Wednesday 24 June 2015

செய்திகள்-18.06.15

செய்திகள்-18.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் திருமடல் "இறைவா, உமக்கே புகழ்" வெளியீடு

2. டுவிட்டர் செய்திகளாக புதிய திருமடலின் கருத்துக்கள்

3. திருத்தந்தை - மன்னித்து, அமைதி கொண்டால் மட்டுமே செபிக்க முடியும்

4. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க லண்டன் பேரணி

5. திருத்தந்தையின் திருமடலுக்கு அமெரிக்கர்கள் ஆதரவு

6. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் - கர்தினால் Toppo

7. கொலம்பியா, கட்டுப்பாடு நிறைந்த ஒரு நாடாக மாறவேண்டும்

8. புலம் பெயர்ந்தோரின் நிலையை ஊடகங்கள் திரித்துக் கூறவேண்டாம்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் திருமடல் "இறைவா, உமக்கே புகழ்" வெளியீடு

ஜுன்,18,2015. 'எவ்வகையான உலகை அடுத்தத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்லப்போகிறோம்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருமடலில் எழுப்பியுள்ள கேள்வி, நமது சுற்றுச்சூழலை மட்டும் மனதில் வைத்து எழுப்பப்பட்டக் கேள்வியல்ல என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"இறைவா, உமக்கே புகழ்: நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள திருமடல், இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் வெளியிடப்பட்ட நிகழ்வில் துவக்க உரையாற்றிய திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இவ்வுலகைக் காப்பது என்ற முக்கியமான பணியில், அனைவரும் கூடிவந்து, திறந்த மனதுடன் உரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்பது, இத்திருமடலில் திருத்தந்தை வலியுறுத்தும் ஒரு முக்கியக் கருத்து என்பதை, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், இயற்கையை மையப்படுத்தி இயற்றிய புகழ்பாடலிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திருமடலின் தலைப்பைத் தெரிவு செய்திருப்பது, இம்மடல் முழுவதும் இழையோடியிருக்கும் ஒரு முக்கியக் கருத்தை வெளிப்படுத்துகிறது என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், செபம் நிறைந்த ஆழ்நிலை தியான மனநிலையுடன் இயற்கையைக் காண்பதே திருத்தந்தை நமக்கு வழங்கும் முக்கிய கருத்து என்றார்.
திருத்தந்தையின் மடலில் காணப்படும் கருத்துக்களையும், இத்திருமடலின் அமைப்பையும், கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் துவக்க உரையில் சுருக்கமாக விளக்கினார்.
கர்தினால் டர்க்சன் அவர்களின் உரையை அடுத்து, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தையின் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட Pergamo பெருநகர் அவையின் தலைவர், மேன்மைமிகு John Zizioulas அவர்கள், திருத்தந்தையின் திருமடலில் காணப்படும் இறையியல், ஆன்மீகம் இவை குறித்து உரையாற்றினார்.
கத்தோலிக்கத் துயர் துடைப்புப் பணிகள் அமைப்பின் தலைவர், Carolyn Woo அவர்கள், பொருளாதாரம், நிதிநிலை, வர்த்தகம் ஆகிய துறைகள் வழியே சுற்றுச்சூழல் சந்திக்கும் சவால்கள் குறித்து, திருமடல் வழங்கும் ஆலோசனைகளை தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

2. டுவிட்டர் செய்திகளாக புதிய திருமடலின் கருத்துக்கள்

ஜூன்,18,2015. "நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல் என்பதில் நாம் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து சிந்திக்க உங்களை அழைக்கின்றேன்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியாக வெளியானது.
'இறைவா உமக்கே புகழ் : நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்' என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள திருமடல் இவ்வியாழனன்று வெளியானதைத் தொடர்ந்து, 20 நிமிடங்களுக்கு ஒரு டுவிட்டர் செய்தியை திருத்தந்தை வெளியிட்டு வந்தார்.
இந்த வரிசையில், "பூமிக்கோளத்தின் எதிர்காலத்தை நாம் எவ்விதம் உருவாக்குகிறோம் என்பது குறித்த உரையாடலை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்று நான் விண்ணப்பிக்கிறேன்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியானது.
மேலும், திருத்தந்தை அவர்கள் எழுதிய திருமடல் உலகின் அனைத்து ஆயர்களுக்கும் இரு நாட்களுக்குமுன் அனுப்பப்பட்டதென்றும், ஒவ்வொரு பிரதியிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கைப்பட எழுதிய ஒரு சில வரிகளும் இணைத்து அனுப்பப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஒன்றிப்பு, பிறரன்பு, அமைதி ஆகியவற்றால் பிணைக்கப்பட்டு ஆயர்களாக வாழும் அன்பு சகோதரர்களே, என் ஆசீருடன் இணைந்துவரும் 'இறைவா, உமக்கே புகழ்' என்ற திருமடலை ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்காகச் செபிக்க மறவாதீர்கள்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை கைப்பட எழுதிய செய்தியாக இருந்தது.
திருத்தந்தையின் திருமடல், இத்தாலிய மொழியில் 75,000 பிரதிகளும், ஏனைய மொழிகளில் 10,000 பிரதிகளும் தற்போதைக்கு அச்சிடப்பட்டுள்ளன என்று வத்திக்கான் பதிப்பகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை - மன்னித்து, அமைதி கொண்டால் மட்டுமே செபிக்க முடியும்

ஜுன்,18,2015. நம் சகோதர, சகோதரிகளை மன்னித்து, மனதில் அமைதி கொண்டிருந்தால் மட்டுமே, நம்மால் செபிக்க முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் கூறினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியத் திருப்பலியில், பலமற்ற நிலை, செபம், மன்னிப்பு என்ற கருத்துக்களை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.
கிறிஸ்தவ வாழ்வில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இறைவனின் துணை இல்லையெனில், கீழே விழும் அளவுக்கு நாம் பலமற்றவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நமக்குத் தொடர்ந்து தேவைப்படுவது செபம் என்பதை எடுத்துரைத்தார்.
நாம் செபிப்பதற்கு முன்னரே நமது தேவைகளை, தந்தை அறிந்துள்ளார். எனினும், நமது தேவைகளை, அவரிடம் எளியமுறையில், ஒரு சில வார்த்தைகளில் சொல்வது நமது செபமாக வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபத்தின் தேவையைக் கூறினார்.
மன்னிப்பின் வழியாக, நம் உள்ளங்களை நிறைக்கும் அமைதியிலிருந்து மட்டுமே நம்மால், 'அப்பா' என்று ஆண்டவனை அழைக்க முடியும் என்பதை தன் மூன்றாவது எண்ணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டார்.
எனவே, நம் பலமற்ற நிலையில், செபங்களை எழுப்பும் வேளையில், மன்னிப்பு என்ற வலுவான கோட்டையும் நம்மைச் சுற்றி எழுப்பப்படவேண்டும் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

4. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க லண்டன் பேரணி

ஜுன்,18,2015. இறைவன் படைத்த இவ்வுலகை, நாம் சரிவரக் காப்பாற்றவில்லை என்ற கவலை, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, மத நம்பிக்கையுள்ள அனைவருக்கும் கவலையாக உள்ளது என்று இங்கிலாந்து ஆயர் ஒருவர் கூறினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உலக உச்சி மாநாட்டில் போராடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த 'காலநிலை கூட்டணி' என்ற அமைப்பினர், ஜூன் 17, இப்புதனன்று, லண்டன் மாநகரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பேரணியில் 10,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரித்தானிய பாராளு மன்றத்திற்கு முன் கூடிவந்தனர்.
இந்தப் பேரணியில் பங்கேற்ற ஆங்கலிக்கன் ஆயர் Nicholas Holtam அவர்கள், இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள திருமடல், இயற்கைமீது பற்றுகொண்டுள்ள அனைவரையும் ஈர்த்துள்ளது என்று கூறினார்.
இந்தப் பேரணியில் கலந்துகொள்ள வந்திருந்தோரின் எண்ணிக்கை பெருமளவு இருந்ததால், பேரணியின் துவக்கத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாடு இரு இடங்களில் நடத்தப்பட்டன என்றும், இவ்விரு இடங்களிலும் தன் செய்தியை பகிர்ந்துகொண்ட ஆயர் Nicholas Holtam அவர்கள், இரண்டாவது இடத்தை அடைய ரிக்சாவில் பயணித்தார் என்றும் ICN செய்திக் குறிப்பு கூறுகிறது.
இயற்கை ஆர்வலர்கள், தேனீ வளர்ப்பவர்கள், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், அருள் பணியாளர்கள், என்று பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணியில் கலந்துகொள்ள இயலாத இன்னும் பலநூறு பேர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உலக உச்சி மாநாட்டில் போராடவேண்டும் என்ற கருத்தைத் தாங்கிய மின்னஞ்சல்களை அனுப்பினர் என்றும் ICN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தையின் திருமடலுக்கு அமெரிக்கர்கள் ஆதரவு

ஜுன்,18,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களில் 68 விழுக்காட்டினர் பூமி வெப்பமடைந்து வருகிறது என்றும்அந்நாட்டின் கத்தோலிக்கர்களில் 71 விழுக்காட்டினர் இந்த உண்மையை ஆதரிப்பதாகவும் அந்நாட்டிலிருந்து வெளியான ஆய்வு ஒன்று கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் "இறைவா! உமக்கே புகழ்: நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட திருமடல், இவ்வியாழனன்று வத்திக்கானில் வெளியிடப்படுவதையொட்டி அமெரிக்காவின் Pew என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விவரங்கள் வெளியாயின என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இப்புதனன்று வெளியான இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளிலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கர்களில் 86 விழுக்காட்டினர் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழ்ந்த அன்பும், மரியாதையும் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த பூமி வெப்பமடைந்து வருவது ஒரு ஆபத்தான விடயம் என்றும், இந்த ஆபத்திற்கு மனிதர்களே முக்கிய காரணம் என்றும் அமெரிக்கக் கத்தோலிக்கர்கள், குறிப்பாக, இஸ்பானிய வம்சாவழி கத்தோலிக்கர்கள் நம்புவதாக Pew ஆய்வு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

6. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் - கர்தினால் Toppo

ஜுன்,18,2015. ஒவ்வொருவரும் தங்கள் மதத்தைப் பின்பற்றவும், மதக் கொள்கைகளைப் பரப்பவும் முழு உரிமையைத் தரும் அற்புதமான சட்டங்களைக் கொண்டது இந்திய குடியரசு என்று இராஞ்சி பேராயர், கர்தினால் Telesphore Toppo அவர்கள் கூறினார்.
அண்மைய மாதங்களில் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழும் பல்வேறு வன்முறைகள் குறித்து ஆசிய செய்திக்கு அளித்த ஒரு பேட்டியில், தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி, இந்து இராஜ்யம், இந்து நாடு என்ற எண்ணங்களை தீவிரமாகப் பரப்பி வந்த ஒரு கட்சி என்று குறிப்பிட்டார்.
இந்தியச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மத உரிமையை ஆதரித்து இந்தியப் பிரதமர் அவ்வப்போது பேசிவந்தாலும், தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் கட்சி, அனைத்தையும் இந்து மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட ஒரு கட்சி என்பதை மறுக்க இயலாது என்று கர்தினால் டோப்போ அவர்கள் கூறினார்.
நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றபின், இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று அனைத்துல மதச் சுதந்திரம் என்ற அமைப்பு அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கர்தினால் டோப்போ அவர்களுக்கும் அண்மையில் கொலைமிரட்டல் மடல் ஒன்று வந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

7. கொலம்பியா, கட்டுப்பாடு நிறைந்த ஒரு நாடாக மாறவேண்டும்

ஜுன்,18,2015. கடந்த 60 ஆண்டுகளாக வன்முறையில் வாழ்ந்துவந்த கொலம்பியா நாடு, கட்டுப்பாடு நிறைந்த ஒரு நாடாக மாறுவதே, அடுத்தத் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய ஒரு பரிசு என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
நாட்டில் நிலவிவரும் வன்முறைகளை எதிர்த்து, கொலம்பியாவின் துமாக்கோ (Tumaco) நகரில், இச்செவ்வாயன்று, 5000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட ஓர் அமைதிப் பேரணியில் உரையாற்றிய துமாக்கோ ஆயர், Girón Higuita அவர்கள், வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது எளிய மக்களே என்று வலியுறுத்தினார்.
அரசும், ஏனைய சமுதாய நிறுவனங்களும் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை, கொரில்லா குழுக்கள் தோல்வியடையச் செய்கின்றன என்றாலும், அரசு தன் முயற்சிகளை நிறுத்தக் கூடாது என்று ஆயர் Higuita அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
போதைப்பொருள் வர்த்தகம் கொலம்பியாவில் நிகழும் பல்வேறு வன்முறைகளுக்கும், கொலைகளுக்கும் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. புலம் பெயர்ந்தோரின் நிலையை ஊடகங்கள் திரித்துக் கூறவேண்டாம்

ஜுன்,18,2015. இத்தாலி நாட்டிற்கு வந்துசேரும் புலம்பெயர்ந்தோர் குறித்தும், இந்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்தோர் குறித்தும் சரியான, தகுதியான தகவல்களை ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்று, உரோம் நகரில் புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள Astalli மையம் கூறியுள்ளது.
ஜூன் 17, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் புலம்பெயர்ந்தோர் சார்பாக எழுப்பிய விண்ணப்பத்தையும், இத்தாலிய அரசுத் தலைவர், Sergio Mattarella அவர்கள் எழுப்பிய விண்ணப்பத்தையும் பாராட்டிய இந்த மையம், புலம் பெயர்ந்தோரின் நிலையை ஊடகங்கள் திரித்துக் கூறவேண்டாம் என்று விண்ணப்பித்துள்ளது.
ஜூன் 20, வருகிற சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசுகையில், புலம்பெயர்ந்தோர் சார்பில் பணியாற்றும் அனைவருக்கும் நாம் தலைவணங்கி பாராட்டு கூறும் அதேவேளையில், புலம்பெயர்ந்தோர் நுழையமுடியாதவாறு கதவுகளை மூடும் மனிதர்கள், நிறுவனங்கள் சார்பில் நாம் மன்னிப்பும் கேட்கவேண்டும் என்று கூறினார்.
உலகின் அனைத்து நாடுகளும், குறிப்பாக, வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் புலம்பெயர்ந்தோரை வரவேற்று வாழ்வளித்தால், உலகை இன்று அச்சுறுத்தும் இந்தப் பிரச்சனைக்கு நாம் தீர்வு காணமுடியும் என்று Astalli மைய இயக்குனர், இயேசு சபை அருள்பணியாளர் கமில்லோ ரிபமோந்தி (Camillo Ripamonti) அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment