மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இவ்வாண்டில், கொரோனா கொள்ளைநோய் மற்றும், ஏனைய காரணங்களால் உலக அளவில் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், உலக வங்கி, உலக சமுதாயத்தை வலியுறுத்தியுள்ளது.
“வறுமை மற்றும், பகிர்ந்துகொள்ளப்படும் வளமை 2020” என்ற தலைப்பில், இவ்வாரத்தில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக வங்கி, 25 ஆண்டுகளுக்குள், கடுமையான வறுமையை அகற்றுவதற்கு, உலக அளவில் மேற்கொள்ளப்படும் கடும் முயற்சிகள், தற்போதைய கொள்ளைநோய், காலநிலை மாற்றம், போர்கள் ஆகியவற்றின் எதிர்விளைவுகளால் பின்னடைவு கண்டுவருகின்றன என்று கூறியுள்ளது.
2019ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டில் அதிகரித்துள்ள வறுமைநிலை பற்றிக் குறிப்பிட்டுள்ள உலக வங்கி, 1998ம் ஆண்டில் நிலவிய ஆசிய நிதி நெருக்கடியால் உலகளாவிய பொருளாதாரம் தாக்கப்பட்டதற்குப்பின், தற்போது உலக அளவில் கடும் வறுமை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.
2020ம் ஆண்டில், ஏறத்தாழ 11 கோடியே 15 இலட்சம் பேர், ஒரு நாளைக்கு 1.90 டாலர் ஊதியத்தில், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்வார்கள் என்றும், கோவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்கு முன்னர், 2020ம் ஆண்டில், இத்தகைய வறுமைநிலையில் வாழ்வோரின் எண்ணிக்கை 7.9 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது என்றும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், நீதி நிறைந்த, மற்றும், வன்முறைகள் குறைந்த ஓர் உலகை அமைப்பதற்கு முயற்சித்துவரும் நாம், தோழமையின் அடிப்படையில், புதியதொரு பொருளாதார முறையை உருவாக்குவது இன்றியமையாதது என்பதை, அடிக்கடி வலியுறுத்திவருகிறார் என்பது, குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment