ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
புத்தரின் சீடர்களில் ஒருவர், அவரை அணுகி, "ஐயா, நான் என்னதான் முயன்றாலும், என் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், நீங்களோ மிக எளிதாக மனதைக் கட்டுப்படுத்துவதைக் காணமுடிகிறது. என்னால், பிறரைப்பற்றி குறைகூறாமல் இருக்கமுடியவில்லை, ஆனால், நீங்கள் யாரையும் குறைகூறி நான் பார்த்ததில்லை. உங்களுக்கும், எனக்கும், ஏன் இந்த வேறுபாடு?" என்று கேட்டார்.
புத்தர் அவரை ஆழ்ந்து நோக்கி, "நீ கேட்ட கேள்வி நல்ல கேள்விதான். அதற்கு நான் பதில் சொல்வதற்கு முன், ஒன்றை உன்னிடம் சொல்லியே ஆகவேண்டும். இன்னும் 24 மணி நேரத்தில் நீ இறந்துவிடுவாய்" என்று கூறினார்.
சற்றும் எதிர்பாராத வேளையில், புத்தர் இவ்வாறு சொன்னதைக்கேட்டு, வேதனையும், அதிர்ச்சியும் அடைந்த சீடர், தன் வீட்டிற்குச் செல்ல, புத்தரிடம் உத்தரவு கேட்டார். புத்தர் அவரிடம், "இன்னும் 24 மணி நேரங்கள் உள்ளனவே. ஏன் இந்த அவசரம்? நாம் தொடர்ந்து பேசுவோம்" என்று கூறினார். "இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது? நான் வீட்டுக்குச் சென்று இறப்பதே மேல்" என்று சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குப் புறப்பட்டார் சீடர்.
வீட்டிலிருந்த அனைவரிடமும் தான் 24 மணி நேரங்களில் இறக்கப்போவதாகச் சொன்னதும், அனைவரும் அழுது புலம்பினர். சீடர், ஓர் அறைக்குள் சென்று, படுக்கையில் படுத்துக்கொண்டு தொடர்ந்து அழுதார்.
அந்த நாள் முடிய ஒருமணி நேரம் இருந்தபோது, புத்தர், சீடரது வீட்டுக்குள் சென்றார். அங்கு படுத்திருந்த சீடரிடம், "இன்னும் ஒரு மணி நேரம் உள்ளது. நாம் பேசுவோமே" என்று கூற, சீடர் அவரிடம், "அமைதியாக என்னை சாகவிடுங்கள். இந்த நேரத்தில் என்ன பேசவேண்டியுள்ளது?" என்று சலிப்புடன் கூறினார்.
புத்தர் அவரிடம், "சரி, நீ ஒன்றும் பேசவேண்டாம். நான் கேட்கும் ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்" என்று கூறியபின், "இந்த 24 மணி நேரமும் உன் மனம் கட்டுப்பாடின்றி அலைபாய்ந்ததா?" என்று கேட்டார். "அது எப்படி முடியும்? சாவைத்தவிர என் மனம் வேறு எதையும் சிந்திக்கவில்லை" என்று சொன்னார், சீடர்.
"இந்த நாள் முழுவதும் நீ யாரையாவது குறை கூறினாயா? இன்று முழுவதும், பொய் சொன்னாயா? திருடினாயா?" என்று புத்தர் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டதும், "இல்லவே இல்லை. சாவு மட்டுமே என் சிந்தனையில் இருந்தது" என்று சீடர் கூறினார்.
புத்தர் தன் சீடரிடம், "இன்று காலை நீ கேட்ட கேள்விக்குரிய விடையை இப்போது கண்டுபிடித்திருப்பாய் என்று எண்ணுகிறேன்" என்று சொன்னதும், சீடர் அவரை கேள்விக்குறியுடன் நோக்கினார்.
புத்தர் தொடர்ந்து பேசினார்: "இன்று இறப்போமா, நாளை இறப்போமா என்று எனக்கும் தெரியாது, உனக்கும் தெரியாது. ஆனால், வாழ்வின் இறுதியில் அனைவரும் இறப்போம் என்பது, உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அந்த உண்மையை நீ கடந்த 24 மணி நேரங்கள் சிந்தித்ததால், வேறு எந்த தவறையும் உன்னால் செய்யமுடியவில்லை. நீ இந்த 24 மணி நேரங்கள் சிந்தித்த இந்த உண்மையை, நான் கடந்த 24 ஆண்டுகள் சிந்தித்துவருகிறேன். அதுதான், உனக்கும், எனக்கும் உள்ள வேறுபாடு" என்றார்.
No comments:
Post a Comment