Wednesday, 16 December 2015

செய்திகள்-15.12.15

செய்திகள்-15.12.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : 'அக்கறையின்மையைக் களைந்து அமைதியை வெல்க'

2. திருத்தந்தை: திருஅவையின் உண்மையான செல்வம் ஏழை எளியோரே

3. கிறிஸ்மஸ் கால திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்

4. வணக்கத்துக்குரிய ஜோசப் விதயாத்தில் வீரத்துவமான வாழ்வு ஏற்பு

5. அருள்சகோதரர்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வத்திக்கான் ஏடு

6. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மனிதத்தில் வளர அழைப்பு

7. தென்கிழக்கு ஆசியாவில் 18 இலட்சம் குழந்தைகள் இறப்பைத் தடுக்க முடியும்

8. 200 கோடிப் பேர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் நிலையிலிருந்து மீட்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : 'அக்கறையின்மையைக் களைந்து அமைதியை வெல்க'

டிச.15,2015. இறைவன், அக்கறையற்றவர் அல்ல, அவர் மனிதகுலத்தின் மீது மிகுந்த அக்கறை கொள்பவர், நம்மை அவர் கைவிடுவதேயில்லை என்று நான் மனதார நம்பும் உண்மையை, புதிய ஆண்டில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளார்.
2016ம் ஆண்டின் முதல் நாளன்று திருஅவையில் கொண்டாடப்படவிருக்கும் 49வது அகில உலக அமைதி நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியை, திருப்பீடத்தின் நீதி அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.
'அக்கறையின்மையைக் களைந்து, அமைதியை வெல்க' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியில், அரசுத் தலைவர்கள், மதத் தலைவர்கள் உட்பட, ஒவ்வொரு மனிதரும், அமைதியும், வளமான வாழ்வும் பெற தான் வாழ்த்துவதாக, தன் செய்தியின் துவக்கத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை.
நம்பிக்கையில் தொடர்ந்திட காரணங்கள், அக்கறையின்மையின் பல வடிவங்கள், உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மையால் அச்சுறுத்தப்பட்டுள்ள அமைதி, அக்கறையின்மையிலிருந்து இரக்கம் நோக்கி மனமாற்றம், அக்கறையின்மையை வெல்வதற்கு ஒருங்கிணைந்த சமுதாயத்தை கட்டியெழுப்புதல், ஒருங்கிணைதல், இரக்கம், பரிவினால் உருவாகும் அமைதி, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் அடையாளம் அமைதி என்ற ஏழு கருத்துக்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலக அமைதி நாள் செய்தியை வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதும் நாம் கேட்டு வந்த செய்திகள், 'சிறு சிறு துண்டுகளாக நடைபெறும் மூன்றாம் உலகப் போரை' நமக்கு உணர்த்துகிறது என்று தன் அமைதிச் செய்தியைத் துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாரிஸ் மாநகரில் முடிவுற்ற மாநாடு, திருஅவையில் துவக்கப்பட்டுள்ள இரக்கத்தின் யூபிலி, ஆகிய முயற்சிகள் நமக்கு நம்பிக்கை அளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை: திருஅவையின் உண்மையான செல்வம் ஏழை எளியோரே

டிச.,15,2015. திருஅவையின் உண்மையான செல்வம் ஏழை எளியோரேயன்றி, பணமும், உலகம் சார்ந்த சக்தியும் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இச்செவ்வாய்க் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையில், மலைப்பொழிவில் கூறிய 'பேறுபெற்றோர்' வாக்கியங்களில், 'ஏழையரை'ப் பற்றி இயேசு முதலில் பேசுகிறார் என்று சிறப்பாகக் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இறைவாக்கினர் செப்பனியா நூலில் இறைவன் கூறும் வார்த்தைகளையும், நற்செய்தியில், தலைமைக் குருக்களுக்கும், மக்களின் மேய்ப்பர்களுக்கும் இயேசு அளித்த எச்சரிக்கை வார்த்தைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் மையப்பொருளாகப் பகிர்ந்தார்.
தாழ்ச்சி, வறுமை, இறைவனில் நம்பிக்கை என்ற மூன்று பண்புகளே திருஅவையில் வெளிப்படவேண்டிய பண்புகள் என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
'நான் ஒரு பாவி' என்று தன்னையே தாழ்த்திக்கொள்ள முடியாதவர், அடுத்தவர் பாவங்களையும், குறைகளையும் காணவும், அவர்களைத் தீர்ப்பிடவும் முற்படுகின்றனர் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
உரோமைய மறைமாவட்டத்தின் தியாக்கோனாகப் பணியாற்றிய புனித இலாரன்ஸ் என்ற இளையவரிடம், திருஅவையின் செல்வங்களை கொணருமாறு அரசர் பணித்தபோது, அவர், வறியோரை அழைத்துவந்து, இவர்களே திருஅவையின் செல்வங்கள் என்று காட்டிய நிகழ்வையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் நினைவுகூர்ந்தார்.
வறியோரைத் தங்கள் செல்வம் என்று கருதாமல், வங்கியில் சேமித்துள்ள பணத்தை நம்பி வாழ்வோர், உண்மையில் உள்ளத்தில் வறுமையடைந்தவர்கள் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கிறிஸ்மஸ் கால திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்

டிச.15,2015. கிறிஸ்து பிறப்பு காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருவழிபாட்டு நிகழ்வுகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள்.
டிசம்பர் 24 இரவு 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை, டிசம்பர் 25 நண்பகலில் ஊர்பி எத் ஓர்பி என்ற, உரோம் நகருக்கும் உலகுக்குமான செய்தியையும் சிறப்பு ஆசிரையும் வழங்குவார்.
டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தெ தேயும் நன்றி திருப்புகழ் மாலை வழிபாட்டை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை, 49வது உலக அமைதி தினமான சனவரி முதல் தேதியன்று, இறைவனின் அன்னையாகிய தூய கன்னிமரியா பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்துவார். அன்று, உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் புனிதக் கதவையும் திறப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 6ம் தேதி காலை பத்து மணிக்கு தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  நிறைவேற்றுவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வணக்கத்துக்குரிய ஜோசப் விதயாத்தில் வீரத்துவமான வாழ்வு ஏற்பு

டிச.15,2015. தூய பிரிஜிதாவின் மீட்பர் துறவு சபையை ஆரம்பித்த சுவீடன் நாட்டு அருளாளர் Maria Elisabetta Hesselblad உட்பட ஐந்து இறையடியார்களின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகள் மற்றும் 12 இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட புனிதர்நிலைப் பேராயத் தலைவர் கர்தினால் Angelo Amato அவர்கள் இத்திங்கள் மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்து இந்த விபரங்களைச் சமர்ப்பித்தார்.
கேரளாவில் திருக்குடும்ப சகோதரிகள் சபையைத் தொடங்கிய மறைமாவட்ட அருள்பணியாளர் இறையடியார் ஜோசப் விதயாத்தில் (Joseph Vithayathil),  மற்றும், இத்தாலி, இஸ்பெயின், வியட்னாம், போர்த்துக்கல், போலந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளைச் சேர்ந்த இறையடியார்களின் வீரத்துவமான  பண்புகளை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை.
இறையடியார் ஜோசப் விதயாத்தில் அவர்கள், கேரளாவின் Puthenpallyல் 1865ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்து, 1964ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி Kuzhikkattusseryல் காலமானார்.
மேலும், உக்ரேய்ன் நாட்டில் பிறந்து, கஜகஸ்தானில் இறந்த இறையடியார் அருள்பணியாளர் Ladislao Bukowiński, இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் 1696ம் ஆண்டில் பிறந்து 1755ம் ஆண்டில் இறந்த வணக்கத்துக்குரிய அருள்சகோதரி Mariae Celeste Crostarosa, இத்தாலியின் பலேர்மோ நகரில் 1852ம் ஆண்டு பிறந்து 1923ம் ஆண்டில் இறந்த இறையடியார் அருள்சகோதரி Maria di Gesù, இத்தாலியின் La Spezia நகரில் 1904ம் ஆண்டில் பிறந்து 1957ம் ஆண்டில் இறந்த வணக்கத்துக்குரிய அருள்சகோதரி Itala Mela ஆகியோரின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகளையும் ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. அருள்சகோதரர்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வத்திக்கான் ஏடு

டிச.15,2015. அருள்சகோதரர்கள் வாழ்வைப் பாராட்டவும், அவ்வாழ்வைத் தேர்ந்தெடுப்போரின் இறையழைத்தலை ஊக்குவிக்கவும் உதவும் நோக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீட துறவு சபைகள் பேராயம்.
திருஅவையில் அருள்சகோதரர்களின் தனித்துவமும் பணியும் என்ற தலைப்பில் இத்திங்களன்று ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்ட ஐம்பது பக்க ஏடு, அருள்சகோதரர்களின் வாழ்வு மற்றும் அவர்களின் நற்செய்திப் பணி, தியாகம், உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
திருப்பீட துறவு சபைகள் பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz, அதன் செயலர் பேராயர் Jose Rodriguez Carballo ஆகிய இருவரும் இந்த ஏட்டை செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டனர்.
திருஅவையில் அருள்சகோதரர்களின் அழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும், குறிப்பாக, அவர்கள் இன்றைய உலகில் எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில் வரைவுத் தொகுப்பு ஒன்றைத் தயாரிக்குமாறு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2008ம் ஆண்டில் கேட்டுக்கொண்டதைக் குறிப்பிட்டார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில், உலக அளவில் துறவிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அருள்சகோதரர்களின் எண்ணிக்கை அதிகமாகக் குறைந்துள்ளது. 1965ம் ஆண்டில் கிறிஸ்தவ சகோதரர்கள் சபையில் 16 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை தற்போது ஐந்தாயிரத்துக்கும் குறைவாக உள்ளது.
உலகில் 2013ம் ஆண்டின் இறுதியில், அருள்சகோதரர்களின் எண்ணிக்கை 55,250க்கு அதிகமாக இருந்தவேளை, மறைமாவட்ட மற்றும் துறவற அருள்பணியாளர்களின் எண்ணிக்கை 4,15,350 ஆக இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மனிதத்தில் வளர அழைப்பு

டிச.15,2015. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மனிதம் நிறைந்தவர்களாகவும், இயேசுவை நெருங்கிச் செல்வதற்கு உதவும் புண்ணியங்களில் வளரும்படியாகவும் கேட்டுக்கொண்டார் ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ.
ராஞ்சி அன்னை மரியா பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்து வைத்த திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் டோப்போ அவர்கள், இறைவனிடம் மிக நெருங்கிச் செல்வதற்கு இந்த யூபிலி ஆண்டை பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.
மேலும், போபாலின் புனித பிரான்சிஸ் அசிசியார் பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்து வைத்து மறையுரையாற்றிய பேராயர் Leo Cornelio அவர்கள், இன்று இப்புனிதக் கதவு வழியாகச் செல்கிறோம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத் தந்தையர் உலகுக்குத் திறந்து வைத்த மற்றொரு கதவையும் நினைவுகூர்வோம் என்று கூறினார்.
ஒடிசா மாநிலத்தில், கட்டாக் புவனேஷ்வர் பேராலயப் புனிதக் கதவுத் திறப்பு நிகழ்வில், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்டனர் என்று கிறிஸ்தவ செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி

7. தென்கிழக்கு ஆசியாவில் 18 இலட்சம் குழந்தைகள் இறப்பைத் தடுக்க முடியும்

டிச.15,2015. தென்கிழக்கு ஆசியாவில் தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் 7,400 குழந்தைகள் இறக்கின்றனர், எனினும், இவ்விறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு அளவைத் தடுக்கமுடியும் என்று WHO உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், பிறந்தவுடன் இறக்கும் 27 இலட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அரசுகள் துரித நடவடிக்கை எடுக்குமாறு, WHO நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய இயக்குனர் Poonam Khetrapal Singh அவர்கள் கேட்டுக்கொண்டார்.
தென்கிழக்கு ஆசியாவில் இவ்விறப்புகளைத் தடுப்பதற்கு, ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பு (UNICEF), ஐ.நா. மக்கள் தொகை நிதி அமைப்பு (UNFPA), உலக வங்கி, ஐ.நா. எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டு திட்டம் (UNAIDS), ஐ.நா. பெண்கள் அமைப்பு ஆகியவை இத்திங்களன்று இணைந்து உறுதியெடுத்து, அறிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளன. 
தென் கிழக்கு ஆசியாவில் இடம்பெறும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில், பிறந்தவுடனே இறக்கும் குழந்தைகள் ஐம்பது விழுக்காட்டுக்கு அதிகம் என்றும், 2030ம் ஆண்டுக்குள் இவ்விறப்பை ஆயிரத்துக்கு பன்னிரண்டு என்ற அளவுக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்றும் WHO நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி

8. 200 கோடிப் பேர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் நிலையிலிருந்து மீட்பு

டிச.15,2015. கடந்த 25 ஆண்டுகளில் ஏறக்குறைய 200 கோடிப் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையிலிருந்து வெளிவந்துள்ளனர், இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் இப்பொழுதே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா.வின் மனித முன்னேற்ற அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. வெளியிட்டுள்ள இப்புதிய மனித முன்னேற்ற அறிக்கையில், இவ்வுலகம் சந்திக்கும் இந்தப் பெரிய சவாலை எதிர்கொள்வதற்கு, அனைவருக்கும் போதுமான, தரமான வேலை, மற்றும் வாழ்க்கை வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா நாட்டின் அடிஸ் அபாபா நகரில் இடம்பெற்ற நிகழ்வில், மனித முன்னேற்றத்திற்கு வேலை என்ற தலைப்பில், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பு (UNDP).
உலகில் 2 டாலருக்கு குறைவான ஊதியத்தில் 83 கோடிப் பேர் வாழ்கின்றனர். 7 கோடியே 40 இலட்சம் இளையோர் உட்பட 20 கோடிக்கு மேற்பட்டோர் வேலையின்றி உள்ளனர் மற்றும் 2 கோடியே 10 இலட்சம் பேர் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
ஐ.நா.வின் மனித முன்னேற்ற குறியீட்டில், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகள் மிகவும் தாழ்ந்த நிலையில் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment