Wednesday, 24 June 2015

செய்திகள்-15.06.15

செய்திகள்-15.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் வருகையையொட்டி, தூரின் நகரில் இளையோர் மாநாடு

2. முதுபெரும் தந்தை இலஹாம் - சிறுமந்தை ஆற்றவேண்டிய பணிகள் அதிகம்

3. பிரேசில் நாட்டில் புலம் பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் வாரம்

4. சிரியாவில் நம்பிக்கை இன்னும் இறக்கவில்லை - ஆயர் Khazen

5. திருத்தந்தை, மக்களின் மேய்ப்பராகப் பேசப்போகிறார்

6. பெண்களின் முன்னேற்றமும், நிலையான சமுதாயமும்

7. போர்ச்சூழல்களில் குழந்தைகள் நிலை - ஐ.நா. உயர் அதிகாரி

8. இந்தியப்பெருங்கடலின் வெப்பத்தால் பருவமழை குறைவு: ஆய்வில் தகவல்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் வருகையையொட்டி, தூரின் நகரில் இளையோர் மாநாடு

ஜூன்,17,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்கள் இத்தாலியின் தூரின் நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வதையொட்டி, ஜூன் 19, இவ்வெள்ளி முதல், 22, வருகிற திங்கள் முடிய தூரின் உயர் மறைமாவட்டம், இளையோருக்கு சிறப்பு மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
தூரின் உயர் மறைமாவட்டத்தின் இளையோர் பணிக்குழுவும், சலேசியத் துறவு சபையும் இணைந்து நடத்தும் இம்மாநாட்டில் இளையோர் பெருமளவில் கலந்துகொள்ள, தூரின் பேராயர் சேஸரே நொசிலியா (Cesare Nosiglia) அவர்கள், சிறப்பான அழைப்பொன்றை  விடுத்துள்ளார்.
'Happening' அதாவது, 'நடைபெறுவது' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு, சலேசியத் துறவு சபையை நிறுவிய புனித ஜான் போஸ்கோ அவர்கள் பிறப்பின் இரண்டாம் நூற்றாண்டையும் இணைத்துக் கொண்டாடுகிறது.
மாநாட்டில் கலந்துகொள்ளும் இளையோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 21, ஞாயிறன்று நிறைவேற்றும் திருப்பலியிலும், மாலை தலைமைத் தாங்கி நடத்தும் கூட்டத்திலும் கலந்துகொள்வர் என்று தூரின் உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


2. முதுபெரும் தந்தை இலஹாம் - சிறுமந்தை ஆற்றவேண்டிய பணிகள் அதிகம்

ஜூன்,17,2015. கிறிஸ்தவ மறை பிறந்து வளர்ந்த பூமியில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவது வேதனை தரும் உண்மை எனினும், இந்தச் சிறுமந்தை ஆற்றவேண்டிய பணிகள் அதிகம் என்று, கிரேக்க மேல்கத்திய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, 3ம் கிரகரி இலஹாம் அவர்கள் கூறினார்.
ஜூன் 15, இத்திங்களன்று, கிரேக்க மேல்கத்திய ஆயர் மாமன்றம், லெபனானின் Ain Trez நகரில் துவங்கியபோது, முதுபெரும் தந்தை இலஹாம் அவர்கள் வழங்கிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.
எண்ணிக்கையில் குறைந்துள்ள ஒரு மந்தையாக மாறியுள்ள கிறிஸ்தவர்கள், புளிக்காரமாகச் செயலாற்றி, கிறிஸ்தவ விழுமியங்களை இம்மண்ணில் பரப்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்று முதுபெரும் தந்தை இலஹாம் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
மத்தியக் கிழக்குப் பகுதிகளில் வாழும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்கள் சிந்தும் இரத்தம், கிறிஸ்தவ ஒன்றிப்பு இரத்தம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய முதுபெரும் தந்தை இலஹாம் அவர்கள், ஒற்றுமையையும், உரையாடலையும் வளர்ப்பது  கிறிஸ்தவர்களின் தலையாய அழைப்பு என்று கூறினார்.
திங்களன்று துவங்கிய கிரேக்க மேல்கத்திய ஆயர்கள் மாமன்றம், துயர் துடைப்புப் பணிகள் குறித்தும், அக்டோபர் மாதம் வத்திக்கானில் கூடவிருக்கும் ஆயர் மாமன்றத்தின் மையப் பொருளான குடும்பம் குறித்தும் விவாதித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


3. பிரேசில் நாட்டில் புலம் பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் வாரம்

ஜூன்,17,2015. 'பணிபுரியவே வந்தேன், பணி பெறுவதற்கன்று' என்று இயேசு தன் பணியைக் குறித்து கூறியதோடு மட்டுமல்லாமல், அதையே தன் சீடர்களின் பணிக்கும் மையமானப் பொருளாக வழங்கினார் என்று பிரேசில் நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
பிரேசில் ஆயர் பேரவை, ஜூன் 14, கடந்த ஞாயிறு முதல், 21, வருகிற ஞாயிறு முடிய, புலம் பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் வாரத்தைக் கடைபிடிக்கும் தருணத்தில், இப்பேரவையின் மேய்ப்புப்பணி அவை தலைவர், ஆயர் José Luiz Ferreira Sales அவர்கள் இவ்வாறு கூறினார்.
'முற்சார்பு எண்ணங்கள் வேண்டாம், உரிமைகளும் பங்கேற்பும் வேண்டும்' என்ற கருத்தில் கடைபிடிக்கப்படும் புலம் பெயர்ந்தோர் வார நிகழ்வுகள், பிரேசில் நாடெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளை அனைவரும் புரிந்துகொள்ள உதவும் என்று ஆயர் சேல்ஸ் அவர்கள் Fides செய்திக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Fraternity Campaign என்ற குழுவினர், புலம்பெயர்ந்தோரை மையப்படுத்தி, பிரேசில் நாட்டில் நடத்தும் இந்தச் சிறப்பு வாரம், கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறதென்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி


4. சிரியாவில் நம்பிக்கை இன்னும் இறக்கவில்லை - ஆயர் Khazen

ஜூன்,17,2015. நம்பிக்கை இன்னும் இறக்கவில்லை, ஆனால், சந்தேகங்கள் பரவலாக வளர்ந்து வருகின்றன என்று அலெப்போ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Georges Abou Khazen அவர்கள் கூறினார்.
சிரியாவுக்கென ஐ.நா.அவை நியமித்துள்ள சிறப்புத் தூதர், Staffan de Mistura அவர்கள், இத்திங்களன்று தமஸ்கு நகரை அடைந்திருக்கும் நிலையில், அவர் மேற்கொள்ளவிருக்கும் அமைதிப் பணிகள் குறித்து பேசிய ஆயர் Khazen அவர்கள், இவ்வாறு கூறினார்.
ஐ.நா.வின் சிறப்புத் தூதர் வருகை தந்திருப்பது ஆறுதலாக இருந்தாலும், அவரால் சிரியாவில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொணர முடியுமா என்ற ஐயம் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று ஆயர் Khazen அவர்கள் எடுத்துரைத்தார்.
சிரியாவில் போராடிவரும் கும்பல்களில் பெரும்பாலானோர் சிரியா நாட்டைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதால், அவர்கள், நாட்டின் அமைதி, நிலையான அரசு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டுள்ளனரா என்ற ஐயமே அதிகம் பரவியுள்ளது என்று அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Khazen அவர்கள் சுட்டிக்காட்டினார்.
சிரியாவிற்குள் கடத்திவரப்படும் ஆயுதங்களைத் தடுத்து நிறுத்துவதே, அந்நாட்டின் அமைதிக்கு எடுக்கப்பட வேண்டிய முதல் படி என்று ஆயர் Khazen அவர்கள் வலியுறுத்தினார்.
அரசுத் தலைவர் பஷார் அல்-ஆஸாத் அவருக்கு எதிராக 2011ம் ஆண்டு ஆரம்பமான போரினால், இதுவரை, 2,30,000த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், 32 இலட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி


5. திருத்தந்தை, மக்களின் மேய்ப்பராகப் பேசப்போகிறார்

ஜூன்,17,2015. சுற்றுச் சூழலையும் இயற்கையையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடவிருக்கும் திருமடலில், அவர் ஓர் அறிவியல் நிபுணராகவோ, அரசியல்வாதியாகவோ பேசப்போவதில்லை, மாறாக, மக்களின் மேய்ப்பராகப் பேசப்போகிறார் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில், அமெரிக்க ஆயர்கள் பேரவையின் வசந்தகாலக் கூட்டம் நடைபெற்றபோது, திருத்தந்தை வெளியிடவிருக்கும் திருமடல் குறித்த கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இவ்வமர்வின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய மயாமி பேராயர் தாமஸ் வென்ஸ்கி அவர்கள், திருத்தந்தையரும், ஆயர்களும், இயற்கை குறித்த கவலைகளை, பொருளுள்ள வகையில் வெளியிட்டு வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஆபத்துக்களுக்கு, உலகில் வாழும் வறியோர், பெருமளவில் காரணமாக இல்லாதபோது, இந்த ஆபத்துக்களால் அவர்களே பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று, பேராயர் வென்ஸ்கி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்தும் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் வசந்தகாலக் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி


6. பெண்களின் முன்னேற்றமும், நிலையான சமுதாயமும்

ஜூன்,17,2015. பெண்களுக்கு வழங்கப்படும் கல்வியும், வேலைவாய்ப்பும் சமுதாயத்தின் தேவை மட்டுமல்ல; அதுமட்டுமே சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பெண்கள் முன்னேற்றம் என்ற கருத்தில், ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. கருத்தரங்கில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் Zeid Ra’ad Al Hussein அவர்கள் பேசுகையில், பெண்களின் முன்னேற்றமும், நிலையான சமுதாயமும் ஒன்றோடொன்று பிணைந்தது என்று குறிப்பிட்டார்.
174 நாடுகளில், ஐ.நா. குழுவொன்று மேற்கொண்ட ஓர் ஆய்வில், கல்வியிலும், வேலை வாய்ப்புக்களிலும் பெண்கள் உயர்ந்துள்ள நாடுகளில் அமைதியும், முன்னேற்றமும் வளர்ந்துள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெண்கல்விக்கு எதிராகப் போராடும் குழுக்கள், பெண்களின் வளர்ச்சி கண்டு ஏற்படும் அச்சத்தினால், வன்முறைகளைக் கையாளுகின்றன என்று ஐ.நா. அதிகாரி Al Hussein அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
வளர்ந்துவரும் நாடுகளில், 18 வயதுக்கு முன்னதாகவே, சிறுமிகள் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தப்படுவதால், அவர்கள் கல்வியும், வேலைவாய்ப்புக்களும் அநீதமான வழிகளில் பறிக்கப்படுகின்றன என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், Al Hussein அவர்கள் கவலை வெளியிட்டார்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி


7. போர்ச்சூழல்களில் குழந்தைகள் நிலை - ஐ.நா. உயர் அதிகாரி

ஜூன்,17,2015. 2014ம் ஆண்டு, மோதல்களால் பாதிக்கப்பட்ட 23 இடங்களில், பல இலட்சம் குழந்தைகள், எவ்வித பாதுகாப்பும் இன்றி, பெரும் துன்பங்களை அனுபவித்துள்ளனர் என்று, ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மோதல் சூழல்களில் வாழும் குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஐ.நா.அவை உருவாக்கியுள்ள ஓர் அமைப்பின் சிறப்புச் செயலர், Leila Zerrougui அவர்கள், ஐ.நா. வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுவாக, மோதல்கள் உருவாகும்போது, வயதுவந்த பெரியவர்கள் ஆயுதம் தாங்கி போரிடுவது வழக்கம் என்றாலும், அண்மையக் காலங்களில், அடிப்படை வாதக் குழுக்கள், எவ்விதக் காரணமுமின்றி, குழந்தைகள் பயிலும் பள்ளிகளைத் தங்கள் தாக்குதல்களுக்கு இலக்காக்கி வருகின்றனர் என்று சிறப்புச் செயலர் Zerrougui அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
ISIL குழுக்களாலும், போக்கோ ஹாரம் குழுக்களாலும் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளில் குழைந்தைகளின் நிலை நாளுக்குநாள் மோசமாகி வருகின்றது என்று, ஐ.நா. அதிகாரி, Zerrougui அவர்கள், கவலை வெளியிட்டார்.
இவையல்லாமல், சிறுவர், சிறுமியரை கட்டாயப்படுத்தி, போர்ச்சூழல்களில் பயன்படுத்துவது, எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு குற்றம் என்று சிறப்புச் செயலர், Zerrougui அவர்கள் கண்டனம் தெரிவித்தார்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி


8. இந்தியப்பெருங்கடலின் வெப்பத்தால் பருவமழை குறைவு: ஆய்வில் தகவல்

ஜூன்,17,2015. இந்தியப்பெருங்கடலில் வெப்பம் அதிகரிப்பதே தென்மேற்கு பருவ மழை குறைய காரணம் என இந்திய வானிலை அறிஞர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ராக்ஸி மேத்யூ கால் என்பவர் தலைமையில் பன்னாட்டு ஆய்வாளர்கள் அடங்கிய குழு, இந்த ஆய்வை மேற்கொண்டது.
1901-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை கோடை பருவமழையின் போக்கு தென் ஆசியாவின் பல பகுதிகளில் எவ்விதம் அமைந்திருந்ததென ஆராயப்பட்டது.
இந்தியாவின் வடக்கு, மத்தியகிழக்கு மற்றும் கங்கை, பிரம்மபுத்ரா வடிநிலப் பகுதி, இமாலய அடிவாரங்களில் மழை பொழிவது பெரிய அளவில் குறைந்துள்ளது என்றும்,
இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் 10 முதல் 20 விழுக்காடு அளவுக்கு மழை குறைந்துள்ளது என்றும், ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் வெப்பம் அடைந்துள்ளதே மழை வெகுவாக குறைய காரணம் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இந்தியப்பெருங்கடல் பகுதியில் வெப்பம் அதிகரித்து, இந்திய துணைக்கண்டப்பகுதியில் வெப்பம் குறைந்துள்ளது. இதனால், நிலம்-கடல் பரப்பின் வெப்ப வேறுபாடு பலவீனமடைந்து, மழைப்பொழிவு குறைந்து விட்டது.
கோடையில் நிலம்-கடல் பரப்பின் வெப்ப நிலை வேறுபாடு பருவமழையின் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குகிறது.

ஆதாரம் : The Hindu /வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment