செய்திகள்-05.06.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை, சிலே அரசுத்தலைவர் Bachelet சந்திப்பு
2. 2016ல் திருத்துதூதுப் பயணம் பற்றி அரசுத்தலைவர் Bachelet
3. தெகோனியானி சபையினரிடம் திருத்தந்தை-கருணைக்குச் சாட்சி சொல்லுங்கள்
4. பணம் பயனுள்ளது, ஆனால் மறைப்பணியைப் பாதிப்பதாகவும் மாறலாம்
5. திருத்தந்தையின் சரேயேவோ திருத்தூதுப்பயணம்
6. திருத்தந்தை பிரான்சிஸ் - நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாடு
7. கானா பெட்ரோல் விபத்தில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்
8. வீடற்றவர்களின் தூரின் திருப்பயணத்துக்கு திருத்தந்தை உதவி
9. பிலிப்பைன்ஸ் திருத்தூதுப் பயணம் பற்றிய நூல் வெளியீடு
10. 2050ல் மூன்று பூமிக் கோளங்கள் தேவைப்படும், ஐ.நா.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை, சிலே அரசுத்தலைவர் Bachelet சந்திப்பு
ஜூன்,05,2015. சிலே நாட்டு அரசுத்தலைவர் Michelle Bachelet Jeria அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Paul Gallagher ஆகியோரையும் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.
தென் அமெரிக்க நாடான சிலே நாட்டுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் பற்றியும், மனித வாழ்வைப் பாதுகாத்தல், கல்வி, சமூக அமைதி போன்ற பொதுநல விவகாரங்கள் பற்றியும் இத்தலைவர்கள் இச்சந்திப்புகளில் கலந்துரையாடினர்.
மனித முன்னேற்றம், மக்களின் உருவாக்கம்,
அதிகத் தேவையில் இருப்போருக்கு உதவி போன்ற சிலே கத்தோலிக்கத் திருஅவையின்
குறிப்பிடத்தக்க நற்பணிகள் பற்றியும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டன.
இலத்தீன் அமெரிக்காவின் இன்றைய நிலை குறித்தும், அக்கண்டம் எதிர்கொள்ளும் சில குறிப்பிட்ட சவால்கள் குறித்தும், உலகில் நிலவும் ஏழ்மை, குடும்பங்கள் நிலை, சமூக சமத்துவமின்மை போன்றவை குறித்தும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.
மேலும், இத்தாலிய ENI வாயு நிறுவன நிர்வாகப் பிரதிநிதி Claudio Descalzi அவர்கள் தனது குடும்பத்தினருடன் திருத்தந்தையை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. 2016ல் திருத்துதூதுப் பயணம் பற்றி அரசுத்தலைவர் Bachelet
ஜூன்,05,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலே அரசுத்தலைவர் Michelle Bachelet Jeria அவர்கள், 2016ம் ஆண்டில் சிலே நாட்டுக்குத் திருத்தந்தை திருத்துதூதுப் பயணம் மேற்கொள்வது பற்றிக் கலந்து பேசியதாகத் தெரிவித்தார்.
சிலே நாட்டுக்கான திருத்தந்தையின் திருத்துதூதுப் பயணம் பற்றிய தேதி இன்னும் குறிக்கப்படவில்லை என்றும், இப்பயணம் 2016ம் ஆண்டில் இடம்பெறும் என்றும் கூறினார் சிலே அரசுத்தலைவர் Bachelet.
2016ம் ஆண்டில் இலத்தீன் அமெரிக்காவில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்துதூதுப் பயணம் பற்றித் தான் கலந்து பேசியதாகவும், சிலே நாட்டுத் திருத்துதூதுப் பயணத்தின்போது Argentina, Uruguay ஆகிய நாடுகளுக்கும் திருத்தந்தை செல்வார் எனவும் Bachelet அவர்கள் கூறினார்.
அரசியல்
மற்றும் நன்னெறி வாழ்வு முறைகள் சிறந்து விளங்கினால் ஒரு நீதியான
சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பது வலியுறுத்தப்பட்டதாக சிலே
அரசுத்தலைவர் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. தெகோனியானி சபையினரிடம் திருத்தந்தை-கருணைக்குச் சாட்சி சொல்லுங்கள்
ஜூன்,05,2015.
இயேசுவின் திருஇதய அருள்பணியாளர்கள் சபையின் பொதுப் பேரவையில்
கலந்துகொள்ளும் 120 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையினர், கருணையுள்ளவர்களாக வாழுமாறு கேட்டுக்கொண்டார்.
Dehoniani என அழைக்கப்படும் இச்சபைப் பிரதிநிதிகளை, வத்திக்கானின் Concistoro அறையில் சந்தித்த திருத்தந்தை, தன்னலம், வெறுப்பு மற்றும் அதிகாரத்தால் காயமடைந்துள்ள இக்கால உலகுக்கு, இறைவனின் கருணை தேவைப்படுகின்றது என்றும், இச்சபையினர் இரக்கமுள்ளவர்களாகச் செயல்படுமாறு நம் ஆண்டவர் கேட்கிறார் என்றும் கூறினார்.
நம் ஆண்டவர் பாவிகளைப் பார்த்து அச்சம் கொள்ளவில்லை, ஆனால், அவர் அவர்களோடு உணவருந்தச் சென்றார், எனவே, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோரும் இறைவனின் இரக்கத்திற்குச் சான்று பகர வேண்டுமெனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நான் செய்த பெரிய காரியங்கள் திருத்தந்தைக்குத் தெரியாமல் இருக்கலாம் என்று உங்களில் சிலர் நினைக்கக் கூடும், உங்களில்
யாரும் இப்படிச் செய்திருந்தால் இயேசு தமது பெரும் கருணையால் உங்களுக்குப்
பெரிய விழா எடுப்பார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த உலகம் காயமடைந்துள்ளது, நிறைய நோய்களால் நோயுற்றுள்ளது, எனவே இறைவனின் கருணை தேவைப்படுகின்றது என்று கூறிய திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும்போது கருணைப் பண்பை தயவுகூர்ந்து வெளிப்படுத்துங்கள் என்றும் Dehoniani சபையினரிடம் கேட்டுக்கொண்டார்.
இயேசுவின் திருஇதய அருள்பணியாளர்கள் சபையின் தலைவர் Heiner Wilmer அவர்கள், இந்நிகழ்வில் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. பணம் பயனுள்ளது, ஆனால் மறைப்பணியைப் பாதிப்பதாகவும் மாறலாம்
ஜூன்,05,2015.
பாப்பிறை மறைப்பணிகள் அமைப்பின் பொது அவையில் கலந்து கொள்ளும் 170
பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து
உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணம் உதவி செய்கின்றது, ஆனால் அது மறைப்பணியைப் பாதிக்கும் கருவியாகவும் மாறக்கூடும் என எச்சரித்தார்.
மகிழ்வு, நம்பிக்கை மற்றும் அமைதியின் ஊற்றாகிய நற்செய்தி, மனித சமுதாயத்திற்கு மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது,
திருஅவையின் பெரும் சவால்களில் நற்செய்தி அறிவிப்பு இக்காலத்திலும்
இருப்பதால் திருஅவை நற்செய்தி அறிவிப்புக்கு முன்னுரிமை கொடுக்கின்றது
என்றும் கூறினார் திருத்தந்தை.
அன்பு, உடன்பிறப்பு உணர்வு மற்றும் நீதியின் நற்செய்தியை அறிவிப்பதற்கு, கிறிஸ்துவின் அன்பும், அவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசமும் நம்மை உந்தித் தள்ளுகின்றது என்றும், அன்பின் நற்செய்தியை பரப்புவது பாப்பிறை மறைப்பணிகள் அமைப்பின் முக்கிய பணியாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் கீழ் இயங்கும் பாப்பிறை மறைப்பணிகள் அமைப்பு, மறைப்பணித்தளங்களில் உதவி தேவைப்படும், குறிப்பாக, கடும்
ஏழ்மையில் வாடும் மக்களின் நலனில் அக்கறை காட்டிச் செயல்படுகின்றது. இளம்
திருஅவைகளின் அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகளுக்கும் இந்த அமைப்பு உதவி
வருகின்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தையின் சரேயேவோ திருத்தூதுப்பயணம்
ஜூன்,05,2015. போஸ்னியா-எர்செகொவினா குடியரசின் தலைநகர் சரேயேவோவுக்கு, இச்சனிக்கிழமையன்று ஒருநாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 06, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு உரோம் நகரிலிருந்து சரேயேவோவுக்குப் புறப்படும் திருத்தந்தை, விமானப்பயணத்தில் காலை உணவை முடித்து, காலை 9 மணியளவில் சரேயேவோ சென்றடைவார்.
“அமைதி உங்களோடு இருப்பதாக” என்ற விருதுவாக்குடன் இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சரேயேவோ அரசுத்தலைவர் மாளிகையில் அவரைச் சந்தித்த பின்னர், அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரையாற்றுவார்.
பின்னர், Kosevo அரங்கத்தில் திருப்பலி, திருப்பீடத் தூதரகத்தில் ஆயர்களுடன் மதிய உணவு, மாலை 4.20 மணியளவில் சரேயேவோ பேராலயத்தில் போஸ்னியா-எர்செகொவினா அருள்பணியாளர், துறவறத்தார் மற்றும் குருத்துவ மாணவரைச் சந்தித்தல், பின்னர் பிரிந்த கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள், பிற மதப் பிரதிநிதிகளைச் சந்தித்தல், இளையோரைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகளை நிறைவு செய்து உரோம் திரும்புவார் திருத்தந்தை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சரேயேவோ திருத்தூதுப் பயணம், அவரின் 8வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக அமையும்.
முன்னாள் யுக்கோஸ்லாவிய கூட்டுக் குடியரசைச் சேர்ந்த போஸ்னியா-எர்செகொவினா, அக்கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, 1991ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டுவரை மூன்றரை ஆண்டுகள் கடும் சண்டையால் அந்நாடு பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. திருத்தந்தை பிரான்சிஸ் - நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாடு
ஜூன்,05,2015. இறைவனின் உடன்படிக்கை முத்திரையாகிய திருநற்கருணை, கிறிஸ்தவர்களை, அவர்கள் விசுவாசத்திற்காக உயிரைக் கையளிக்க வைக்கும் சூழல்களில்கூட, அவர்களை ஒன்றிணைத்து இறையன்பை பிறருக்கு வழங்குவதற்கு வலிமை தருகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உரோம் புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா வளாகத்தில், இவ்வியாழன் மாலை கிறிஸ்துவின் திருஉடல் இரத்தம் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, திருஅவையும், அதன் உறுப்பினர்களும் திருநற்கருணை மீது ஆழ்ந்த பக்தியில் வாழ்வது ஒருபோதும் முடிவுறாது என்று தனது மறையுரையில் கூறினார்.
இத்திருப்பலிக்குப் பின்னர் அங்கிருந்து புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்குத் திருநற்கருணை பவனியும் நடைபெற்றது. "SCV 1" என்ற வத்திக்கான் அனுமதி எண் பொறிக்கப்பட்ட வாகனத்தில் திருநற்கருணை வைக்கப்பட்டு இரு தியாக்கோன்கள் முழந்தாளிட்டபடி சென்றனர். பொதுவாக, "SCV 1" வத்திக்கான் வாகன அனுமதி எண் திருத்தந்தையரின் வாகனத்துக்குரியது.
திருநற்கருணை பவனி தொடங்கியவுடன், கடந்த ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காரில் புனித மேரி மேஜர் பசிலிக்கா சென்று அங்குப் பவனியாக அழைத்துச் செல்லப்பட்ட நற்கருணை
ஆண்டவரை வரவேற்றார். எண்ணற்ற விசுவாசிகள் கையில் எரியும் மெழுகுதிரிகளுடன்
இப்பவனியில் கலந்து கொண்டனர். புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்கு முன்னர்
அமைக்கப்பட்டிருந்த மேடையில் இறுதி திருநற்கருணை ஆசிரும் அளித்தார் திருத்தந்தை.
திருநற்கருணை பவனியில், விசுவாசிகள் ஆண்டவரோடு நகரத் தெருவில் நடந்து செல்லும்போது, நம்
ஆண்டவர் இயேசுவை பொதுவில் அறிவிக்கும் சுதந்திரத்தை இழந்துள்ள சகோதர
சகோதரிகளை நினைவுகூருமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ விசுவாசத்திற்காக நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுடன் ஒன்றிணைந்து ஆண்டவரைப் போற்றிப் பாடுவோம், வணங்குவோம் என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவுக்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்யுமாறு கேட்கப்படும் கிறிஸ்தவர்களை நம் இதயங்களில் வைத்து வணங்குவோம் என்றும் கூறினார்.
நசுக்கப்படும் கிறிஸ்தவர்களின் இரத்தம் உலகம் முழுவதன் அமைதி மற்றும் ஒப்புரவுக்கு உறுதி தருவதாய் இருக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்துவின் திருஉடலை உணவாகவும், அவரின் திருஇரத்தத்தைப் பானமாகவும் அருந்துதல் பற்றிக் கூறும் இப்பெருவிழா வாசகம் பற்றியும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரிவினையும், துணிவை இழப்பதும் ஆபத்தானது, ஆனால் கிறிஸ்துவின் இருப்பு, இவற்றை எதிர்கொள்வதற்கு நமக்கு வல்லமை தருகின்றது என்றும் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. கானா பெட்ரோல் விபத்தில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்
ஜூன்,05,2015. ஆப்ரிக்க நாடான கானாவில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள்
மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் திருத்தந்தையின்
ஒருமைப்பாட்டுணர்வையும் செபத்தையும் தெரிவிக்கும் செய்தி ஒன்று
அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை, கானா ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Joseph Osi-Bonsu அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
கானா நாட்டின் அதிகாரிகளுக்கும், அந்நாட்டினர் அனைவருக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
கானா
தலைநகர் அக்ராவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ
விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. சம்பவம்
நடந்தபோது கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பிக்க சாலையில்
சென்ற மக்கள் பெட்ரோல் நிலையத்தில் ஒதுங்கினர். பெட்ரோல் நிலைய வளாகத்தில்
அமைக்கப்பட்ட காஸ் டெர்மினலில் திடீரென ஏற்பட்ட தீ எங்கும் பரவி பயங்கரமாக
வெடித்தது. அருகிலிருந்த கட்டடங்களுக்கும் தீ பரவியது. இதில்
இறந்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. வீடற்றவர்களின் தூரின் திருப்பயணத்துக்கு திருத்தந்தை உதவி
ஜூன்,05,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் நிதியுதவியைக் கொண்டு உரோம் நகரின் பங்கு ஒன்று, வீடற்ற மற்றும் ஏழை மக்கள் என, ஐம்பது பேரை இத்தாலியின் தூரின் நகருக்குத் திருப்பயணமாக அழைத்துச் சென்றுள்ளது.
கடந்த ஏப்ரலிலிருந்து தூரின் நகரில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும், இயேசுவின் திருஉடலை மூடியிருந்த போர்வையைப் பார்ப்பதற்காக 50, வீடற்ற மற்றும் ஏழை மக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
உரோம்
நகரிலிருந்து ஏறக்குறைய 430 மைல் தூரத்திலுள்ள தூரின் நகருக்குச் செல்லும்
இந்த ஏழைகளுக்கு உணவுக்கும் தங்குமிட வசதிக்கும் திருத்தந்தை
உதவியுள்ளார். இதே போல், மற்றுமொரு பங்குக்கும் திருத்தந்தை உதவியுள்ளார்.
இம்மாதம் 21,22
தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூரின் நகருக்குத் திருத்தூதுப்
பயணம் மேற்கொள்வதற்குத் தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், அத்தயாரிப்பின் ஒரு கட்டமாக இவ்வாறு திருத்தந்தை ஏழைகளுக்கு உதவி வருகிறார் எனச் சொல்லப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
9. பிலிப்பைன்ஸ் திருத்தூதுப் பயணம் பற்றிய நூல் வெளியீடு
ஜூன்,05,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் பற்றிய புத்தகம் ஒன்றை அந்நாட்டுத் தலத்திருஅவை வெளியிட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள்மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறைத் தாக்கங்களை ஆவணமாகத் தயாரிப்பது இயலாத காரியம் எனினும், ஒரு சிறு முயற்சியாக இந்நூலை வெளியிட்டுள்ளதாக, தலத்திருஅவை அதிகாரிகள் கூறினர்.
“நான் இங்கே இருக்கிறேன் : உங்களோடு இருப்பதற்காக!” என்ற தலைப்பில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு சனவரி 15 முதல் 19ம் தேதி வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், பிலிப்பைன்சில் இடம்பெற்ற இயற்கைப் பேரிடர்களில் அந்நாடு ஏறக்குறைய 68 ஆயிரம் வகுப்பறைகளை இழந்துள்ளவேளை, பேரிடர்கள் இடம்பெற்ற பகுதிகளில் சிற்றாலயங்களைத் தற்காலிக வகுப்பறைகளாக மாற்றுமாறு அந்நாட்டு ஆயர் பேவை கேட்டுள்ளது.
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
10. 2050ல் மூன்று பூமிக் கோளங்கள் தேவைப்படும், ஐ.நா.
ஜூன்,05,2015. இப்பூமியின் வளங்கள் சுரண்டப்படும் தற்போதைய நிலை நீடித்தால், 2050ம் ஆண்டில் 960 கோடியாக உயரும் உலக மக்களின் உயிர் வாழ்வுக்கும், அவர்களுக்கு அவசியமான பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் மூன்று பூமிக் கோளங்கள் தேவைப்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
ஜூன்,05, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில், உலகினர் அனைவருக்கும் தரமான வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கான வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கு, இப்பூமிக் கோளத்தின் நீரும், நிலமும், பிற சக்திகளும் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.
இப்பூமி வழங்குவதற்கு அதிகமாகவே, அதன் இயற்கை வளங்கள், மனித சமுதாயத்தால் அதிகமதிகமாகச் சுரண்டப்பட்டு வருவதால், இவ்வுலகினர் தங்களின் நடவடிக்கைகளை மாற்ற வேண்டியது இன்றியமையாதது என்று பான் கி மூன் அவர்கள் கூறினார்.
"700 கோடிக் கனவுகள் : ஒரே பூமி, கவனமுடன் செலவு செய்" என்பது இவ்வாண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தின் தலைப்பாகும்.
மேலும், செல்வங்களைச்
சேர்த்து பெருமை கொள்வதைவிட மரங்களை வளர்த்து பெருமிதம் கொள்ளுங்கள் என
இவ்வுலக தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய மக்களுக்கு
அறிவுறுத்தியுள்ளார்.
இன்னும், மனிதரால்
உருவாக்கப்படும் கரியமில வாயு கடல்வாழ் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள்
மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த எச்சரிக்கையை இலண்டனில் நடைபெறும்
ஒரு மாநாட்டில் அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment