Wednesday, 10 June 2015

செய்திகள்-09.06.15

செய்திகள்-09.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - கிறிஸ்தவத் தனித்துவம், இயேசுவுக்கு வாழ்வால் சான்று பகர்வதாகும்

2. வீடற்றவர் இரவில் தங்குவதற்கு திருத்தந்தையின் தர்ம அலுவலகம் முயற்சி

3. விமான நிலைய மறைப்பணியாளர்களுக்கு அனைத்துலக கருத்தரங்கு

4. சிரியாவில் உலகின் மனச்சான்றின் மரணத்தைக் காண முடிகின்றது

5. பொதுத் தேர்தலில் ஊழல் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள்

6. பாகிஸ்தானில் ஆசியாவிலே மிகப்பெரிய சிலுவை

7. தென் சூடான் கிறிஸ்தவ சபைகளின் அமைதித் திட்டம்

8. உலகப் பெருங்கடல்கள் தினம், ஜூன்,08
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - கிறிஸ்தவத் தனித்துவம், இயேசுவுக்கு வாழ்வால் சான்று பகர்வதாகும்

ஜூன்,09,2015. கிறிஸ்தவத் தனித்துவத்தின் சுவையை இழக்கச் செய்யாமல், அதன் உண்மைக்குச் சாட்சிகளாக வாழுமாறு, இச்செவ்வாய் காலையில் வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார்  திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் கிறிஸ்தவத் தனித்துவம் என்பது என்ன? என்ற கேள்வியுடன் மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அன்றாட வாழ்வில் சான்று பகர்வதற்கென, தெளிவற்ற ஒரு நிலையிலிருந்து ஆழமான விசுவாசத்திற்கு மேற்கொள்ளும் நீண்ட பயணமே கிறிஸ்தவத் தனித்துவம் என்று கூறினார்.
கிறிஸ்தவத் தனித்துவம் என்பது, அறிவுக்கெட்டாத கருத்துக்களால் அல்ல, ஆனால், தெளிவான வாழ்க்கையால் இயேசுவுக்குச் சான்று பகர்வதாகும் என்றும் கூறிய திருத்தந்தை, நாம் பாவிகள் என்பது உண்மையே, நாம் தவறி விழுந்து விடுவோம், ஆயினும், இறைவனின் சக்தியால் நாம் மீண்டும் எழுந்து, நமது பயணத்தைத் தொடர முடியும் என்றும் கூறினார்.
பாவம், நம் தனித்துவத்தின் ஒரு பகுதி, ஆனால், நம் இதயங்களில் தூய ஆவியாரை வழங்கியுள்ள மற்றும் தமது முத்திரையை நம்மீது வைத்துள்ள இயேசு கிறிஸ்துவில் கொண்டிருக்கும் விசுவாசத்தால் நாம் பாவிகள் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஒரு குறிப்பிட்ட மெய்யியலைப் பின்செல்கின்றவர்கள் அல்ல கிறிஸ்தவர்கள், மாறாக, திருப்பொழிவு பெற்றவர்களாக, தூய ஆவியாரை தங்கள் இதயங்களில் அனுமதித்துள்ளவர்களாக இறைவன் வழங்கியுள்ள தனித்துவத்தோடு விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்களே கிறிஸ்தவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வுலகப் போக்கினால் இந்தத் தனித்துவத்தைப் பலவீனப்படுத்துகின்றவர்கள் இருக்கின்றனர், இவர்கள் சுவையை இழந்த உப்பு போன்றவர்கள் என்று எச்சரித்த திருத்தந்தை, உண்மைக்குச் சான்று பகரும் அருளை இயேசுவிடம் நாம் கேட்போம் என்று விசுவாசிகளிடம் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வீடற்றவர் இரவில் தங்குவதற்கு திருத்தந்தையின் தர்ம அலுவலகம் முயற்சி

ஜூன்,09,2015. தம்மையே வழங்கும் இறைவனை, திருநற்கருணை அருளடையாளத்தில் கண்டுகொள்கிறோம் என்ற வார்த்தைகளை டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், உரோம் நகரில் வீடின்றி தெருவில் வாழ்பவர், இரவில் தூங்குவதற்கு இடம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்ம அலுவலகம்.
வீடில்லாமல் தெருவில் வாழ்பவர்களுக்கு, வத்திக்கானில் குளியல் அறை வசதி, முடிதிருத்தம் வசதி, உரோம் மத்திய இரயில் நிலையத்தில் சுடச்சுடச் சாப்பாடு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ள திருத்தந்தையின் தர்ம அலுவலகம், இவர்கள் இரவில் உறங்குவதற்கும் வத்திக்கானுக்கு அருகில் அமைத்துக் கொடுப்பதற்கு ஆவன செய்து வருகிறது.
இப்புதிய முயற்சி குறித்து இத்தாலிய ஆன்சா செய்தி நிறுவனத்திடம் பேசிய திருத்தந்தையின் தர்மச் செயல்களை அதிகாரப்பூர்வமாக ஆற்றும் போலந்து நாட்டைச் சார்ந்த பேராயர் Konrad Krajewski அவர்கள், இப்பணிகள் மனிதரின் மாண்புக்கு மதிப்பளிப்பதாய் உள்ளன என்று தெரிவித்தார்.
வத்திக்கானுக்கு அருகிலுள்ள Via dei Penitenzieri பகுதியில் 30 படுக்கைகள் கொண்ட இடம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு மட்டுமே தங்குவதற்குப் பயன்படுத்தப்படும் இவ்விடத்தைத் தன்னார்வப் பணியாளர்கள் கண்காணிப்பார்கள் என்று பேராயர் Krajewski அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. விமான நிலைய மறைப்பணியாளர்களுக்கு அனைத்துலக கருத்தரங்கு

ஜூன்,09,2015. விமான நிலையங்களில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான 16வது அனைத்துலக கருத்தரங்கு உரோம் நகரில் இப்புதனன்று தொடங்குகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நற்செய்தியின் மகிழ்வு என்ற திருத்தூது அறிக்கையில் கூறப்பட்டுள்ள, விமான நிலைய மேய்ப்புப்பணிகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
திருப்பீட குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்வோர் அவை நடத்தும் இக்கருத்தரங்கு பற்றிப் பேசியுள்ள, அவ்வவையின் செயலர் ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில் அவர்கள், விமானப் பயணிகளுக்குப் புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.
2013ம் ஆண்டில் ஏறக்குறைய 300 கோடியாக இருந்த விமானப் பயணியர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 310 கோடியாக உயர்ந்தது என்றும் தெரிவித்த ஆயர் களத்திப்பரம்பில் அவர்கள், விமான நிலையங்கள் மறைப்பணித்தளங்களாக மாறியுள்ளதை இது காட்டுகின்றது எனவும் கூறினார்.   
இன்று உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 2 கோடியே 92 இலட்சம் பயணியர் மற்றும் எண்பதாயிரம் வர்த்தக விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2020ம் ஆண்டில் 20 கோடி வர்த்தக விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் ஆயர் கூறினார்.
இந்த நான்கு நாள் கருத்தரங்கு, ஜூன் 13, வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. சிரியாவில் உலகின் மனச்சான்றின் மரணத்தைக் காண முடிகின்றது

ஜூன்,09,2015. மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெறும் வன்முறைக்கு எதிரான உலகின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, உலகின் மனச்சான்று செத்துவிட்டதாகத் தெரிகிறது என்று, லெபனான் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கூறினார்.
போர் இடம்பெறும் சிரியாவைப் பார்வையிட்டுள்ள லெபனான் முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Rai அவர்கள் கடந்த ஞாயிறு மறையுரையில், உலகின் மனச்சான்றுக்கு எதிரான தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.
சிரியாவில் நான்கு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில், நாட்டைவிட்டு வெளியேறியுள்ள ஒரு கோடியே 20 இலட்சம் மக்கள் மதிப்புடன் நாடு திரும்பவும், போர் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வு காணப்படவும், நாட்டில் அமைதி நிலவவும் அழைப்பு விடுத்தார் கர்தினால் Bechara Rai.
கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையர் தமாஸ்கு நகரில் இத்திங்களன்று நடத்திய ஆண்டுக் கூட்டத்தில், சிரியா, பாலஸ்தீனம், ஏமன், இன்னும் கிறிஸ்தவர்கள் துன்புறும் பிற நாடுகளில் அமைதிக்காகச் செபித்ததாகவும் கூறினார் கர்தினால் Bechara Rai.
இதற்கிடையே, ஈராக்கின் மொசூல் நகரிலுள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றான புனித எப்ரேம் சிரியன் வழிபாட்டு முறை ஆர்த்தடாக்ஸ் ஆலயத்தை மசூதியாக மாற்றும் திட்டம் பற்றி ஐஎஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.    

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

5. பொதுத் தேர்தலில் ஊழல் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள்

ஜூன்,09,2015. 2016ம் ஆண்டில் பிலிப்பைன்சில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் ஊழலுக்குப் பெயர்போன அரசியல்வாதிகளைப் புறக்கணிக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் தங்களின் மேய்ப்புப்பணி அறிக்கையில் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜூன்,07, கடந்த ஞாயிறன்று பிலிப்பைன்சின் அனைத்துப் பங்கு ஆலயங்களிலும் வாசிக்கப்பட்ட ஆயர்களின் இவ்வறிக்கை, ஓட்டுப்போடுதல் வெறும் அரசியல் உரிமை மட்டுமல்ல, இது அறநெறி சார்ந்த கடமையும் ஆகும் என்று வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.
உரிய காலத்திற்கு முன்னரே நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரத்திற்கெதிரான சட்டத்தை முறியடிக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு அரசியல்வாதிகள் திட்டமிட்டுவரும் இவ்வேளையில், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்களின் மனச்சான்றுகளை உருவாக்கும் கடமையிலிருந்து திருஅவை ஒதுங்கி நிற்காது எனவும் பிலிப்பைன்ஸ் ஆயர்கள் கூறியுள்ளனர்.
வாக்குச்சீட்டுக்காகப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்காக அல்ல, சமூகத்தையும், நாட்டையும் வழிநடத்தும் மனிதர்மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்ற சரியான காரணங்களுக்காக ஓட்டியளியுங்கள் என்றும் ஆயர்களின் அறிக்கை குடிமக்களிடம் கூறியுள்ளது.
அரசு அதிகாரத்தை நிரந்தரமாக வைத்திருக்க விரும்பும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்காமல் இருப்பதன்மூலம் குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

6. பாகிஸ்தானில் ஆசியாவிலே மிகப்பெரிய சிலுவை

ஜூன்,09,2015. பாகிஸ்தானின் கராச்சி புறநகர்ப் பகுதியிலுள்ள Gora Qabristan கல்லறைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் மிகப் பெரிய சிலுவை, அந்நாட்டின் சிறுபான்மை கிறிஸ்தவரின் பய உணர்வுகளை நீக்கி நம்பிக்கைக் கதிர்களை வீசுவதாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மக்கள் நெருக்கம் மிகுந்த, அதேநேரம் வன்முறை நிறைந்த கராச்சியில் ஆசியாவிலே மிக உயரமான சிலுவை அமைக்கப்பட்டு வருகிறது.
கராச்சியின் பெரிய Gora Qabristan கல்லறைத் தோட்டத்தில், கான்கிரீட் தளத்தில், 42.6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் இரும்புச் சிலுவைக்கு, கிறிஸ்தவத் தொழிலதிபர் Henry Pervez Gill அவர்கள் நன்கொடை வழங்கியுள்ளார்.
Gill அவர்களின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு வரும் இச்சிலுவை ஆறு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்தவர்கள் இச்சிலுவை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள் என்றும், அப்பகுதியை, நிறையக் கிறிஸ்தவர்கள் பார்வையிடுகின்றார்கள் என்றும், இக்கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள முகமது அலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

7. தென் சூடான் கிறிஸ்தவ சபைகளின் அமைதித் திட்டம்

ஜூன்,09,2015. போரினால் பாதிக்கப்பட்டுள்ள தென் சூடானில் அமைதியைக் கொண்டு வருவதற்கு அரசியலில் எவ்வித ஆர்வமும் காட்டப்படாமல் இருப்பதால், தாங்கள் அமைதி நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு கிறிஸ்தவ சபைகள் அறிவித்துள்ளன.   
தென் சூடானின் ஜூபா கத்தோலிக்கப் பேராயர் Paulino Lukudu Loro அவர்கள் உட்பட, தென் சூடான் கிறிஸ்தவ சபைகள் அவையின் 25 பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ருவாண்டா நாட்டில் நடத்திய ஒரு வாரக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தென் சூடானில் அமைதி மற்றும் ஒப்புரவை ஏற்படுத்துவதற்கு கிறிஸ்தவ சபைகள் தனியாக, திட்டங்களை நிறைவேற்றவிருப்பதாக, அனைத்துலக சமுதாயத்துக்கும், குடி மக்களுக்கும் அறிவித்துள்ளன.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டுப் போருக்குப் பின்னர் 2005ல் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின்படி, 2011ம் ஆண்டில் தென் சூடான், சூடானிலிருந்து சுதந்திரம் அடைந்தது.
ஆயினும், தென் சூடானில் 2013ம் ஆண்டில் மீண்டும் போர் தொடங்கியது. இதில் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

8. உலகப் பெருங்கடல்கள் தினம், ஜூன்,08

ஜூன்,09,2015. இவ்வாண்டில் பாரிசில் நடைபெறவிருக்கும் அனைத்துலக மாநாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் வறுமையை ஒழிப்பது குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கும் அரசுகள், உலகின் பெருங்கடல்களின் சிறப்பு குறித்தும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுள்ளார் பான் கி மூன்.
ஜூன்,08, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலகப் பெருங்கடல்கள் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இவ்வுலக தினத்தில், பெருங்கடல்களைப் பாதுகாத்துப் பேணுவது குறித்த உலகினரின் அர்ப்பணம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
உலகில் ஐந்து பேருக்கு ஒருவர் வீதம் கடற்கரை அருகிலும், ஏழு பேருக்கு மூவர் வீதம் கடல் வளங்களை நம்பியும் வாழ்கின்றனர், பெருங்கடல்கள் காலநிலையை ஒழுங்குபடுத்துகின்றன, அவற்றிலுள்ள இயற்கை வளங்கள், உணவுப் பொருள்கள், வேலை வாய்ப்புகள் என பல வழிகளில் கோடிக்கணக்கணக்கான மக்கள் பெருங்கடல்களால் பயனடைகின்றனர் என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.
வறுமைக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளுக்கென அடுத்த 15 ஆண்டுகளுக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன, ஐ.நா.வின் உறுதியான வளர்ச்சித் திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பெருங்கடல்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அச்செய்தி கூறுகின்றது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...