செய்திகள்-19.06.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : மறைசாட்சிகளின் இரத்தமே கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு விதை
2. திருத்தந்தை : நற்செய்தியை புரிந்து, உணர்ந்து, பின் அறிவியுங்கள்
3. திறமைகளைக் கண்டுகொள்ளவும், வாழ்வை அன்புகூரவும், போட்டிகள் உதவட்டும்
4. பாதுகாப்பிற்கென சேர்க்கப்படும் சொத்துக்களே பாதுகாப்பு உணர்வைப் பறிக்கின்றன
5. திருப்பீடம் : மோதல்களின் இடங்களில் 23 கோடி சிறார்
6. திருத்தந்தையின் திருமடலுக்கு ஐ.நா. பாராட்டு
7. புனித பூமியில், முக்கியமான கிறிஸ்தவ கோவில், தீயினால் சேதமடைந்துள்ளது.
8. எவரெஸ்ட் மலைச்சிகரம் 3 செ.மீ. நகர்ந்துள்ளது - சீன ஆய்வு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : மறைசாட்சிகளின் இரத்தமே கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு விதை
ஜூன்,19,2015. மறைசாட்சிகளின் இரத்தமே கிறிஸ்தவ சபைகளிடையே உருவாகும் ஒன்றிப்பிற்கு விதையாகவும், இறையரசைக் கட்டியெழுப்பும் கருவியாகவும் செயல்படுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகருக்கு வருகை தந்துள்ள அந்தியோக்கியாவின் சிரிய ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை இரண்டாம் Mor Ignatius Aphrem அவர்களை, திருப்பீடத்தில் இவ்வெள்ளி காலை சந்தித்து உரையாடியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் அப்பாவி கிறிஸ்தவர்களும், சிறுபான்மையினரும் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவதை நிறுத்தமுடியாமல் உலகத் தலைவர்கள் இருப்பது குறித்து தன் கவலையை வெளியிட்டார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில், இரு கிறிஸ்தவ மதத் தலைவர்கள் Mor Gregorios Ibrahim அவர்களும், Paul Yazigi அவர்களும் கடந்த ஈராண்டுகளாகக் கடத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்தும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டத் திருத்தந்தை, எண்ணற்ற அருள் பணியாளர்களும், துறவியரும் தங்கள் சுதந்திரத்தை இழந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டு, ஒப்புரவு மற்றும் அமைதிக்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கியப் பயணத்தில் முதுபெரும் தந்தை, மூன்றாம் Mor Ignatius Jacob அவர்களுக்கும், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களுக்கும் இடையே உரோம் நகரில் 1971ம் ஆண்டு இடம்பெற்ற சந்திப்பு குறித்தும், பின்னர், முதுபெரும் தந்தை, Mor Ignatius Zakka Iwas அவர்களுக்கும், திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களுக்கும் இடையே உரோம் நகரிலும், தமஸ்கு நகரிலும் இடம்பெற்ற சந்திப்புக்கள் குறித்தும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : நற்செய்தியை புரிந்து, உணர்ந்து, பின் அறிவியுங்கள்
ஜூன்,19,2015. நற்செய்தியை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல விரும்புவோர், முதலில் அதனை பக்தியோடு வணங்கி, வாசித்து, செவிமடுத்து அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்க விவிலியக் கூட்டமைப்பின் 10வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை, அதன் புதியத் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களுடன் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோவானின் முதல் திருமுகத்தில் காணப்படும் 'நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக்கின்றோம்' என்ற வார்த்தைகளை மையமாக வைத்து உரையாற்றினார்.
இவ்வுலகில் நற்செய்தி அறிவிக்கப்படாத இடங்களும், அல்லது, அறிவிக்கப்பட்டாலும், அதை மீட்பின் செய்தியாக ஏற்றுக்கொள்ளாத இடங்களும் இன்னும் உள்ளன என்பதை இக்குழுவினரிடம் நினைவுபடுத்தியத் திருத்தந்தை, இறைவாக்கின் வலிமையும், அதற்கான ஆதரவும் குறையும்போது, பாரம்பரியம் மிக்க திருஅவைகளின் ஆன்மீக வளர்ச்சியும், இளமையான திருஅவைகளின் மறைப்பணி உந்துதலும் பாதிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
தன வார்த்தைகள் வழியே நம்மோடு தொடர்புகொள்ளும் கிறிஸ்துவுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளும் வகையில், ஒவ்வொரு பங்குத் தளங்களிலும் சமூகங்களிலும் விவிலியம் தொடர்பான செயல்பாடுகள் இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திறமைகளைக் கண்டுகொள்ளவும், வாழ்வை அன்புகூரவும், போட்டிகள் உதவட்டும்
ஜூன்,19,2015. விளையாட்டுக்கள் வழியே பொருளாதார வெற்றி, எவ்விலை கொடுத்தும் வெற்றிபெறல் மற்றும் தனிமனிதப் புகழுக்காக உழைத்தல் போன்ற தவறான கலாச்சாரம், விளையாட்டு வீரர்களிடமிருந்து வெளியேற வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Los Angeles நகரில் நடைபெறவிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளச் செல்லும் இத்தாலியக் குழுவை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலாச்சார மற்றும் சமூக மாண்பை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற, விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன என்று கூறினார்.
இப்போட்டிகளில் பங்குபெறும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் ஒருவர் மற்றவரின் திறமைகளைக் கண்டுகொள்ளவும், வாழ்வை அன்புகூரவும் உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் வீரர்கள் முன்வைத்தார், திருத்தந்தை.
மனிதகுல மதிப்பீடுகளின் அனுபவங்களைத் தரவல்ல வகையில் நோக்கப்படும் விளையாட்டுப் போட்டிகளில், நேர்மையும், ஒருமைப்பாட்டுணர்வும் எப்போதும் காக்கப்படவேண்டும் என்ற அழைப்பும் திருத்தந்தையால் முன்வைக்கப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. பாதுகாப்பிற்கென சேர்க்கப்படும் சொத்துக்களே பாதுகாப்பு உணர்வைப் பறிக்கின்றன
ஜுன்,19,2015. செல்வங்களை செல்வங்களாகவே குவிப்பதே போர்களுக்குக் காரணமாகின்றது, மற்றும் மனித மாண்பு இழக்கப்படுவதற்கும், குடும்பங்கள் சிதைக்கப்படுவதற்கும் காரணமாகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், 'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்’ என்ற நற்செய்தி வார்த்தைகளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரை வழங்கினார்.
நாம் சேர்த்து வைத்துள்ள செல்வத்தை, பொதுநலனுக்குப் பயன்படுத்தும் முயற்சிகள், ஒரு பெரும்போராட்டமாக இன்றைய நாட்களில் உருவாகி வருகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
நம் பாதுகாப்பிற்கென சொத்துக்களை சேர்ப்பதாக எண்ணும்போது, நமது சொத்துக்களே அந்தப் பாதுகாப்பு உணர்வைப் பறிப்பதோடு, நம் மாண்பையும் பறித்து வருகின்றன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இவ்வுலகின் செல்வங்களுக்கு நாம் உரிமையாளர்கள் அல்ல, மாறாக, அவற்றைத் தகுந்த வகையில் பயன்படுத்தும் பொறுப்பாளர்களே என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருப்பீடம் : மோதல்களின் இடங்களில் 23 கோடி சிறார்
ஜுன்,19,2015.
இன்றைய உலகில் மோதல்களால் பாதிக்கப்படுவோரில் 90 விழுக்காட்டிற்கும்
மேற்பட்டோர் அப்பாவி பொது மக்கள் என்ற தன் ஆழ்ந்த கவலையை ஐ.நா. பாதுகாப்பு
அவையின் சிறப்புக் கூட்டத்தில் வெளியிட்டார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர்
பெர்னதித்தோ ஆவ்ஸா.
'குழந்தைகளும் ஆயுதம் தாங்கிய மோதல்களும்' என்ற தலைப்பில் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய அதன் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் அவ்ஸா அவர்கள், வீடுகள், பள்ளிகள், நல ஆதரவு மையங்கள், மத நிறுவனங்கள் என அனைத்தும் தொடர்ந்து தாக்கப்படுவதால், மக்களின் வாழ்வு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மோதல்கள் இடம்பெற்றுவரும் இடங்களில் ஏறத்தாழ 23 கோடி சிறார் வாழ்கின்றனர் என்ற பேராயர் அவ்ஸா அவர்கள், இவர்கள் கொல்லப்படுவது, அடிமையாக்கப்படுவது, பாலினவகையில் தவறாக நடத்தப்படுவது போன்றவை தொடர்கின்றன எனவும் புள்ளிவிவரங்களை வெளியிட்டார் .
ஒவ்வொரு நாட்டிலும், சிறாரை பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றபோதிலும், அவைகளை நடைமுறைக்குக் கொணர்வதில் பெரும் இடைவெளிகள் உள்ளன என்பதையும் எடுத்துரைத்து, புதிய சவால்களை எதிர்கொள்ளும் உலகு, புதிய யுக்திகளைக் கையாளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் அவ்ஸா.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. திருத்தந்தையின் திருமடலுக்கு ஐ.நா. பாராட்டு
ஜுன்,19,2015. மனிதகுலம் எதிர்நோக்கும் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த முக்கிய சவால்களுக்குத் தீர்வுகாண, புதிய
கலந்துரையாடல்கள் தேவைப்படுவது பற்றிய திருத்தந்தையின் புதிய திருமடல்
குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி
மூன்
பெரும்பாலும்
மனித நடவடிக்கைகளின் விளைவாக இடம்பெறும் உலக வெப்பநிலை அதிகரிப்பு
குறித்து திருத்தந்தை தன் திருமடலில் குறிப்பிட்டுள்ளதை எடுத்தியம்பியுள்ள
ஐ.நா. பொதுச்செயலர், எல்லா அரசுகளும் தங்கள் தேசிய நலனையும் தாண்டி, உலக பொது நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது ஓர் ஒழுக்கரீதி சார்ந்த பிரச்சனையாக உருவெடுத்துள்ளதால், அனைவரின் ஒன்றிணைந்த, அதேவேளை, அவசர நடவடிக்கை தேவைப்படுகின்றது என்பதில், தானும், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களும் ஒத்த கருத்துடையவர்களாக உள்ளோம் எனவும்
பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது கூறினார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி
மூன்.
ஆதாரம் : U.N. /வத்திக்கான் வானொலி
7. புனித பூமியில், முக்கியமான கிறிஸ்தவ கோவில், தீயினால் சேதமடைந்துள்ளது.
ஜுன்,19,2015. புனித பூமியில், கலிலேயக் கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு முக்கியமான கிறிஸ்தவ கோவில், இப்புதன் இரவு தீயினால் சேதமடைந்துள்ளது.
கலிலேயக்
கடற்கரையில் தன்னைப் பின்தொடர்ந்துவந்த 5000த்திற்கும் அதிகமானோருக்கு
இயேசு உணவைப் பலுகச் செய்து கொடுத்த புதுமையின் நினைவாக, புனிதபூமியின் Tabgha என்ற இடத்தில் உள்ள பலுகச்செய்யும் கோவில், அடிப்படைவாத யூதக் குழுவினரால் தீவைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள், கோவில் சுவரில் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்த அடையாளங்களைக் கண்டுபிடித்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த தீவிபத்தால், கோவிலின் வெளிப்புறச் சுற்று மட்டும் சேதமடைந்துள்ளதென்றும், உள்புறத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், இக்கோவிலைப் பராமரித்துவரும் புனித பெனடிக்ட் துறவி அருள்பணி மத்தியாஸ் அவர்கள், UCAN செய்தியிடம் கூறியுள்ளார்.
இந்தத் தீவிபத்தைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசுத் தலைவர் ருவன் ரிவ்லின் (Reuven Rivlin) அவர்கள், அனைத்து மதத் தலைவர்களையும் சந்தித்து, குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதாக UCAN செய்தி கூறுகிறது.
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
8. எவரெஸ்ட் மலைச்சிகரம் 3 செ.மீ. நகர்ந்துள்ளது - சீன ஆய்வு
ஜுன்,19,2015. ஏப்ரல் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக, எவரெஸ்ட் மலைச்சிகரம் மூன்று சென்டிமீட்டர் தென்மேற்காக நகர்ந்துள்ளது என சீனாவிலுள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தினால் அந்த மலையின் உயரத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என சீனாவின் தேசிய கணக்கெடுத்தல், வரைபடங்கள் மற்றும் புவிசார் தகவல்கள் நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.
நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவுகொண்ட அந்தக் கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர், உடமைகளுக்கு பெரும் சேதமும் அழிவும் ஏற்பட்டன. அந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான நிலச்சரிவுகளும், பனிசரிவுகளும் ஏற்பட்டன.
இந்நேரத்தில், தலைநகர் காட்மாண்டு தெற்கு நோக்கி இரண்டு மீட்டர்கள் நகர்ந்துள்ளது என நேபாள ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நேபாளத்தில்
ஏற்பட்ட இந்தக் கடுமையான நிலநடுக்கத்துக்குப் பிறகு எவரெஸ்ட்
மலைச்சிகரத்தின்மீது ஏறும் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment