மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள புதிய தேசியக் கல்விக்கொள்கை 2020ஐ, தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 30, வருகிற ஞாயிறன்று நடைபெறும், மாபெரும் முகநூல் கொள்கைபரப்பு முயற்சியில், தமிழக கத்தோலிக்கர் ஆர்வமுடன் பங்கெடுக்குமாறு, சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு கத்தோலிக்க கல்விக் கழகத்தின் தலைவரான பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள், தமிழக அருள்பணியாளர்கள், மற்றும், துறவியருக்கு அனுப்பியுள்ள மடலில், கல்விப் பாதுகாப்பு தேசிய கூட்டமைப்புடன், தமிழ்நாடு கத்தோலிக்க கல்விக் கழகமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையில், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும், பங்குகளிலுள்ள அன்பியங்கள் ஆகிய அனைத்தும் பெருமளவில் பங்கெடுக்கவேண்டும் என்று, அன்போடு அழைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வருகிற ஞாயிறு, இந்திய நேரம், காலை 10 மணிக்கு, “தமிழக அரசே, தேசியக் கல்விக்கொள்கை 2020ஐ, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாதே!” என்று முழங்கி, தமிழகம் முழுவதிலும் 5,000 இடங்களில் இடம்பெறும் முகநூல் கொள்கைபரப்பு முயற்சியில், ஆர்வமுடன் பங்கெடுக்குமாறு, பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய மத்திய அரசு, தேசியக் கல்விக்கொள்கை 2020ஐ இறுதிசெய்து நடைமுறைக்குக் கொண்டுவருகிறது என்பது, பெரும் வேதனைக்குரியதாகும் என்று குறிப்பிட்டுள்ள, பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள், தேசியக் கல்விக்கொள்கை 2020ஐ, தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்கவேண்டும் என்று, இம்மாதம் 16ம் தேதி இணையவழி ஆர்ப்பாட்டம் ஒன்றையும், கல்விப் பாதுகாப்பு கூட்டமைப்பு நடத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்பு, கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து அந்த இணையவழி போராட்டத்தை நடத்தியது என்றும், சென்னை-மயிலை பேராயர், தனது மடலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கல்விக்கொள்கையின் உள்ளடக்கமும், முன்வைக்கப்படும் முன்மொழிவுகளும் ஆபத்தானவை என்று, கல்வி பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதியதொரு கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள நடுவண் அரசு, அந்தக் கல்விக்கொள்கை, அடுத்த பத்தாண்டுகளில் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. (Ind.Sec/Tamil)
No comments:
Post a Comment