Thursday, 1 October 2020

புனித ஜெரோம் திருநாளில் திருத்தந்தையின் திருத்தூது மடல்

 "தூய மறைநூலின் மீது கொள்ளும் அன்பு" என்ற பெயரில் திருத்தந்தை வெளியிட்ட திருத்தூது மடல்


புனித ஜெரோம் இறையடி சேர்ந்ததன் 16வது நூற்றாண்டு சிறப்பிக்கப்படும் இத்தருணத்தில், "தூய மறைநூலின் மீது கொள்ளும் அன்பு" என்ற பெயரில் திருத்தந்தை திருத்தூது மடலொன்றை வெளியிட்டுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நமது மறைநூலில், எழுத்து வடிவில் வெளிப்பட்டுள்ள இறைவனின் வார்த்தையின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருக்கவேண்டும் என்பதே, புனித ஜெரோம் நமக்கு வழங்கியுள்ள பரம்பரைச் சொத்து என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 30ம் தேதி, புனித ஜெரோம் திருநாளன்று வெளியிட்டுள்ள திருத்தூது மடலில் கூறியுள்ளார்.

"தூய மறைநூலின் மீது கொள்ளும் அன்பு"

புனித ஜெரோம் இறையடி சேர்ந்ததன் 16வது நூற்றாண்டு சிறப்பிக்கப்படும் இத்தருணத்தில், "தூய மறைநூலின் மீது கொள்ளும் அன்பு" என்று பொருள்படும் 'Scripturae Sacrae Affectus' என்ற பெயரில் திருத்தந்தையின் திருத்தூது மடல் வெளியாகியுள்ளது.

புனித பூமியில், இயேசு பிறந்த பெத்லகேம் ஊரில், புனித ஜெரோம் உருவாக்கிய ஒரு குழுமத்தில், 420ம் ஆண்டு, செப்டம்பர் 30ம் தேதி அப்புனிதர் இறந்தபோது, தன்னையே ஆண்டவர் கரங்களில் முழுமையாக ஒப்படைத்தார் என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திருத்தூது மடலை துவக்கியுள்ளார்.

திருத்தூது மடலின் எட்டு பகுதிகள்

உரோமிலிருந்து பெத்லகேமுக்கு, ஜெரோம் வாழ்வில் விளங்கிய ஞானம், மறைநூலின் மீது கொண்டிருந்த அன்பு, மறைநூல்களை ஆழ்ந்து கற்றல், இலத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட Vulgate பதிப்பு, கலாச்சார மயமாகும் மொழிபெயர்ப்பு, ஜெரோமும் பேதுருவின் திருப்பீடமும், ஜெரோம் அன்புகூர்ந்ததை அன்புகூர, என்ற எட்டு பகுதிகளில் திருத்தந்தை தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

1920ம் ஆண்டு, புனித ஜெரோம் மரணத்தின் 15ம் நூற்றாண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில், அப்போதைய திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், 'தேற்றரவாளராகிய தூய ஆவியார்' என்று பொருள்படும், ‘Spiritus Paraclitus’ என்ற திருமடலை வெளியிட்டார் என்பதை, தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏனைய திருத்தந்தையருக்கும் புனித ஜெரோமுக்கும் உள்ள நெருங்கிய பிணைப்பைக் குறித்து, தன் திருத்தூது மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனை நெருங்கிச் செல்லும் வழி

புனித ஜெரோம், மறைநூல்களை கற்பதில் காட்டிய ஆர்வத்தையும், ஈடுபாட்டையும், ஒரு பொழுதுபோக்காகவும், தன் சொந்த அறிவை வளர்க்கும் முயற்சியாகவும் மாற்றிக்கொள்ளாமல், இறைவனை நெருங்கிச் செல்லும் ஒரு வழியாக அமைத்துக்கொண்டார் என்பதை, திருத்தந்தை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

திருஅவையில், புனித ஜெரோம் குறித்து உருவாக்கப்பட்டுள்ள ஓவியங்களில், தன்னையே மிகவும் ஒறுத்து, மிகவும் மெலிந்த உடலுடன் காணப்படும் வடிவிலும், ஓர் அறிஞராக, மறைநூலை எழுதும் வடிவிலும் காணப்படுகிறார் என்று தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவம் மிகுந்த வாழ்வு மற்றும் அறிவுத்திறன் ஆகிய இரு அம்சங்களும், அவரிடம் விளங்கின என்று கூறியுள்ளார்.

கலாச்சார மயமாகும் மொழிபெயர்ப்பு

எபிரேய மொழியில் இருந்த பழைய ஏற்பாட்டையும், கிரேக்க மொழியில் இருந்த புதிய ஏற்பாட்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தது, புனித ஜெரோம், திருஅவைக்கு ஆற்றிய மிகப்பெரும் பணி என்று கூறியுள்ள திருத்தந்தை, பெத்லகேமில் தங்கி, அவர் செய்துவந்த இப்பணிக்கு, திருத்தந்தை தமாசுஸ் அவர்கள் வழங்கிய ஆதரவையும் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

கிரேக்க, எபிரேய மொழிகளில் மட்டுமல்லாமல், அம்மொழிகளைச் சேர்ந்த கலாச்சாரங்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருந்த விவிலியத்தை, புனித ஜெரோம், மொழிபெயர்ப்பு செய்தவேளையில், அதனை வெறும் மொழிபெயர்க்கும் பணியாக மட்டுமல்லாமல், இலத்தீன் கலாச்சாரத்துடன் இணைந்த ஒரு நூலாக மாற்றியது, கலாச்சார மயமாக்கும் பணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் கூறியுள்ளார்.

ஜெரோமும் பேதுருவின் திருப்பீடமும்

இம்மடலின் ஏழாவது பிரிவில், புனித ஜெரோமுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவிய உறுதியான பிணைப்பை விளக்கும் வேளையில், புனித ஜெரோம், உரோம் நகரில் தன் பணிகளைத் துவக்கிய வேளையில் உருவான பொறாமை உணர்வுகள் அவரை புனித பூமிக்குச் செல்லத் தூண்டினாலும், அவர் பெத்லகேமில் இருந்தவண்ணம், உரோமைய ஆயரான திருத்தந்தை தமாசுஸ் அவர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார் என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இம்மடலில், 'ஜெரோம் அன்புகூர்ந்ததை அன்புகூர' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இறுதிப் பகுதியில், புனித ஜெரோம், நூல்கள் மீது கொண்டிருந்த ஆர்வத்தை, ஈடுபாட்டை வைத்து, அவர், ஒரு 'நூலகம்' என்றழைக்கப்பட்டார் என்பதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இன்றைய இளையோர், நூல்கள் மீது ஆர்வம் கொண்டு, தங்கள் பாரம்பரியத்தின் செல்வங்களை நூல்கள் வழியே பெறுவதற்குத் தேவையான சவால்களை தன் மடலில் முன்வைத்துள்ளார்.

அன்னை மரியா ஆழ்ந்து சிந்தித்ததைப்போல்...

மறைநூல்களின் கருவூலமாக விளங்கும் அன்னை மரியா, "இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்ததைப்" (லூக். 2:19,51) போலவே, புனித ஜெரோம், மறைநூல்களை ஆழ்ந்து படித்ததோடு, அவற்றில் கூறப்பட்டுள்ள மறையுண்மைகளை தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக்கொண்டிருந்தார் என்ற ஒப்புமையுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூது மடலை நிறைவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment