Friday, 18 December 2015

செய்திகள்-18.12.15

செய்திகள்-18.12.15
------------------------------------------------------------------------------------------------------

1. அருளாளர் அன்னை தெரேசாவின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஏற்பு

2. அருளாளர் அன்னை தெரேசா குறித்த செய்தி கிறிஸ்மஸ் கொடை

3. கிறிஸ்மஸ் குடில், மரம் நன்கொடையாளர்களுக்கு திருத்தந்தை நன்றி

4. கொலம்பிய ஒப்பந்தம் குறித்து, திருஅவை, ஐ.நா. நம்பிக்கை

5. இக்கால உலகின் சவால்கள் கிறிஸ்தவர்களுக்கு ஓர் எச்சரிக்கை, பாகிஸ்தான் ஆயர்

6. பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய அளவில் செயல்திட்டம் அவசியம்

7. திருமதி ஸ்டெயின்ஸ்க்கு அன்னை தெரேசா நினைவு விருது

8. போர்ப் பகுதிகளில் ஒவ்வோர் இரண்டு நொடிக்கும் ஒரு குழந்தை பிறப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. அருளாளர் அன்னை தெரேசாவின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஏற்பு

டிச.18,2015. இந்தியாவின் கொல்கத்தாவில் பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபைகளைத் தொடங்கிய அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட புனிதர் நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள் இவ்வியாழன் மாலையில் திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து அருளாளர் அன்னை தெரேசா பரிந்துரையால் நடந்த புதுமை மற்றும் மூன்று இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு பற்றிய விபரங்களைச் சமர்ப்பித்தார்.
1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அல்பேனியா நாட்டின் செகாப்ஜியில் பிறந்த Agnes Gonxha Bojaxhiu, தனது 18வது வயதில் 1928ம் ஆண்டில் லொரேத்தோ அருள்சகோதரிகள் சபையில் சேர்ந்தார். 1929ம் ஆண்டில் இந்தியா வந்து, 1931ம் ஆண்டில் லொரேத்தோ சபையில் துறவு பயிற்சியை முடித்து தெரேசா என்ற புதிய பெயரை ஏற்றார்.  லொரேத்தோ சபை பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய அருள்சகோதரி தெரேசா, 1947ம் ஆண்டில் அச்சபையை விட்டு விலகி, 1950ம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறரன்பு மறைப்பணியாளர் சபையை ஆரம்பித்தார். 1979ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள அன்னை தெரேசா, தனது 87வது வயதில் 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி கொல்கத்தாவில் இறைபதம் அடைந்தார். 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார் அன்னை தெரேசா. இவரின் பரிந்துரையால் நடந்த புதுமை ஒன்றை டிசம்பர் 17, இவ்வியாழனன்று ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அருளாளர் அன்னை தெரேசாவை புனிதர் என்று அறிவிக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.  
மேலும், இயேசுவின் திருஇதய கொம்போனி மறைப்பணியாளர்கள் சபையின் அருள்பணியாளர் Giuseppe Ambrosoli(1923,ஜூலை,25-1987,மார்ச்,27), கிறிஸ்தவப் பள்ளிகள் சகோதரர்கள் சபையின் அருள்சகோதரர் Leonardo Lanzuela Martínez(1894,நவ.8-1976,மார்ச்,14), பொதுநிலையாளர் Enrico Hahn(1800,ஆக.29-1882,மார்ச்11) ஆகிய மூன்று இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு பற்றிய விபரங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. அருளாளர் அன்னை தெரேசா குறித்த செய்தி கிறிஸ்மஸ் கொடை

டிச.18,2015. அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளது, ஓர் உண்மையான கிறிஸ்மஸ் கொடை என்று கூறினார் கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா.
இது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள், கொல்கத்தா நகரம் இந்நாளுக்காகக் காத்திருந்ததாகவும், இது குறித்து அனைவரும் மிகவும் மகிழ்வதாகவும் தெரிவித்தார்.
அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆயினும், இந்த அங்கீகரிப்புக்காக, நன்றித் திருப்பலி நிறைவேற்றவிருப்பதாகவும் தெரிவித்தார் பேராயர் தாமஸ் டி சூசா.
மேலும், அன்னை தெரேசா சபையினர், அன்னை தெரேசாவை புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த கொல்கத்தா முன்னாள் பேராயர் ஹென்ரி டி சூசா உட்பட பலரும் தங்கள் மகிழ்வை வெளியிட்டுள்ளனர்.
2008ம் ஆண்டில் எந்த மருத்துவ சிகிச்சைகளும் பலன்தராமல் கோமா நிலையில் இறந்து கொண்டிருந்த பிரேசில் நாட்டு பொறியியலாளர் ஒருவரின் மனைவி, அருளாளர் அன்னை தெரேசாவிடம் தொடர்ந்து செபித்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
மூளையில் நோய்க் கிருமிகள் பாதிப்பால் கோமா நிலையில் இறந்துகொண்டிருந்த   அந்தப் பொறியியலாளரை 2008ம் ஆண்டி டிசம்பர் 9ம் தேதி மாலை 6.10 மணிக்கு சக்கர நாற்காலியில் அவசர அறுவைச் சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றனர். அதேநேரம் அவரின் மனைவி ஆலயம் சென்று அருளாளர் அன்னை தெரேசாவிடம் செபித்துக்கொண்டிருந்தார். ஆனால் அன்று மாலை 6.40 மணிக்கு அறுவை சிகிச்சை அறையிலிருந்து திரும்பி வந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர், அந்த நோயாளி எவ்வித வேதனையும் இன்றி நல்ல விழிப்புநிலையில் உள்ளார் என்று அறிவித்தார். அடுத்த நாள் காலையில் அவர் எவ்வித தலைவலியும் இன்றி முற்றிலும் நலமான நிலையில் இருந்தார். அதே ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி மருத்துவர்கள் குழு இந்தப் புதுமைக்கு ஒரே மனதாகச் சான்றிதழ் கொடுத்தது. 42 வயது நிரம்பிய அந்தப் பொறியியலாளர் தற்போது முழுமையாய்க் குணமடைந்து தொழில்நுட்ப பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி

3. கிறிஸ்மஸ் குடில், மரம் நன்கொடையாளர்களுக்கு திருத்தந்தை நன்றி
டிச.18,2015. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில் மற்றும் கிறிஸ்மஸ் மரம் நன்கொடையாளர்களை இவ்வெள்ளி நண்பகலில், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்மஸ் மரத்தை வழங்கிய, ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் Hirschau, Schnaittenbach மற்றும் Freudenberg நகராட்சி அதிகாரிகள், இன்னும், கிறிஸ்மஸ் குடிலை வழங்கியுள்ள, இத்தாலியின் Trento மாநிலப் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதிகளின் மக்களுக்கு தனது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் தமது மாபெரும் இரக்கத்தினால், நம் மத்தியில் வந்து நம்மோடு என்றென்றும் வாழ்கிறார் என்பதை கிறிஸ்மஸ் குடில் நினைவுபடுத்துகின்றது என்றும், கடவுள் கட்டாயத்தினால் நம் மத்தியில் வரவில்லை, ஆனால், நம்மை மீட்பதற்காக மாபெரும் அற்புதம் நிகழ்த்தி வரலாற்றை மாற்றினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடிலின்முன் நின்று நாம் தியானிக்க வேண்டும், ஏனெனில், அங்கு கடவுளின் கனிவு நம்மோடு பேசுகின்றது, நமக்காக மனித உரு எடுத்த கடவுளின் இரக்கத்தை அக்குடிலில் தியானிக்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
இன்று மாலையில் ஒளியேற்றப்படும் 32 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸின் உண்மையான ஒளியில் தங்கள் வாழ்வை ஒளியேற்ற மக்களைக் கவர்ந்திழுக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை,  தனக்காக மறக்காமல் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 
மேலும், இவ்வெள்ளி மாலையில் உரோம் நகரின் மத்திய இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள காரித்தாஸ் மையம் சென்று யூபிலி ஆண்டின் புனிதக் கதவைத் திறப்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்நாளைய நிகழ்வாகும்.
கிறிஸ்மஸ் குடிலையும், அதிலுள்ள குடில் உருவங்களையும், Tesero நண்பர்களின் குழுவின் ஒத்துழைப்போடு Trento உயர்மறைமாவட்டம் வழங்கியுள்ளது. இக்குடிலுள்ள 24 உருவங்கள், Trento பகுதியின் கலாச்சாரங்களையும், ஆடைகளையும் வெளிப்படுத்தும் முறையில் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கொலம்பிய ஒப்பந்தம் குறித்து, திருஅவை, ஐ.நா. நம்பிக்கை

டிச.18,2015. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக் குழுவுக்குமிடையே இவ்வாரத்தில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம், அந்நாட்டின் இறுதி அமைதி ஒப்பந்தத்திற்கு முன்னோடியாக அமைந்துள்ளது என்று அந்நாட்டுப் பேராயர் ஒருவர் கூறினார்.
இந்த ஒப்பந்தம் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த கொலம்பிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Luis Augusto Castro Quiroga அவர்கள், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளை உணர்ந்துள்ள குடிமக்கள் இதனை முக்கியமானதாக நோக்குகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த செவ்வாயன்று கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா. அதிகாரிகள், கொலம்பியாவில் 51 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுச் சண்டையில் பல்வேறு வன்முறைகளில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் நிலை உணரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை போன்ற கடும் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது இந்த ஒப்பந்தத்தில் அகற்றப்பட்டுள்ளது என்றும் ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொலம்பியாவில் கடந்த 51 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் கடந்த இரு ஆண்டுகளாக அரசுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக் குழுவுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இச்சண்டையில் ஏறத்தாழ 25 இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

5. இக்கால உலகின் சவால்கள் கிறிஸ்தவர்களுக்கு ஓர் எச்சரிக்கை, பாகிஸ்தான் ஆயர்

டிச.18,2015. கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வை நாம் கேட்கும் ஒவ்வொரு நேரமும், கடவுள் நமக்குத் தூரத்திலோ அல்லது நம்மீது ஆர்வமில்லாமலோ இல்லை, ஆனால், அவர் நம் மத்தியில் வருவதற்குத் தீர்மானித்துள்ளார் என்பதையே நினைவுகூர்கிறோம் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் Faisalabad ஆயர் Joseph Arshad அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், பெத்லகேம் இடையர்கள் அனுபவித்த அதே மகிழ்வையும் ஆர்வத்தையும் கிறிஸ்தவர்கள் அனுபவிக்குமாறு கூறியுள்ளார்.
இக்காலத்தில் மனித சமுதாயம் பல பெரும் சவால்களை எதிர்கொள்கின்றது என்றும், இன்றைய நம் உலகம், நன்மை, தீமை, ஒன்றிப்பு, பிளவு, செல்வம், ஏழ்மை என்று பல்வேறு விடயங்களால் அமைந்துள்ளது என்றும், இவை கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையை அனுப்புகின்றன என்றும் ஆயரின் செய்தி கூறுகிறது.
இறைவன், படைப்பு மற்றும் உடன் வாழ்வோருடன் கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் ஒன்றிணைந்து வாழ வேண்டுமென்பதை இச்சவால்கள் முன்வைக்கின்றன என்றும் ஆயர் Arshad அவர்கள் கிறிஸ்மஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய அளவில் செயல்திட்டம் அவசியம்

டிச.18,2015. பாகிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக, தேசிய அளவில் செயல்திட்டம் ஒன்றை அமல்படுத்துமாறு அந்நாட்டின் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் அமைதி மற்றும் மனித முன்னேற்ற நிறுவனம், பெண்கள் விழிப்புணர்வு கழகம் மற்றும் பிற அரசு-சாரா நிறுவனங்களோடு இணைந்து Faisalabadல் அண்மையில் நடத்திய செப வழிபாட்டில் கலந்துகொண்ட கிறிஸ்தவ, முஸ்லிம் தலைவர்களும், ஆர்வலர்களும் இவ்வாறு பாகிஸ்தான் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதற்குத் தீர்மானித்த இத்தலைவர்கள், மதம் சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பில் சீர்திருத்தம் அவசியம் என்று வலியுறுத்தினர்.
சமய சகிப்புத்தன்மை மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க, செயல்திட்ட யுக்தியை வளர்க்குமாறும் வகுப்புவாதத்தை முறியடிக்க புதிய சட்டம் தேவை என்றும் கூறிய அத்தலைவர்கள், இவற்றை கல்வி வழியாகவே செயல்படுத்த முடியும் என்றும் கூறினர்.
பாகிஸ்தானில் ஆரம்பப் பள்ளி செல்லும் வயதுடைய 73 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

7. திருமதி ஸ்டெயின்ஸ்க்கு அன்னை தெரேசா நினைவு விருது

டிச.18,2015. ஒடிசா மாநிலத்தில் இந்துமத தீவிரவாதிகளால் உயிரோடு எரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய மறைபோதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களின் துணைவியாருக்கு அன்னை தெரேசா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.
தொழுநோயை ஒழிக்கவும், தொழுநோயிலிருந்து குணமான மக்களை சமுதாயத்தோடு ஒன்றிணைக்கவும், தொழுநோய் குறித்த அச்சத்தை மக்கள் மனத்திலிருந்து அகற்றவும் திருமதி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் அவர்கள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நல்லிணக்கப் பிறரன்பு நிறுவனம், சமூக நீதிக்கான அன்னை தெரேசா நினைவு விருதை வழங்கி வருகிறது.
ஒடிசாவில் தொழுநோயாளர் மத்தியில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலிய மறைபோதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களும், அவரின் இரு மகன்களும் 1999ம் ஆண்டில் காரில் உயிரோடு எரிக்கப்பட்டனர். இவர்களின் இறப்புக்குப் பின்னர் தனது 13 வயது மகளுடன் ஒடிசாவிலே தங்கி தொழுநோயாளர் மத்தியில் தொடந்து பணியாற்ற தன்னை அர்ப்பணித்தார் திருமதி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ். அதோடு தனது கணவரையும், மகன்களையும் எரித்தவரையும் மன்னித்துவிட்டார் அவர்.
எனினும், 2004ம் ஆண்டில் ஆஸ்திரேலியா திரும்பிய திருமதி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் அவர்கள், இவாஞ்சலிக்கல் மறைபோதக கழகத்துடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : Christian today / வத்திக்கான் வானொலி

8. போர்ப் பகுதிகளில் ஒவ்வோர் இரண்டு நொடிக்கும் ஒரு குழந்தை பிறப்பு

டிச.18,2015. ஆப்கானிஸ்தான், தென் சூடான், சிரியா, ஏமன் போன்ற உலகில் போர் இடம்பெறும் பகுதிகள் மற்றும் மோதல்களுக்கு அஞ்சி மேற்கொள்ளும் ஆபத்தான பயணங்களில், 2015ம் ஆண்டில் ஒரு கோடியே அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன என்று ஐ.நா.வின் குழந்தை நல நிதி நிறுவனமான யூனிசெப் கூறியது.
உலகில் பிறக்கும் எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை வீதம் அல்லது, ஒவ்வோர் இரண்டு நொடிக்கும் ஒரு குழந்தை வீதம், போர் இடம்பெறும் பகுதிகள் மற்றும் மோதல்களுக்கு அஞ்சி மேற்கொள்ளும் ஆபத்தான பயணங்களின்போது பிறக்கின்றன என்று, யூனிசெப் நிறுவனத்தின் செயல்திட்ட இயக்குனர் Anthony Lake அவர்கள் இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமுதாயத்தில் மிகவும் நலிந்த சிறார்க்கு உதவுவது குறித்து கடந்த ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடுகள், 2016ம் ஆண்டில் செயல்படுத்தப்படுமாறு கேட்டுக்கொண்டார் Anthony Lake.  
எண்ணற்ற குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுடன் புலம்பெயர்வதற்குக் காரணமாகியுள்ள மோதல்கள் நிறுத்தப்படவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், வேலைவாய்ப்பின்மையைக் களையவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், 2016ம் ஆண்டு, இலட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையின் ஆண்டாக அமையும் என்றும் கூறினார் Anthony Lake.
சிறார், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாக இருந்தாலும், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களில் அவர்கள் ஏறக்குறைய பாதிப்பேர் என்று யூனிசெப் கூறுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...