Tuesday, 13 October 2020

WFP அமைப்புக்கு நொபெல் அமைதி விருது

 ITALY-SWEDEN-UN-NOBEL-PEACE


2020ம் ஆண்டிற்குரிய நொபெல் அமைதி விருது, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் WFP எனப்படும் உலக உணவு திட்ட அமைப்புக்கு வழங்கப்படுவதாக, அக்டோபர் 09, இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2020ம் ஆண்டிற்குரிய நொபெல் அமைதி விருது, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் WFP எனப்படும் உலக உணவு திட்ட அமைப்புக்கு வழங்கப்படுவதாக, அக்டோபர் 09, இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் போர்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைதியான சூழலை உருவாக்கவும்,  உலக அளவில் பசியை அகற்றவும், WFP அமைப்பு மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டும் விதமாக, அந்த அமைப்பிற்கு இந்த அமைதி விருது வழங்கப்படுவதாக, நொபெல் விருதுக்குழு அறிவித்துள்ளது.

உலக உணவு திட்ட அமைப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறித்து ஊடகங்களிடம் விளக்கிய, நொபெல் விருதுக்குழுவின் தலைவர் Berit Reiss-Andersen அவர்கள், தற்போதைய பெருங்குழப்ப மற்றும், ஒழுங்கற்றநிலைக்கு எதிரான சிறந்த ஆயுதம் உணவு என்று கூறியுள்ளார்.

இக்காலக்கட்டத்தில் உலக அளவில் ஒருமைப்பாடும், நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பும் அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறிய Andersen அவர்கள், போரின் ஆயுதமாக, பசி பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு, இந்த அமைப்பு உந்துசக்தியாக உள்ளது என்று கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய், பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என்றும், இவ்வேளையில் இந்த அமைப்பின் முயற்சிக்கு ஊக்கமளிப்பது அவசியம் என்றும், இந்நாள்வரை நம்மிடம் ஒரு மருத்துவ ஊசி உள்ளது, அது உணவு என்றும் Andersen அவர்கள் கூறினார்.

உலக அளவில் ஒன்பதுக்கு ஒருவர், உண்பதற்கு போதுமான உணவு இன்றி உள்ளனர் என்றும், இவ்வாண்டில், 26 கோடியே 50 இலட்சம் பேர் பசியால் துன்புறுவார்கள் என்றும் கூறும் உலக உணவு திட்ட அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 88 நாடுகளில் ஏறத்தாழ 9 கோடியே 70 இலட்சம் பேருக்கு உணவு வழங்கி வருவதாக அறிவித்துள்ளது.

WFP அமைப்பின் தலைவர் David Beasley அவர்கள், இந்த விருது அறிவிப்பு பற்றி பேசுகையில், நொபெல் அமைதி விருது, இந்த அமைப்பிற்கு முதல் முறையாக கிடைத்திருக்கிறது, இது அந்த அமைப்பிற்கு அதிகப் பெருமைதரும் நேரம் என்று உணர்ச்சிபொங்கத் தெரிவித்தார்.

ஏறத்தாழ 11 இலட்சம் டாலர் மதிப்புடைய நொபெல் அமைதி விருது, ஆஸ்லோவில், வருகிற டிசம்பர் மாதம் 10ம் தேதி வழங்கப்படும்.

உரோம் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் உலக உணவு திட்ட அமைப்பு, 1962ம் ஆண்டில், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் உருவாக்கப்பட்டது. 1965ம் ஆண்டில், அது ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்டது. (Agencies)

No comments:

Post a Comment