Wednesday, 30 September 2020

பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு

 கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே


பிலிப்பீன்ஸ் நாட்டில் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு யூபிலிக் கொண்டாட்டங்களுக்குத் தயாரிப்பாக, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, ஒன்பது ஆண்டுகள் நவநாள் நிகழ்வுகளை 2013ம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில், முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

1521ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, பிலிப்பீன்ஸ் நாட்டின் Limasawa தீவில், முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டதன் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள், 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி இடம்பெறும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Pablo Virgilio David அவர்கள் அறிவித்துள்ளார்.

அதேநேரம், 1521ம் ஆண்டில், இஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்கள், Cebu உயர்மறைமாவட்டத்தில், முதன்முதலில் திருமுழுக்கு அருளடையாளம் நிறைவேற்றியதன் 500ம் ஆண்டு நிகழ்வுகள், 2021ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சிறப்பிக்கப்படும் என்றும், ஆயர் David அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த 500ம் ஆண்டு யூபிலிக் கொண்டாட்டங்களுக்குத் தயாரிப்பாக, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, ஒன்பது ஆண்டுகள் நவநாள் நிகழ்வுகளை 2013ம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது. 

கர்தினால் தாக்லே

மேலும், கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டிருந்த பிலிப்பீன்ஸ் நாட்டு கர்தினாலும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவருமான கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், அந்நோயிலிருந்து முழுவதும் குணம்பெற்றுள்ளார் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் மகிழ்வோடு அறிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment