Sunday, 11 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 08 மார்ச் 2012

1. கடவுளின் வார்த்தையை அறிவிப்பது மனித வரலாற்றில் என்றுமே எளிதாக இருந்ததில்லை - வத்திக்கான் அதிகாரி

2. தூத்துக்குடி மறைமாவட்டத்தின் மீது இந்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க தமிழ்நாடு ஆயர்களும், டில்லி பேராயரும் கோரிக்கை

3. ஹோலி பண்டிகையை ஒட்டி, மரங்களை வெட்டுவது நிறுத்தப்பட வேண்டும்

4. சமுதாயத்தில் சமத்துவத்தை நோக்கி மாற்றங்கள் உருவாக்க Shahbaz Bhatti பாடுபட்டார் - பாகிஸ்தான் பிரதமர்

5. அரசின் நிதி ஒதுக்கீடுகளை உடனடியாகப் பெறும் நிறுவனங்களில் CAFOD கத்தோலிக்க அமைப்பையும் பிரித்தானிய அரசு இணைத்துள்ளது

6. அறிவியலும் விசுவாசமும் ஒன்றுகொன்று முரணானது என்று நோக்கத் தேவையில்லை - வத்திக்கான் விண்வெளி ஆய்வாளர்

7. ஆண்களுக்கு நிகராக இரயில் ஓட்டுவதில் மகிழ்ச்சி: இரயில் இன்ஜின் முதல் பெண் ஓட்டுனர் பெருமிதம்

8. வட இலங்கையில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. கடவுளின் வார்த்தையை அறிவிப்பது மனித வரலாற்றில் என்றுமே எளிதாக இருந்ததில்லை - வத்திக்கான் அதிகாரி

மார்ச்,08,2012. கடவுளின் வார்த்தையை அறிவிப்பது மனித வரலாற்றில் என்றுமே எளிதாக இருந்ததில்லை, இந்த நிலை இன்றும் தொடர்கிறது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைமையகமாக அமைந்துள்ள Strasbourg நகரில் இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெற்ற தென்கிழக்கு ஜரோப்பிய ஆயர்கள் கூட்டத்தில், இப்புதனன்று நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் மறையுரை ஆற்றுகையில், ஐரோப்பிய அவையின்  அவைக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணிபுரியும் பேரருள்திரு Aldo Giordano, இவ்வாறு கூறினார்.
உலகில் நிலவும் அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் இறைவாக்கினர்கள் எப்போதும் துன்பங்களையேச் சந்தித்துள்ளனர் என்பதற்கு நாம் வாழும் காலத்தில் துன்புறும் கிறிஸ்தவர்களே சிறந்த சான்றுகள் என்று கூறிய அருள்தந்தை Giordano,  பாகிஸ்தானில் கொல்லப்பட்ட Shahbaz Bhatti, பாக்தாத் நகரிலும், நைஜீரியாவிலும் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆகியோரை, தன் மறையுரையில் எடுத்துக்காட்டுகளாகக் கூறினார்.
ஐரோப்பாவுக்கான திருப்பலி என்ற கருத்துடன் நடத்தப்பட்ட இந்தத் திருப்பலியில், மக்கள் ஒருவர் ஒருவருடன் சமாதானமாக வாழ்வது கடவுள் தரும் கோடை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 'காரித்தாஸ் இன் வெரிதாத்தே' ‘Caritas in Veritate’ மடலில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அருள்தந்தை Giordano, இந்த ஒரு முக்கியமான தேவைக்காக அனைவரையும் வேண்டும்படி அழைப்பு விடுத்தார்.


2. தூத்துக்குடி மறைமாவட்டத்தின் மீது இந்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க தமிழ்நாடு ஆயர்களும், டில்லி பேராயரும் கோரிக்கை

மார்ச்,08,2012. தூத்துக்குடி மறைமாவட்டம் மற்றும் பிற அரசுசாரா அமைப்புக்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருக்கும் இந்திய அரசு இந்தத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று டில்லி பேராயர் Vincent Concessao கூறினார்.
அரசின் இந்தத் தடையை அகற்றுமாறு தமிழ்நாடு ஆயர்கள் ஏற்கனவே இந்திய அரசை கேட்டுள்ளனர். பேராயர் Concessao தமிழ்நாடு ஆயர்களின் கோரிக்கையை முற்றிலும் ஆதரித்து தன் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அரசு விதித்திருக்கும் இந்தத் தடையினால் தூத்துக்குடி மறைமாவட்டமும் அரசுசாரா அமைப்புக்களும் ஏழைகள் மத்தியில் மேற்கொண்டுள்ள பல துயர்துடைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது நீதிக்குப் புறம்பானது என்று பேராயர் Concessao கூறினார்.
தூத்துக்குடி மறைமாவட்டம் பிற நாடுகளில் இருந்து சமூகச் சேவைக்கென பெற்றுள்ள நிதியை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக எழுந்துள்ள போராட்டங்களை ஆதரிப்பதற்குச் செலவு செய்துள்ளது என்ற காரணம் காட்டி இந்திய அரசு மறைமாவட்டத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கிவைத்துள்ளது.
கத்தோலிக்க திருஅவை நிறுவனங்கள் ஏழைகளின் துயர்துடைக்கும் பணிகளில் நாடெங்கும் ஈடுபட்டிருப்பதுபோல், தூத்துக்குடி மறைமாவட்டத்தின் சமுதாயப்  பணிக்குழுவும் ஈடுபட்டுள்ளது என்று கூறிய டில்லி பேராயர், பிறநாடுகளிலிருந்து பெற்றுள்ள நிதி உதவிகளை இந்த மறைமாவட்டம் எந்த வழியிலும் மாற்றிச் செலவிடவில்லை என்பது தனக்குத் தெரியும் என்று வலியுறுத்திக் கூறினார்.
டில்லிப் பேராயர் Vincent Concessao, பிரதமர் மன்மோகன் சிங்க் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரிடம் தன் கோரிக்கையை விடுத்துள்ளதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


3. ஹோலி பண்டிகையை ஒட்டி, மரங்களை வெட்டுவது நிறுத்தப்பட வேண்டும்

மார்ச்,08,2012. ஹோலி பண்டிகையை ஒட்டி, மக்கள் மரங்களை வெட்டுவதும், மரக்கிளைகளை ஒடிப்பதும் நிறுத்தப்பட வேண்டிய ஒரு பழக்கம் என்று இயற்கை ஆவலாரான இயேசு சபை அருள்தந்தை இராபர்ட் அத்திக்கல் கூறினார்.
வசந்த காலம் வந்துவிட்டதை உணர்த்தும் வகையில் இந்தியாவின் பல இடங்களில் இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின்போது எரி நெருப்பை உருவாக்கும் பழக்கம் உள்ளது. இந்த நெருப்பை உண்டாக்க மரங்களும், மரக் கிளைகளும் அர்த்தமின்றி வெட்டப்படுகின்றன என்று அருள்தந்தை அத்திக்கல் அவர்களும் இன்னும் பிற இயற்கை ஆர்வலர்களும் குரல் எழுப்பியுள்ளனர்.
மரங்களின் நண்பர்கள் என்ற பொருள்படும் Tarumitra என்ற இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து வரும் அருள்தந்தை அத்திக்கல், Patna, Gaya, Muzaffarpur ஆகிய மாவட்டங்களில் மரங்கள் வெட்டப்படுவது பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்.
தீமைகள் அழிகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட எரி நெருப்பு உருவாக்குவது நமது பண்டைய பழக்கம் எனினும், இவைகளை உருவாக்க மரங்களை அழிப்பதற்குப் பதில் மற்ற வழிகளை மக்கள் கண்டுபிடித்தால், நமது இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்று Ashook Ghosh என்ற மற்றொரு இயற்கை ஆர்வலரும் கூறினார்.


4. சமுதாயத்தில் சமத்துவத்தை நோக்கி மாற்றங்கள் உருவாக்க Shahbaz Bhatti பாடுபட்டார் - பாகிஸ்தான் பிரதமர்

மார்ச்,08,2012. மதங்களின் அடிப்படையில் பிளவுபட்டுள்ள பாகிஸ்தான் சமுதாயத்தில் சமத்துவத்தை நோக்கி மாற்றங்கள் உருவாக்க Shahbaz Bhatti பாடுபட்டார் என்று பாகிஸ்தான் பிரதமர் Yousaf Raza Gilani கூறினார்.
2011ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் Bhatti கொலையுண்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் அவரின் நினைவாக கூட்டங்களும் ஊர்வலங்களும் மேற்கொள்ளப்பட்டன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இப்புதனன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் Gilani, தன் அமைச்சரவையில் Shahbaz Bhattiயை இணைத்தது தனக்குப் பெருமை தந்த ஒரு காரியம் என்று எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானில் நிலவும் தேவநிந்தனை சட்டத்தில் மாற்றங்கள், Shahbaz Bhattiயைக் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் முழு முயற்சிகளில் இன்னும் தீவிரம், சிறுபான்மை சமுதாயங்களுக்கு சம உரிமைகள் வழங்குதல், கல்வித் திட்டங்களைச் சீர்திருத்துதல் என்று பல கோரிக்கைகள் இந்தக் கூட்டத்தின்போது பாகிஸ்தான் அரசுக்கு விடுக்கப்பட்டது.


5. அரசின் நிதி ஒதுக்கீடுகளை உடனடியாகப் பெறும் நிறுவனங்களில் CAFOD கத்தோலிக்க அமைப்பையும் பிரித்தானிய அரசு இணைத்துள்ளது

மார்ச்,08,2012. உலகில் நடக்கும் பேரிடர்களின்போது, உடனடியாகத் துயர்துடைக்கும் பணிகளில் ஈடுபடும் CAFOD (Catholic Agency For Overseas Development), என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் சேவையை, பிரித்தானிய அரசின் உயர் அதிகாரி ஒருவர் பாராட்டியுள்ளார்.
இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்த உடன் முதல் 72 மணி நேரங்களில் அங்கு மேற்கொள்ளப்படும் உதவிகள் பல்லாயிரம் உயிர்களைப் பாதுகாக்கும் என்று கூறிய பிரித்தானிய அரசு அதிகாரி Andrew Mitchell, இவ்வகை உதவிகளைச் செய்வதில் CAFOD காட்டிய துரிதம் பாராட்டுக்குரியது என்று கூறினார்.
உலகில் பேரிடர்கள் நிகழும்போது, பிரித்தானிய அரசின் நிதி ஒதுக்கீடுகளை உடனடியாகப் பெறும் நிறுவனங்களில் CAFOD கத்தோலிக்க அமைப்பையும் இணைக்க பிரித்தானிய அரசு எடுத்துள்ள முடிவு, இவ்வமைப்பின் சேவைகளைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்று ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஹெயிட்டி, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் அண்மைய ஆண்டுகளில் நிகழ்ந்த பேரிடர்களில் CAFOD மேற்கொண்ட முயற்சிகளால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்று இவ்வமைப்பின் உயர் அதிகாரி Matthew Carter கூறினார்.


6. அறிவியலும் விசுவாசமும் ஒன்றுகொன்று முரணானது என்று நோக்கத் தேவையில்லை - வத்திக்கான் விண்வெளி ஆய்வாளர்

மார்ச்,08,2012. அறிவியல் துணைகொண்டு விண்வெளியை படித்தது இயேசு கிறிஸ்துவை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள உதவியது என்று வத்திக்கான் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறினார்.
அண்மையில் அமெரிக்காவின் டென்வர் உயர்மறைமாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் இயேசுசபை அருள்சகோதரர் Guy Consolmagno பேசுகையில், அறிவியலும் விசுவாசமும் ஒன்றுகொன்று முரணானது என்று நோக்கத் தேவையில்லை என்று எடுத்துரைத்தார்.
"வார்த்தை மனுவானார்" என்ற தலைப்பில் அருள்சகோதரர் Consolmagno வழங்கிய இந்த உரையில் அறிவியல் வாதங்களின் இறுதியில் இறைவனையும் ஒரு காரணமாகக் கருதுவதற்குப் பதில், இறைவனை விண்வெளியில் காணும் அனைத்திற்கும் மூல காரணமாகக் காண்பதிலேயே தனக்குப் பெரும் நிறைவு கிடைத்துள்ளது என்பதைத் தெளிவாக்கினார்.
1891ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் துவக்கப்பட்ட வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையமும், 1931ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பத்திநாதரால் துவக்கப்பட்ட வத்திக்கான் வானொலியும் இயேசு சபையினர் திருப்பீடத்திற்கு செய்துவரும் இரு சிறப்புச் சேவைகளாகத் திகழ்கின்றன.


7. ஆண்களுக்கு நிகராக இரயில் ஓட்டுவதில் மகிழ்ச்சி: இரயில் இன்ஜின் முதல் பெண் ஓட்டுனர் பெருமிதம்

மார்ச்,08,2012. "எல்லா ஆண்களும் பெண்களை அடக்கி ஆள்வதில்லை. ஆண்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் பெண்கள் வெற்றி பெற முடியும்,'' என, திருச்சி கோட்ட இரயில்வேயின் முதல் இரயில் இன்ஜின் பெண் ஓட்டுனர் கூறினார்.
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?' என்று பெண்ணியத்தை அடக்கி ஆளும் ஆண்களுக்கு நிகராக, பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர். ஆண்கள் மட்டுமே பணிபுரிய முடியும் என்ற கடினமான துறைகளிலும், பெண்கள் இன்று காலடி பதித்துள்ளனர்.
குறிப்பாக ஆட்டோ, பேருந்து, வாடகைக் கார், ஆகியவற்றை ஓட்டுகின்றனர். விமான ஓட்டுனராகவும், கப்பல் கேப்டனாகவும், இரயில் இன்ஜின் ஓட்டுனராகவும் உள்ளனர்.
அந்தவகையில், திருச்சி கோட்ட இரயில்வேயில் முதல் பெண் இரயில் இன்ஜின் ஓட்டுனராக சேர்ந்து, பணியாற்றி வரும் நாராயண வடிவு உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை பற்றி கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் ராமச்சந்திரா நகர் தான் என் சொந்த ஊர். டிப்ளமோ படித்துவிட்டு, திருமணத்துக்கு பிறகு தேர்வெழுதி, கடந்த 2006ம் ஆண்டு இப்பணியில் சேர்ந்தேன். முதலில் அனைவரும், "உனக்கு எதுக்கு இந்த வேலை' என்று அலட்சியப்படுத்தினர். என் கணவர் தான் என்னை மிகவும் ஊக்குவித்தார்.
ஆண்களுக்கு நிகராக இரயில் ஓட்டுகிறோம் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா ஆண்களும் பெண்களை அடக்கி ஆள்வதில்லை. என் கணவரின் ஆதரவும், ஊக்குவிப்பும், அன்பும் இல்லையென்றால், நான் இந்தப் பணிக்கு வந்திருக்க முடியாது. பெண்கள் முன்னேற என் கணவர் போன்ற ஆண்களின் துணையும் இருப்பதால் தான், என்னை போன்ற பெண்கள் வெற்றி பெற முடிகிறது. இவ்வாறு கூறினார் முதல் இரயில் இன்ஜின் பெண் ஓட்டுனரான நாராயண வடிவு.


8. வட இலங்கையில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு

மார்ச்,08,2012. இலங்கையின் வடக்கே போருக்குப் பின்னர் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகவும், குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களும் கூடியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
நடப்பாண்டில் இதுநாள் வரையிலும் சிறுமிகள் மீது 24 பாலியல் வன்முறைச் சம்பவங்களும் பெண்கள் மீது 32 சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபன் கூறியுள்ளார்.
2010ம் ஆண்டு 102 ஆக இருந்த இவ்வெண்ணிக்கை, கடந்த ஆண்டு 182 ஆக அதிகரித்திருக்கின்றது.
பாலியல் வன்புணர்வின் பின்னர் சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக டாக்டர் சிவரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களிடையே குறைந்துவரும் விழிப்புணர்வு, அரசு நிர்வாகத்தில் காணப்படுகின்ற அக்கறையின்மை, மற்றும் வளப் பற்றாக்குறைகள் என்பன இத்தகைய வன்முறைப் போக்கிற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. அத்துடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் குற்றவாளிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும் என டாக்டர் சிவரூபன் குறிப்பிடுகின்றார்.
குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் நீண்டகாலம் எடுப்பதுவும் இத்தகைய குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...