Wednesday 30 September 2020

வியட்நாமில் புதிய உயர் குருத்துவக்கல்லூரிக்கு அனுமதி

 வியட்நாம் கோவில் ஒன்றில் சிறார்


வியட்நாமின் 27 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 2,824 மாணவர்கள், அந்நாட்டின் 11 உயர் குருத்துவக் கல்லூரிகளில் பயிற்சிபெற்று வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

வட வியட்நாமில், அரசின் அனுமதியைப் பெற்று, புதிய உயர் குருத்துவக் கல்லூரி ஒன்று அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கியுள்ளது. 

Thai Binh மறைமாவட்டத்தில் புதிய வசதிகளுடன் திறக்கப்பட உள்ள இந்த திரு இருதய குருத்துவக்கல்லூரி, புதிய மாணவர்களைத் திரட்டவும், குருத்துவப்பயிற்சி வழங்கவும், ஜூலை மாத இறுதியில் வியட்நாம் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றதைத் தொடர்ந்து, முழுவீச்சுடன் பணிகள் இடம்பெற்று வருவதாக, Thai Binh மறைமாவட்ட ஆயர் இல்லம் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

Thai Binh நகரில் துவக்கப்பட்டுள்ள இந்த உயர் குருத்துவக்கல்லூரி, மறைமாவட்ட குருத்துவ மாணவர்களுக்கு மட்டுமல்ல, மாறாக, ஏனைய மறைமாவட்டங்கள், துறவு சபைகள் என பலருக்கு உதவுவதாக இருக்கும் என மறைமாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 40 பேர் குருத்துவப்பணிக்கு தங்களை அர்ப்பணிக்க முன்வரும் Thai Binh மறைமாவட்டத்திலிருந்து, 6 மாணவர்களே, Hanoi  உயர் குருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்படுவதும், வேறு சிலர், ஏனைய குருத்துவக்கல்லூரிகளில் பயில்வதும், பலர் பயில இடமின்றி, குருத்துவக் கல்லூரியில் மறுக்கப்படுவதும் தொடரும் நிலையில், இம்மறைவமாவட்டத்தின் தொடர் முயற்சியால் தற்போது, புதிய உயர் குருமடம் பகுதியளவு செயல்படத் துவங்கியுள்ளது.

200 முதல் 300 குருத்துவ மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியுடன் கட்டப்பட்டுவரும் திரு இருதய உயர் குருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்படும்வரை, குருத்துவ மாணவர்கள், ஆயர் இல்லத்தில் தங்கியிருப்பர், என்கிறார் Thai Binh மறைமாவட்ட ஆயர் Peter Nguyen Van De.

1970 மற்றும் 71ம் ஆண்டில் போரின்போது மூடப்பட்ட இளங்குருத்துவ இல்லம் இருந்த இடத்தில் தற்போதைய புதிய உயர் குருத்துவக்கல்லுரி கட்டப்பட்டு வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி, வியட்நாமின் 27 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 2,824 மாணவர்கள், அந்நாட்டின் 11 உயர் குருத்துவக்கல்லூரிகளில் பயிற்சிபெற்று வருகின்றனர்.(UCAN)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...