Monday, 21 September 2020

மருந்துகள் பற்றாக்குறை என்ற ஏழ்மை ஒழிக்கப்படவேண்டும்

 இத்தாலிய மருந்து வங்கி  அறக்கட்டளையினர் சந்திப்பு


கொள்ளைநோய் காலத்தில், மருந்துகள் வழங்கப்படுவதில், செல்வந்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவது அல்லது, அவை, இந்த, அந்த நாட்டின் சொத்து என உரிமை கொண்டாடப்படுவது கவலை தருகின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளைநோய் சிகிச்சைக்கு, உலக அளவில், புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், இவற்றை அனைத்து மக்களுக்கும் உரியதாக மாற்றாமல், அவற்றை வழங்குவதில் செல்வந்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவது, அல்லது, அவை, அந்தந்த நாட்டின் சொத்து என உரிமை கொண்டாடப்படுவது கவலை தருகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

இத்தாலி நாட்டில் இயங்கிவரும் "மருந்து வங்கி (Banco Farmaceutico)" அறக்கட்டளையின் ஏறத்தாழ இருநூறு பிரதிநிதிகளை, செப்டம்பர் 19, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பினர், கடந்த இருபது ஆண்டுகளாக, பணப்பற்றாக்குறையால் சிகிச்சை பெறஇயலாமல் உள்ள மக்களுக்கு உதவி வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

உலகின் மற்ற பகுதிகளில், மருந்துகள் பற்றாக்குறையால், எத்தனையோ மக்களும், சிறாரும் இறக்கின்றனர், இந்நிலை, மருந்துவிற்பனை முறையிலும் புறக்கணிப்பு நிலவுவதைக் காட்டுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, மருந்துகள், அனைவருக்கும் கிடைக்காமல் இருப்பது, அறநெறிப்படி அநீதியாகும் என்று கூறினார்.

சில மருந்துகள், சிலருக்கு கிடைக்காமல் உள்ளன, இது நாடுகளுக்கு இடையே இடைவெளியை உருவாக்குகின்றது எனவும், இந்நிலையை அகற்றுவதற்கு, அனைவரும் இணைந்து செயல்படும், ஒரு பொதுவான முயற்சி அவசியம் எனவும், திருத்தந்தை கூறினார்.

இப்போதைய கோவிட்-19 கொள்ளைநோயால், ஏற்கனவே ஏறத்தாழ பத்து இலட்சம் பேர் உயிரிழந்துள்ளநிலையில், இந்நோய், கடும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளதோடு, ஏழைகளும், குடும்பங்களும் எவ்வாறு வாழ்வை முன்னோக்கி நடத்துவது என்று திகைக்கச் செய்துள்ளது என்றும், திருத்தந்தை கவலையுடன் கூறினார்.

இம்மக்களுக்கு பிறரன்பு உதவிகள் வழங்கப்பட்டுவரும் அதேவேளை, மருந்துகள் பற்றாக்குறை என்ற வறுமை ஒழிக்கப்படுவதற்கு எதிராய் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, மருந்துகள் சேகரிப்பு நாள் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

இந்த அமைப்பினரின் நற்பணிகளை ஊக்குவித்து அவர்களுக்கு ஆசீரளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இரண்டாயிரமாம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்தாலிய மருந்து வங்கி (Banco Farmaceutico)" அறக்கட்டளை, நன்கொடையாளர்களிடமிருந்து மருந்துகளைப் பெற்று, வறியோரின் நலவாழ்வுக்கு உதவி வருகின்றது.

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...