Thursday, 17 December 2015

செய்திகள் - 16.12.15

செய்திகள் - 16.12.15
------------------------------------------------------------------------------------------------------

1. யூபிலியின் ஒரு நிகழ்வாக, திருத்தந்தையைச் சந்திக்கும் சிறுவர், சிறுமியர்

2. உலக அமைதி நாள் செய்தி வெளியீட்டு கூட்டத்தில் கர்தினால் டர்க்சன்

3. இரக்கத்தின் மறுபெயர் பகிர்வு - கர்தினால் தாக்லே

4. சீனாவின் Zhengding மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் கண்ட அற்புதம்

5. உஸ்பெகிஸ்தானில் புனிதக் கதவைத் திறந்து வைத்த குழந்தைகள்

6. அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்கு அனைத்தும் தயார்

7. கிறிஸ்மஸ் காலத்தில் நம்பிக்கையை பகிர்ந்துகொள்வோம்

8. வன்முறையை, உள்ளத் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும்

9. ஐ.நா.பொதுச் செயலர் தேர்தலில் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பங்கு

------------------------------------------------------------------------------------------------------

1. யூபிலியின் ஒரு நிகழ்வாக, திருத்தந்தையைச் சந்திக்கும் சிறுவர், சிறுமியர்

டிச.16,2015. துவங்கியுள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களின் முதல் நிகழ்வாக, டிசம்பர் 20, இஞ்ஞாயிறன்று, சிறுவர், சிறுமியர், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தையைச் சந்திக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோம் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத்தளங்களில் சிறுவர், சிறுமியருக்கும், இளையோருக்கும் மறைகல்வி மற்றும் ஏனைய பயிற்சிகளை அளிக்கும் பொதுநிலையினர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில், பல்லாயிரம் சிறுவர் சிறுமியர் கலந்துகொள்கின்றனர்.
ஞாயிறன்று காலை 7.30 மணியளவில் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்கு முன் அமைந்துள்ள காஸ்தல் சான் ஆஞ்செலொ எனுமிடத்திலிருந்து பவனியாகப் புறப்படும் சிறுவர் சிறுமியர், பசிலிக்காவின் புனிதக் கதவு வழியே நுழைந்து, அங்கு, கர்தினால் ஆஞ்செலொ கொமாஸ்த்ரி அவர்கள் ஆற்றும் திருப்பலியில் கலந்துகொள்வர்.
பின்னர், அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மூவேளை செப உரையில் பங்கேற்பர். அவ்வேளையில், சிறுவர் சிறுமியர் சுமந்துவரும் குழந்தை இயேசுவின் திரு உருவத்தை, திருத்தந்தை அர்ச்சிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், இளையோருக்கும், சிறுவருக்கும் தகுந்த பயிற்சிகளும், வழிகாட்டுதலும் கிடைக்கவேண்டி, இறையடியார் அர்னால்தோ கனேபா (Arnaldo Canepa) அவர்களால் உருவாக்கப்பட்ட பொதுநிலையினர் அமைப்பு, உரோம் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் பணியாற்றிவருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. உலக அமைதி நாள் செய்தி வெளியீட்டு கூட்டத்தில் கர்தினால் டர்க்சன்

டிச.16,2015. இன்றைய உலகின் மனிதர்கள், கடவுள் மட்டில் அக்கறையின்றி வாழ்வதில் துவங்கி, அடுத்தவர் மீதும், இயற்கை மீதும் அக்கறை காட்டாமல் வாழ்கின்றனர் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்திய 'உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை' என்ற சொற்றொடர் சுட்டிக்காட்டுகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சனவரி முதல் தேதி, புத்தாண்டு நாளன்று, கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடவிருக்கும் 49வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியை, திருப்பீடத்தின் நீதி அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இச்செவ்வாயன்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.
'அக்கறையின்மையைக் களைந்து, அமைதியை வெல்க' என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தி, மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வில் உருவாகும் அக்கறையின்மை, எவ்விதம் உலக அளவில் பாதிப்புக்களை உருவாக்குகின்றது என்பதை விளக்குகிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு மனிதரும் தனக்குள் தானே தன்னிறைவு என்ற உணர்வைப் பெறும்போது, அது, அவர்களை தன்னலத்தில் சிறைப்படுத்தி, ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளை மட்டுமே பெறுவதற்கும், கடமைகளை மறப்பதற்கும் தூண்டுதலாக அமைகிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் விளக்கிக் கூறினார்.
தன்னலத்தைவிட்டு மனிதர்களால் வெளியேற முடியும்  என்பதை, காலநிலை உலக உச்சி மாநாடான COP21ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 2ம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட பல்வேறு ஏடுகள் போன்றவை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன என்பதையும் திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் பயன்பாட்டினால் துன்புறுவோரின் நலவாழ்வுக்கென உருவாக்கப்பட்டுள்ள 'ஆபேல்' குழு என்ற அமைப்பையும், இத்தாலியின் 'மாபியா' கும்பலின் ஆராஜகத்திலிருந்து மக்களை விடுவிக்கும் 'லிபெரா' என்ற கழகத்தையும் உருவாக்கிய அருள்பணி Luigi Ciotti என்பவர், திருத்தந்தையின் அமைதிச் செய்தி வெளியீட்டு நிகழ்வுக்கு தன் கருத்துக்களை ஒரு கடிதம் வழியே அனுப்பியிருந்தார்.
எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் ஒதுங்கி நின்று அமைதி காப்பது உண்மையான அமைதியை வளர்க்காது என்றும், அடுத்தவரின் தேவைகளை உணர்ந்து செயல்படுவதிலேயே உண்மையான அமைதி வளரும் என்றும் திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி வலியுறுத்துகிறது என்பதை, அருள்பணி சியோத்தி அவர்களின் கடிதம் கூறியிருந்தது.
சிரியா, சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறி, உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் அஸ்தாலி மையத்தில் அடைக்கலம் புகுந்துள்ள புலம் பெயர்ந்தோரில் பலர், அமைதி நாள் செய்தி வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றனர்.

ஆதாரம் : VIS / வத்திக்கான் வானொலி

3. இரக்கத்தின் மறுபெயர் பகிர்வு - கர்தினால் தாக்லே

டிச.16,2015. இரக்கத்தின் மறுபெயர் பகிர்வு என்றும், இறைவனின் திட்டத்தில் அனைவரும் சமமான வளங்களைப் பெறவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதே, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுக் கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
வத்திக்கானிலிருந்து வெளியிடப்படும் ஒரு வலைதளத்திற்கு கர்தினால் தாக்லே அவர்கள் வழங்கிய ஒரு பேட்டியில், இரக்கம் என்பது, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, குறிப்பாக, இஸ்லாமியருக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ள சொல் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் வாழும் இஸ்லாமியர், இன்னும் தங்கள் நாட்டுடன் முழுமையாக இணையமுடியாமல் இருப்பது, இந்த யூபிலி ஆண்டில் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் உள்ள ஒரு சவாலானச் சூழல் என்பதை, கர்தினால் தாக்லே அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவ இஸ்லாமிய உறவை வளர்க்க, முப்பது ஆண்டுகளுக்கு முன் சில்சிலா (Silsilah) என்ற இயக்கத்தை ஆரம்பித்த அருள்பணி Sebastiano D'Ambra அவர்கள், ஒரே கடவுளை வழிபடும் ஆபிரகாமின் பிள்ளைகளாகிய கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இன்னும் இணைந்து வாழ்வதற்கு இந்த யூபிலி ஆண்டு ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. சீனாவின் Zhengding மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் கண்ட அற்புதம்

டிச.16,2015. "இது ஓர் அற்புதம்! விண்ணகத்திலிருந்து வந்த ஒரு பாதுகாப்பு இது!" என்று சீனாவின் Zhengding மறைமாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் கூறினர்.
சீனாவின் Zhengding, Lingshou, Beijing, Baoding ஆகிய பகுதிகளிலிருந்து கூடியிருந்த 10,000த்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களின் முன்னிலையில், கடந்த ஞாயிறன்று Zhengding பேராலயத்தின் புனிதக்  கதவை, ஆயர் Julius Jia Zhiguo அவர்கள் திறந்து வைத்தார்.
சீன அரசால் அங்கீகரிக்கபடாத ஆயர் Zhiguo அவர்கள் இந்த வழிபாட்டை துணிவுடன் தலைமையேற்று நடத்தியதையும், அதில் பங்கேற்ற விசுவாசிகள் எவ்வித அடக்குமுறைக்கும் உள்ளாகாமல் இருந்ததையும் ஓர் அற்புதம் என்று கிறிஸ்தவர்கள் கூறினர்.
ஞாயிறன்று நடைபெற்ற இந்த வழிபாடும், திருப்பலியும் சீன காவல்துறை வீரர்கள் கண்காணிப்பில் நடந்தபோதும், அவர்களால் எவ்வித இடையூறும் நிகழவில்லை என்று ஆசிய செய்தி கூறுகிறது.
ஞாயிறு காலை 8.30 மணியளவில் ஒரு திருப்பவனியுடன் துவங்கிய இந்த வழிபாட்டு நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இரக்கத்தின் முகம்' என்ற ஆவணத்தின் ஒரு சில பகுதிகள் வாசிக்கப்பட்டன என்றும், அதைத் தொடர்ந்து புனிதக் கதவு திறப்பு, மற்றும் திருப்பலி, 12.30 மணி வரை நீடித்தன என்றும் ஆசியச் செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

5. உஸ்பெகிஸ்தானில் புனிதக் கதவைத் திறந்து வைத்த குழந்தைகள்

டிச.16,2015. உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) நாட்டின் தலைநகரான டாஷ்கென்ட்டில் (Tashkent), திரு இருதயப் பேராலயத்தின் புனிதக் கதவை, இஞ்ஞாயிறன்று குழந்தைகள் திறந்து வைத்தனர் என்று, அந்நாட்டின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Jerzy Maculewicz அவர்கள், ஆசிய செய்தியிடம் தெரிவித்தார்.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் துவக்க நிகழ்வாக நடைபெற்ற புனிதக் கதவு திறப்பை சிறுவர், சிறுமியர் செய்தனர் என்றும், திறக்கப்பட்ட கதவின் வழியே தான் ஒரு விவிலியத்தைச் சுமந்துகொண்டு நுழைந்ததாகவும் ஆயர் Maculewicz அவர்கள் கூறினார்.
இஸ்லாமியரைப் பெரும்பான்மையாகக் கொண்ட  உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) நாட்டில், அவர்களுடன் நல்லுறவுடன் வாழ்வதே இந்த புனித ஆண்டின் முக்கியப் பணி என்று ஆயர் Maculewicz அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
ஒருவரின் உள்ளத்தையே இறைவன் காண்கிறார் எனபதால், மதத்தின் அடிப்படையில் அல்லாமல், மனிதத்தின் அடிப்படையில் அனைவரோடும் நல்லுறவு கொள்வது கிறிஸ்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்று ஆயர் வலியுறுத்தினார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் டாஷ்கென்ட் பேராலயத்திற்கு வரமுடியாது என்பதால், இறைவனின் இரக்கம் அவர்களைத் தேடி ஒவ்வொரு பங்குக் கோவிலுக்கும் செல்லும் என்பதே, நாங்கள் வகுத்திருக்கும் திட்டம் என்று ஆயர் Maculewicz அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்கு அனைத்தும் தயார்

டிச.16,2015. வருகிற சனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி முடிய பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு (Cebu) நகரில் நடைபெறவிருக்கும் அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன என்று செபு பேராயர் ஹோசே பால்மா (Jose Palma) அவர்கள் செய்தியாளர்களிடம் இத்திங்களன்று அறிவித்தார்.
"உங்களில் கிறிஸ்து, நமது மகத்துவத்தின் நம்பிக்கை" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டின் தாக்கம், கத்தோலிக்கத் திருஅவையையும் தாண்டி மற்றவர்களைச் சென்றடையும் என்று தான் நம்புவதாக, பிலிப்பின்ஸ் பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து 10,000த்திற்கும் அதிகமானோர் வருவர் என்று எதிர்பார்ப்பதாகவும், ஏற்கனவே, 8,500க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர் என்றும், செபு துணை ஆயர், Dennis Villarojo அவர்கள் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், திருத்தந்தையின் சார்பில், மியான்மார் கர்தினால் Charles Maung Bo அவர்கள் கலந்துகொள்வார் என்றும், இவரைத் தவிர, மும்பைக் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ், நியூ யார்க் கர்தினால் டிமொத்தி டோலன்  ஆகியோரும் கலந்துகொள்வர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

7. கிறிஸ்மஸ் காலத்தில் நம்பிக்கையை பகிர்ந்துகொள்வோம்

டிச.16,2015. பொதுவாக, மகிழ்வு, அமைதி என்ற உணர்வுகளை கிறிஸ்மஸ் வாழ்த்துக்களாகப் பகிர்ந்துகொள்ளும் நாம், இம்முறை, நம்பிக்கை என்ற உணர்வை இந்த கிறிஸ்மஸ் காலத்தில் அதிகம் பகிர்ந்துகொள்வோம் என்று அயர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.
அயர்லாந்து கத்தோலிக்க ஆயர்களின் முதுபெரும் தந்தை, ஈமோன் மார்ட்டின் அவர்களும், அனைத்து அயர்லாந்து திருஅவையின் தலைவர், ரிச்சர்ட் கிளார்க் அவர்களும், 2015ம் ஆண்டுக்கென சிறப்பு கிறிஸ்மஸ் செய்தியை, இணைந்து வெளியிட்டுள்ளனர்.
'நம்பிக்கையை நம்மிடமிருந்து யாரும் திருடிவிட அனுமதிக்கக் கூடாது' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், 'இருளிலும் ஒளியைக் காணும் திறமை நம்பிக்கைக்கு உள்ளது' என்று, நொபெல் அமைதி விருது பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களும் கூறிய கருத்துக்களை, அயர்லாந்து ஆயர்கள் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
நம்பிக்கை என்ற உணர்வை, நாம் ஒவ்வொருவரும் தனியே பெறவேண்டும் என்று வாழ்த்துவதைவிட, மனிதகுலம் முழுமையும் இந்த உணர்வைப் பெறவேண்டும் என்று வாழ்த்துவதும், வேண்டுவதும் கிறிஸ்மஸ் காலத்திற்கு மிகவும் தேவை என்பதை ஆயர்களின் ஒருங்கிணைந்த கிறிஸ்மஸ் செய்தி வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. வன்முறையை, உள்ளத் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும்

டிச.16,2015. கிறிஸ்து பிறப்பின் வழியே இவ்வுலகிற்கு அறிவிக்கப்பட்ட அமைதி, முன்னெப்போதும் இல்லாத அளவு, உறுதியாக, அழுத்தமாக இவ்வுலகிற்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஜோசப் கர்ட்ஸ் (Joseph Kurtz) அவர்கள் கூறினார்.
அமெரிக்காவின் சான் பெர்னடினோ, மற்றும் கொலராடோ ஸ்ப்ரிங்க்ஸ் என்ற இரு இடங்களில் நடைபெற்ற வன்முறைகளின் பின்னணியில், பேராயர் கர்ட்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், வன்முறையையும், வெறுப்பையும் உள்ளத் துணிவுடனும், உறுதியுடனும் எதிர்கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.
அர்த்தமற்ற, மதியற்ற வன்முறைகள் இறைவன் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை, தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் கர்ட்ஸ் அவர்கள், எக்காரணம் கொண்டும், இந்த வன்முறைகளை இறைவன் பெயரால் நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
ஒரு சிலரது மதியற்றச் செயல்களால், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவரையும் கண்டனம் செய்வதும், அவர்களது வருகையைத் தடுப்பதும், கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல என்பதை, அமெரிக்க ஆயர்கள் சார்பில் தான் வலியுறுத்த விழைவதாக, பேராயர் கர்ட்ஸ் அவர்கள் இவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி

9. ஐ.நா.பொதுச் செயலர் தேர்தலில் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பங்கு

டிச.16,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அடுத்த பொதுச் செயலர் தேர்தலை வெளிப்படையானதாகவும், இயன்றவரை எல்லாரையும் இணைக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகவும் நடத்தும் நோக்கத்தில், அத்தேர்தலில் முதன்முறையாக, ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளும் முழுமையாய் இணைக்கப்படும் என்று ஐ.நா. பொது அவைத் தலைவர் Mogens Lykketoft  அவர்கள் அறிவித்துள்ளார்.
அடுத்த பொதுச் செயலர் தேர்தல் குறித்து, ஐ.நா. பாதுகாப்பு அவைத் தலைவரும் தானும் இணைந்து அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம் குறித்து  இச்செவ்வாயன்று நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்த  Lykketoft  அவர்கள் இதனை அறிவித்தார்.
ஐ.நா. பொதுச் செயலர் தேர்தல் நடைமுறையில் இருக்கவேண்டிய ஒளிவுமறைவற்ற தன்மையை விளக்கியுள்ள அக்கடிதம், ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு, ஆண் வேட்பாளர்கள் தவிர, பெண் வேட்பாளர்களையும் பரிந்துரைக்குமாறு அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
2016ம் ஆண்டு ஜூலை இறுதியில் ஐ.நா. பாதுகாப்பு அவை வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு முன்னர், உறுப்பு நாடுகள் வேட்பாளர்களைப் பரிந்துரைக்குமாறும் அக்கடிதம் கேட்டுள்ளது என்று கூறினார் Lykketoft.
ஐ.நா. அரசியல் அமைப்பின்படி, ஐ.நா. பொதுச் செயலர், ஐ.நா. பாதுகாப்பு அவையின் பரிந்துரையின்படி ஐ.நா. பொது அவைத் தேர்ந்தெடுக்கும். அடுத்த புதிய பொதுச் செயலர் 2017ம் ஆண்டு சனவரியில் பதவியேற்பார். 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...