Wednesday, 14 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 13 மார்ச் 2012

 
1. பிறரன்பு நம் ஒவ்வொருவரையும் இணைக்கும் என்பதை வலியுறுத்தவே திருத்தந்தையின் திருப்பயணம் என்கிறார் கியூபா நாட்டுப் பேராயர்

2. பழையக் காயங்களை அகற்ற மதக்கல்வி உதவும் என்கிறார் இலங்கை கர்தினால்

3. சிறு கிறிஸ்தவக் குழுமங்கள், கத்தோலிக்கத் திருஅவையின் இன்றியமையாத ஓர் அங்கம் - இந்திய ஆயர்

4. சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து அப்போஸ்தலிக்க நிர்வாகி

5. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் களைய ருவாண்டா காவல்துறையும் திருச்சபையும் இணைந்து பணி

6. இளையோரிடையே மேற்கொள்ளப்பட்ட பணீகளுக்கென சலேசிய சபையினருக்கு மத்ரித் மேயர் விருது

7. நீர் சேமிப்பு என்பது ஓர் உலகச் சவாலாக தற்போது மாறியுள்ளதாக அறிக்கை

8. குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்

------------------------------------------------------------------------------------------------------

1. பிறரன்பு நம் ஒவ்வொருவரையும் இணைக்கும் என்பதை வலியுறுத்தவே திருத்தந்தையின் திருப்பயணம் என்கிறார் கியூபா நாட்டுப் பேராயர்

மார்ச்,13,2012. கியூபாவில் அன்னைமரி சிலை அற்புதவிதமாக கண்டெடுக்கப்பட்டதன் 400ம் ஆண்டை விசுவாசிகளுடன் இணைந்து சிறப்பிக்க, பிறரன்பின் திருப்பயணியாக வரும் திருத்தந்தையைச் சிறப்பான விதத்தில் வரவேற்க நம்மையேத் தயாரிப்போம் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Dionosio Garcia Ibanez.
கியூபத் திருஅவைக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் திருப்பயணம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதன் விளக்கமாக வெளியிடப்பட்டுள்ள பேராயர் Garcia Ibanezன் இவ்வறிக்கை, பகைமையினாலோ பிரிவினைகளாலோ எதையும் கட்டியெழுப்ப முடியாது என்பதை உணர்த்தவும், பிறரன்பே நம் ஒவ்வொருவரையும் இணைக்கும் என்பதை வலியுறுத்தவுமே திருத்தந்தையின் திருப்பயணம் கியூபாவில் இடம்பெறும் என்று எடுத்துரைக்கிறது.
திருத்தந்தையின் வருகைக்கான வெளிப்புற தயாரிப்புகள் இடம்பெறும் அதேவேளை ஆன்மீகத் தயாரிப்புகள் குறித்தும் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்ற அழைப்பையும் விசுவாசிகளுக்கு விடுத்துள்ளார் பேராயர்.
உள்மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தவக்காலத்தில் இடம்பெறும் இத்திருப்பயணம், ஒருமைப்பாடு, பிறரன்பு, கருணை அகியவைகளுக்கு அழைப்பு விடுப்பதுடன், மேலும் ஒரு கொடையாகவும் உள்ளது என்றார் பேராயர் Garcia Ibanez.


2. பழையக் காயங்களை அகற்ற மதக்கல்வி உதவும் என்கிறார் இலங்கை கர்தினால்

மார்ச்,13,2012. மதக்கல்வியின்றி, ஒரு சமூகத்தைத் தூய்மைப்படுத்துவதோ பல தேசிய இன மக்களிடையே ஒன்றிப்பை உருவாக்குவதோ கடினமான ஒன்று என்றார் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்.
ம‌த‌க்க‌ல்வியின் மூல‌மே குழ‌ந்தைக‌ள் ந‌ன்முறையில் க‌ல்வி க‌ற்க‌ முடியும் என்ற‌ கொழும்பு பேராய‌ர் க‌ர்தினால் இர‌ஞ்சித், ஒரு குழந்தையின் ஒன்றிணைந்த‌ வ‌ள‌ர்ச்சிக்கான‌ க‌ல்வியை ம‌த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ம‌ட்டுமே வ‌ழ‌ங்க‌ முடியும் என்றார்.
இதனை மனதிற்கொண்டு இலங்கை அரசு, மதக்கல்வியை வழங்க உதவும் பள்ளிகளை மேலும் திறக்க மத நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
குழ‌ந்தைக‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் ம‌த‌க்க‌ல்வியின் வ‌ழியாக ஒரு நாட்டின் ஆன்மா வ‌ள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் என்ப‌தால், அத‌ன் துணை கொண்டு, இல‌ங்கையின் ப‌ழைய‌க் காய‌ங்க‌ளை அக‌ற்ற‌ முடியும் என‌ மேலும் கூறினார் க‌ர்தினால் இர‌ஞ்சித்.
ம‌த‌த்தையும் க‌ல்வியையும் ஒருங்கிணைக்கும் ம‌த‌க்க‌ல்வி, ச‌மூக‌ங்க‌ளும் தேசிய‌ இன‌ங்க‌ளும் ஒன்றிணைந்து வ‌ர‌ உத‌வுகிற‌து என‌ மேலும் கூறினார் க‌ர்தினால்.


3. சிறு கிறிஸ்தவக் குழுமங்கள், கத்தோலிக்கத் திருஅவையின் இன்றியமையாத ஓர் அங்கம் - இந்திய ஆயர்

மார்ச்,13,2012. SCC (Small Christian Communities) என்று அழைக்கப்படும் சிறு கிறிஸ்தவக் குழுமங்கள், அல்லது அடிப்படைக் கிறிஸ்தவக் குழுமங்கள் என்ற அமைப்பு, கத்தோலிக்கத் திருஅவை மேய்ப்புப் பணியின் இன்றியமையாத ஓர் அங்கம் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
மார்ச் 9ம் தேதி முதல் இத்திங்கள் வரை மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் சிறு கிறிஸ்தவக் குழுமங்கள் இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்கின்போது இலக்னோ ஆயர் Gerald Mathias இவ்வாறு கூறினார்.
12 ஆயர்களும், சிறு கிறிஸ்தவக் குழுமங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்தக் கருத்தரங்கில், ‘திருஅவையின் புதியதொரு முகம் என்று அழைக்கப்படும் இவ்வமைப்பை இன்னும் ஆர்வத்துடன் வளர்க்கும் வழிகள் கலந்தாலோசிக்கப்பட்டன.
40 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் துவக்கப்பட்ட சிறு கிறிஸ்தவர்கள் குழுமம் என்ற முயற்சிக்கு 2000மாம் ஆண்டு இந்திய கத்தோலிக்க ஆயர்கள் முழு ஆதரவை அளித்தனர் என்று கூறிய ஆயர் Mathias இந்த முயற்சியின் மூலம் கத்தோலிக்கர்கள் இறைவார்த்தையில் இன்னும் ஆழமான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள இக்குழுமங்கள் பெரிதும் உதவுகின்றன என்று எடுத்துரைத்தார்.
இந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களில் 60,000க்கும் மேற்பட்ட சிறு கிறிஸ்தவக் குழுமங்கள் அமைந்துள்ளன என்றும், இவற்றில், 2000க்கும் அதிகமான குழுமங்கள் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும், 1300க்கும் அதிகமான குழுமங்கள் மேற்கு வங்கத்திலும் அமைந்துள்ளன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து அப்போஸ்தலிக்க நிர்வாகி

மார்ச்,13,2012. சிரியாவில் அமைதியை வளர்க்கும் ஒரு முயற்சியாக, போர் நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தைகளையும் அரசும் எதிர்க்கட்சியும் ஏற்க மறத்துள்ளது குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டின் அலெப்போ நகர் அப்போஸ்தலிக்க நிர்வாகி குரு ஜோசப் நட்சாரோ.
மேற்கத்திய நாடுகளின் தலையீடு குறித்தும் தன் விமர்சனங்களை வெளியிட்ட அவர், ஒரு பகுதியில் சமூக கலாச்சார மாற்றங்களைப் புகுத்துவது என்பது உடனடியாக நிகழ்வதல்ல, அதற்கு பல நூற்றாண்டுகள் ஆகலாம் என்றார்.
மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்ற கேள்வி சிரியாவை மட்டும் நோக்கி எழுப்பப்படுவது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய அப்போஸ்தலிக்க நிர்வாகி குரு நட்சாரோ, மனித உரிமைகள் தொடர்புடையவைகளில் சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்கும் சில நாடுகளே தங்கள் நாடுகளில் மனித உரிமைகளை மீறி வருகின்றன என மேலும் கூறினார்.


5. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் களைய ருவாண்டா காவல்துறையும் திருச்சபையும் இணைந்து பணி

மார்ச்,13,2012. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் களையும் நோக்கிலான பிரச்சாரத்தில் ருவாண்டா தேசியக் காவல்துறையும் அந்நாட்டு திருச்சபையும் இணைந்து பணியாற்றத் தீர்மானித்துள்ளன.
வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதியும் நலப்பணிகளும் கிடைப்பதற்கு உதவும் நோக்கில் 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கத்தோலிக்கத் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, காவல் துறையும் அதில் இணைந்து உதவிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மூன்று ஆண்டு திட்டத்திற்கு அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் வழி நிதி உதவிகளை வழங்கி வந்தது ஐரோப்பிய ஐக்கிய அவை.


6. இளையோரிடையே மேற்கொள்ளப்பட்ட பணீகளுக்கென சலேசிய சபையினருக்கு மத்ரித் மேயர் விருது

மார்ச்,13,2012. இளையோரை ஊக்கப்படுத்துவதிலும் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதிலும் உலகின் எண்ணற்ற நாடுகளின் அனைத்து மூலைகளிலும் சலேசிய மறைப்பணியாளர்கள் ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டி  இஸ்பெயினின் உயரிய விருது ஒன்றை வழங்கினார் தலைநகர் மத்ரித் மேயர் Ana  Botella.
Real Madrid என்ற அமைப்பால் உருவாக்கப்பட்ட இவ்விருது, இளையோரின் வாழ்வில் அதிக அக்கறைச் செலுத்தி உழைப்போருக்கு என வழங்கப்படுகிறது.
கடந்த 135 ஆண்டுகளாக 131 நாடுகளில் பள்ளிகள், இளையோர் மையங்கள் ஆகியவை மூலம் சேவையாற்றி வரும் சலேசிய சபையினரின் பணிகளைக் கௌரவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்தார் மத்ரித் மேயர் Botella.


7. நீர் சேமிப்பு என்பது ஓர் உலகச் சவாலாக தற்போது மாறியுள்ளதாக அறிக்கை

மார்ச்,13,2012. உணவுத் தேவை அதிகரிப்பு, சக்தி, கழிவகற்றல் ஆகியவற்றின் தேவை அதிகரிப்பின் காரணமாக நீரின் தேவையும் அதிகரித்துள்ளதால், நீர் சேமிப்பு என்பது ஓர் உலகச் சவாலாக தற்போது மாறியுள்ளதாக The water forum என்ற உலக நீர் மன்றம் கூறியுள்ளது.
தண்ணீரின் எதிர்காலம் குறித்து பிரான்ஸில் Marseille நகரில் அறிவியலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் வணிகத்துறை தலைவர்கள் என 140 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறும் மாநாட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
எதிர்வருகிற 2050ம் ஆண்டளவில், உலகினால் குடியிருப்பு வழங்கப்பட்டு, உணவூட்டப்பட வேண்டிய மக்களின் மொத்த எண்ணிக்கை 700ல் இருந்து 900 கோடியாக அதிகரிக்கும் எனவும், இன்னும் 50 ஆண்டுகளில் சுத்தமான குடிநீரைப் பெறுவது என்பது மிகுந்த சவால் மிக்க ஒரு விடயமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கும், அபிவிருத்தி செய்வதற்குமான உலகக் கொள்கை குறித்து, வரும் சூன் மாதத்தில் ரியோ டி ஜெனீரோவில் நடக்கவிருக்கும் நீடித்த அபிவிருத்தி குறித்த ஐ.நா. மாநாட்டில் ஆராயப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் 2015ம் ஆண்டிற்கான அபிவிருத்தி இலக்குகள் கூறுவதன்படி, 250 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இன்னமும் ஒழுங்கான கழிவகற்றல் வசதிகள் இல்லை, மற்றும் 10 நபர்களில் ஒருவருக்கு நல்ல குடிநீருக்கான வாய்ப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


8. குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்

மார்ச்,13,2012. தமிழக நகரங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் கிராமப்புற குழந்தைகளைவிட மோசமான நிலையில் உள்ளதாக, ஐ.நா.,வின் அங்கமான, "யூனிசெப்'பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக குழந்தை நல நிறுவனமான யுனிசெப் சார்பில், சென்னையில் வெளியிடப்பட்ட உலக குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கையின்படி, தமிழகத்தில், 48 விழுக்காடு குழந்தைகள் நகரங்களில் வாழ்கின்றனர் எனவும், கிராமப்புறத்தில் வாழும் குழந்தைகளைவிட, நகர குழந்தைகளின் நிலை வறுமை காரணமாக மோசமாக உள்ளது எனவும் தெரிய வருகிறது.
ஆறு வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, நகரங்களில் 8 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், கிராமப்புறங்களில், 13 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், பள்ளிகள், மருத்துவமனை, நீர் நிலைகள் ஆகியவற்றுக்கு அருகில், குடிசைப்பகுதி குழந்தைகள் வாழ்ந்தாலும், வறுமை மற்றும் பாகுபாடான தன்மையால், அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காமல் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர் எனவும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி, இந்தியாவில், குடிசைகள் எண்ணிக்கையில், நான்காம் இடம் வகிக்கும் சென்னை சென்னையில் நான்கில் ஒரு பங்கினர், அதாவது 12 இலட்சம் பேர் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
மேலும், கிராமத்துத் தாய்களைவிட, நகரத்துப் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் பின்தங்கியுள்ளனர் எனவும்,  தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் இறப்பு விகிதம், 20 விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளது எனவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...