Friday, 2 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 02 மார்ச் 2012

1. போஸ்னியா-எர்செகொவினாவில் திருஅவையின் வருங்காலம் குறித்து திருப்பீடச் செயலர் கவலை

2. கியுப மக்கள் திருத்தந்தையைப் பாசத்தோடு வரவேற்க ஆயர்கள் அழைப்பு

3. உலக வெப்பநிலை மாற்றம் குறித்த கிறிஸ்தவத் தலைவர்களின் வேண்டுகோள்

4. பங்களாதேஷில் வெப்பநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு

5. உலகில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களை மனதில் வைத்து நோன்பு இருக்குமாறு அமெரிக்க ஆயர்கள் அழைப்பு

6. வத்திக்கானின் இரகசிய ஆவணங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன

7. வெளிநாட்டவர்கள் அதிகம் குடியேறும் நாடுகளில் இந்தியாவுக்கு ஒன்பதாவது இடம்

-------------------------------------------------------------------------------------------

1. போஸ்னியா-எர்செகொவினாவில் திருஅவையின் வருங்காலம் குறித்து திருப்பீடச் செயலர் கவலை

மார்ச்02,2012. பால்கன் பகுதி நாடான போஸ்னியா-எர்செகொவினாவில் திருஅவையின் வருங்காலம் கவலை தருவதாக இருப்பதாக திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அண்மையில் எழுதிய கடிதம் கூறுகிறது.
போஸ்னியா-எர்செகொவினா ஆயர்களுக்குத் திருத்தந்தையின் பெயரில் கடிதம் அனுப்பியுள்ள கர்தினால் பெர்த்தோனே, 1991ம் ஆண்டில் சுமார் 8 இலட்சமாக இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை, தற்போது சுமார் 4 இலட்சத்து 40 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்நாட்டின் பல பங்குத்தளங்களில் வயதானவர்களே இருக்கிறார்கள் எனவும், கத்தோலிக்கரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்தே வருகின்றது எனவும் கர்தினாலின் கடிதம் கூறுகிறது.
போஸ்னியா-எர்செகொவினாவின் சுமார் 46 இலட்சம் மக்களில் கத்தோலிக்கர் பத்து விழுக்காட்டுக்கும் குறைவே.
முஸ்லீம்கள் 40 விழுக்காட்டினர் மற்றும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர்.

2. கியுப மக்கள் திருத்தந்தையைப் பாசத்தோடு வரவேற்க ஆயர்கள் அழைப்பு

மார்ச்02,2012. கியுபா நாட்டிற்கு, நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் வருகை தரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, ஆர்வத்தோடும் பாசத்தோடும் வரவேற்குமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இம்மாதம் 26 முதல் 28 வரை, திருத்தந்தை கியுபாவிற்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதையொட்டி, அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இவ்வியாழனன்று செய்தி வெளியிட்டுள்ள ஆயர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
இத்திருப்பயணத்திற்குத் தயாரிப்பாக, இம்மாதம் 15ம் தேதியன்று அனைத்துப் பங்குகளிலும் திருநற்கருணை ஆராதனை நடத்தவும், 16ம் தேதியன்று நோன்பு கடைப்பிடிக்கவும், 17ம் தேதியன்று பிறரன்புப் பணிகள் செய்யவும் ஆயர்களின் செய்தி அழைப்பு விடுக்கிறது.
கியுபத் திருஅவை 2012ம் ஆண்டை யூபிலி ஆண்டாகக் கடைப்பிடித்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ள ஆயர்கள், பிறரன்பு அன்னை வழியாகப் பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூறவும் வலியுறுத்தியுள்ளனர்.
Santiago de Cuba மற்றும் Havana நகரங்களில் திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலிகளில் கலந்து கொள்ளுமாறும் ஆயர்கள்  கேட்டுள்ளனர்.
கியுபாவின் பாதுகாவலியான, கோப்ரே பிறரன்பு அன்னைமரி திருவுருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டையொட்டி திருத்தந்தையின் கியுபாவிற்கானத் திருப்பயணம் இடம்பெறவுள்ளது.

3. உலக வெப்பநிலை மாற்றம் குறித்த கிறிஸ்தவத் தலைவர்களின் வேண்டுகோள்

மார்ச்02,2012. உலக வெப்பநிலை மாற்றம் குறித்து பாராமுகமாய் இருப்பதற்கு மனம் வருந்த வேண்டுமென்று பல கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரிட்டன் கர்தினால் Keith O’Brien, ஆங்லிக்கன் பேராயர்கள் Rowan Williams, Desmond Tutu உள்ளிட்ட கிறிஸ்தவத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வெப்பநிலை மாற்றத்தால் உலகினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இப்பூமியை மட்டுமல்ல, இறைவனின் சாயலான நம் அயலார்களையும் நம்மையும் அன்பு செய்யத் தவறியுள்ளோம் என்று கூறும் இவ்வறிக்கை, மனம் வருந்துதல் என்பது, ஆபத்துக்களை அகற்றுவதற்கு உடனடியாகத் திட்டவட்டமான வழிகளைக் கண்டறிவதாகும் என்றும் தெரிவிக்கிறது. 

4. பங்களாதேஷில் வெப்பநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு

மார்ச்02,2012. இயற்கை வளங்கள் திறமையாகக் கையாளப்படுவதும் நிர்வகிக்கப்படுவதுமே, வளரும் நாடுகளில் வெப்பநிலை மாற்றத்தின் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இன்றியமையாதவை என்று பன்னாட்டுக் கருத்தரங்கின் வல்லுனர்கள் கூறினர்.
இயற்கை வளங்களை நிர்வகிப்பதும், வெப்பநிலை மாற்றமும் என்ற தலைப்பில் இவ்வியாழனன்று பங்களாதேஷிலுள்ள Khulna பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் இவ்வாறு கூறினர் வல்லுனர்கள்.
பிரிட்டன் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், பிரிட்டன், இந்தியா, இலங்கை, கானா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் ஐம்பது வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.   
பங்களாதேஷில், வெப்பநிலை மாற்றத்தால், நூற்றுக்கணக்கான ஆறுகளில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது என்றும், ஆறுகளில் கடல்நீர் கலப்பதால் விளைநிலங்களும், பல்வேறு உயிரின வாழ்வும் அழிக்கப்படுகின்றன என்றும் Khulna பல்கலைக்கழக துணைவேந்தர் Mohammad Saifuddin Shah இக்கருத்தரங்கில் தெரிவித்தார்.

5. உலகில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களை மனதில் வைத்து நோன்பு இருக்குமாறு அமெரிக்க ஆயர்கள் அழைப்பு

மார்ச்02,2012. உலகில் சுமார் 92 கோடியே 50 இலட்சம் பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்வேளை, அவர்களுக்கு உதவும் நோக்கத்தில், இவ்வெள்ளியன்று செபம் மற்றும் நோன்பைக் கடைப்பிடித்து, தானதர்மங்கள் செய்யுமாறு கேட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.
தவக்காலத்தின் வெள்ளிக்கிழமையன்று நோன்பு இருப்பதன் மூலம், உணவுக்கெனச் செலவழிக்கும் பணத்தைக் குறைத்து பிறருக்கு உதவி செய்யுமாறு அமெரிக்க ஆயர்கள், கத்தோலிக்கர்களைக் கேட்டுள்ளனர்.
கத்தோலிக்கச் சமூகப் போதனைகள், ஒருவர் ஒருவர் மீது அக்கறை காட்டுவதற்கு அழைப்பு விடுப்பதையும் ஆயர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

6. வத்திக்கானின் இரகசிய ஆவணங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மார்ச்02,2012. வத்திக்கான் தனது வரலாற்றில் முதன் முறையாக, தனது இரகசிய ஆவணங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்று ஆவணங்களைப் பொது மக்களின் பார்வைக்கு வைத்துள்ளது.
வத்திக்கானின் இரகசிய ஆவணக் காப்பகத்தின் 400வது ஆண்டைக் சிறப்பிக்கும் நோக்கத்தில், உரோம் Capitoline அருங்காட்சியகத்தில், “Lux in Arcana” என்ற தலைப்பில் இந்த ஆவணக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
1521ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் சிங்கராயர், ஜெர்மன் துறவி மார்ட்டின் லூத்தரைத் திருஅவைக்குப் புறம்பாக்கியது, 1530ம் ஆண்டில் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்ரி, திருமணமுறிவுக்காகத் திருத்தந்தை 8ம் கிளமெண்ட்டிடம் விண்ணப்பித்தது, வட அமெரிக்க இந்தியப் பூர்வீக இனத் தலைவர், ஒரு மரப்பட்டையில் திருத்தந்தை 13ம் சிங்கராயரை செபங்களின் பெரும் போதகர் என எழுதியது உட்பட பல முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வத்திக்கானின் ஆவணக் காப்பகத்தில், 8ம் நூற்றாண்டு ஆவணங்கள் உட்பட 35 ஆயிரம் ஆவணங்கள் உள்ளன. 
கடந்த பிப்ரவரி 29ம் தேதியன்று திறக்கப்பட்ட இவ்வருங்காட்சியகம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி வரை இருக்கும்.

7. வெளிநாட்டவர்கள் அதிகம் குடியேறும் நாடுகளில் இந்தியாவுக்கு ஒன்பதாவது இடம்

மார்ச்02,2012. இந்தியாவில் வாழும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், உலகில்  வெளிநாட்டவர் அதிகம் வாழ்கின்ற பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பிறநாடுகளுக்குத் தம் மக்களை அனுப்பும்  நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைக் கொண்டுள்ளது.
ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகைப் பிரிவு வெளியிட்ட புதிய புள்ளி விபரங்களின்படி, 2010ம் ஆண்டில் 54 இலட்சம் வெளிநாட்டவர் இந்தியாவில் வாழ்ந்தனர் என்று தெரிய வந்துள்ளது.
இவ்வெண்ணிக்கையின் அடிப்படையில், வெளிநாட்டவர் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
1990ம் ஆண்டில் இந்தியாவில் 75 இலட்சம் வெளிநாட்டவர் வாழ்ந்தனர் எனவும், இரண்டாயிரமாம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 64 இலட்சமாகக் குறைந்தது எனவும், வயது முதிர்ந்த வெளிநாட்டவரும் அகதிகளும் இறந்ததே இதற்குக் காரணம் எனவும் அவ்விபரங்கள் கூறுகின்றன.
2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில்  தெற்காசிய மக்கள்தான் அதிகம் குடியேறுகின்றனர் என்றும், அமெரிக்காவை சேர்ந்தவர்கள் மும்பையிலும், பிரிட்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் பெங்களூருவிலும் அதிகம் வாழ்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர் குடியேறும் நாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...