ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஆசியாவின் பல நாடுகளிலும் வாழ்ந்து வரும் கத்தோலிக்கர்கள், கோவிட் 19 கொள்ளைநோய் காலத்தில், தங்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல் வாழ, ஆசிய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான மியான்மார் நாட்டு கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு மடலில், நோயின் தாக்கம், வேலை இழப்பு, பொருளாதார வீழ்ச்சி என்ற பல்வேறு நெருக்கடிகளையும், மக்கள் நம்பிக்கையோடும், மன உறுதியோடும் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
பெரும்பாலான ஆசிய நாடுகளில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன, பள்ளிகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன, பொருள்களின் தட்டுப்பாடு வளர்ந்து வருகிறது என்ற பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், இவ்வேளையில், அரசுகள் இன்னும் கூடுதலான அடக்குமுறைகளை மக்கள்மீது சுமத்துவதிலேயே குறியாய் இருப்பது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் ஆசியாவின் பல நாடுகள், புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் என்ற பல்வேறு இயற்கை பேரிடர்களைச் சந்தித்துள்ளது போதாதென்று, நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கிடையிலும் மோதல்களையும் சந்தித்துவருகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், ஒவ்வொரு பிரச்சனையையும் ஆசிய மக்கள் மன உறுதியோடு சந்தித்து வருகின்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மதம், இனம், நாடுகள் என்ற பல நிலைகளில் வேற்றுமை பாராட்டும் நம்மிடையே, இந்தக் கொள்ளைநோய், எவ்வித வேறுபாடும் இன்றி நுழைந்து, அனைவரையும் தாக்கியுள்ளது என்பதை உணரும்போது, இதனை வெல்வதற்கு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து வரவேண்டும் என்ற உண்மையை இது உணர்த்தியுள்ளது என்று கர்தினால் போ அவர்கள் தன் மடலில் நினைவுறுத்தியுள்ளார். (Fides)
No comments:
Post a Comment