுத் திருப்பயணம் குறித்து, அரசுத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கர்தினால் Ortega

3. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - சிரியாவின் திருப்பீடத் தூதர்

4. கிறிஸ்தவர்கள் புதைக்கப்படும்  கல்லறைகள் மதிப்பிற்குரியன - கோவா தலத் திருஅவை

5. மும்பை அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இயற்கைக்குப் புறம்பாக நடைபெறும் நிகழ்வைக் குறித்து கருத்துக்கள்

6. 'எருசலேமை நோக்கி உலக நடைப்பயணத்'தில் இந்தியாவும் இணைந்தது

7. 'போர் முடிந்த பின்னரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன' – அம்னஸ்டி அறிக்கை

8. புற்றுநோய்க்கான மிக விலை உயர்ந்த மருந்தை இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் தயாரிக்க அனுமதி

------------------------------------------------------------------------------------------------------

1. அகில உலக திருநற்கருணை மாநாட்டின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட உள்ள ஆலய மணி திருத்தந்தையிடம் கொடுக்கப்பட்டது

மார்ச்,14,2012. இவ்வாண்டு ஜூன் மாதம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற உள்ள 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட உள்ள ஆலய மணி ஒன்று இப்புதன்  பொது மறைபோதகத்தின்போது திருத்தந்தையிடம் கொடுக்கப்பட்டது.
பேராயர் Diarmuid Martin தலைமையில், திருநற்கருணை மாநாட்டின் முன்னேற்பாடுகளை செய்து வரும் குழுவை இப்புதன் மறைபோதகத்தின்போது சந்தித்தத் திருத்தந்தை, திருநற்கருணை மாநாட்டிற்கு அனைத்து மக்களையும் அழைக்கும் அடையாளமாக, தன்னிடம் வழங்கப்பட்ட இந்த ஆலய மணியை அடித்தார்.
2011ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி, அயர்லாந்து நாட்டின் பாதுகாவலாரான புனித பேட்ரிக் திருநாளன்று டப்ளின் நகரில் இருந்து புறப்பட்ட இந்த ஆலய மணி, இதுவரை அயர்லாந்தின் 26 மறைமாவட்டங்களில் பயணித்துள்ளது. மேலும், செப்டம்பர் மாதம் இந்த மணி பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரையும் சென்றடைந்தது.
தற்போது உரோம் நகர் வந்துள்ள இந்த ஆலய மணி, மார்ச் 17ம் தேதி, வருகிற சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள புனித பேட்ரிக் திருநாள் வரை இந்நகரில் ஒரு சில ஆலயங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.


2. திருத்தந்தையின் கியூபா நாட்டுத் திருப்பயணம் குறித்து, அரசுத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கர்தினால் Ortega

மார்ச்,14,2012. இம்மாத இறுதி நாட்களில் மெக்சிகோ மற்றும் கியூபா நாடுகளுக்குத் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்து கியூபா நாட்டுக் கர்தினால் Jaime Ortega இச்செவ்வாய் இரவு அந்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
கம்யூனிச அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கியூபா நாட்டுத் தொலைக்காட்சியில் கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் ஒருவரைப் பேச அனுமதித்தது ஒரு முக்கியமான விதிவிலக்காகக் கருதப்படுகிறது.
கியூபா நாட்டின் விசுவாசத்தை மீண்டும் புதுப்பிக்கவும், புதிய முறையில் நற்செய்திப் பணியை ஊக்கப்படுத்தவும் திருத்தந்தை கியூபா நாட்டிற்கு வருவது, அந்நாட்டில் பெருமளவு ஆர்வத்தையும் எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது என்று Havana பேராயர் கர்தினால் Ortega கூறினார்.
இறையியலுக்கென்று தன் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்துள்ள திருத்தந்தை தலை சிறந்த அறிவாளி என்று கூறிய கர்தினால் Ortega, புனித பேதுருவின் வழித் தோன்றலான அவர், கியூபா நாட்டிற்கு ஒரு மேய்ப்பராக வருகிறார் என்று எடுத்துரைத்தார்.
கர்தினால் அவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, Santiago உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Dionisio Garcia Ibáñez திருத்தந்தையின் திருப்பயணம் குறித்து தொலைக்காட்சியில் அடுத்த வாரம் உரையாற்றுவார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
கியூபா திருஅவையின் குரலுக்கு அரசு ஊடகத்தில் இடமளித்த கியூபா அரசு, தேவைப்படும் நேரங்களில் தொடர்ந்து திருஅவையின் குரலை மக்கள் கேட்கும் வண்ணம் வழிகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாக கியூபத் தலத் திருஅவையின் சார்பில் பேசிய அருள்தந்தை Orlando Marquez கூறினார்.


3. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - சிரியாவின் திருப்பீடத் தூதர்

மார்ச்,14,2012. சிரியாவில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
ஐக்கிய நாட்டு அவை, மற்றும் அரேபிய நாடுகளின் ஒன்றியம் இவற்றின் சார்பில் சிரியா நாட்டின் தலைவருடன் பேச்சு வார்த்தை மேற்கொண்ட முன்னாள் ஐ.நா. பொதுச் செயலர் கோஃபி அன்னன் வலியுறுத்தியுள்ள அத்தனை அம்சங்களையும் தானும் வலியுறுத்துவதாக பேராயர் Zenari கூறினார்.
கடந்த ஆண்டு முதல் சிரியாவில் நடைபெற்று வரும் போராட்டங்களில், அரசின் அடக்கு முறையால் இதுவரை 8000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானவர் பெண்களும் குழந்தைகளும் என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
இதற்கிடையேகோஃபி அன்னன் சிரியாவின் அரசுத் தலைவர் Bashar al-Assad உடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் முழு விவரங்களும் வெளியாகவில்லை எனினும், அரசுத் தலைவர் Assad வருகிற மேமாதம்  தேர்தல்களை நடத்த சம்மதித்துள்ளார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


4. கிறிஸ்தவர்கள் புதைக்கப்படும்  கல்லறைகள் மதிப்பிற்குரியன - கோவா தலத் திருஅவை

மார்ச்,14,2012. இறைவனை வழிபடும் ஆலயங்களுக்கு அடுத்தபடியாக, கத்தோலிக்க விசுவாசிகள் புதைக்கப்படும்  கல்லறைகள் மதிப்பிற்குரியன என்று கோவா தலத் திருஅவை கூறியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற கோவா மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியானபின், அங்குள்ள கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமியக் கல்லறைகள் பல சேதமாக்கப்பட்டுள்ளன.
இச்சேதங்களை உருவாகியவர்களைக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இதனால், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் எதிர் வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கோவா முதல் அமைச்சர் Manohar Parrikar வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் இந்தச் செயல்களை வன்மையாகக் கண்டித்துள்ள கோவா தலத் திருஅவை, மக்களை அமைதி காக்கும்படியும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் அரசு உடனடியாகச் செயல் படும்படியும் கேட்டுள்ளது.


5. மும்பை அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இயற்கைக்குப் புறம்பாக நடைபெறும் நிகழ்வைக் குறித்து கருத்துக்கள்

மார்ச்,14,2012. இயற்கைக்குப் புறம்பாக நடைபெறும் எந்த ஒரு நிகழ்வையும் புதுமை என்று கூறுவதில் கத்தோலிக்கத் திருஅவை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்துள்ளது என்று இந்தியாவின் ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த ஒரு வாரமாக மும்பையின் Irla என்ற பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் உள்ள ஒரு சிலுவையிலிருந்து தண்ணீர் வடிந்து வருவதாகக் கூறப்படும் ஒரு நிகழ்வைக் காண மக்கள் திரண்டு வருகின்றனர்.
இந்தியப் பகுத்தறிவு கழகத்தின் தலைவரான Sanal Edamaruku என்பவர் இந்த நிகழ்வைக் குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளதோடு, இந்தச் செயல்பாடு மக்களிடம் இருந்து பணம் திரட்டும் ஒரு முயற்சி என்றும் கூறியுள்ளார்.
Edamarukuவின் கூற்றைக் குறித்துத் தன் கருத்தை வெளியிட்ட மும்பை துணை ஆயர் Agnelo Gracias, Irlaவில் நடைபெறுவது ஒரு புதுமையா என்று கேள்வி எழுப்புவது சரியே, ஆனால், இது தொடர்பாக, பணம் திரட்டும் முயற்சியில் திருஅவை ஈடுபட்டுள்ளது என்று விமர்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.
பகுத்தறிவு கழகத்தின் தலைவர் திருஅவை மீது தொலைக்காட்சியில் கூறியவை அர்த்தமற்ற பொய் வாதங்கள் என்றும், பணம் திரட்டுவது கத்தோலிக்கத் திருஅவையின் நோக்கமாக என்றும் இருந்ததில்லை, மாறாக, இந்தியா முழுவதும் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டு வரும் பிறரன்புப் பணிகளைப் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும் என்று வேளாங்கண்ணி ஆலயத்தில் பணி புரியும் அருள்தந்தை Augustine Palett கூறினார்.


6. 'எருசலேமை நோக்கி உலக நடைப்பயணத்'தில் இந்தியாவும் இணைந்தது

மார்ச்,14,2012. 'எருசலேமை நோக்கி உலக நடைப்பயணம்' என்று துவக்கப்பட்டுள்ள தெற்காசிய முயற்சி ஒன்றில் அண்மையில் இந்தியாவும் இணைந்தது.
இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எருசலேம் நகரம் பாலஸ்தீனியர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி உலகின் பல நாடுகளுடன் இந்தியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் அண்மையில் ஆரம்பித்துள்ள இந்த உலக நடைப்பயணத்தை பாராளு மன்ற உறுப்பினர் ராம்விலாஸ் பாஸ்வான் துவக்கி வைத்தார்.
54 பேர் கொண்ட இந்தக் குழுவினரின் நடைபயணம் பல்சமய செபவழிபாட்டுடன் ஆரம்பமானது. இக்குழுவினருடன் இந்தோனேசிய, மற்றும் மலேசியப் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சேர்ந்தனர். தெற்காசிய பிரதிநிதிகள் அடங்கிய இக்குழு எகிப்து, லெபனான், சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக நடைபயணம் சென்று மார்ச் மாதம் 30ம் தேதி எருசலேம் அடைவார்கள்.
1976ம் ஆண்டு எருசலேம் நகருக்காக அமைதிப் போராட்டம் நடத்திய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட அடக்கு முறையால் 6 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 90க்கும் அதிகமானோர் காயப்பட்டனர். 300 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். எனவே, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 30ம் தேதி பாலஸ்தீனிய நில நாள் என்று கடைபிடிக்கப்படுகிறது.
எருசலேம் நகருக்காகப் போராடிவரும் பாலஸ்தீனியர்களுடன், உலக அமைதிக்கான நோபெல் பரிசை வென்ற பேராயர் Desmond Tutu மற்றும் Mairead Maguire ஆகியோரும் எருசலேம் நகரம் பாலஸ்தீனியர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி வருகின்றனர்.


7. 'போர் முடிந்த பின்னரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன' – அம்னஸ்டி அறிக்கை

மார்ச்,14,2012. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அங்கு இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அம்னஸ்டி இண்டர்நாஷனல் அமைப்பு கூறியுள்ளது.
இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் மீண்டும் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஜெனிவாவில் உள்ள அம்னஸ்டி இண்டர்நாஷனல் அமைப்பு, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
போர் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்தும் வகையிலான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் தாக்கல் செய்திருக்கிறது.


8. புற்றுநோய்க்கான மிக விலை உயர்ந்த மருந்தை இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் தயாரிக்க அனுமதி

மார்ச்,14,2012. புற்றுநோய்க்கான மிக விலை உயர்ந்த மருந்து ஒன்றை இந்தியாவிலேயே தயாரித்து, குறைந்த விலையில் விற்பதற்கான அனுமதியை இந்திய அரசு இச்செவ்வாயன்று அளித்திருக்கிறது.
புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதற்கான காப்புரிமை பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பேயர் (Bayer) நிறுவனத்திடம் இருக்கிறது. இனி, அந்த மருந்தின் பொதுமையான வடிவத்தை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு இந்தியாவில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
தற்போது இந்த குறிப்பிட்ட மருந்தின் 120 மாத்திரைகளை இந்தியாவில் வாங்கவேண்டுமானால் சுமார் 2,84,000 ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் இந்த மருந்தை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும்போது இதே அளவு மாத்திரைகள் வெறும் 9,000 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும்.
இந்த பெருமளவிலான விலைக்குறைப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்திய நோயாளிகளுக்குப் பேருதவியாக இருக்கும் என்று சமுதாய நலம் கொண்ட மருத்துவர்களும், நலவாழ்வுப் பணியாளர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.
அதேசமயம், இந்திய அரசின் இந்த முடிவு தமக்கு ஏமாற்றமளிப்பதாக இந்த மருந்துக்கான காப்புரிமை பெற்றிருக்கும் பேயர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி பேயர் நிறுவனம் ஆலோசித்துவருவதாக தெரிவித்திருக்கும் நிலையில், இந்த முடிவு நடைமுறைக்கு வருமா என்கிற சந்தேகமும் சிலரால் எழுப்பப்படுகிறது.
காப்புரிமை பிரச்சனைகள் இல்லாத பொதுமை மருந்துகளைத் தயாரித்து குறைவான விலைக்கு விற்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா முன்னணியில் திகழ்ந்து வருகிறது.
எயிட்ஸ் மருந்துகள் உள்ளிட்ட பலவிதமான பொதுமை மருந்துகளை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியா, மருந்து காப்புரிமைகளை மதித்து நடக்கவேண்டும் என்று சர்வதேச மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...