இந்தியாவிற்கு பலூன் மூலம் இணைய வசதி, 100 ரெயில் நிலையங்களில் வை-பை
ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற ‘கூகுள் பார் இந்தியா’ என்ற நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பேசியதாவது:-
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இணைய வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கூகுள் நிறுவனத்தின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் புதிய வசதிகள் செய்துதரப்பட உள்ளன.
அதன்படி மும்பை ரெயில் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வை-பை வசதி கிடைக்கும். 2016-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 100 ரெயில் நிலையங்களில் இந்த வசதி செய்து தரப்படும். அடுத்த ஆண்டு முதல் “டேப் டூ டிரான்ஸ்லேட்” என்ற புதிய வசதியை கூகுள் நிறுவனம் வழங்கவிருக்கிறது. இதன் மூலம் ஆன்ட்ராய்டு மொபைல் போனில் உள்ள எந்த வாக்கியத்தையும் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம்.
மேலும், வானில் பறக்கவிடப்படும் பலூன் மூலம் வழங்கப்படும் இணைய தள சேவையான ‘புராஜக்ட் லூன்’ திட்டமும் விரைவில் இந்தியாவில் தொடங்கப்படும். இதன்மூலம் புறநகர் மற்றும் மலைவாழ் பகுதிகளிலும் இணையதள வசதி வழங்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க உள்ளார். இது தவிர, டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றுகிறார். தமிழரான சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர், தற்போது இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.source: Tamil CNN.
No comments:
Post a Comment