Friday, 11 December 2015

செய்திகள் - 10.12.15

செய்திகள் - 10.12.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறைவனின் இரக்கம் நம்மை அரவணைக்க அனுமதிப்போம்

2. பொலிவியா கர்தினால் மரணத்திற்கு திருத்தந்தையின் தந்தி

3. கிறிஸ்தவ யூத நல்லுறவு பற்றிய அறிக்கை வெளியீடு

4. யூத, கிறிஸ்தவ தலைவர்களிடையே உடன்பிறந்த உறவு தேவை

5. ஊழலை நிறுத்துங்கள், தீங்கிழைப்பதை நிறுத்துங்கள் - கர்தினால் தாக்லே

6. பாத்திமா அன்னை செய்தியின் கரு, இரக்கம் திருத்தல ஆயர்

7. அடிப்படை உரிமைகளில் ஒன்று, வீட்டுரிமை - அயர்லாந்து ஆயர்கள்

8. டிசம்பர் 10, மனித உரிமைகள் அனைத்துலக நாளுக்கு ஐ.நா. செய்தி

9. மனித முன்னேற்றத்திற்கு பெரும் தடைச் சுவர், ஊழல் - ஐ.நா. பொதுச் செயலர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறைவனின் இரக்கம் நம்மை அரவணைக்க அனுமதிப்போம் 

டிச.10,2015. ஒரு குழந்தையை அணைத்து, பாதுகாக்கும் பெற்றோரைப்போல, இறைவனின் இரக்கம் நம்மை அரவணைக்கிறது என்றும், அதற்கு நம்மையே அனுமதிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.
டிசம்பர் 10, இவ்வியாழனன்று காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், 'அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்' என்று துவங்கும் இறைவாக்கினர் எசாயாவின் வாசகத்தை, தன் மறையுரையின் மையக்கருத்தாகக் கொண்டார் திருத்தந்தை.
இஸ்ரயேல் மக்கள் எண்ணிக்கையிலும், சக்தியிலும் மிகுந்தவர்கள் என்பதால் அல்ல, மாறாக, அவர்கள் எண்ணிக்கையில் குறைந்து, வலுவிழந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இறைவன் தேர்ந்தெடுத்தார் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
தன்னையே வறுத்தி ஒறுத்தல் முயற்சிகள் செய்துவந்த ஒரு புனிதரிடம், இறைவன் இன்னும் வேண்டும் என்று கேட்டபோது, அப்புனிதர், தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னதாகவும், அதற்கு கடவுள், 'உன் பாவங்களை என்னிடம் கொடு' என்று சொன்னதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
இறைவனின் இரக்கத்தைச் சுவைக்கும் நாம், அடுத்தவர் மீதும், அவர்களது வலுவின்மை மீதும் அக்கறை கொள்ளமுடியும் என்று, தன் மறையுரையின் இறுதியில், திருத்தந்தை கூறினார்.
தங்களது 12வது ஆலோசனைக் கூட்டத்திற்காக வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள திருத்தந்தையின் ஒன்பது ஆலோசகர்களான கர்தினால்கள், திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பொலிவியா கர்தினால் மரணத்திற்கு திருத்தந்தையின் தந்தி

டிச.10,2015. பொலிவியா நாட்டைச் சேர்ந்த கர்தினால், Julio Terrazas Sandoval அவர்கள், டிசம்பர் 9, இப்புதனன்று, தன் 79வது வயதில், இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அனுதாபங்களையும், செபங்களையும் ஒரு தந்தியின் வழியே தெரிவித்துள்ளார்.
பொலிவியாவின் Santa Cruz de la Sierra உயர் மறைமாவட்டத்தின் பேராயரான Sergio Alfredo Gualberti Calandrina அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இத்தந்தியில், தாராள மனதுடனும், நீதி, அமைதி ஆகிய வழிகளிலும் தன் வாழ்வை நற்செய்திப் பணிக்கென கர்தினால் Terrazas அவர்கள் அர்ப்பணித்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
1936ம் ஆண்டு, பொலிவியாவின், Vallegrande என்ற ஊரில் பிறந்த கர்தினால் Terrazas அவர்கள், உலக மீட்பர் துறவு சபையில் இணைந்து, 1962ம் ஆண்டு, தன் 36வது வயதில் அருள் பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
1978ம் ஆண்டு ஆயராக அருள் பொழிவு செய்யப்பட்ட Terrazas அவர்கள், 1991ம் ஆண்டு முதல், Santa Cruz de la Sierra உயர் மறைமாவட்டத்தின் பேராயராகவும், மும்முறை பொலிவியா ஆயர் பேரவையின் தலைவராகவும் பணியாற்றினார்.
2001ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட Terrazas அவர்கள், இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
கர்தினால் Terrazas அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை, 217 ஆக குறைந்துள்ளது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்றோர், 117 பேர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கிறிஸ்தவ யூத நல்லுறவு பற்றிய அறிக்கை வெளியீடு

டிச.10,2015. சிக்கலானப் பிரச்சனைகளும், பெரும் சவால்களும் நிறைந்துள்ள இன்றைய உலகில், பல்வேறு சமயங்களிடையே உரையாடலும், நல்லுறவும் வளர்வது முக்கியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு அக்டோபர் மாதம் கூறியதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் டிசம்பர் 10, இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் நினைவு கூர்ந்தார்.
கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு என்ற கருத்தை மையப்படுத்தி, இரண்டாம் வத்திக்கான் சங்கம், "Nostra Aetate" அதாவது, "நம் காலத்தில்" என்று ஆரம்பமாகும் ஏட்டினை வெளியிட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை உருவாக்கியுள்ள ஒரு புதிய அறிக்கை, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.
"கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை" (உரோமையர் 11:29) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் வெளியீட்டு விழாவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோச் (Kurt Koch) அவர்கள் உரையாற்றியபோது, இன்றைய உலகில் அமைதியை உருவாக்க சமயங்கள் ஆற்றவேண்டிய இன்றியமையாத பணிகளைக் குறித்து வலியுறுத்தினார்.
மதங்களின் பெயரால் வன்முறைகள் எழுவதும், மத நம்பிக்கையே இல்லாமல் குழந்தைகள் வளர்க்கப்படுவதும் எதிர்காலத்தில் பாதகமானச் சூழல்களை உருவாக்கும் என்று திருத்தந்தை கூறியுள்ளதை, கர்தினால் கோச் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவ யூத மதங்களின் நல்லுறவு பற்றி கூறும் இவ்வறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில், அமெரிக்க யூத கழகத்தின் இயக்குனர், ரபி டேவிட் ரோசென் (David Rosen) அவர்களும், கேம்ப்ரிட்ஜ், Woolf Instituteல் பணியாற்றும் யூத இறையியலாளர், முனைவர் எட்வர்ட் கேஸ்லெர் அவர்களும் 'நம் காலத்தில்' என்ற சங்க ஏட்டின் நன்மைதரும் தாக்கங்கள் குறித்துப் பேசினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. யூத, கிறிஸ்தவ தலைவர்களிடையே உடன்பிறந்த உறவு தேவை

டிச.10,2015. யூத, கிறிஸ்தவ தலைவர்களிடையே உடன்பிறந்த உறவு வளரவேண்டியது இன்றைய உலகில் அவசியம் என்ற கருத்துடன், இஸ்ரேல், ஐரோப்பா, அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த யூத அறிஞர்கள், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
கிறிஸ்தவ, யூத மதங்களுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் பகைமை, மோதல் என்ற உணர்வுகள், உடன்பிறந்தோர் உணர்வுக்கு வழிவிடவேண்டிய நேரம் வந்துவிட்டதென ஆர்த்தடாக்ஸ் மரபு யூத அறிஞர்கள் கூறியிருப்பது, வரலாற்று தனித்துவம் மிக்கது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, கிறிஸ்தவ, யூத மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதற்கு வழிவகுத்த இரண்டாம் வத்திக்கான் சங்கம், "Nostra Aetate" அதாவது, "நம் காலத்தில்" என்ற பெயரில் வெளியிட்ட ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, "கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை" (உரோமையர் 11:29) என்ற தலைப்பில் ஓர் அறிக்கை, இவ்வியாழனன்று வெளியாகியுள்ளது.
ஏழு பகுதிகள் அடங்கிய இந்த அறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளில் கிறிஸ்தவ, யூத மதங்களுக்கிடையே வளர்ந்துள்ள நல்லுறவு குறித்து முதல் இரு பகுதிகள் விளக்கியுள்ளன.
கிறிஸ்தவம், யூதம் என்ற இரு மத பாரம்பரியத்திலும், 'இறை வார்த்தை' என்ற கருத்தும், இறை வெளிப்பாடும் எவ்விதம் புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதும் இவ்வறிக்கையில் பேசப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஊழலை நிறுத்துங்கள், தீங்கிழைப்பதை நிறுத்துங்கள் - கர்தினால் தாக்லே

டிச.10,2015. "பரந்துவிரிந்து வரும் ஊழலை நிறுத்துங்கள், பெண்களையும், குழந்தைகளையும் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள், முடிவற்ற வகையில் வலுவற்றோருக்கு தீங்கிழைப்பதை நிறுத்துங்கள்" என்ற சக்திவாய்ந்த அழைப்பொன்றை பிலிப்பைன்ஸ் நாட்டு கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் விடுத்துள்ளார்.
துவங்கியுள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினையொட்டி, டிசம்பர் 9, இப்புதனன்று, மணிலா பேராலயத்தின் புனிதக் கதவைத் திறக்கும் நிகழ்வில், கர்தினால் தாக்லே அவர்கள் இவ்வாறு கூறினார்.
பேராலயத்தில் அமைந்துள்ள புனிதக் கதவின் வழியே நுழைவது மட்டும் போதாது, வீடற்றோர், சிறைப்பட்டோர், நோயுற்றோர், வறியோர் ஆகியோர் வாழும் இடங்களில் நாம் நுழைவதற்கு, 'பிறரன்புக் கதவுகள்' வழியே செல்லவேண்டும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் அழைப்பு விடுத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்றபோது, அவருடன் உரையாடிய தெருவோரக் குழந்தைகள், மற்றும், உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், மணிலா பேராலயத்தின் புனிதக் கதவைத் திறக்கும் இந்த நிகழ்வில், கர்தினால் தாக்லே அவர்களுடன் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி

6. பாத்திமா அன்னை செய்தியின் கரு, இரக்கம் திருத்தல ஆயர்

டிச.10,2015. துவங்கியுள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டில், திருத்தலங்கள் நோக்கி திருப்பயணங்கள் மேற்கொள்ளும் அதே ஆர்வத்துடன், நாம் உள்ளார்ந்த ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என்று, பாத்திமா திருத்தலத்தின் ஆயர், அந்தோனியோ அகுஸ்தோ தோஸ் சாந்தோஸ் மார்த்தோ (António Augusto dos Santos Marto) அவர்கள் கூறினார்.
டிசம்பர் 8, இச்செவ்வாயன்று, போர்த்துகல் நாட்டின் புகழ்பெற்ற திருத்தலமான பாத்திமா அன்னை திருத்தலத்தின் கோவிலில் உள்ள புனிதக் கதவைத் திறந்த, Leiria-Fatima மறைமாவட்டத்தின் ஆயர் மார்த்தோ அவர்கள், ஆன்மீக வாழ்வில் மறுமலர்ச்சி பெறுவது குறித்து தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
'இரக்கம்' என்ற வார்த்தை, பாத்திமா அன்னை வழங்கிய செய்தியின் முக்கிய கருவாக உள்ளது என்பதால், இந்த யூபிலி, பாத்திமா அன்னையின் செய்தியை உலகறியச் செய்யும் என்று இத்திருத்தலத்தின் அதிபர், அருள்பணி Carlos Manuel Pedrosa அவர்கள் கூறினார்.
இரக்கத்தின் யூபிலி ஆண்டில், பாத்திமா திருத்தலத்தில், ஒப்புரவு அருள் அடையாளத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அருள்பணி Pedrosa அவர்கள் கூறினார்.
பாத்திமாவில், அன்னை மரியா காட்சியளித்த நிகழ்வின் முதல் நூற்றாண்டு விழா, 2017ம் ஆண்டு நிகழவிருப்பதும், இதையொட்டி தான் அங்கு செல்ல விழைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. அடிப்படை உரிமைகளில் ஒன்று, வீட்டுரிமை - அயர்லாந்து ஆயர்கள்

டிச.10,2015. மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வீட்டுரிமை, அயர்லாந்து நாட்டில் தகுந்த முறையில் அளிக்கப்படவில்லை என்றும், இக்குளிர் காலத்தில் இந்தத் தேவையை உடனடியாக நிறைவு செய்யவேண்டும் என்றும் அயர்லாந்து ஆயர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
டிசம்பர் 10, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் அனைத்துலக நாளையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தகுந்த அளவு குடியிருப்புகள் இல்லாததால், வறியோர் அனுபவிக்கும் துயரங்கள் பற்றி கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குளிர் காலத்தில், தகுந்த குடியிருப்பு இல்லாமல் வாழ்வதால், அதிகப் பாதிப்புக்களுக்கு உள்ளாவது, குழந்தைகளே என்றும், பாதுகாப்பு ஏதுமின்றி விடப்படும் இக்குழந்தைகளின் உடல் நலம் மட்டுமல்ல, மன நலமும் பாதிக்கப்படுகின்றது என்றும் ஆயர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உலகெங்கும் வீடற்றவர்களின் எண்ணிக்கை பெருகிவரும் இன்றையச் சூழலில், திருவருகைக் காலம் இந்தக் குறையைப் போக்க நமக்கு தரப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு என்று, அயர்லாந்து ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
வீடற்றவராக இவ்வுலகில் பிறந்த இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடக் காத்திருக்கும்போது, வீடற்றவர், நாடு விட்டு நாடு துரத்தப்படுகிறவர் ஆகியோருக்கு தனிப்பட்ட அக்கறை காட்டவேண்டும் என்று ஆயர்களின் அறிக்கை விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. டிசம்பர் 10, மனித உரிமைகள் அனைத்துலக நாளுக்கு ஐ.நா. செய்தி

டிச.10,2015. மனித உரிமைகளைக் காப்பதற்கு, காலத்தால் அழியாத நேரிய கொள்கைகளை உருவாக்கவும், அவற்றின் வழி வாழ்வதற்கு உறுதிகொள்ளவும் உலகின் அனைத்து சக்திகளும் இணைந்து வரவேண்டும் என்ற அழைப்பை, ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் விடுத்துள்ளார்.
டிசம்பர் 10, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் அனைத்துலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், இரண்டாம் உலகப் போருக்குப்பின், மனித உரிமைகளைக் காக்கும் ஒரு முயற்சியாக உருவான ஐக்கிய நாடுகள் அவையின் 70ம் ஆண்டு நிறைவை, தன் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.
அவ்வேளையில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத் தலைவராக இருந்த பிராங்க்ளின் ரூசவெல்ட் அவர்கள், குறிப்பிட்ட பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை, தேவைகளிலிருந்தும், அச்சத்திலிருந்தும் விடுதலை பெறும் உரிமை என்ற நான்கு உரிமைகளை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார், பான் கி மூன்.
பல கோடி மக்கள், பேச்சுரிமை மறுக்கப்பட்டுள்ளனர் என்றும், மதத்தை ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளால், வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளதென்றும் ஐ.நா. பொதுச் செயலர் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்சமின்றி வாழும் உரிமை என்ற அடிப்படை உரிமையை இழந்து தவிக்கும் பல கோடி புலம் பெயர்ந்தோருக்கு மீண்டும் அந்த உரிமையை வழங்குவது, அனைத்துலகின் அவசரத் தேவை என்றும் பான் கி மூன் அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

9. மனித முன்னேற்றத்திற்கு பெரும் தடைச் சுவர், ஊழல் - ஐ.நா. பொதுச் செயலர்

டிச.10,2015. மனித சமுதாய முன்னேற்றத்திற்கு பெரும் தடைச் சுவராக இருப்பது, ஊழல் என்றும், ஊழல், இன்றைய உலகில் பாதுகாப்பின்மையையும், வன்முறையையும் அதிகப்படுத்தியுள்ளது என்றும் ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 9, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு உலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், ஊழல் சகித்துக்கொள்ள வேண்டிய ஒரு வழிமுறை என்ற உணர்விலிருந்து, ஊழல் ஒரு குற்றம் என்ற உணர்வை நோக்கி மக்கள் வளர்ந்திருப்பது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.
மனித சமுதாயத்தில் புரையோடிப்போன புண்ணாக விளங்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் துணிந்து எழவேண்டும் என்று பான் கி மூன் அவர்கள் விடுத்துள்ள அழைப்பையடுத்து, "ஊழல் சங்கிலியை உடைக்கவும்" (Break the Corruption Chain) என்ற மையக் கருத்துடன், கொள்கைப் பரப்புச் செயல்பாடுகள், ஐ.நா. அவையால் மேற்கொள்ளப்பட்டன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளில், ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டால் மட்டுமே, அந்த அமைப்புக்களில் மக்களின் நம்பிக்கையும் ஈடுபாடும் கூடும் என்று ஐ.நா. உயர் அதிகாரி, ஹெலன் கிளார்க் (Helen Clark) அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment