Tuesday, 6 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 05 மார்ச் 2012

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

2. திருத்தந்தை: நாம் நம் சகோதர்களின் ம‌றைப்பணியாளர்கள்

3. தேவ அழைத்தல்களுக்கு செவிமடுப்பது குறித்து கொழும்பு கர்தினால்

4. ஆயர் Stephen Tiru அவர்களின் அடக்கத் திருப்பலியில் 10000க்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்டனர்

5. கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் இரு நாட்டவர்கள் கூட்டுப் பிரார்த்தனை

6. ஈரான் கிறிஸ்தவப் போதகரின் விடுதலைக்கு குரல் எழுப்பும் ஜெர்மானியர்கள்

7. அணுஉலைகளின் ஆபத்துக்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி மணிலாவில் ஆரம்பம்


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

மார்ச்,05,2012. இத்தவக்காலத்தில், கடந்தவாரம் இயேசுவோடு பாலைநிலத்தில் நடந்து சோதனைகளை வெற்றிக்கொள்ள அழைக்கப்பட்ட நாம், இவ்வாரத்தில் அவரோடு இணைந்து மலையிலேறி செபிக்க அழைக்கப்படுகிறோம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது விண்ணப்பித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு வாசகம் கூறும் இயேசு உருமாறிய நிகழ்வு குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவோடு இணைந்து செபத்தின் மலை நோக்கி ஏறிச்சென்று அவரின் மனித முகத்தில் இறைமகிமையைக் கண்டு தியானிப்போம் என்றார்.
இயேசு தன் சீடர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச் சென்று அவர்கள் முன் உரு மாறியபோது அவருடைய ஆடைகள் வெள்ளை வெளீரென ஒளி வீசியதையும், எலியாவும் மோசேயும் தோன்றி அவரோடு உரையாடியதையும், அப்போது மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட, அம்மேகத்திலிருந்து,  'என் அன்பார்ந்த மகன் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்என்ற குரல் ஒலித்ததையும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தத் திருத்தந்தை, இக்குரல் இயேசுவுக்கான சாட்சியம் மட்டுமல்ல, இக்குரலுக்கு செவிமடுப்போர்களுக்கு வழங்கப்படும் கட்டளை என்றார்.
மலையிலிருந்து இறங்கி வரும்போது இயேசு தன் சீடர்களுடன், தான் படவேண்டிய துன்பங்கள் குறித்து உரையாடியதையும், விசுவாசிகளுக்கு நினைவுறுத்திய பாப்பிறை, அவரின் பாடுகள் மற்றும் மரணம் குறித்து எழுந்திருக்கும் சீடர்களின் மன இருளை, அவர்கள் முதலில் கண்ட ஒளி பிரகாசித்து அகற்ற வேண்டும் என இயேசு ஆவல் கொண்டார் என மேலும் எடுத்துரைத்தார்.
நாமும் நம் வாழ்வின் துன்பச் சூழல்களை வெற்றிகொள்ள உள்மன ஒளி தேவைப்படுகிறது என மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை.


2. திருத்தந்தை: நாம் நம் சகோதர்களின் ம‌றைப்பணியாளர்கள்

மார்ச்,05,2012. உலகின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள்தொழிலாளர்கள் என பல்வேறு நிலைகளில் வாழும் நம் சகோதரகளுக்கு மறைப்பணியாளர்களாகச் செயல்படவேண்டிய கடமை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உள்ளது என இஞ்ஞாயிறு தான் மேற்கொண்ட பங்குதள சந்திப்பின்போது மறையுரையாற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரின் ஆயர் என்ற முறையில் இஞ்ஞாயிறன்று உரோம் நகரில் தென்பகுதியில் உள்ள தொர்ரினோவின் புனித ஜான் பேப்டிஸ்ட் தெ ல சால் பங்குதளம் சென்ற பாப்பிறை, உண்மையான வாழ்வை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லாத தவறான போதனைகள் நம்மை வந்தடையும்வரைக் காத்திருக்காமல், நாமே உண்மை நற்செய்தியின் பணியாளர்களாக மாறவேண்டும் என விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
விசுவாசம் என்பது ஒன்றிணைந்து வாழப்படவேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்திய பாப்பிறை, இவ்விசுவாச வாழ்வை வாழும் முறையை நாம் பங்குதளங்களின் வழி அறிந்துகொள்கிறோம் என்றார்.
நவீன சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும், 'மதம் குறித்த அறியாமை' நீக்கப்பட, துவங்கவிருக்கும் 'விசுவாச ஆண்டில்' ஒவ்வொரு பங்குத்தளமும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் பாப்பிறை.


3. தேவ அழைத்தல்களுக்கு செவிமடுப்பது குறித்து கொழும்பு கர்தினால்

மார்ச்,05,2012. பெரும்புனிதர்களுக்கு விடுத்த அதே அழைப்பை இன்று இறைவன் குழந்தைகளுக்கும் விடுக்கிறார் என கொழும்பு பெருமறைமாவட்டத்தின் 64வது குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் மறையுரையாற்றினார் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
Tewatta பசிலிக்கா பேராலயத்தில் கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்ற இக்கொண்டாட்டத்தில் உரையாற்றிய கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித், இறைவனின் அழைப்புக்குப் பதிலுரைத்து அவரோடு ஒன்றித்திருக்கும்போது, இறைவன் சிறார்களின் வாழ்வில் பெரும்புதுமைகளை ஆற்றுகின்றார் என்றார்.
அன்னை மரியைப் போல் சிறார்கள் ஒவ்வொருவரும் இறைத்திட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்க, அத்தாயின் எடுத்துக்காட்டைப் பின்பற்ற வேண்டும் என்றார் கர்தினால்.
கர்தினால் நிறைவேற்றிய சிறார்களுக்கான திருப்பலியில் கொழும்பு உயர்மறை மாவட்டத்தின் புதியத் துணை ஆயர்கள் எம்மானுவேல் ஃபெர்னாண்டொ, மேக்ஸ்வெல் சில்வா, ஓய்வுபெற்ற பேராயர்கள் ஆஸ்வால்டு கோமிஸ், நிக்கலஸ் மார்க்குஸ் ஃபெர்னான்டொ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக்கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட கத்தோலிக்கச் சிறார்களிடையே குருத்துவ மற்றும் துறவற வாழ்வுக்கான தேவ அழைத்தலை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு துறவுச் சபைகள் தங்கள் சபைகள் குறித்த கண்காட்சியை Tewatta பசிலிக்கா பேராலயத்தைச் சுற்றி அமைத்திருந்தன.


4. ஆயர் Stephen Tiru அவர்களின் அடக்கத் திருப்பலியில் 10000க்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்டனர்

மார்ச்,05,2012. மார்ச் 3ம் தேதி, இச்சனிக்கிழமையன்று இறையடி சேர்ந்த ஆயர் Stephen Tiru, தன் இறுதிநாட்களில் அதிகத் துன்பங்களைத் தாங்கி வந்தாலும், அத்துன்பங்களை வெளிக்காட்டாமல், மக்களிடம் மிகுந்த அன்புடன் பழகினார் என்று கர்தினால் Telesphore Toppo கூறினார்.
இச்சனிக்கிழமை தன் 74வது வயதில் இறையடி சேர்ந்த Khunti மறைமாவட்ட ஆயர் Stephen Tiru அவர்களின் அடக்கத் திருப்பலியைத் தலைமையேற்று நடத்திய கர்தினால் Toppo, தானும் ஆயர் Tiruம் குருத்துவப் பயிற்சியில் ஒரே ஆண்டு இணைந்ததை தன் மறையுரையில் நினைவு கூர்ந்து பேசினார்.
10000க்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்ட இந்த அடக்கத் திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சார்பில் அனுப்பப்பட்ட அனுதாபத் தந்திச் செய்தி வாசிக்கப்பட்டது.
1937ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி பிறந்த Stephen Tiru, 1969ம் ஆண்டு குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். 1986ம் ஆண்டு இவர் தும்கா மறைமாவட்டத்தின் ஆயராகவும், பின்னர் 1995ம் ஆண்டு Khunti மறைமாவட்டத்தின் ஆயராகவும் அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
ஆயர் Tiru அவர்களின் அடக்கத் திருப்பலியில் அவரது முந்தைய மறைமாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
ஆயர் Tiru தும்கா மறைமாவட்டத்தை விட்டு பணிமாற்றம் பெற்று 17 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அந்த மறைமாவட்டத்தின் மக்கள் அவரது அடக்கத் திருப்பலியில் கலந்து கொண்டது, ஆயர் மீது மக்கள் கொண்டிருந்த அன்புக்கு தகுந்த சான்று என்று தும்கா மறைமாவட்டத்தின் இந்நாள் ஆயர் Julius Marandi கூறினார்.


5. கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் இரு நாட்டவர்கள் கூட்டுப் பிரார்த்தனை

மார்ச்,05,2012. கச்சத்தீவு புனித அந்தோணியார் மூன்று நாள் திருவிழாக் கொண்டாட்டத்தின்போது, இலங்கை மற்றும் இந்திய மக்கள் ஒற்றுமையிலும் அமைதியிலும் வாழ இறைவரம் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இத்திருவிழாவை முன்னிட்டு க‌ச்ச‌த்தீவில் இட‌ம்பெற்ற‌ சிலுவைப்பாதையிலும் தேர்ப‌வ‌னியிலும் இருநாடுக‌ளையும் சேர்ந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கானோர் க‌லந்து கொண்ட‌ன‌ர்.
யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் தாமஸ் சவுந்திரநாயகம் தலைமையில் நடந்த ஞாயிறு திருவிழாத் திருப்பலியில், திண்டுக்கல் மறைமாவட்ட முதன்மை குரு வின்சென்ட், சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ், இராமேஸ்வரம் குரு மைக்கேல்ராஜ், யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருக்கள் ஆண்டனி, ஜஸ்டின் ஞானபிரகாசம், நெடுந்தீவு குரு அமல்ராஜ் ஆகியோருடன் இணைந்து தமிழகம் மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர், அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தனை செய்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகி இமெல்டா சுகுமார‌ன், கடற்படை தளபதி ரவிவிஜய குணரத்னே, இராணுவத் தளபதி மகேந்திர சதுரசிங்கே உட்பட இலங்கை அதிகாரிகள் பலரும் இத்திருவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.


6. ஈரான் கிறிஸ்தவப் போதகரின் விடுதலைக்கு குரல் எழுப்பும் ஜெர்மானியர்கள்

மார்ச்,05,2012. ஈரானில் மரணதண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அந்நாட்டு கிறிஸ்தவ போதகர் யூசூப் நாதர்கனியை தூக்கிலிடுவதை  நிறுத்த வேண்டுமென ஜெர்மன் நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் முஸ்லீமாக பிறந்து, தனது 19வது வயதில் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிய நாதர்கனி, ஈரான்  கிறிஸ்தவ சபை என்ற பெயரில் ஒரு திருச்சபையை நிறுவி, கிறிஸ்தவச் சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையே, கடவுளை நிந்தித்த குற்றத்திற்காக, கடந்த 2009ம் ஆண்டு அக்டோபரில் அவரைக் கைது செய்த ஈரான் அரசு, நாட்டுப் பாதுகாப்பு தொடர்புடைய‌க் குற்றங்களில் ஈடுபட்டதாக‌ அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
இது குறித்து பேட்டி அளித்த ஜெர்மனியின் வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர், கிறிஸ்தவப் போதகரைத் தூக்கிலிடும் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று ஈரான் நாட்டுத் தூதுவருக்கு, ஜெர்மனியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்ட்டெர்வெல் (Guido Westerwelle) அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி கிறிஸ்தவப் போதனைகளில் ஈடுபட்ட யூசூப் நாதர்கனி மீது கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டிருப்பதால் எந்த நேரமும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், போலந்து போன்ற நாடுகளும் போதகரின் விடுதலைக்குக் குரல் எழுப்பி வருகின்றன.


7. அணுஉலைகளின் ஆபத்துக்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி மணிலாவில் ஆரம்பம்

மார்ச்,05,2012. ஜப்பான் நாட்டின் Fukushimaவில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி மற்றும் இவற்றைத் தொடர்ந்த அணுக்கதிர் வீச்சு ஆகியவற்றை மையப்படுத்திய ஒரு புகைப்படக் கண்காட்சி இத்திங்களன்று பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் திறக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகளாவிய முறையில் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் Greenpeace என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியின் மூலம், அணுசக்தி பயன்பாட்டால் இவ்வுலகம் தொடர்ந்து சந்தித்துவரும் ஆபத்துக்களை இந்நிறுவனம் விளக்க முயல்கிறது.
அணுசக்திக்கு மாற்றாக பல்வேறு சக்திகளை உலக அரசுகள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்தக் கண்காட்சியைத் தாங்கள் உருவாகியுள்ளதாகஉலக அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் Robert Knoth மற்றும் ஆவணப்படங்கள் தயாரிப்பதில் புகழ்பெற்ற Antoinette de Jong கூறினர்.
கடந்த 50 ஆண்டுகளில் உலகின் பல நாடுகளில் அடிக்கடி அணுக்கசிவுகளும், அணு உலைகளால் ஆபத்துக்களும் நிகழ்ந்து வந்தபோதிலும், இன்னும் உலகின் பல அரசுகள் அணுசக்தியை பெருக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது உலகத்திற்கு நல்லதல்ல என்று Greenpeace அமைப்பின் தெற்காசிய ஒருங்கிணைப்பாளர் Francis De la Cruz கூறினார்.
"நிழல்தேசங்கள்" (“Shadowlands”) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, அணுமின் நிலையங்களை உருவாக்கும் திட்டங்களைத் தீட்டிவரும் பல நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையாகத் திகழும் என்று தாங்கள் நம்புவதாக இக்கண்காட்சியின் அமைப்பாளர்கள் கருதுகின்றனர்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...