Thursday, 8 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 07 மார்ச் 2012

1. காங்கோ நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

2. காங்கோ நாட்டின் தலத் திருஅவை செய்துவரும் துயர்துடைப்புப் பணிகளைப் பாவையிட்ட திருப்பீடத் தூதர்

3. கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் - பத்திரிக்கைச் சுதந்திரம் என்றால், எதையும் சொல்வதற்குத் தரப்பட்ட சுதந்திரம் என்று பொருள் அல்ல

4. சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் இருமடங்காக புறக்கணிக்கப்பட்டவர்கள் - பாகிஸ்தான் ஆயர் பேரவையின் அறிக்கை

5. இயேசு அணிந்து வந்த ஆடை ஜெர்மனியில் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்

6. ஆண், பெண் உறைவைப் பற்றிய எண்ணங்களை மாற்ற எந்த ஓர் அரசுக்கோ, சபைகளுக்கோ உரிமை இல்லை - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்

7. சுத்தமான குடிநீர்: மில்லென்னிய இலக்கு எட்டப்பட்டதாக கூறுகிறது ஐ.நா.

8. உணவு முறைகள் உலகமயமாக்கப்பட்டுள்ளது நலவாழ்வுக்கு ஆபத்தாக அமைந்துள்ளது - ஐ.நா. உயர் அதிகாரி

------------------------------------------------------------------------------------------------------

1. காங்கோ நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

மார்ச்,07,2012. ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
காங்கோ ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Louis Portella Mbuyuவுக்கு திருத்தந்தையின் அனுதாபங்களைத் தாங்கிய இத்தந்தியைத் திருப்பீடச் செயலர் தர்சிசியோ பெர்தோனே, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளார்.
இத்துயர நிகழ்வில் தலத் திருஅவை ஆற்றிவரும் சேவைகளைத் திருத்தந்தை தன் தந்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டு, அவர்களுக்கும், பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் தன் சிறப்பு அசீரையும் வழங்கியுள்ளார்.
காங்கோ நாட்டின் தலைநகரான Brazzavilleல் உள்ள ஓர் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தால் 146 இறந்தனர் என்றும் 1500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் Misna கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் இப்புதனன்று அறிவித்தது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தகுந்த மருத்துவ உதவிகள் இல்லாதச் சூழலே அந்நாட்டில் நிலவும் பெரும் அவசர நிலை என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


2. காங்கோ நாட்டின் தலத் திருஅவை செய்துவரும் துயர்துடைப்புப் பணிகளைப் பாவையிட்ட திருப்பீடத் தூதர்

மார்ச்,07,2012. காங்கோ நாட்டில் உள்ள தலத் திருஅவை அதிக வளங்கள் நிறைந்த திருஅவை இல்லையெனினும், தன்னிடம் உள்ள அனைத்தையுமே தேவையில் உள்ளவர்களுக்கு வழங்குவதைக் காணும்போது மகிழ்வாக உள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த ஞாயிறன்று காங்கோ தலைநகர் Brazzavilleல் உள்ள ஓர் ஆயுதக் கிடங்கில் நிகழ்ந்த விபத்தையடுத்து, நான்கு நாட்களாக அந்நகரில் நடைபெறும் பல துயர்துடைப்புப் பணிகளைப் பாவையிட்ட அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Jan Romeo Pawlowski, தலத் திருஅவையின் பணிகளைப் பாராட்டிப் பேசினார்.
ஆயுதக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட இந்த விபத்தினால் இறந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்து வேறுபட்ட தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன என்று கூறிய திருப்பீடத் தூதர், இப்பகுதியில் நிலவும் வெப்பத்தால், தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
காங்கோ நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், அண்மைய நாடுகளில் இருந்து இங்கு வந்து தஞ்சம் புகுந்திருக்கும் மக்களும் இந்தத் துயர நிகழ்வால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பீடத் தூதர் பேராயர் Pawlowski, சுட்டிக் காட்டினார்.


3. கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் - பத்திரிக்கைச் சுதந்திரம் என்றால், எதையும் சொல்வதற்குத் தரப்பட்ட சுதந்திரம் என்று பொருள் அல்ல

மார்ச்,07,2012. சமுதாய மாற்றங்களை உருவாக்க ஊடகங்கள் ஆற்றும் பணி இன்றியமையாதது என்பதால், ஊடகங்களில் நன்னெறி கோட்பாடுகளை நிலைநிறுத்துவது மிகவும் அவசியம் என்று கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
இதழியலை மையப்படுத்தி மும்பை நகரில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கைத் துவக்கிவைத்துப் பேசிய இந்திய ஆயர் பேரவையின் தலைவரும், மும்பைப் பேராயருமான கர்தினால் கிரேசியஸ், பத்திரிக்கைச் சுதந்திரம் என்றால், எதையும் சொல்வதற்குத் தரப்பட்ட சுதந்திரம் என்று பொருள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
உலகில் உள்ள ஊடகங்களின் சக்தியை உணர்ந்து, கடவுளின் அன்பை விளக்கும் கருவிகளாக அவற்றைப் பயன்படுத்திய அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களை எடுத்துக்காட்டாகக் கூறிய கர்தினால் கிரேசியஸ், நன்மை விளைவிக்கும் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதே பத்திரிகைத் துறையில் பணிபுரிவோரின் முக்கியக் கடமை என்று கூறினார்.
இந்திய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு பத்திரிக்கைகள் மிக முக்கிய பணி ஆற்றவேண்டும் என்று கூறிய அனுபவம் மிக்க செய்திதொடர்பாளர் B.G. Verghese, இந்த முன்னேற்றத்தைச் சரியான பாதையில் எடுத்துச் செல்ல பத்திரிக்கைகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


4. சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் இருமடங்காக புறக்கணிக்கப்பட்டவர்கள் - பாகிஸ்தான் ஆயர் பேரவையின் அறிக்கை

மார்ச்,07,2012. பாகிஸ்தானில் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் இருமடங்காக புறக்கணிக்கப்பட்டவர்கள் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
மார்ச் 8ம் தேதி இவ்வியாழனன்று கொண்டாடப்படும் உலக மகளிர் நாளையொட்டி, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
"சமுதாய விளிம்பில் வாழ்வு" ("Life on the edge") என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை பாகிஸ்தானில் வாழும் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ, மற்றும் இந்துப் பெண்களிடம் எடுக்கப்பட்ட நேர்முகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
உடல் மற்றும் சமுதாய அளவில் வலுவிழந்தவர்கள் பெண்கள் என்பதால், வலுக்கட்டாயமான மதமாற்றம் உட்பட பல வன்முறைகளுக்கு அவர்கள் ஆளாக வேண்டியுள்ளது என்று இவ்வறிக்கையை வெளியிட்ட நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை பீட்டர் ஜேக்கப் கூறினார்.
பெண்கள் ஆண்களுக்கு இணையான உரிமைகள் பெறுவதற்கும் சமுதாயத்தில் இருபாலருக்கும் சமமான வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதற்கும் பாகிஸ்தான் அரசு சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.


5. இயேசு அணிந்து வந்த ஆடை ஜெர்மனியில் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்

மார்ச்,07,2012. இயேசு அணிந்து வந்த ஆடை என்று கருதப்படும் ஒரு புனிதப் பொருள் வருகிற ஏப்ரல் மற்றும் மேமாதங்களில் ஜெர்மனியில் Trier பேராலயத்தில் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்போது, அந்தத் திருப்பயண நிகழ்வில் கலந்துகொள்ள திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் Marc Ouellet செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது.என்று யோவான் நற்செய்தியில் (19: 23-24) குறிப்பிடப்பட்டுள்ள இந்த அங்கி Trier நகரில் இருந்த ஆயர் புனித Agriziusக்குப் பேரரசன் கான்ஸ்டன்டைனின் அன்னை புனித ஹெலெனா அவர்களால் பரிசாக வழங்கப்பட்டது என்பது மரபு.
இந்த அங்கி 1512ம் ஆண்டு முதன் முறையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வந்துள்ளது. இந்த நிகழ்வின் 500ஆம் ஆண்டைச் சிறப்பிக்கும் வண்ணம், ஏப்ரல் 13ம் தேதி முதல் மேமாதம் 13ம் தேதி வரை இந்த அங்கி மீண்டும் ஒருமுறை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
இந்த அங்கி 1996ம் ஆண்டு கடைசி முறையாக திறந்துவைக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் Trier பேராலயத்திற்கு வந்தனர் என்று கூறிய ஆயர் Stephan Ackermann, இந்த ஐந்நூறு ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் கத்தோலிக்க விசுவாசத்தைப் புதுப்பிக்கும் ஒரு தருணமாக அமையும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.


6. ஆண், பெண் உறைவைப் பற்றிய எண்ணங்களை மாற்ற எந்த ஓர் அரசுக்கோ, சபைகளுக்கோ உரிமை இல்லை - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்

மார்ச்,07,2012. திருமணத்தின் அடிப்படை உண்மையான ஆண், பெண் உறைவைப் பற்றிய எண்ணங்களை மாற்ற எந்த ஓர் அரசுக்கோ, சபைகளுக்கோ உரிமை இல்லை என்றும், இந்த உண்மை பொதுமக்களின் கருத்துக்கு விடப்படும் உண்மை அல்ல என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே பாலின உறவுகளில் வாழும் தம்பதியருக்கு சட்டப்பூர்வமான அனைத்து உரிமைகளையும் வழங்குவது குறித்து பிரித்தானிய பாராளுமன்றம் விவாதித்து வரும் வேளையில், அந்நாட்டில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் எண்ணங்களைத் தொகுத்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள 2500க்கும் அதிகமான கோவில்களில் வருகிற ஞாயிறன்று திருப்பலிகளில் வாசிக்கப்படும் என்று ICN கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவைத் தலைவரான பேராயர் Vincent Nichols, மற்றும் Southwark பேராயர் Peter Smith இருவரும் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கை, அண்மையில் ஸ்காட்லாந்து கர்தினால் Keith O’Brien கூறிய கருத்துக்களை அடுத்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


7. சுத்தமான குடிநீர்: மில்லென்னிய இலக்கு எட்டப்பட்டதாக கூறுகிறது ஐ.நா.

மார்ச்,07,2012. உலகில் சுத்தமான தண்ணீர் கிடைக்காதவர்களுடைய எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பது என்ற மில்லென்னிய வளர்ச்சி இலட்சியங்களில் முதலாவது இலக்கு, 2015ஆம் ஆண்டு என்ற காலக்கெடுவைத் தொடுவதற்கு முன்பாக இப்போதே எட்டப்பட்டுள்ளது என ஐ.நா.அவை கூறுகிறது.
உலகின் 89 விழுக்காடு மக்களுக்கு தற்போது மாசுபடாத குடிநீர் ஆதாரங்கள் இருப்பதாகத் ஐ.நா. தெரிவிக்கிறது.
இக்கணக்கின்படி உலகில் ஏறத்தாழ 80 கோடிப் பேர் இன்னும் அசுத்தமான குடிநீரை அருந்த வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் 40 விழுக்காட்டினர் சஹாராவுக்கு தெற்கில் அமைந்துள்ள நாடுகளில் வாழ்பவர்கள் என ஐ.நா.அவை கூறுகிறது.
இந்த மில்லென்னிய வளர்ச்சி இலட்சியத்தின் மறுபாதியான சுகாதாரமான கழிப்பிட வசதிகள் என்ற இலக்கை எட்ட வாய்ப்பு இல்லை என்றும் ஐ.நா.கூறுகிறது. ஏனென்றால், இந்தியாவில் மட்டுமே சுமார் 60 கோடிப் பேர் இன்னும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருந்துவருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.


8. உணவு முறைகள் உலகமயமாக்கப்பட்டுள்ளது நலவாழ்வுக்கு ஆபத்தாக அமைந்துள்ளது - ஐ.நா. உயர் அதிகாரி

மார்ச்,07,2012. உணவு முறைகள் உலகமயமாக்கப்பட்டுள்ளதும், மேற்கத்திய வாழ்க்கை முறை உலகெங்கும் பரவி வருவதும் நலவாழ்வுக்கு ஆபத்தாக அமைந்துள்ளது என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், உணவு உரிமை குழுவின் அதிகாரி Olivier De Schutter, அறிக்கையொன்றை இச்செவ்வாயன்று சமர்பித்தபோது இவ்வாறு கூறினார்.
உலகமயமாக்கல் என்ற போக்கினால், இன்று உலகில் 100 கோடிக்கும் அதிகமானோர் உணவின்றி மெலிந்திருப்பதும், 100 கோடிக்கும் அதிகமானோர் அதிக உணவால் பெருத்திருப்பதும் ஏற்றுகொள்ள முடியாத அநீதி என்று De Schutter சுட்டிக் காட்டினார்.
நகரமயமாக்கல், பல்பொருள் அங்காடிகளின் பெருக்கம், மேற்கத்திய உணவுப் பொருட்களின் படையெடுப்பு ஆகிய காரணங்களால், ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய உணவு பழக்கங்கள் குறைந்துள்ளன என்றும், இதனால் நலவாழ்வில் ஆபத்தை விளைவிக்கும் பாதிப்புக்கள் உருவாகிவருகின்றன என்றும் ஐ.நா. அதிகாரி தெரிவித்தார்.
மேற்கத்திய உணவு வகைகளால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்ற எச்சரிக்கையையும் விடுத்தார் ஜ.நா. உணவு உரிமை குழுவின் அதிகாரி Olivier De Schutter.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...