கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
தாவோ தத்துவத்தின் தந்தையும், சீனாவின் பெரிய ஞானியுமாகிய லா வோ த்சு அவர்களைப் பார்க்க வந்த அரசர் ஒருவர், “நீங்கள் பெரிய ஞானி. நீங்கள் என் அரசவையில் நீதிபதியாக இருந்தால், எனக்குப் பெருமையாக இருக்கும்” என்றார்.
அரசே, இதற்கு நீங்கள் பின்னால் வருத்தப்படக்கூடாது என்று, ஞானி எவ்வளவோ மறுப்புச் சொன்னபோதிலும், அரசர் மிகவும் வற்புறுத்தவே, அவரும் ஒத்துக்கொண்டார்.
முதல் நாள் ஒரு வழக்கு வந்தது.
பணக்காரர் ஒருவர் வந்து, “இவன் என் வீட்டில் புகுந்து திருடிவிட்டான். இவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.
ஞானியும் வழக்கை விசாரித்துவிட்டு, “திருடியவனுக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை. இந்தப் பணக்காரனுக்கும் ஓர் ஆண்டு சிறைத்தண்டனை” என்று தீர்ப்புக் கூறினார்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டு, அரசரே திடுக்கிட்டார்.
பணக்காரரோ அலறிக்கொண்டே, “இது என்ன அநியாயமான தீர்ப்பு?”என்று கேட்டார்.
ஞானியோ அவரை நோக்கி, “ஒருவனைத் திருடனாக்கியது நீ செய்த குற்றம். இவனது வறுமைநிலைக்கு நீதான் காரணம். இவனாவது ஒருவனிடம்தான் திருடியிருக்கிறான். நீயோ, பலருடைய சொத்தைத் திருடியுள்ளாய். ஏழைகளின் உழைப்பை நீ திருடியுள்ளாய். நீ செய்த குற்றங்கள் இரண்டு. ஒன்று பிறர் உழைப்பத் திருடியது. மற்றொன்று, நல்லவன் ஒருவனைத் திருடத் தூண்டியது. நியாயமாகப் பார்த்தால் உனக்குக் கூடுதல் தண்டனை தந்திருக்கவேண்டும். நான் இரக்கம் உடையவன். அதனால் உனக்குக் குறைந்த தண்டனைதான் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
ஞானியை நீதிபதியாய் வைத்திருப்பதா வேண்டாமா என குழம்பினார், அரசர்
No comments:
Post a Comment