Wednesday, 24 June 2015

செய்திகள்-20.06.15

செய்திகள்-20.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: வருவாய் அதிகரிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்வு நோக்கமாக முடியாது

2. திருத்தந்தையின் இச்சனிக்கிழமை காலை சந்திப்புகள்

3. திருத்தந்தையின் இரண்டு நாள் தூரின் பயணம்

4. திருத்தந்தையின் திருமடலை ஆசியாவில் பரவலாக்க ஆயர்கள் திட்டம்

5. உலகில் நீதி, அமைதி மற்றும் பாதுகாப்பிற்கென இணைந்து செபியுங்கள்

6. இரமதான் மாத நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய, பாகிஸ்தான் மீனவக் கைதிகள் விடுதலை

7. உடலுக்கும் மனதுக்கும் யோகா இதமளிப்பதாக ஆய்வுகளின் முடிவுகள்

8. வரலாற்றில் கடந்த ஆண்டுதான் ஆறுகோடிபேர் அகதிகளாகியுள்ளனர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: வருவாய் அதிகரிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்வு நோக்கமாக முடியாது
ஜுன்,20,2015. இத்தாலியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இத்தாலிய பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும் உழைத்துவரும் தொழில்துறை காப்பாளர் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தினர்களை இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருவாய் அல்லது உற்பத்தி அதிகரிப்பினாலேயே, நம் வாழ்வின் நோக்கத்தை அடைந்துவிட்டோம் என்று எவரும் எண்ணமுடியாது, ஏனெனில் இங்கு சமூகத்தில் உள்ள அனைவரின் ஆக்கபூர்வமான பங்கேற்பும் தேவைப்படுகின்றது என இத்தாலிய தொழிலாளர் கூட்டமைப்பின் அங்கத்தினர்களிடம் கூறினார் திருத்தந்தை.
தொழிலாளர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பது, பொறுப்புக்களை ஒப்படைப்பது, அவர்களின் திறமைகளை தூண்டுவது, அவர்களின் புதிய ஆலோசனைகளுக்கும் அர்ப்பணத்திற்கும் ஊக்கமளிப்பது போன்றவை, பல வாய்ப்புகளுக்கும் வருங்கால நம்பிக்கைகளுக்கும் உதவும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயற்கை வளங்களை பாதுகாப்பதுடன், தனியார் உரிமைகளுக்குரிய மாண்புடன், நீதியை ஆதாரமாகக் கொண்டு பொருளாதாரச் சட்டங்கள் மதிக்கப்படும்போதுதான் உண்மையான வளர்ச்சியைக் கொணரமுடியும் என இத்தாலிய தேசிய தொழிலாளர் கூட்டமைப்பின் அதிகாரிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் இச்சனிக்கிழமை காலை சந்திப்புகள்

ஜுன்,20,2015. Equatorial Guinea நாட்டின், திருப்பீடத்திற்கான புதிய தூதுவர் Joaquin Mbana Nchama  அவர்கள், இச்சனிக்கிழமை காலை தன் நம்பிக்கைச் சான்றிதழை திருத்தந்தையிடம் சமர்ப்பித்து தன் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
Equatorial Guinea, கேமரூன், இஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் கல்வி பயின்றுள்ள புதிய தூதுவர் Mbana Nchama, மெய்யியலில் உயர் கல்வி பட்டமும், மனித குலம் சார்ந்த ஆய்வுப் படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
திருப்பீடத்திற்கான புதிய தூதுவர் Mbana Nchamaவைச்  சந்தித்த இதே நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களுக்கான திருப்பீட பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Quellet, ACRI என்ற நிதி அமைப்பின் தலைவர் Giuseppe Guzzetti ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் இரண்டு நாள் தூரின் பயணம்

ஜுன்,20,2015. இயேசுவின் இறந்த உடலைப் போர்த்திய துணியின்முன் வணங்கி செபிக்கவும், புனித ஜான் போஸ்கோ பிறந்ததன் 200ம் ஆண்டை சிறப்பிக்கவும் இஞ்ஞாயிறு மற்றும் திங்கள் தினங்களில் இத்தாலியின் தூரின் நகரில் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு காலை இத்தாலிய நேரம் 7 மணிக்கு உரோம் நகர் சம்பினோ விமான தளத்திலிருந்து புறப்பட்டு, ஒருமணிநேரத்தில் தூரின் நகரை அடையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் தொழிலாளர் பிரதிநிதிககளை சந்திப்பதுடன், தூரின் நகரின் வயது முதிர்ந்த அருள்பணியாளர்களுடன் இணைந்து, இயேசுவின் புனித துணியின் முன் செபிப்பார்.
அவரின் ஞாயிறு பயணத் திட்டத்தில், பொதுமக்களுக்கு திருப்பலி நிறைவேற்றல், இளைஞர்களுடன் பேராயர் இல்லத்தில் மதிய உணவருந்துதல், மரியன்னை திருத்தலத்தைச் சந்தித்தல், சலேசிய துறவுச் சபையினரைச் சந்தித்து உரையாடல், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்தல், இளையோரை சந்தித்தல் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.
அவரின் திங்கள் பயணத்திட்டத்தில், கிறிஸ்தவ சபைகளுடன் ஆன சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையின் திருமடலை ஆசியாவில் பரவலாக்க ஆயர்கள் திட்டம்

ஜுன்,20,2015. உலகின் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகம் ஒன்றை துவக்கி, திருத்தந்தையின் திருமடலை அனைத்து மக்களிடமும் சேர்க்க உள்ளதாக ஆசிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
கடவுளின் படைப்பை பாதுகாப்பது குறித்த ஆறிவியல் மற்றும் ஒழுக்கரீதி சார்ந்த காரணங்களை மக்களிடையே எடுத்துச் சென்று, அவர்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசியாவின் பல பகுதிகளில் தட்ப வெப்பநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கை நடத்த உள்ளதாகவும் ஆசிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, திருத்தந்தையின் 'Laudato Si' என்ற புதிய திருமடல் குறித்து இந்திய ஆயர் பேரவையின் சார்பில் கருத்துத் தெரிவித்த அதன் துணைப் பொதுச்செயலர் அருள்பணி ஜோசப் சின்னையன் அவர்கள், திருத்தந்தையின் செய்தி அனைத்துக் குடும்பங்களையும் தனியார்களையும் சென்றடையும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், மறைமாவட்ட அளவிலும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி

5. உலகில் நீதி, அமைதி மற்றும் பாதுகாப்பிற்கென இணைந்து செபியுங்கள்

ஜுன்,20,2015. வாழ்வுக்கான உண்மை பாதையை விட்டு விலகி, மதத்தின் பெயரால் படுகொலைகளை நடத்தும் மக்களின் மனந்திரும்பலுக்காக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செபிக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவை.
இஸ்லாமியர்களின் Eid al-Fitr திருவிழாவையொட்டி, இரமதான் மாதத் துவக்கத்தில் வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், இன்றைய உலகில் நீதி, அமைதி மற்றும் பாதுகாப்பிற்கென நம் அனைவரின் செபங்களும் தேவைப்படுகின்றன என அதில் விண்ணப்பித்துள்ளார்.
மதத்தின் பெயரால் இடம்பெறும் வன்முறைகளை, இணைந்து எதிர்கொள்ள கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் அழைப்புவிடுக்கும் இத்திருப்பீடச் செய்தி, மக்களின் உரிமைகளும் வாழ்வும் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
சுயநல காரணங்களுக்காக பல்வேறு தீமைகளை இழைத்துவிட்டு அவைகளை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த முயல்வது பெரும் தவறு எனக்கூறும் இச்செய்தி, இத்தகைய தீமைகளை அகற்ற, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இரமதான் மாத நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய, பாகிஸ்தான் மீனவக் கைதிகள் விடுதலை

ஜுன்,20,2015. அண்மையில் துவங்கியுள்ள இஸ்லாமியர்களின் இரமதான் மாதத்தையொட்டிய நல்லெண்ண நடவடிக்கையாக, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களிடம் சிறைவைக்கப்பட்டிருந்த அடுத்த நாட்டு கைதிகளுள் சிலரை விடுவித்துள்ளனர்.
88 பாகிஸ்தான் மீனவர்களை இந்தியா விடுவித்துள்ளவேளை, 113 இந்திய மீனவர்களை  பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.
அரேபியக் கடலில் மீன்பிடிக்கும்போது திசை தெரியாமல் பிற நாட்டு கடல் எல்லைக்குள் புகுந்த்தால் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு, தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் :MISNA/வத்திக்கான் வானொலி

7. உடலுக்கும் மனதுக்கும் யோகா இதமளிப்பதாக ஆய்வுகளின் முடிவுகள்

ஜுன்,20,2015. யோகா அல்லது தியானம் செய்வதன்மூலம், உணர்ச்சிவசப்படுதல் குறைதல், ஞாபக சக்தி அதிகரித்தல், மனம் குவிப்புத்திறன் மேம்படுதல், உடல் நலம் சீரடைதலுடன், மூளையின் செயல்பாடும் பலமடங்கு அதிகரிப்பதாக அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனித உடல் நலத்திற்கு நல்ல விளைவுகளைத் தரும் யோகா முறைகளால், பலருக்கு நோய்கள் குணமாகியுள்ளதாகவும், தூக்கம் சீர்பட்டுள்ளதாகவும், மூளை சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யோகா அல்லது தியானம் செய்வதன்மூலம், மூளையின் இடது பகுதியும் வலது பகுதியும் சிறப்பாக ஒன்றிணைந்து செயல்பட துவங்குவதாக மருத்துவ ஆய்வுக் கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியா, போர்த்துக்கல், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவைகளிலுள்ள சில ஆய்வு மையங்கள், யோகா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதன் நல்விளைவுகளை வெளியிட்டுள்ளன.
உலகில் ஜூன் 21, இஞ்ஞாயிறன்று உலக யோகா யோகா தினம் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : Dinamalar/வத்திக்கான் வானொலி

8. வரலாற்றில் கடந்த ஆண்டுதான் ஆறுகோடிபேர் அகதிகளாகியுள்ளனர்

ஜுன்,20,2015. உலகில் யுத்தம், மோதல்கள் மற்றும் அடக்குமுறை காரணமாக இடம்பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, ஆறு கோடியாய் அதிகரித்துள்ளது என ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
நாடுகளின் அரசுகள் எந்த கவலையும் இல்லாமல் நினைத்தபோதெல்லாம் போர்களைத் துவக்குவதாகவும், அனைத்துலக சமூகம் அதைத் தடுக்க இயலாமல் அல்லது முயலாமல் இருப்பதாகவும் ஐநா மன்றத்தின் அகதிகளுக்கான ஆணையர் அந்தோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகில் தமது சொந்த வாழ்விடங்களைவிட்டு அகதிகளாக வெளியேற நேர்ந்தவர்களின் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு 83 லட்சம் அதிகரித்துள்ளது என அகதிகள் நலனுக்கான ஐ.நா. ஆணையம் கூறுகிறது.
சிரியாவில் தொடரும் யுத்தமும், இஸ்லாமிய அரசு அமைப்பின் எழுச்சியும், முன்பில்லாத இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு ஒரு நாளைக்கு 32,000 பேர் இடம்பெயர்ந்ததற்கு மாறாக, 2014 ஆம் ஆண்டு ஒரு நாளைக்கு 42,500 பேர் இடம்பெயரும் சூழல் உருவாகியிருப்பதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. உலகில் 122 பேருக்கு ஒருவர் அகதியாக உள்ளார்.
இச்சனிக்கிழமையன்று உலக புலம்பெயர்ந்தோர் தினம் சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...