Thursday, 17 December 2015

செய்திகள்-17.12.15

செய்திகள்-17.12.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - அக்கறையின்மை என்ற நோயைத் தடுப்பது பெரும் சவால்

2. கத்தோலிக்க இயக்கம் அமைப்பின் இளையோருடன் திருத்தந்தை

3. திருத்தந்தைக்கு இத்தாலிய அரசுத்தலைவரின் பிறந்தநாள் வாழ்த்து

4. திருத்தந்தைக்கு 'இரக்கம்' ஒரு சொல் அல்ல, அதுவே அவரது குணம்

5. கிறிஸ்தவர்களே அதிக வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர் - கனடா மதத் தலைவர்கள்

6. இலங்கையின் அன்னை மரியா பசிலிக்கா புனிதக் கதவு திறப்பு

7. இயேசு பிறந்து வளர்ந்த புனித பூமி, வன்முறை வலையில் சிக்கித் தவிக்கிறது

8. ஏரோதின் கொலைவெறியிலிருந்து தப்பித்த குழந்தை - ஹாலந்து ஆயர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - அக்கறையின்மை என்ற நோயைத் தடுப்பது பெரும் சவால்

டிச.17,2015. உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை என்ற குறைபாட்டை நீக்கி, ஒருங்கிணைந்த முயற்சி என்ற கலாச்சாரத்தை வளர்ப்பது உலக நாடுகளின் அவசியத் தேவையாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கானுடன் தூதரக உறவுகளை மேற்கொள்ள இந்தியா, பஹ்ரெயின், கினி, லாத்வியா ஆகிய நாடுகளிலிருந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  தூதர்களை இவ்வியாழன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு தன் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் கூறிய வேளையில் இவ்வாறு பேசினார்.
'அக்கறையின்மையைக் களைந்து, அமைதியை வெல்க' என்ற தலைப்பில் இரு நாள்களுக்கு முன்னர் தான் வெளியிட்ட உலக அமைதி நாள் செய்தியைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, உலகின் அனைத்து நிலைகளிலும் விரைவாகப் பரவிவரும் அக்கறையின்மை என்ற நோயைத் தடுப்பது நாம் சந்திக்கும் பெரும் சவால் என்று எடுத்துரைத்தார்.
கடவுள்மட்டில் அக்கறையின்மை என்பதில் துவங்கும் நமது பிரச்சனை, அடுத்தவர்  மீதும்,சுற்றுச்சூழல் மீதும் அக்கறையின்மை என்பதில் தொடர்கிறது என்று கூறியத் திருத்தந்தை, கடவுளை  விலகுவதால், மனிதர்கள் தங்களையே இறைவனுக்குரிய இடத்தில் வைத்து, வழிபடும் ஆபத்திற்கு உள்ளாகிறோம் என்று திருத்தந்தை தன் உரையில் எச்சரிக்கை விடுத்தார்.
உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மையைக் களைவதற்கு, இரக்கத்தின் யூபிலி ஆண்டில் கத்தோலிக்கத் திருஅவை, மன்னிப்பு, ஒப்புரவு, பிறரன்புப் பணிகள் என்ற மாற்று வழிகளை வலியுறுத்த விழைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டுத் தூதர்களிடம் விளக்கிக் கூறினார்.
ஏறத்தாழ 45 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், இந்தியத் தூதரான திருமதி ஸ்மிதா புருஷோத்தம் (Smita Purushottam)  உட்பட, பஹ்ரெயின், கினி, லாத்வியா ஆகிய நாடுகளின் தூதர்கள், திருத்தந்தையை, ஒவ்வொருவராகச் சந்தித்து, தங்கள் நம்பிக்கைச் சான்றிதழ்களை வழங்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கத்தோலிக்க இயக்கம் அமைப்பின் இளையோருடன் திருத்தந்தை

டிச.17,2015. கிறிஸ்மஸ் நெருங்கிவரும் வேளையில் உங்களைப் போன்ற இளையோரைச் சந்தித்து, வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வது மகிழ்வைத் தருகிறது என்று திருத்தந்தை அவர்கள், இவ்வியாழன் காலை ஓர் இளையோர் குழுவிடம் கூறினார்.
கத்தோலிக்க இயக்கம் (Catholic Action) என்ற அமைப்பைச் சார்ந்த 60 இளையோரை, இவ்வியாழன் காலையில் வத்திக்கான் இல்லத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தன் பிறந்தநாளுக்கென அவர்கள் தந்த கேக்கிற்காக நன்றி கூறியதோடு, அவ்விளையோர் வழியே, இத்தாலியில் உள்ள அனைத்து கத்தோலிக்க இளையோருடனும் தன் கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் கூறினார்.
'உம்மை நோக்கி பயணிக்க' என்ற சொற்களை, வருகிற ஆண்டின் விருதுவாக்காக கத்தோலிக்க இயக்கம் தேர்ந்துள்ளது குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட திருத்தந்தை, ஆண்டவரை நோக்கிச் செல்லும் பாதையில், பழிக்குப் பழி என்ற உணர்வுக்குப் பதில், மன்னிப்பு இருக்கும் என்றும், தன்னலத்திற்குப் பதில், கூட்டுறவு முயற்சி இருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்யும் புதிய முயற்சியை, ஆக்ரிஜெந்தோ (Agrigento) மறைமாவட்டத்தில் துவங்கியுள்ளது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் தங்கள் நட்பினாலும், செபங்களாலும் இம்மக்களுக்கு செய்யும் உதவிகளோடு, சிறு சிறு தியாகங்களையும் செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கடந்த புதன் மறைகல்வி உரை சந்திப்பின்போது, படகில் பிறந்த ஒரு குழந்தையுடன், அதன் பெற்றோர் தன்னைச் சந்தித்தனர் என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, எத்தனையோ குழந்தைகள் பிறக்கவழியின்றி இறப்பதையும், நல்லமுறையில் வளர முடியாமல் துன்புறுவதையும் இளையோர் சிந்தித்துப்  பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இத்தாலிய கத்தோலிக்க இயக்கம் ஆற்றிவரும்  பணிகள், குறிப்பாக, கல்வித் துறையில் இவ்வமைப்பினர் ஆற்றி வரும் பணிகள் போற்றுதற்குரியன என்று தன் உரையில் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்கியதோடு, தனக்காக இளையோர் செபிக்க மறக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தைக்கு இத்தாலிய அரசுத்தலைவரின் பிறந்தநாள் வாழ்த்து

டிச.17,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது இத்தாலிய மக்கள் கொண்டுள்ள மதிப்பு, மிகவும் உண்மையானது மற்றும் ஆழமானது என்றும், அம்மக்கள் சார்பாக தான் திருத்தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வழகுவதாகவும் இத்தாலிய அரசுத்தலைவர், Sergio Mattarella அவர்கள் கூறியுள்ளார்.
டிசம்பர் 17, இவ்வியாழனன்று தன் 79வது பிறந்தநாளைக் கொண்டாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இத்தாலிய அரசுத் தலைவர் Mattarella அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இறைவன், திருத்தந்தைக்கு நல்ல உடல்நலத்தை வழங்கவேண்டுமென வாழ்த்தியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணத்திலும் அவர் கூறும் கருத்துக்களை இத்தாலிய மக்களும் கவனத்துடன் செவிமடுக்கின்றனர் என்றும், நலிவுற்ற சமுதாயத்தின் சார்பில், திருத்தந்தை விடுக்கும் விண்ணப்பங்கள், ஒவ்வொருவரது இதயத்தையும் தொடுகின்றன என்றும், அரசுத் தலைவர், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், UNITALSI எனப்படும் பிறரன்பு அமைப்பினரின் உதவியுடன் குழந்தை இயேசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று, குணமடைந்துள்ள குழந்தைகளும், அவர்களது குடும்பத்தினரும் இணைந்து, திருத்தந்தைக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களை, ஒரு காணொளி செய்திவடிவில் அனுப்பியுள்ளனர்.
இதேவண்ணம், இத்தாலியில் இயங்கிவரும் பல்வேறு தொழில் அமைப்புக்களும் பிறரன்பு நிறுவனங்களும் திருத்தந்தை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தைக்கு 'இரக்கம்' ஒரு சொல் அல்ல, அதுவே அவரது குணம்

டிச.17,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள தலைமைப் பொறுப்பை முழுமையான அர்ப்பண உணர்வுடன் செய்து வருவதால், அவருக்கு நல்ல உடல் நலத்தைத் தருவதற்கு, அன்னை மரியாவின் பரிந்துரையை நாம் வேண்டுவோம் என்று புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தின் தலைமைப் பணியாளர், கர்தினால் Santos Abril y Castelló அவர்கள் கூறினார்.
டிசம்பர் 17, இவ்வியாழனன்று, தன் 80வது வயதில் அடியெடுத்து வைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், செபங்களையும் வழங்கும் வண்ணம், கர்தினால் ஆப்ரில் அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மரியன்னை மீது ஆழ்ந்த பற்றுகொண்டவர் என்பதை, தான் ஆர்ஜென்டீனா நாட்டில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே கண்டு வருவதாகக் கூறிய கர்தினால் ஆப்ரில் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பொறுப்பேற்றபின், புனித மேரி மேஜர் பசிலிக்காவிற்கு 28 முறை சென்றுள்ளார் என்பதே, 'உரோமைய மக்களின் காவலர்' என்றழைக்கப்படும் அன்னை மரியாவின் மீது அவர் கொண்டுள்ள சிறப்பான பக்தியை அறிக்கையிடுகிறது என்று தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி பற்றி கேள்வி எழுந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பொருத்தவரை, 'இரக்கம்' என்பது, ஒரு சொல் மட்டும் அல்ல, அதுவே அவரது குணமாக, செயல்களாக வெளிப்படுவதைக் காணலாம் என்று கர்தினால் ஆப்ரில் அவர்கள் எடுத்துரைத்தார்.
திருஅவையில் துவங்கப்பட்டுள்ள மாற்றங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட விருப்பம்  மட்டுமல்ல, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வத்திக்கானுக்கு வருகை தந்த கர்தினால்கள், 'கான்கிளேவ்' அவை கூடுவதற்கு முன், இந்த மாற்றங்கள் குறித்து தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர் என்று கர்தினால் ஆப்ரில் அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை துவங்கியுள்ள பணியில் அவர் முழுவீச்சில் செயலாற்ற, தூய ஆவியாரின் வழிநடத்துதல் வேண்டும் என்பதும், மரியன்னையின் பாதுக்காப்பு அவருக்கு என்றும் இருக்கவேண்டும் என்பதும், அவரது பிறந்தநாளன்று நமது செபமாக இருக்கவேண்டும் என்று, கர்தினால் ஆப்ரில் அவர்கள் தன் பேட்டியின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கிறிஸ்தவர்களே அதிக வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர் - கனடா மதத் தலைவர்கள்

டிச.17,2015. மதம் மற்றும் இனம் என்ற அடிப்படையில் உலகின் பல நாடுகளில் வேறுபாட்டு உணர்வுகள் நிலவுகின்றன என்பதை உணரும் வேளையில், கிறிஸ்தவர்கள், தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் உலகின் பல நாடுகளில் அதிகமான வன்முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை வருத்தத்துடன் நினைவு கூறுகிறோம் என்று, கனடா நாட்டு மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கனடா நாட்டு ஆயர்கள், அந்நாட்டின் கிறிஸ்தவ மற்றும் யூத மதத் தலைவர்களுடன் இணைந்து, கனடா அரசின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மடலில், மத்தியக் கிழக்கு, மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் வன்முறைகளைத் தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளனர்.
மனித உரிமை ஆர்வலர்களின் பல்வேறு அமைப்புக்கள், 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கைகளின்படி, உலகில் 2 கோடியே 30 இலட்சம் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருநாளும் மரண அச்சுறுத்தல்களுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளாகின்றனர் என்பதையும், வேறு நாடுகளில், 3 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேறுபல அநீதிகளைச் சந்தித்து வருகின்றனர் என்பதையும், மதத் தலைவர்களின் விண்ணப்பம் சுட்டிக்காட்டுகிறது.
2014ம் ஆண்டு வெளியான பல்வேறு ஆய்வுகளின்படி, உலகில் கிறிஸ்தவர்களே மதத்தின் அடிப்படையில் துன்பங்களைச் சந்திக்கும் மிகப்பெரும் சமுதாயம் என்பதையும் மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டி, இக்கொடுமைகளுக்கு தீர்வு காணும் கடமை, கனடா நாட்டிற்கு உண்டு என்று கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இலங்கையின் அன்னை மரியா பசிலிக்கா புனிதக் கதவு திறப்பு

டிச.17,2015. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, கத்தோலிக்கப் பள்ளிகளில் மறைகல்வி, மற்றும் நன்னெறி கல்வியில் மறுமலர்ச்சியைக் கொணரவும், நல்ல மனசாட்சியை வளர்க்கும் வழிகளை இளையோருக்குக் கற்றுத்தரவும் இலங்கைத் தலத்திருஅவை திட்டங்கள் வகுத்துள்ளன என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புனித லூசியா பேராலயத்தில் டிசம்பர் 8ம் தேதியன்று கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், புனிதக் கதவைத் திறந்தார் என்றும், கொழும்புவின் வட பகுதியில் Tewatteயில் அமைந்துள்ள முக்கியத் திருத்தலமான இலங்கையின் அன்னை மரியா பசிலிக்காவின் புனிதக் கதவு, டிசம்பர் 12ம் தேதி திறக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னை மரியா பசிலிக்காவின் புனிதக் கதவு, 2016ம் ஆண்டு முழுவதும், காலை 6 மணிமுதல் மாலை 8 மணிவரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு புனிதத் தலங்களுக்கும், இன்னும் அயல்நாடுகளில் உள்ள புனிதத் தலங்களுக்கும் திருப்பயணம் மேற்கொள்வதற்கு விசுவாசிகளுக்கு ஊக்கமும், ஆதரவும் வழங்கப்படும் என்பதையும் தலத்திருஅவை தன் திட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7. இயேசு பிறந்து வளர்ந்த புனித பூமி, வன்முறை வலையில் சிக்கித் தவிக்கிறது

டிச.17,2015. மூன்றாம் உலகப் போர் சிறு, சிறு துண்டுகளாக இவ்வுலகில் நடைபெற்று வருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ள வார்த்தைகளை நாம் மத்தியக் கிழக்குப் பகுதியின் பல நாடுகளில் கண்டுவருகிறோம் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, Fouad Twal அவர்கள் தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.
இயேசு பிறந்து வளர்ந்து வாழ்ந்த புனித பூமி, இந்த வன்முறை வலையில் சிக்கித் தவிக்கிறது என்று இச்செய்தியில் கூறியுள்ள முதுபெரும் தந்தை Twal அவர்கள், இந்த வன்முறைக்கு, இஸ்ரேல், பாலஸ்தீன நாட்டுத் தலைவர்கள் பெரும் பங்கு பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளில் நிகழும் போர்களுக்கு, ஆயுதங்களை உருவாக்கும் பெரும் நிறுவனங்களும், விற்பனை செய்யும் தரகர்களுமே முக்கிய காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் முதுபெரும் தந்தை, ஆயுதத் தாக்குதல்களுக்கு, இன்னும் சக்தி வாய்ந்த ஆயுத தாக்குதல்கள் தீர்வைக் கொணராது என்றும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
திருத்தந்தை அறிவித்துள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டில், திருத்தலங்களைத் தேடிச் செல்லும் விசுவாசிகள், புனித பூமிக்கும் வந்து, அங்கு வாழ்வோரின் துன்பங்களில் பங்கேற்க வேண்டும் என்று முதுபெரும் தந்தை விண்ணப்பித்துள்ளார்.
இவ்வுலகம் இன்னும் துன்பத்தால் சூழப்பட்டிருப்பதால், நமது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மிக எளிமையான, மிதமான வகையில் அமையவேண்டும் என்று கூறும் முதுபெரும் தந்தை Twal அவர்கள், துன்புறும் மக்களோடு நமது ஒருங்கிணைப்பைக் காட்ட, கிறிஸ்மஸ் திருப்பலியின்போது சிறப்பு செபங்கள் எழுப்பப்படவேண்டும் என்றும், அனைத்து பங்குகளிலும் கிறிஸ்மஸ் அலங்கார விளக்குகளை ஒருசேர 5 நிமிடங்கள் அணைத்து வைக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. ஏரோதின் கொலைவெறியிலிருந்து தப்பித்த குழந்தை - ஹாலந்து ஆயர்கள்

டிச.17,2015. ஏரோதின் கொலைவெறி நிறைந்த கரங்களிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு குழந்தை வேறொரு நாட்டிற்கு தப்பித்துச் செல்ல வேண்டியிருந்தது என்ற வார்த்தைகள் அடங்கிய மடல் ஒன்றை, ஹாலந்து நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
வன்முறைகளின் காரணமாக, சொந்த நாடுகளை விட்டு வெளியேறியுள்ள புலம் பெயர்ந்தோரில், குழந்தை இயேசுவைத் தூக்கிக் கொண்டு தப்பித்து ஓடிய மரியாவையும், யோசேப்புவையும் நாம் காண முயல்வோம் என்று ஹாலந்து ஆயர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் மடல் கூறியுள்ளது.
இரக்கத்தின் யூபிலியை பொருளுள்ள வகையில் கொண்டாட, புலம் பெயர்ந்தோர் நமக்கு ஒரு வாய்ப்பையும், பொறுப்பையும் வழங்கியுள்ளனர் என்று ஆயர்களின் மடல் வலியுறுத்துகிறது.
புலம்பெயர்ந்தொரைக் குறித்து தவறான முற்சார்பு எண்ணங்கள் கொண்டிருப்பதை விடுத்து, அவர்களை மனிதர்கள் என்ற நிலையில் வரவேற்று புகலிடம் கொடுக்க இந்த கிறிஸ்மஸ் காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று ஹாலந்து ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...