கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 கொள்ளைநோய் குறித்த உறுதியற்ற பல தகவல்கள் மிக வேகமாக பரவி வருவதைத் தடுக்க, நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, ஐ.நா. நிறுவனம்.
வரலாற்றில் முதன்முறையாக, தொழில்நுட்பங்களும், தகவல் துறையும் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு, இன்றைய கொள்ளைநோய் குறித்த தகவல்கள் அதிகமாக பகிரப்பட்டுவரும் வேளையில், தவறான தகவல்களால், பல இழப்புகளும், காலதாமதங்களும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன என்று, ஐ.நா.வும், அதனோடு பணிபுரியும் நிறுவனங்களும் கூறுகின்றன.
கோவிட்-19 கொள்ளைநோய் குறித்த சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவதுடன், மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை மதிக்கவும் வேண்டும், அதேவேளை, தகவல் தொடர்பு ஊடகங்களால் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும் வேண்டும் என விண்ணப்பிக்கின்றன, இவ்வமைப்புக்கள்.
தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதில் மக்களுடன் சேர்ந்து அரசுகள் பணியாற்ற வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ள இவ்வமைப்புகள், நோய் தீர்வுக்கான வழிகளைக் கண்டறிவதிலும் பொதுமக்களின் உதவி நாடப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளன.
கோவிட்-19 கொள்ளைநோய் பரவத்துவங்கிய உடனேயே, தவறான தகவல்கள் பரவத்துவங்கியது மட்டுமின்றி, ஆபத்தான நல ஆலோசனைகள், பகைமையைத் தூண்டும் பேச்சுக்கள், போன்றவையும் பரவத்துவங்கின என்று ஐ.நா. நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் அமைப்புகள் கூறியுள்ளன.
இதற்கிடையே, இந்த கோவிட்-19 கொள்ளைநோயால் உலகின் 8 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துக்கள் வழங்கப்படமுடியாத நிலை உருவாகியுள்ளது என்று கூறிய WHO என்ற உலக நலவாழ்வு அமைப்பு, நல்ல, பயனுள்ள, பாதுகாப்பான, விலைகுறைந்த கோவிட்-19 நோய் தடுப்பு மருந்துக்களை, அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்கும் திட்டங்களை தீட்டிவருவதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment