Tuesday, 15 December 2015

செய்திகள் 14.12.15

செய்திகள்-14.12.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, இலங்கை அரசுத்தலைவர் சிறிசேனா சந்திப்பு

2. திருத்தந்தை - வேலை, மனித மாண்போடு இணைந்து செல்ல வேண்டும்

3. இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை வைப்பது எத்துணை அழகானது

4. பிப்ரவரி 12-18, 2016ல் மெக்சிகோவுக்குத் திருத்தூதுப் பயணம்

5. இறைவனின் கனிவையும் ஆறுதலையும் எல்லாரும் பெறுவதற்கு செபம்

6. திருத்தந்தை பிரான்சிஸ் - மாபெரும் மன்னிப்பின் காலம் தொடங்கியுள்ளது

7. பாரிஸ் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துமாறு விண்ணப்பம்

8. டெல்லி திருஇதயப் பேராலயப் புனிதக் கதவு திறப்பு

9. கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருகிறது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, இலங்கை அரசுத்தலைவர் சிறிசேனா சந்திப்பு

டிச.14,2015. இலங்கையில் இடம்பெற்றுவரும் அமைதி மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகள் அந்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபாலா சிறிசேனா அவர்கள், இத்திங்களன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகியோரையும் சந்தித்தார்.
கடந்த சனவரியில் இலங்கைக்கு திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதப் பயண நிகழ்வுகளின் நினைவுகள், அந்நாட்டின் அண்மை வரலாற்றில் இடம்பெற்றுள்ள சில விடயங்கள், அமைதி மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகள், சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றி வரும் பணிகள், பல்சமய உரையாடலின் முக்கியத்துவம், பாரிசில் நடந்து முடிந்துள்ள காலநிலை மாற்றம் உலக மாநாட்டின் விளைவுகள் போன்ற தலைப்புகள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.
இச்சந்திப்புகளில் பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை - வேலை, மனித மாண்போடு இணைந்து செல்ல வேண்டும்

டிச.14,2015. இத்தாலிய ஆயர் பேரவையின் Policoro திட்டக் குழுக்களின் ஏறக்குறைய இரண்டாயிரம் பேரை இத்திங்களன்று அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஒவ்வொரு தொழிலாளரின், குறிப்பாக இளையோர் தொழிலாளரின் சக்தியும், திறமைகளும், மனித மாண்பும், உரிமைகளும், ஆர்வங்களும் மதிக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
Policoro திட்டக் குழுக்கள் வேலைவாய்ப்பற்ற இளையோர்க்கென ஆற்றிவரும் மனித மற்றும் ஆன்மீகப் பணிகளை ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேலையில்லாததால் எண்ணற்ற இளையோர் இன்று வேலை தேடுவதையே கைவிட்டு விட்டனர், அதனால் அவர்கள் சமுதாயத்தின் புறக்கணிப்புக்கும், தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர் என்றும் கூறினார்.
பரிந்துரைகளைப் பெறும் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கொடை அல்ல வேலை, ஆனால் வேலைவாய்ப்பு, அனைவரும் கொண்டிருக்கும் உரிமை என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மனித மாண்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
இளையோர்க்கு வேலைவாய்ப்பைத் தேடிக் கொடுப்பது மட்டுமல்ல, அவர்கள் வேலையின் தூய மதிப்பை உணர்வதன் வழியாக நற்செய்திப் பணியாற்ற வேண்டிய கடமையையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பதை உணரச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளையோர், நற்செய்தி, வேலை என்ற விருதுவாக்குடன், அருள்பணி மாரியோ ஒப்பெர்த்தி அவர்கள் 1995ம் ஆண்டில் இத்தாலியின் பலேர்மோ நகரில் Policoro திட்டத்தை ஆரம்பித்தார். இத்தாலிய ஆயர் பேரவை நடத்தும் இத்திட்டத்தின் 20ம் ஆண்டு நிறைவின் நினைவாக இக்குழுவினர் திருத்தந்தையைச் சந்தித்தனர்.
இத்தாலியின் லொம்பார்தி மாநிலத்தின் Sant'Angelo சிறைக் கைதிகளின் பிரிதிநிதிக் குழு ஒன்றும் இச்சந்திப்பில் கலந்து கொண்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை வைப்பது எத்துணை அழகானது

டிச.14,2015. திருஅவையில் ஒவ்வொரு மனிதரின் சுதந்திரமும், மனத்தாராளமும், நம்பிக்கையும் எத்துணை அழகானது என்று, இத்திங்களன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதேநேரம், திருஅவையில் கண்டிப்பாக இருப்பவர் அழகற்றவராக இருக்கிறார், இறுகிய உள்ளம் கொண்ட குருக்கள் தங்கள் இதயங்களை மூடிக்கொண்டிருப்பது தீமையானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்ராயேலை பழிப்பதற்காக அரசரால் வாடகைக்கு வாங்கப்பட்ட இறைவாக்கினர் பிலயாம் பற்றிக் கூறும் இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இரக்கத்தின் ஆண்டில், இரு வழிகள் உள்ளன, ஒன்று, எல்லாவற்றையும் மன்னிக்கும் இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை வைப்பது, இன்னொன்று, இதயங்களை மூடிக்கொள்ளும் குருக்களின் இறுக்கநிலை என்று தெரிவித்தார்.
பிலயாம் தனது தவறுகளை, ஏன், பாவங்களையும்கூடக் கொண்டிருந்தார், நாமும் பாவங்களைக் கொண்டிருக்கிறோம், நாமும் பாவிகள், இதைக் குறித்து திகிலடையத் தேவையில்லை, கடவுள் நம் பாவங்களைவிட மேலானவர், பிலயாம் தனது பயணத்தில் வானதூதரைச் சந்திக்கிறார், வானதூதர் பிலயாமின் இதயத்தை மாற்றுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாளைய நற்செய்தியிலும், தலைமைக் குருக்கள் இயேசுவிடம், நீர் எந்த அதிகாரத்தால் செயல்படுகின்றீர் என்று கேட்டனர், இந்த மனிதர்கள், தங்களின் கண்டிப்பான சட்டதிட்டங்களுக்கு அடிமையானவர்கள், தங்களின் கணிப்புக்களுக்குள் பூட்டப்பட்டவர்கள் என்றுரைத்த திருத்தந்தை, அவர்கள் கொண்டிருந்த மனிதக் கணிப்புகள் அவர்களின் இதயங்களையும், சுதந்திரத்தையும் அடைத்துவிட்டன என்று கூறினார். நம்பிக்கை, கிறிஸ்தவப் புண்ணியமாகும், அது இறைவனிடமிருந்து பெறும் பெரிய கொடையாகும், அது, நம் பிரச்சனைகள், வேதனைகள் மற்றும் இன்னல்களைக் கடந்து நம்மை நோக்க வைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், மிக அதிகத் தேவையில் இருப்போர்க்கு கிறிஸ்துவின் கனிவை வழங்குவதற்கு ஒரு நாளைக்கு ஒரு திட்டம் என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இத்திங்களன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பிப்ரவரி 12-18, 2016ல் மெக்சிகோவுக்குத் திருத்தூதுப் பயணம்

டிச.14,2015. 2016ம் ஆண்டு பிப்ரவரியில் மெக்சிகோ நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 12, இச்சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் மெக்சிகோ நாட்டு குவாதாலூப்பே அன்னை மரியா திருவிழா திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறையுரையில் மெக்சிகோ திருத்தூதுப் பயணம் பற்றி அறிவித்தார்.
2016ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை மெக்சிகோ நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை, 12ம் தேதி மதியம் 12.30 மணிக்கு உரோமையிலிருந்து புறப்பட்டு அன்று இரவு 7.30 மணிக்கு மெக்சிகோ நகர் சென்றடைவார்.
பிப்ரவரி 13ம் தேதி மெக்சிகோ அரசுத்தலைவரைச் சந்தித்து அரசு வரவேற்பைப் பெற்று, அரசு மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தும் திருத்தந்தை, மாலை 5 மணிக்கு குவாதாலூப்பே அன்னை மரியா பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றுவார்.
15ம் தேதி San Cristobal de Las Casaல், குடும்பங்களைச் சந்தித்தல் உட்பட, பேராலயம் செல்தல்,16ம் தேதி Moreliaவில் இளையோரைச் சந்தித்தல், 17ம் தேதி Ciudad Juarezவில் தொழிலாளரைச் சந்தித்தல் உட்பட பல பயண நிகழ்வுகளை நிறைவேற்றி 18ம் தேதி பிற்பகல் 2.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1531ம் ஆண்டில், மெக்சிகோ பழங்குடியினத்தவர் புனித ஹூவான் தியேகோ என்பவருக்கு குவாதாலூப்பே அன்னை மரியா காட்சிகள் கொடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இறைவனின் கனிவையும் ஆறுதலையும் எல்லாரும் பெறுவதற்கு செபம்

டிச.14,2015. குவாதாலூப்பே அன்னை மரியா திருவிழா திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இரக்கப் பண்பை நம்மில் வளர்த்துக்கொள்வதற்கு அன்னை மரியாவிடம் அருள் வேண்டுவோம் என்றும் கூறினார். 
இறைவனின் கனிவையும் ஆறுதலையும் ஒவ்வொருவரும் தவறாமல் உணர வேண்டும், ஏனெனில் இறைவன் எந்த வரையறையுமின்றி, கைம்மாறு கருதாமல் அன்பு கூர்கிறார், இறைவன் நம்மில் அகமகிழும் அளவுக்கு நம்மை அன்பு கூர்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, முதல் பாவம், மனித இயல்பை கறைப்படுத்தவில்லை மற்றும் இறைவனின் சிறப்பு உதவியின்றி நன்மையையோ தீமையையோ தேர்ந்தெடுக்கும் திறமை கொண்டது என்ற கொள்கை போன்றவர் அல்ல இறைவன் என்று கூறினார்.
இரக்கம் என்ற சொல், துன்பம், இதயம் ஆகிய இரு சொற்களாலானது, இதயம் அன்புகூரும் திறனைச் சுட்டிக்காட்டுகிறது, இரக்கம் என்பது மனிதத் துன்பத்தைத் தழுவிக்கொள்ளும் அன்பு என்று விளக்கிய திருத்தந்தை, அன்பே நமது ஏழ்மையை உணர்கிறது என்றும் கூறினார்.
எந்த ஒரு பாவமும், இறைவனின் இரக்கம்நிறை நெருக்கத்தை அல்லது மனந்திரும்புதலுக்கான அருளை அவரிடமிருந்து தடை செய்யாது என்றும், ஆண்டவரே என் கடவுள், அவரே என் மீட்பு என்று ஆனந்தத்தோடு சொல்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருத்தந்தை பிரான்சிஸ் - மாபெரும் மன்னிப்பின் காலம் தொடங்கியுள்ளது

டிச.14,2015. இஞ்ஞாயிறு காலையில் உரோம் தூய ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், புனிதக் கதவைத் திறந்து வைக்கும் திருப்பலி நிறைவேற்றி மறையுறையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பசிலிக்காவிலும், உலகின் அனைத்துப் பேராலயங்களிலும் புனிதக் கதவைத் திறந்திருப்பது, மகிழ்வாக வாழ ஓர் அழைப்பு என்று கூறினார்.
மாபெரும் மன்னிப்பின் காலம் தொடங்கியுள்ளது, நாம் அடையும் மகிழ்வு, பெரும் அடக்குமுறை மற்றும் வன்முறையை, குறிப்பாக, அதிகாரத்தில் இருப்பவரின் அடக்குமுறை மற்றும் வன்முறையை எதிர்ப்பதற்கு உதவுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்மஸ் நெருங்கி விட்டது என்பதால், திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு மகிழ்வு ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது என்றும் உரைத்த திருத்தந்தை, கிறிஸ்மஸ் அண்மித்து வருவதும், புனிதக் கதவு திறக்கப்பட்டிருப்பதும் மகிழ்வுக்கான காரணம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் மனித சமுதாயத்தைக் காயப்படுத்தும் வன்முறைகளின் பன்முகங்களை நாம் எதிர்கொள்ளும்போது சோர்வடையவோ வருத்தப்படவோ நம்மை அனுமதிக்கக் கூடாது. இரக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீதியின் பணிகளை நாம் ஆற்ற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய ஜான் இலாத்தரன் பசிலிக்கா முகப்பில் தொடங்கிய திருவழிபாட்டில் முதலில் புனிதக் கதவைத் திறந்து சிறிது நேரம் செபித்தார் திருத்தந்தை. பின்னர் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றினார்.
மேலும், இஞ்ஞாயிறன்று, உரோம் தூய பவுல் பசிலிக்காவின் புனிதக் கதவை, அப்பசிலிக்காவின் தலைமைக்குரு கர்தினால் James Harvey அவர்கள் திறந்து வைத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. பாரிஸ் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துமாறு விண்ணப்பம்

டிச.14,2015. பாரிஸ் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில்    கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாரிஸ் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு வரலாற்று நிகழ்வு என்று பலரால் விளக்கப்பட்டுள்ளது. மிகவும் நலிந்த மக்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கும் என்று நம்புகிறேன். உலக சமுதாயம் மிகுந்த ஒருமைப்பாட்டுணர்வுடன், இந்த இசைவை நடைமுறைப்படுத்துமாறு விண்ணப்பிக்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை.
மேலும், நைரோபியில் டிசம்பர் 15, இச்செவ்வாயன்று தொடங்கும் பத்தாவது உலக வர்த்தக அமைச்சரவை கருத்தரங்கு தீர்மானங்கள் எடுக்கும்போது, ஏழைகளின் நியாயமான தேவைகளை மறக்காமல் நினைவில் வைக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரக்கத்தின் யூபிலியை எல்லாரும் முழுமையாய் வாழும்படியாக, இன்று உலகெங்கும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று கூறினார் திருத்தந்தை.
சிறப்பாக, வறுமை, தேவையில் இருப்பவர் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர் வாழும் இடங்களில் இரக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று சொல்லி, உலகெங்கும் சிறையிலுள்ள கைதிகளுக்கு தனது சிறப்பு வாழ்த்தையும் அனுப்புவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், உண்மையான மனமாற்றம், நீதிக்கும் ஒருமைப்பாட்டுணர்வுக்கும் தெளிவான விதத்தில் அர்ப்பணிக்க அழைப்பு விடுக்கின்றது என்று தெரிவித்தார்.
திருமுழுக்கு யோவான் மனமாற்றம் அடைய விடுக்கும் அழைப்பைக் குறிப்பிட்டு, அதிகாரத்தில் இருப்பவரின் சில எண்ணங்கள் மாறவில்லை, எனவே உண்மையான மனமாற்றம் அவசியம் என்றும், நீதி, ஒருமைப்பாடு, சமநிலை ஆகியவற்றின் பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும், கிறிஸ்தவ வாழ்வை நேர்மையாகவும், மனித வாழ்வை முழுமையாகவும் வாழ்வதற்கு முக்கிய விழுமியங்கள் இவை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. டெல்லி திருஇதயப் பேராலயப் புனிதக் கதவு திறப்பு

டிச.14,2015. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்தில் டெல்லி திருக்குடும்ப மருத்துவமனையில் ஏழைகளுக்கென சிறப்பு சேமிப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இளையோர் மத்தியில் வேலைவாய்ப்பின்மையைக் களைவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று டெல்லி உயர்மறைமாவட்ட பேராயர் Anil Joseph Thomas Couto அவர்கள் கூறினார்.
டெல்லி திருஇதயப் பேராலயப் புனிதக் கதவை இஞ்ஞாயிறன்று திறந்து வைத்துள்ள பேராயர் Couto அவர்கள், இரக்கத்தின் சமூகப் பணிகள், இரக்கத்தின் ஆன்மீகப் பணிகள் ஆகிய இரு கூறுகளை இப்புனித ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறினார்.
இறைவனின் மன்னிப்பையும், அவரின் எல்லையற்ற அன்பையும் விசுவாசிகள் அனுபவிப்பதற்கு பல்வேறு சலுகைகளை இரக்கத்தின் ஆண்டு வழங்குகின்றது என்று திருத்தந்தை கூறியதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Couto அவர்கள், இந்த யூபிலி ஆண்டில் திருத்தந்தையின் சொற்களின்படி நடப்போம் என்றும் கூறினார்.
டெல்லியில் வருகிற மார்ச் 4,5 தேதிகளில் 24 மணி நேர செபம், ஆராதனை நடைபெறும், டெல்லியில் ஐந்து ஆலயங்களை, திருப்பயண ஆலயங்களாக அறிவித்திருப்பதையும் குறிப்பிட்டார் பேராயர் Couto.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி
9. கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருகிறது

டிச.14,2015. கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விளக்கிய, கனடாவின் Alberta பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் Mathieu Dumberry அவர்கள், பூமியின்  வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.
இதனால் துருவங்களின் அடர்த்தி குறைவதும், நிலவின் ஈர்ப்பு சக்தியும், பூமியை மெதுவாக சுழலச் செய்வதாக Dumberry அவர்கள் தெரிவித்தார்.
இவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள Dumberry அவர்கள், அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள் பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என்று கூறியுள்ளார்.
மேலும்  பருவ நிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வு போன்றவற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கடலோர நகரங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; அதற்காக, இலட்சக்கணக்கான கோடிகளைக் கொட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார் Dumberry.

ஆதாரம் : தினமணி/வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...