செய்திகள்-19.12.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. விஜயவாடா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜோசப் ராஜா
2. இரக்கம், மனிதருக்குத் தேவைப்படும் மிக உண்மையான மருந்து
3. மீட்பின் பாதையை ஆடம்பரத்திலும் பெருமையிலும் காண இயலாது
4. உரோம் சாலையில் “புனித பிரான்சிஸ்” மருத்துவ சிகிச்சை அமைப்பு
5. அன்னை தெரேசா குறித்த அறிவிப்பு இரக்கத்திற்கு விடுக்கப்படும் அழைப்பு
6. கிறிஸ்மஸ், முஸ்லிம்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்பும் நேரம்
7. புகலிடம் தேடிய ஆபத்தான பயணங்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
8. 2015ல் கட்டாயமாக புலம்பெயர்ந்தவரின் எண்ணிக்கை 6 கோடி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. விஜயவாடா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜோசப் ராஜா
டிச.19,2015. இந்தியாவின் விஜயவாடா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Joseph Raja Rao Thelegathoti அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Monfort மறைப்பணியாளர் சபையின் மாநில அதிபராக பெங்களூருவில் பணியாற்றிவந்த புதிய ஆயர் Joseph Raja Rao Thelegathoti அவர்கள், ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா மறைமாவட்டத்தின் Peddautapallyல் 1952ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பிறந்தவர்.
உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் ஆன்மீக இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், மைசூரிலும், பெங்களூருவிலும் Monfort சபையின் குருத்துவ மற்றும் இறையியல் கல்லூரிகளில் அதிபராகப் பணியாற்றியிருக்கிறார்.
Monfort சபையின் மாநில ஆலோசகர், மாநில அதிபராகவும் பணியாற்றியுள்ள புதிய ஆயர் ஜோசப் ராஜா அவர்கள், உரோம் நகரில் அச்சபையின் பொதுப் பொருளாளராகவும் 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.
தற்சமயம் Monfort மறைப்பணியாளர் சபையின் மாநில அதிபராக பெங்களூருவில் பணியாற்றி வந்தார் புதிய ஆயர் ஜோசப் ராஜா.
1950ம் ஆண்டில் விசாகபட்டிணம் உயர்மறைமாவட்டத்திலிருந்து பிரிந்து மறைமாவட்டமாக உருவான விஜயவாடா மறைமாவட்டத்தில் 2,83,062 கத்தோலிக்கர் உள்ளனர். 146 மறைமாவட்ட அருள்பணியாளர்கள், 83 துறவற அருள்பணியாளர்கள், 341 அருள்சகோதரர்கள், 791 அருள்சகோதரிகள் மற்றும் 42 குருத்துவ மாணவர்கள் உள்ளனர்.
ஆயர் பிரகாஷ் மல்லவரப்பு அவர்கள், விசாகபட்டிணம் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், விஜயவாடா மறைமாவட்டம், 2012ம் ஆண்டிலிருந்து ஆயரின்றி காலியாக இருந்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. இரக்கம், மனிதருக்குத் தேவைப்படும் மிக உண்மையான மருந்து
டிச.19,2015. இரக்கம், முதலும் மிக உண்மையானதுமான மருந்தாக மனிதருக்கு உள்ளது என்பதை, சில
நாள்களுக்கு முன்னர் நாம் தொடங்கியுள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டு நம்
மனங்களிலும் இதயங்களிலும் பதித்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கூறினார்.
இத்தாலிய இரயில்துறை அமைப்பில் பணியாற்றுகின்றவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என, ஏறக்குறைய
ஏழாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல்
அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கப் பண்பு நம் எல்லாருக்கும் மிகவும் தேவைப்படுகின்றது என்று கூறினார்.
இரயில்துறையின் கடினமான பணிகள், இத்துறை பல நகரங்களில் தொடங்கியுள்ள உதவி மையங்கள், உரோம் மத்திய இரயில் நிலையத்துக்கருகில் நடத்தப்பட்டு வரும் ஓஸ்தெல்லோ பயணியர் தங்குமிடம் போன்றவற்றையும் குறிப்பிட்டு, பாராட்டிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவன், தமது இரக்கத்தை நமக்குத் தொடர்ந்து நிரம்பப் பொழிந்து வருகிறார், நாம்
ஒவ்வொருவரும் நமது மனிதத்தை முழுமையாய் வாழும்பொருட்டு அந்த இரக்கத்தை
நமக்கு அடுத்திருப்பவர்க்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
திருத்தந்தை.
இப்புனித ஆண்டில் உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் திறக்கப்பட்டுள்ள புனிதக் கதவுகள் இதனையே நமக்கு நினைவுபடுத்துகின்றன என்றும், உரோம் மத்திய இரயில் நிலையத்துக்கருகிலுள்ள ஓஸ்தெல்லோ இல்லம், பிறரன்பின் புனிதக் கதவாக மாறியுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்புப் பாதை வழியாகக் கடந்து செல்பவர்கள், மன்னிப்பையும் ஆறுதலையும் அடைகின்றனர், தங்கள் சகோதரர்களின் மீட்புக்காக மிகுந்த மனத் தாராளத்துடன் தங்களையே வழங்க முன்வருகின்றர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் காரித்தாஸ் அமைப்பை உருவாக்கிய அருள்பணியாளர் Luigi Di Liegro அவர்கள் பெயரில் ஓஸ்தெல்லோ இல்லம் 1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மீட்பின் பாதையை ஆடம்பரத்திலும் பெருமையிலும் காண இயலாது
டிச.19,2015. இயேசு, ஒரு மாளிகையில் ஓர் இளவரசிக்குப் பிறக்கவில்லை, ஆனால், உரோமைப் பேரரசின் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்த ஓர் எளிய இளம் சிறுமிக்கு, தாழ்மையில் வந்து பிறந்தார் என்று, உரோம் காரித்தாஸ் அமைப்பின் வீடற்றவர் மையத்தில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம்
மத்திய இரயில் நிலையத்துக்கருகில் உரோம் காரித்தாஸ் அமைப்பு நடத்தும்
வீடற்றவர் மையத்திற்கு இவ்வெள்ளி மாலையில் சென்று திருப்பலி நிறைவேற்றி
புனிதக் கதவைத் திறந்து வைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
மரியா கருவுற்றிருந்தது குறித்து புறணிகளும், பழிச்சொற்களும் சூழ்ந்திருந்த நிலையில், புனித யோசேப்பு, மரியாவை தனது மனைவியாக ஏற்று, மிகவும் தாழ்ச்சியுடன் செயல்பட்டார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இதேபோல் நாமும், இன்று செல்வங்கள், பெருமைகள், அதிகாரங்கள் ஆகியவை மத்தியில் இறைவனைக் காண முடியாது, மாறாக, இறைவனை ஏறக்குறைய மறைவான வழியில், அதிகத் தேவையில் இருப்பவர், நோயாளர், பசியாய் இருப்பவர் மற்றும் சிறையில் இருப்பவரில் காண முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் மக்கள் அனைவரின் இதயங்களைத் திறக்கும்பொருட்டு இந்த வீடற்றவர் இல்லக் கதவு திறக்கப்பட்டுள்ளது என்றும், மீட்பின் பாதையை ஆடம்பரத்திலும் பெருமையிலும், அதிகாரத்திலும் காண இயலாது, மாறாக, இறைவனின் அன்புத்தழுவல் மற்றும் மன்னிப்பு வழியாகக் காண முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம்
புறக்கணிக்கப்படுவதை உணரும்போது இறைவனின் இரக்கத்தின் தேவையையும் நாம்
உணர்கிறோம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான்
தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் மற்றும் உரோம் தூய ஜான் இலாத்தரன் பேராலயப்
புனிதக் கதவுகளைத் திறந்து வைத்துள்ள திருத்தந்தை, உரோம் காரித்தாஸ் அமைப்பு நடத்தும் வீடற்றவர் மையத்தின் புனிதக் கதவையும் இவ்வெள்ளி மாலையில் திறந்து வைத்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. உரோம் சாலையில் “புனித பிரான்சிஸ்” மருத்துவ சிகிச்சை அமைப்பு
டிச.19,2015. “இரக்கம், மனிதரை இறைவனோடு ஒன்றிணைக்கும் பாதையாகும். இது, இறையன்பின்மீது நம்பிக்கை கொள்வதற்கு இதயத்தைத் திறக்கின்றது” என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரக்கத்தின் யூபிலி ஆண்டை தெளிவான முறையில் சிறப்பிக்கும் விதமாக, உரோம் நகரில் சாலையில் மருத்துவ சிகிச்சை என்ற ஒரு புதிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களுக்கு உதவும் நோக்கத்தில், “புனித பிரான்சிஸ்(SAN FRANCESCO)” என்ற பெயரில் இயங்கும் இந்த மருத்துவ சிகிச்சை அமைப்பு, உரோம் ரெஜினா சேலி மத்திய சிறைச்சாலை தன்னார்வலர்களின் மையத்தில் மருத்துவ ஒருமைப்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்போடு இயங்குகின்றது.
இச்சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் திருத்தந்தையின் தர்மச்செயல்களுக்குப் பொறுப்பான பேராயர் Konrad Krajewski, உரோம் துணை ஆயர் Paolo Lojudice உட்பட பலர் கலந்து கொண்டனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள “புனித பிரான்சிஸ்” மருத்துவ சிகிச்சை அமைப்பு, சனிக்கிழமையிலும், இரு புதன் கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. அன்னை தெரேசா குறித்த அறிவிப்பு இரக்கத்திற்கு விடுக்கப்படும் அழைப்பு
டிச.19,2015. அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளது, நாம் இதுவரை பெற்றுள்ள கிறிஸ்மஸ் கொடைகளில் மிகச் சிறந்தது என்று கூறினார் மும்பை பேராயர்
கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இது குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அன்னை தெரேசா அவர்களுடன் தனிப்பட்ட முறையில் மிக ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்ததாகவும், பல நிகழ்வுகளில் பல மணி நேரங்கள் அவர்களுடன் செலவிட்டதாகவும் கூறினார்.
உலகுக்கும், சமயச் சார்பற்ற உலகுக்கும், கிறிஸ்தவ உலகுக்கும் அன்னை தெரேசா அவர்கள் இந்தியாவின் கொடை என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மத வேறுபாடின்றி, எல்லாரும் அன்னை தெரேசாவை அன்பு கூர்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
அன்னை தெரேசா அவர்கள், கருணை வாழ்வை உண்மையிலேயே வாழ்ந்தவர்கள், அவரின் ஒவ்வொரு நாள் வாழ்வும் இரக்கத்தின் ஆண்டாக இருந்தது, அவர்
புனிதராக உயர்த்தப்படுவது 21ம் நூற்றாண்டில் இரக்கத்திற்குத் தெளிவாக
அழைப்பு விடுப்பதாக உள்ளது என்று கூறினார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
2008ம்
ஆண்டில் எந்த மருத்துவ சிகிச்சைகளும் பலன்தராமல் கோமா நிலையில் இறந்து
கொண்டிருந்த பிரேசில் நாட்டு பொறியியலாளர் ஒருவரின் மனைவி, அருளாளர்
அன்னை தெரேசாவிடம் தொடர்ந்து செபித்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். 42
வயது நிரம்பிய அந்தப் பொறியியலாளர் தற்போது முழுமையாய்க் குணமடைந்து
தொழில்நுட்ப பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
6. கிறிஸ்மஸ், முஸ்லிம்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்பும் நேரம்
டிச.19,2015. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அநீதிகளை எதிர்கொண்டாலும், நாட்டுப்பற்றுடன் வாழ்வதிலும், உடன் வாழும் அனைத்து குடிமக்களையும், ஏன், முஸ்லிம்களையும் அன்பு கூர்வதிலும், பின்னோக்கிச் செல்லாமல், முன்னோக்கிச் செல்வோம் என்று கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார் பாக்தாத் முதுபெரும் தந்தை இரஃபேல் லூயிஸ் சாக்கோ.
துன்பம், அடக்குமுறை மற்றும் உரிமை மீறல் சூழல்களில் ஈராக் கிறிஸ்தவ சமூகம் வாழ்ந்து வந்தாலும், கிறிஸ்தவர்களின் இதயங்களில், அமைதியிலும், கண்ணீரிலும், வரவிருக்கும் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட தயாரிப்புகள் இடம்பெற்று வருகின்றன என்று, ஆசியச் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
இஞ்ஞாயிறன்று பாக்தாத் பேராலயப் புனிதக் கதவைத் திறக்கவுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக்கில் மனித உரிமை விடயத்தில் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் எவ்விதப் பாகுபாடும் இன்றி, சம உரிமையுடன் வாழ வேண்டும் என்ற விழுமியங்களுக்கு ஆதரவளிக்கும் எல்லாருக்கும் தன் கிறிஸ்மஸ் செய்தியில் நன்றி தெரிவித்துள்ளார், முதுபெரும் தந்தை சாக்கோ.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
7. புகலிடம் தேடிய ஆபத்தான பயணங்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
டிச.19,2015. பாதுகாப்பையும், நல்ல வாழ்வையும் தேடி, ஆபத்தான பயணங்களை மேற்கொண்டபோது தங்களின் வாழ்வை இழந்துள்ள ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இவ்வெள்ளியன்று நினைவுகூரப்பட்டனர்.
குடிபெயர்ந்தவர் உலக நாளான இவ்வெள்ளியன்று, உலகெங்கும் மக்கள் மெழுகுதிரிகளை ஏந்தி, ஆபத்தான பயணங்களில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்தனர்.
இந்த உலக நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், 2015ம் ஆண்டு, மனிதத் துன்பம் மற்றும் குடிபெயர்ந்தவர் துன்பங்களை நினைவுகூரும் ஆண்டாக அமைந்துள்ளது என்று கூறினார்.
கடந்த
12 மாதங்களில் புகலிடம் தேடிய ஆபத்தான பயணங்களில் ஐந்தாயிரத்துக்கு
மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் என்று கூறியுள்ளார் பான் கி மூன்.
ஐ.நா.பொது அவை, 1990ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, அனைத்துக்
குடிபெயர்ந்தவர் மற்றும் அவர்கள் குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்
அனைத்துலக ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அந்நாளே உலக குடிபெயர்ந்தவர் நாளாகக்
கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி
8. 2015ல் கட்டாயமாக புலம்பெயர்ந்தவரின் எண்ணிக்கை 6 கோடி
டிச.19,2015. உலகெங்கும், தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை, இதற்கு முந்தையப் பதிவுகளைவிட, இவ்வாண்டில் அதிகமாக இருக்கும் என்று, ஐ.நா.வின் புலம்பெயர்ந்தவர் நிறுவனம் கூறியுள்ளது.
தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஆறு கோடியை, அதாவது, உலக மக்கள் தொகையில், ஒவ்வொரு 122 பேருக்கும் ஒருவர் என்ற நிலையை எட்டியுள்ளது என்று, இந்நிறுவன உயர் இயக்குனர் António Guterres அவர்கள் தெரிவித்தார்.
2015ம் ஆண்டின் முதல் பாதிப் பகுதியை வைத்து அந்நிறுவனம் தயாரித்த புதிய அறிக்கை குறித்து இவ்வெள்ளியன்று பேசிய Guterres அவர்கள், சகிப்புத்தன்மை, பரிவன்பு மற்றும் ஒருமைப்பாட்டுணர்வு இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறினார்.
உலக அளவில் புலம்பெயர்ந்தவரின் எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்னர் 1 கோடியே 95 இலட்சமாக இருந்தது, ஆனால் இவ்வெண்ணிக்கை 2015ம் ஆண்டின் பாதியில் 2 கோடியைத் தாண்டியுள்ளது என்றும் கூறினார் Guterres .
No comments:
Post a Comment