Tuesday, 1 September 2020

"பல்சமய ஒருமைப்பாட்டுடன், காயப்பட்ட உலகிற்கு பணி"

 பல்சமயப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்


காயப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு, கிறிஸ்தவர்கள் என்ற முறையில் ஆற்றக்கூடிய பணிகளையும், குறிப்பாக, ஏனைய மதநம்பிக்கையாளர்களுடன் இணைந்து ஆற்றக்கூடிய பணிகளையும் சிந்திப்பதற்கு, ஓர் அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் துன்பங்களை உருவாக்கியுள்ள கோவிட்-19 கொள்ளைநோய் பரவியுள்ள சூழலில், அயலவருக்கு அன்பு காட்டி, அவர்களுக்குப் பணியாற்றுவதற்கு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதன் பொருள் என்ன? என்ற கேள்வியுடன், பல்சமய உரையாடல் திருப்பீட அவை, செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

"பல்சமய ஒருமைப்பாட்டுடன், காயப்பட்ட உலகிற்கு பணியாற்றுதல்" என்ற தலைப்பில், பல்சமய உரையாடல் திருப்பீட அவையும், உலக கிறிஸ்தவ சபைகளின் மன்றமும் இணைந்து, ஆகஸ்ட் 27, இவ்வியாழனன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

ஏழு பகுதிகளைக் கொண்ட இச்செய்தியில், தற்போதைய நெருக்கடிநிலை, நம்பிக்கையால் தாங்கப்பட்ட ஒருங்கிணைப்பு, பல்சமய ஒருங்கிணைப்புக்கு அடித்தளம், பரிந்துரைகள் என்ற பல்வேறு பிரிவுகளில், கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

கோவிட்-19 கொள்ளைநோயால் மட்டுமின்றி, இன்னும் பல்வேறு பிரச்சனைகளால் காயப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு, கிறிஸ்தவர்கள் என்ற முறையில் ஆற்றக்கூடிய பணிகளையும், குறிப்பாக, ஏனைய மதநம்பிக்கையாளர்களுடன் இணைந்து ஆற்றக்கூடிய பணிகளையும் சிந்திப்பதற்கு, இந்த செய்தி அழைப்பு விடுத்துள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள காயங்கள் போதாதென்று, மத சகிப்பற்ற நிலை, இனப்பாகுபாடு, புறக்கணிப்பு, பொருளாதார, சுற்றுச்சூழல் சீரழிவு என்ற வேறு பல சாட்டையடிகளால் பெருமளவு காயமடைந்து கிடக்கும் இவ்வுலகிற்கு, நல்ல சமாரியர் உவமை ஆழமான பாடங்களைச் சொல்லித்தருகிறது என்று, இச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாம் சந்தித்துவரும் கொள்ளைநோய் வெறும் உடல்நலம் சார்ந்த ஒரு பிரச்சனை அல்ல, மாறாக, இது, சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளையும், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும் புரிந்துகொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு என்று இச்செய்தி வலியுறுத்திக் கூறுகிறது.

No comments:

Post a Comment

Pope: ‘Synod final document forms part of papal Magisterium’

  Pope: ‘Synod final document forms part of papal Magisterium’ Pope Francis publishes a note accompanying the Final Document of the Synod of...