Wednesday, 30 September 2020

சிறிய முயற்சிகள், பெரிய பலன்கள்

 வீணாகும் உணவுப் பொருள்கள்


உலகில் 2014ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பசியால் துன்புறுவோரின் எண்ணிக்கையும், வீணாகும் உணவுப்பொருள்களின் அளவும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. உணவை வீணாக்குவதில் முதல் வரிசையில் நிற்பது அமெரிக்க ஐக்கிய நாடு.

மேரி தெரேசா: வத்திக்கான்

 அன்று மட்டுமல்ல, இன்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்வது, அமெரிக்காவில் வேலை பார்ப்பது, அமெரிக்காவில் வரன் அமைவது இப்படி எல்லாமே கனவாக இருந்து வருகிறது. அயர்லாந்து நாட்டில் இத்தகையதொரு கனவில் வாழ்ந்த, பிராங்க் மெகொர்ட் (Frank McCourt, ஆக.19,1930 – ஜூலை,19, 2009))  என்ற, அயர்லாந்து-அமெரிக்க எழுத்தாளரின் தந்தை, அமெரிக்கா சென்றார். ஆனால், அமெரிக்காவில் அவர் எதிர்கொண்ட வறுமையும், நெருக்கடியும் அவரை அயர்லாந்திற்கே திரும்பக் கொண்டுவந்துவிட்டது. அவர் திரும்பி வந்ததைப் பார்த்த அவரின் கிராமத்து மக்கள் அவரிடம், புதையல் தேடிப்போவது போல எல்லாரும் அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள், நீங்கள் மட்டும் ஏன் அயர்லாந்துக்கே திரும்பி வந்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர், இது என்னுடைய கிராமம், எனது வீட்டிற்குத் திரும்பி இருக்கிறேன் என்று பதில் சொன்னார். அப்போது எழுத்தாளர் பிராங் அவர்களுக்கு வயது ஐந்து. அவரது அப்பா மிதமிஞ்சிய குடிகாரர். பொறுப்பாக வேலைசெய்யத் தெரியாதவர். அவர் எல்லாரிடமும் சினம்கொள்வார். எரிந்து விழுவார். வறுமையும் இறப்பும் அவர்களது வீட்டில் நிரந்தர விருந்தினராக இருந்தன. அவர்கள் வீட்டின் அச்சாணியாக இருந்த, அவரின் அம்மா, தன் கணவரின் அத்தனை கொடுமைகளுக்கு மத்தியிலும் குடும்பத்தை முன்னேற்ற வேண்டுமென்பதில் முனைப்பாய் இருந்தார். தாங்க முடியாத வறுமையின் காரணமாக, அந்தக் குடும்பம் வாடகை இல்லாத ஒற்றை அறையில் தங்கியது. அந்தப் பகுதியில் இருந்த ஒரேயொரு கழிப்பறையைத்தான், அங்கிருந்த 16 குடும்பங்களும் பயன்படுத்தின. போதுமான உணவு இல்லை. குளிர் ஆடைகள் இல்லை. நோயில் குழந்தைகள் இறந்துபோயினர். குழந்தைகளைப் புதைப்பதற்குக்கூட அவர்களிடம் காசு கிடையாது. அந்தச் சூழலிலும், பிராங்கின் அப்பா, தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று கத்தினார். அந்த ஒற்றை அறைதான் அவர்களுக்கு புகலிடம்.

பிராங் அவர்கள், வறுமை தாங்க இயலாமல், தெருவில் கிடந்த பழங்களை எடுத்துச் சாப்பிட்டார். அச்சமயத்தில் ஒருநாள், பிராங்கைப் பார்த்த சிறுவன் ஒருவன் பொறாமையுடன், உனக்காவது அப்பா அம்மா இருக்கிறார்கள், எனக்கு அவ்வாறு யாருமே இல்லை. பசி மட்டுமே என்னோடு இருக்கிறது, இங்கு உள்ள வீடுகள், சுவர்கள் போன்ற எல்லாவற்றையும் கடித்துத் தின்றுவிடலாம்போல் இருக்கிறது என்று சொன்னான். இந்த பின்புலத்தில் வளர்ந்த பிராங் அவர்கள், பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று, ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்னர் அவர் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் உயர்ந்தார். பிராங் அவர்கள், பல ஆண்டுகளுக்குப்பின், ஒருசமயம் அயர்லாந்து சென்று தான் வாழ்ந்த வீட்டுக்குள் நுழைந்தார். பழைய துன்ப நினைவுகள் அவர் மனதில் கிளம்ப, உணர்ச்சிமேலிட்டு அழுதார். அச்சமயத்தில் அந்த வீட்டின் இதயம் துடித்துக்கொண்டிருப்பதை அவரால் கேட்க முடிந்ததாம். புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஆலன் பார்க்கர் (Sir Alan William Parker ) என்பவர், எழுத்தாளர் பிராங் அவர்கள், தன் வாழ்வு பற்றி எழுதி, 1996ம் ஆண்டில் வெளியிட்ட "Angela's Ashes" என்ற நாவலைப் பயன்படுத்தி, அதே பெயரில், ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார். சிறிது வெளிச்சம் என்ற நூலில் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள், இந்த தகவலை பதிவுசெய்துள்ளார். இந்த நாவல் இரு ஆண்டுகளுக்குமேல் விற்பனையில் இருந்து நாற்பது இலட்சம் பிரதிகளை விற்றது. இந்தப் படமும், நாவலும் அடைந்த சிறந்த வெற்றி, பிராங்க் மெகொர்ட் அவர்களை, மிகச் சிறந்த எழுத்தாளராக ஆக்கியது. அவர், 1997ம் ஆண்டில், அந்த நாவலுக்காக புலிட்சர் (Pulitzer) விருதும் பெற்றார் என்பது கூடுதல் செய்தி. புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர்

எழுத்தாளர் பிராங் அவர்களது குடும்பம் போன்று, இன்று எத்தனையோ குடும்பங்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த குடும்பங்கள் கடும் வறுமையில் உழல்கின்றன. குறிப்பாக இந்த கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், இந்த நிலை, மேலும் பலரை வறுமைக்கு உள்ளாக்கியுள்ளது. செப்டம்பர் 27, இஞ்ஞாயிறன்று திருஅவை புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரை நினைவுகூர்ந்தது. பல்வேறு நெருக்கடிகளைச் சமாளிக்க இயலாமல், தங்கள் சொந்த இடங்களைவிட்டு புலம்பெயரும் இந்த மக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்டார். வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தின் ஒரு பகுதியில், “கவனிக்கப்படாத வானதூதர்கள்” என்ற பெயரில், புலம்பெயர்ந்தோரின் உண்மையான நிலையை தத்ரூபமாகச சித்திரத்துள்ள உருவங்களைச் சுட்டிக்காட்டி, இயேசுவும், அவரது குடும்பமும் கட்டாயமாகப் புலம்பெயர்ந்ததுபோல் இவர்களும் புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறி, அவர்களுக்காக இறைவனை மன்றாடினார். 

உணவுப்பொருள் வீணாவதைக் குறைக்கும் உலக நாள்

செப்டம்பர் 29, இச்செவ்வாயன்று, உணவுப்பொருள் வீணாவதைக் குறைக்கும் உலக நாள், முதன்முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. உணவுப்பொருள்கள் வீணாக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கி, அவை பொறுப்புணர்வுடன் நுகரப்படுவதற்கு, உலக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, 2019ம் ஆண்டில், 74வது ஐ.நா.பொது அவையில், இந்த உலக நாள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த உலக நாள் கொரோனா கொள்ளைநோய் காலத்தில் இடம்பெறுவதால், இந்த காலக்கட்டத்தில் உணவுப்பொருள்கள் உற்பத்தி செய்யப்படும்முறை, அவை நுகரப்படும்முறை மற்றும், வீணாக்கப்படும்முறை ஆகியவற்றை குறித்து சிந்திக்க, நாம் அழைக்கப்படுகிறோம். இந்த கொள்ளைநோய் பல நாடுகளில் உணவுப் பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளது. உலகில் 2014ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பசியால் துன்புறுவோரின் எண்ணிக்கையும், வீணாகும் உணவுப்பொருள்களின் அளவும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. உணவை வீணாக்குவதில் முதல் வரிசையில் நிற்பது அமெரிக்க ஐக்கிய நாடு. கடந்த 2019ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 1,010 கோடி டாலர் மதிப்புகொண்ட உணவு, வீணாக்கப்பட்டுள்ளது.  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், ஒவ்வோர் ஆண்டும் 8 கோடியே 80 இலட்சம் டன் உணவுப்பொருள்கள் வீணாக்கப்படுகின்றன.

"உணவு வீணாதல், மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை" என்று, அமெரிக்க சமையல் கலை வல்லுனர், Max La Manna அவர்கள் சொல்லியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்களில் மூன்றில் ஒரு பகுதி, விளைவிக்கப்படும் நிலத்திலேயே இழக்கப்படுகிறது அல்லது, வீணாகிறது. இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமாகும். உணவு வீணாதல் என்பது, உணவு பொருட்கள் வீணாவதை மட்டுமே குறிப்பதில்லை. அதோடு, அந்த உணவை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பணம், நீர், உழைப்பு, நிலம் மற்றும், போக்குவரத்து அனைத்தும் வீணாவதையும் குறிக்கிறது. தேவைக்கு அதிகமாகப் பொருள்களை வாங்காதிருத்தல், உணவு பொருட்களைச் சரியாகச் சேமித்து வைத்தல், குளிர்சாதன பெட்டியை முறையாகப் பயன்படுத்தல், வீட்டில் இருக்கும் பொருட்களில் உணவைத் தயார் செய்தல், முடிந்தால் வீடுகளிலே உரம் தயாரித்தல். இவ்வாறு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில், உணவு வீணாவதைத் தவிர்க்கலாம். எனவே, சிறிய முயற்சிகள், பெரிய பலன்களை நல்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உணவகம் ஒன்றில் அழுக்கான உடை அணிந்து தோற்றத்திலும் அழுக்காக காணப்பட்ட ஒருவர் உணவருந்தச் சென்றார். அவர் அமர்நித்ருந்த மேஜையில், விலையுயர்ந்த கோட், சூட் அணிந்த ஒருவரும் அமரவேண்டிய சூழ்நிலை உருவாகியது. முதலில் அந்த வறியவருக்கு 5 துண்டுகளாக, பிட்சா பரிமாறப்பட்டது. எதிரே அமர்ந்திருந்த அந்த மனிதர், தனது மடிக்கனனியைப் பார்த்தவாறே, அந்த ஏழைக்குப் பரிமாறப்பட்ட பிட்சாத் துண்டுகளை எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அந்த ஏழையும் அவற்றை எடுத்துச் சாப்பிட்டார். கடைசியில் இருந்த துண்டு பிட்சாவை இருவரும் எடுத்தனர். அப்போது அந்த மனிதருக்குக் கோபம். உடனே அந்த வறியவர், அந்த பிட்சா துண்டை இரண்டாகப் பிரித்துக்கொடுத்தார். அதற்கு அந்த ஆள், இங்க பாரு நீ வெளியே போய், உனது உணவுக்காக உழைச்சு சாப்பிடணும் என்று கோபமாகத் திட்டினார். அதேநேரம், அவருக்குரிய பிட்சா கொண்டுவந்து வைக்கப்பட்டது. வெட்கத்தால் குறுகிப்போன அவர், அந்த ஏழையிடம், உனக்குரிய கடைசித் துண்டு பிட்சாவையும் பகிர உனக்கு எப்படி மனது வந்தது என்று கேட்டார். அதற்கு அந்த ஏழை, ஐயா, என்னிடம் அதிகம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், பகிர்வது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிக்கின்றது என்று கூறினார். பின்னர் அந்த ஏழையின் செயல், அந்த ஆளையும் பகிர்ந்து உண்ண வைத்தது.

உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இந்திய நடுவண் அரசின் வேளாண் கொள்கையை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் 2020ம் நிதியாண்டின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.39 விழுக்காடு குறைந்துள்ளது என, மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் காட்டுகிறது. இது வரலாறு காணாத சரிவு என்றும், ஏழைகள் தங்களின் சாப்பாட்டுச் செலவை குறைத்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு  உணவளிக்கும் வகையில், AMAFHHA போன்ற பல்வேறு தன்னார்வலர் அமைப்புகள், சமுதாய குளிர்சாதனப் பெட்டி முறை ஒன்றை அமைத்து உதவி வருகின்றன. பல இளைஞர்கள், விழாக்களில் மீதப்படும் உணவுகளைச் சேகரித்து வறியோருக்கு உணவு வழங்கி வருகின்றனர். உணவை வீணாக்கும்போது, பசியால் மடியும் மனிதர்களை, ஒட்டிய வயிற்றைக் காட்டி கையேந்தும் மனிதர்களை நினைத்துப் பார்ப்போம். சிறிய முயற்சிகள், பெரிய பலன்களைத் தரும் என்பதை உணர்வோம்.

No comments:

Post a Comment