Sunday, 11 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 09 மார்ச் 2012

1. பாலியல் குறித்த கிறிஸ்தவப் புரிந்துணர்வு வலியுறுத்தப்பட வேண்டும் - திருத்தந்தை

2. ஒப்புரவு அருட்சாதனத்திற்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது - திருத்தந்தை

3. பிலிப்பீன்ஸ் கர்தினால் Jose Sanchez இறைபதம் அடைந்தார், திருத்தந்தை இரங்கல் தந்தி

4. சிறாரைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்கு மனிதக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடமை உள்ளது - திருப்பீட உயர் அதிகாரி

5. நீதி அமைப்பு சிறாருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - ஐ.நா.மனித உரிமைகள் அவைத் தலைவர்

6. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அணுஆயுதங்களை இரத்து செய்யுமாறு ஆயர்கள் ஒபாமாவுக்கு விண்ணப்பம்

7. அரசியலில் பெண்களின் பங்கேற்பு: 105வது இடத்தில் இந்தியா

8. குறிக்கோளுடன் வாழ்பவர்களை இளம்வயதில் தழுவும் மரணம்


-------------------------------------------------------------------------------------------

1. பாலியல் குறித்த கிறிஸ்தவப் புரிந்துணர்வு வலியுறுத்தப்பட வேண்டும் - திருத்தந்தை

மார்ச்09,2012. கன்னிமை எனும் பண்பைப் போற்றிப் பேணும் மனப்பாங்கு முழு கிறிஸ்தவ சமுதாயத்திலும் ஏற்படுவதற்கு மேய்ப்புப்பணி சார்ந்த நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட  வேண்டும் என, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாலியல் குறித்த கிறிஸ்தவப் புரிந்துணர்வு வலியுறுத்தப்பட வேண்டுமெனவும் கூறிய திருத்தந்தை, தங்களது திருமண வாழ்வுக்கு விசுவாசமாக இருக்கும் தம்பதியரின் சான்று பகரும் வாழ்வு இளையோருக்குத் தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.
அட் லிமினா சந்திப்பையொட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களில் ஒரு குழுவினரை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தற்போதைய சமுதாயம் எதிர்நோக்கும் திருமணம் மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து இக்குழுவினரிடம் பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.
திருமணம் மற்றும் குடும்பத்தின் உண்மையான இயல்பு தவறாக விளக்கம் அளிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, திருஅவைப் போதனைகளில் கிறிஸ்தவத் திருமணம் குறித்துச் சொல்லப்பட்டு இருப்பவைகள், திருமணத் தயாரிப்புக்கான மறைக்கல்வியில் வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஒவ்வொரு சமுதாயத்தின் மாபெரும் வளமாகவும் எதிர்காலமாகவும் இருக்கும் சிறார் மீது உண்மையான அக்கறை எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, இளையோருக்குக் கல்வி வழங்குவதிலும், உறுதியான குடும்ப வாழ்வை அமைப்பதிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருஅவை ஆற்றி வரும் தனது பணியைத்    தொடர்ந்து செய்யுமாறும் ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை.
195 உயர்மறைமாவட்டங்கள் மற்றும் மறைமாவட்டங்களையும், ஓர் அப்போஸ்தலிக்க நிர்வாக அமைப்பையும் கொண்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருஅவையின் தலைவர்களை, அட் லிமினா சந்திப்பையொட்டி குழுக்களாகச் சந்தித்து வரும் திருத்தந்தை, இவ்வெள்ளிக்கிழமையன்று இக்குழுக்களில் எட்டாவது குழுவைச் சந்தித்து உரையாற்றினார்.

2. ஒப்புரவு அருட்சாதனத்திற்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது - திருத்தந்தை

மார்ச்09,2012. Apostolic Penitentiary எனப்படும் பாவமன்னிப்புச் சலுகை வழங்கும் திருப்பீடத்தின் உச்ச நீதிமன்றம் நடத்தும் கருத்தரங்கில் பங்கு கொள்ளும் சுமார் 1300 பேரை, இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஒப்புரவு அருட்சாதனம் குறித்துப் பேசினார்.
ஒப்புரவு அருட்சாதனக் கொண்டாட்டத்திற்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து விளக்கிய திருத்தந்தை, அருட்சாதனங்களும் நற்செய்தி அறிவிப்பும் வெவ்வேறானவை என ஒருபோதும் நோக்கப்படக் கூடாது என்று கூறினார்.
திருஅவை உறுப்பினரின் தூய வாழ்விலிருந்து புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு உந்துதல் கிடைப்பதால், ஒப்புரவு திருவருட்சாதனம், புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு வழியாக அமைகின்றது என்றும் விளக்கிய திருத்தந்தை, தூய வாழ்வுக்கும், ஒப்புரவு அருட்சாதனத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது என்றும் கூறினார்.
கடவுள் நம்மை தம்மோடு ஒப்புரவாக்கிய கிறிஸ்துவின் முகத்தைப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி மூலம் இக்காலத்தவருக்கு அறியச் செய்வதற்கு நாம் அழைப்புப் பெற்றுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை, இக் கிறிஸ்துவின் முகத்தை ஒப்புரவு அருட்சாதனம் வழியாக நாம் மீண்டும் கண்டுணர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஒப்புரவு அருட்சாதனத்தை நிறைவேற்றும் அருட்பணியாளர்களின் வாழ்வுக்கு கிறிஸ்துவே எப்பொழுதும் மையமாக இருக்க வேண்டுமெனவும் திருத்தந்தை கூறினார்.

3. பிலிப்பீன்ஸ் கர்தினால் Jose Sanchez இறைபதம் அடைந்தார், திருத்தந்தை இரங்கல் தந்தி

மார்ச்09,2012. திருப்பீட குருக்கள் பேராயத்தின் முன்னாள் தலைவரான கர்தினால் Jose Sanchez இறைபதம் எய்தியதையடுத்து தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
இறந்த கர்தினால் Sanchezன் இறப்பையொட்டி, பிலிப்பீன்சின் Cebu உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Ricardo Vidal க்கு இரங்கல் தந்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, நம் ஆண்டவருக்கும், அவரது திருஅவைக்கும், குறிப்பாக குருத்துவ வாழ்வுக்கும் பலர் தங்களை அர்ப்பணிப்பதற்கு கர்தினால் Sanchez ன் எடுத்துக்காட்டான வாழ்வு உதவும் என்ற தனது நம்பிக்கையை குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பீன்சின் மனிலாவில் இவ்வெள்ளிக்கிழமை மரணமடைந்த 91 வயது கர்தினால் Sanchez, குருவாக 65 ஆண்டுகளுக்கு மேலாகவும், ஆயராக 43 ஆண்டுகளுக்கு மேலாகவும், கர்தினாலாக 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் இருந்துள்ளார்.
திருப்பீடத்தில் ஒரு துறைக்கு மேற்பட்ட துறைகளில் பணியாற்றிய முதல் பிலிப்பீன்ஸ் நாட்டவரான கர்தினால் Sanchez, 47 வது வயதில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டவர்.
திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்தின் செயலராகவும், திருப்பீட குருக்கள் பேராயத்தின் தலைவராகவும், திருப்பீட சொத்து நிர்வாகத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார் கர்தினால் Jose Sanchez .

4. சிறாரைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்கு மனிதக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடமை உள்ளது - திருப்பீட உயர் அதிகாரி

மார்ச்09,2012. சிறாரைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்கு அரசுகளுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் மட்டுமல்லாமல், மனிதக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடமை உள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிறார்க்கெதிரான பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 19வது அமர்வில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, சிறார்க்கெதிரான பாலியல் வன்கொடுமை மிகுந்த கவலை தருகின்றது என்று கூறினார்.
இந்த உலகின் சிறாரைப் பாதுகாப்பதற்கான பொறுப்பில் மனிதக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பங்கு உள்ளதால், இச்சிறாரைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் பேராயர் தொமாசி கூறினார்.
உலகில் சண்டைகள் இடம் பெற்று வரும் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய மூன்று இலட்சம் சிறார் ஈடுபட்டுள்ளனர் எனவும், போராளிகள், தூது சொல்பவர்கள், சுமை தூக்கிகள், சமையல்காரர், கட்டாயப் பாலியல் உறவுகள் ஆகியவற்றுக்கு இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் பேராயர் தொமாசி மேலும் கூறினார்
உலகின் 21 கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளரில் சுமார் 11 கோடியே 50 இலட்சம் சிறார் ஆபத்தான வேலைகள் செய்கின்றனர் எனவும் தெரிவித்த பேராயர், வீடுகள், பள்ளிகள் அல்லது பள்ளிகள் போன்ற பிற நிறுவனங்கள், பணியிடங்கள், சிறைகள், தடுப்புக்காவல் மையங்கள் எனப் பல இடங்களில் சிறார் வன்முறைகளை எதிர்நோக்குகின்றனர் எனவும் தெரிவித்தார் பேராயர் தொமாசி.
வருங்காலச் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய இச்சிறார்க்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா.கூட்டத்தில் கேட்டுக் கொண்டார் பேராயர் சில்வானோ தொமாசி.

5. நீதி அமைப்பு சிறாருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - ஐ.நா.மனித உரிமைகள் அவைத் தலைவர்

மார்ச்09,2012. மரண தண்டனை, பிணையல் இல்லாத ஆயுள் தண்டனை, சிறைத் தண்டனை, உடல்ரீதியான தண்டனை உட்பட அனைத்து விதமான சிறார்க்கெதிரான சட்டரீதீயான வன்முறைகள் நிறுத்தப்படுமாறு ஐ.நா.மனித உரிமைகள் அவைத் தலைவர் நவிபிள்ளை வலியுறுத்தினார்.
சிறார்க்கெதிரான வன்முறைகள், சிறார் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தத்தின்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், சில நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன என்று  நவிபிள்ளை கூறினார்.
குற்றவாளிச் சிறாருக்கு உடல்ரீதியான தண்டனைகள் ஏறக்குறைய 30 நாடுகளிலும், கசையடிகள், கல்லெறிதல் அல்லது உடல் உறுப்பை முடமாக்குதல் உட்பட்ட தண்டனைகள் சில நாடுகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
சிறாருக்கு நீதி அமைப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் ஐ.நா.மனித உரிமைகள் அவைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.


6. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அணுஆயுதங்களை இரத்து செய்யுமாறு ஆயர்கள் ஒபாமாவுக்கு விண்ணப்பம்
மார்ச்09,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அணுஆயுதங்களை இரத்து செய்யுமாறு அந்நாட்டு ஆயர்கள் அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு விண்ணப்பக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில், அரசுத்தலைவரின் அணுஆயுதக் கொள்கை குறித்து ஒபாமா நிர்வாகம் தற்போது ஆலோசித்து வருவதை முன்னிட்டு இவ்விண்ணப்பக் கடிதத்தை எழுதியுள்ளனர் ஆயர்கள்.
பனிப்போரை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அமைப்பை நடத்திச் செல்வதற்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு ஏறக்குறைய 21 ஆயிரம் கோடி டாலர் செலவழிப்பதற்குத் தற்போது நாடு திட்டமிட்டு வருகின்றது, ஆனால், பிற தேவைகளுக்கெனப் பல்லாயிரம் கோடி டாலரை சேமிக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் ஆயர்களின் கடிதம் கூறுகின்றது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் அணுஆயுதங்களைக் குறைப்பதன் மூலம் பிற நாடுகளும் தங்களது அணுஆயுதங்களைக் குறைப்பதற்குத் தூண்டுகோலாய் இருக்கும், உலகமே அணுஆயுதங்களற்ற இடமாக மாறும் என்றும் ஆயர்களின் கடிதம் கூறுகிறது.

7. அரசியலில் பெண்களின் பங்கேற்பு: 105வது இடத்தில் இந்தியா

மார்ச்09,2012. ஆப்ரிக்காவில் உள்ள ஏழை நாடுகளைவிட இந்திய அரசியலில் பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவு' என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகில் ஜனநாயகத்தை மேம்படுத்தும் இயக்கமான, "இன்டர் பார்லிமென்ட் யூனியன்' வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 543 இடங்கள் கொண்ட லோக்சபாவில் 60 பேர், இன்னும், 240 உறுப்பினர்கள் கொண்ட ராஜ்யசபாவில் 24 பேர் மட்டுமே பெண்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்த பட்டியலில், இந்தியா 105வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான வங்கதேசம் இப்பட்டியலில் 65வது இடத்தை வகிக்கிறது. ஆப்ரிக்காவின் ஏழை நாடான ருவாண்டாவில் மக்களவையில் 56 விழுக்காட்டுப் பெண்கள் கீழ்சபையிலும், 38 விழுக்காட்டுப் பெண்கள் மேல்சபையிலும் இடம் பெற்றுள்ளனர். டான்சானியாவில் 36 விழுக்காட்டுப் பெண்கள் மக்களவையில் இடம் பெற்றுள்ளனர் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

8. குறிக்கோளுடன் வாழ்பவர்களை இளம்வயதில் தழுவும் மரணம்

குறிக்கோளுடன் வாழ்பவர்கள் அதிகம் சம்பாதித்தாலும் நிம்மதியில்லாமல், இளம் வயதில் மரணமடைய கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இலண்டனைச் சேர்ந்த நோத்ருதாம் பல்கலைக்கழக வல்லுனர்கள், ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டு, யேல் போன்ற பல்கலைக்கழகங்களில் அதிகம் படித்த 717 பேரிடம் நடத்திய ஆய்வில்  இவ்வாறு தெரிய வந்துள்ளது.
சிறு வயது முதலே அதிக குறிக்கோளுடன் படித்து, உயர் பதவிகளை வகித்த பலர் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தால், உறவுகளை அதிகம் வளர்ப்பதில்லை. இன்னும் சிலர் முன்னேற வேண்டும் என்ற வெறியில், உடல் நலத்தைக்கூட கவனிப்பதில்லை. வாழ்வில் உயர வேண்டும் என்ற ஆர்வத்தை, இவர்கள் தங்கள் உடல் நலத்திலும், சமூக உறவிலும் காண்பிக்காததால், அதிகக் குறிக்கோள் இல்லாமல் வாழ்பவர்களை விட, இவர்கள் குறைந்த மகிழ்ச்சியையே அனுபவிக்கின்றனர். ஓரளவு மகிழ்ச்சியை அனுபவிப்பவர்களும், குறைந்த வயதில் இறக்கின்றனர் என இவ்வாய்வில் தெரிய வந்துள்ளது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...