Tuesday, 16 June 2015

செய்திகள்-16.06.15

செய்திகள்-16.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, மால்ட்டா பிறரன்பு அமைப்பின் தலைவர் சந்திப்பு

2. அந்தியோக்கிய சீரோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் உரோம் பயணம்

3. உலக ஆயர்கள் மாமன்றத்தில் சேலம் ஆயர் மேதகு சிங்கராயன்

4. மனித உரிமைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வலியுறுத்தல்

5. ஆபத்தைச் சந்திக்கும் மனித உயிர்களைப் பாதுகாக்க உலகினருக்கு அழைப்பு

6. இந்தியாவில் சிறுபான்மை மதத்தவரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் அவசியம்

7. வயதானவரின் உரிமைகளுக்கு ஆதரவாக பொதுவில் குரல் எழுப்ப அழைப்பு

8. மருத்துவத் தொண்டுக்காக பிரித்தானிய அரசின் விருது பெற்ற இலங்கைத் தமிழர்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, மால்ட்டா பிறரன்பு அமைப்பின் தலைவர் சந்திப்பு

ஜூன்,16,2015. மால்ட்டா கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின்(The Grand Master of the Sovereign Order of Malta) புரவலர் கர்தினால் Raymond Leo Burke, இந்த அமைப்பின் தலைவர் Fra' Matthew Festing ஆகிய இருவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்செவ்வாயன்று வத்திக்கானில் சந்தித்தனர்.
வத்திக்கானில் திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
மேலும், உலகின் பல பகுதிகளிலுள்ள புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோர் உட்பட பல்வேறு பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும் இந்த அனைத்துலக மால்ட்டா அமைப்பு, சுவர்களைக் கட்டுவதற்கு அல்ல என்ற தலைப்பில், அனைத்துலக அளவில் புலம்பெயர்வோர்க்கு ஆதரவாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட உள்ளது.       
ஜூன்,20, வருகிற சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் உலக புலம்பெயர்வோர் தினத்தன்று இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
சிரியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக இடம்பெற்று வரும் சண்டையில், ஒவ்வொரு 60 வினாடிகளுக்கு ஒரு குடும்பம் வீதம் வீட்டை விட்டு வெளியேறுகின்றது, உலகில் ஏதாவது ஒரு பகுதியில் ஒவ்வொரு 3 வினாடிகளுக்கு ஒருவர் வீதம் புலம்பெயர்கின்றார் என்று இவ்வமைப்பு கூறியுள்ளது.
இன்று உலகில் 120 நாடுகளில் எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வப் பணியாளர்கள் இந்த மால்ட்டா அமைப்பில் பணி செய்கின்றனர்.  

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. அந்தியோக்கிய சீரோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் உரோம் பயணம்

ஜூன்,16,2015. அந்தியோக்கிய சீரோ ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை Moran Mor Ignatius Aphrem II அவர்கள், இப்புதன் முதல் சனிக்கிழமை வரை உரோம் நகரில் பயணம் மேற்கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, திருத்தந்தையுடன் சேர்ந்து செபிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியோக்கிய சீரோ ஆர்த்தடாக்ஸ் சபையின் 123வது முதுபெரும் தந்தையாக 2014ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுபெரும் தந்தை 2ம் எப்ரேம் அவர்கள்,  இம்மாதம் 17 முதல் 20 வரை உரோம் நகரில் பயணம் மேற்கொள்வார்.
சீரோ ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை, அந்தியோக்கியாவில் வாழ்ந்த முதல் கிறிஸ்தவ சமூகத்திடமிருந்து உருவானதாகச் சொல்லப்படுகிறது. இந்நகரில் புனிதர்கள் பேதுருவும், பவுலும் தங்கியிருந்துள்ளனர். இங்கிருந்தே ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் முதல் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் சென்றனர். தற்போது சீரோ ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை உலகெங்கும் 18 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் ஆறு இலட்சம் பேர் சிரியா, துருக்கி, ஈராக், லெபனான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ளனர். இன்னும், இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, நியுசிலாந்து ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றனர்.
இந்தியாவில் இச்சபையினர் 12 இலட்சம் பேர் உள்ளனர். இந்திய சீரோ மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் மேதகு பசிலியோஸ் முதலாம் தாமஸ் அவர்கள் இப்பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்பார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. உலக ஆயர்கள் மாமன்றத்தில் சேலம் ஆயர் மேதகு சிங்கராயன்

ஜூன்,16,2015. வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கெடுக்கும் பல்வேறு நாடுகளின் ஆயர்கள் பேரவைகளின் பிரதிநிதிகள் மற்றும் பதிலாளர்களின் பெயர்கள் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன. கடந்த சனவரி 31 மற்றும் மார்ச் 25 தேதிகளில் வெளியிடப்பட்ட பிரதிநிதிகள் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், கோவா பேராயர் Filipe Neri António Sebastião DO ROSÁRIO FERRÃO, புனலூர் ஆயர் Selvister PONNUMUTHAN, ஷில்லாங் பேராயர் Dominic JALA ஆகியோர் உறுப்பினர்களாகவும், சேலம் ஆயர் சிங்கராயன் செபஸ்தியானப்பன் அவர்கள் பதிலாளராகவும் பங்கெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து Kurunegala ஆயர் Harold Anthony PERERA அவர்கள் உறுப்பினராகவும், அனுராதபுர ஆயர் Norbert Marshall ANDRADI அவர்கள் பதிலாளராகவும் பங்கெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற அக்டோபர் 4 முதல் 25 வரை வத்திக்கானில் நடைபெறும்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

4. மனித உரிமைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வலியுறுத்தல்

ஜூன்,16,2015. மனித உரிமைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதன் வழியாக குடிபெயரும் மக்களும், அம்மக்களை அனுப்புகின்ற மற்றும் அவர்களை வரவேற்கின்ற நாடுகள் உண்மையிலேயே பலன் அடைய முடியும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 29வது அமர்வில் குடிபெயரும் மக்கள் குறித்த கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு கூறினார்.
குடிபெயரும் மக்களின் மனித உரிமைகளையும், மாண்பையும் ஊக்குவித்து மதிப்பதன் மூலம், சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதரின் உரிமைகளும், மாண்பும் முழுமையாய் மதிக்கப்படும் என்று கூறினார் பேராயர் தொமாசி.
குடிபெயரும் மக்களை வரவேற்கின்ற நாடுகளின் தேசிய பொருளாதாரத்திற்கும், சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கும், மக்கள் தொகைக்கும் அம்மக்கள் சுமையாக உள்ளனர் என்ற கருத்து நிலவுகிறது, ஆனால் கிடைத்துள்ள சான்றுகளின்படி, குடிபெயர்வோர் தேசிய கலாச்சாரத்திற்குப் புதிய மதிப்பீடுகளை வழங்குகின்றனர் என்று குறிப்பிட்டார் பேராயர் தொமாசி.
2013ம் ஆண்டில் இத்தாலியில் ஏறக்குறைய 4,97,000 புதிய தொழில்கள் வெளிநாட்டு குடிமக்களால் நடத்தப்பட்டன என்றும், ஐரோப்பாவில் கடந்த பத்து ஆண்டுகளில் குடிபெயரும் மக்களின் வேலைத்திறன் 70 விழுக்காடாக உள்ளது என்றும் கூறினார் பேராயர் தொமாசி.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின்(OECD) இக்கணிப்பைக் குறிப்பிட்ட பேராயர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வேலைத்திறன் அதிகரிப்பில் குடிபெயரும் மக்களின் பங்களிப்பு 47 விழுக்காடு என்றும் கூறினார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

5. ஆபத்தைச் சந்திக்கும் மனித உயிர்களைப் பாதுகாக்க உலகினருக்கு அழைப்பு

ஜூன்,16,2015. WCC உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமும், கடல் அல்லது வேறு எந்தப் பயணத்திலோ ஆபத்தை எதிர்நோக்கும் மனிதரின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு அனைத்துலக சமுதாயத்திற்கு நன்னெறி மற்றும் சட்டமுறையான கடமை உள்ளது என்று இத்திங்களன்று கூறியுள்ளது.
உலகின் பல பகுதிகளின் குடிபெயரும் எண்ணற்ற மக்கள் குறித்து, குறிப்பாக, ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள WCC மன்றம், இந்நிலைமை புதிது இல்லையெனினும், இக்காலத்தில் இத்துன்பநிலை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.
2015ம் ஆண்டு சனவரியிலிருந்து 1,800க்கும் மேற்பட்ட குடிபெயர்வோர் மத்திய தரைக் கடலில் இறந்துள்ளனர். இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில், 25 ஆயிரம் ரோகிங்க்யா மற்றும் பங்களாதேஷ் மக்கள், தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கென மனித வர்த்தகர்கள் படகுகளில் பயணம் செய்துள்ளனர்.
இதற்கிடையே, குடிபெயரும் மக்களில் எவ்வளவு பேரை தங்கள் தங்கள் நாடுகளில் ஏற்கலாம் என்பது குறித்து 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் லக்சம்பர்க்கில் விவாதித்து வருகின்றன.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

6. இந்தியாவில் சிறுபான்மை மதத்தவரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் அவசியம்

ஜூன்,16,2015. இந்தியாவில் அதிகரித்துவரும் தீவிரவாத வன்முறை அச்சுறுத்தலிலிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்குத் தவறியுள்ளார் என்று கர்தினால் டெலஸ்போர் டோப்போ அவர்கள் கூறியுள்ளார்.
Aid to the Church in Need என்ற பன்னாட்டு கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்த ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ அவர்கள், இந்துமதத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில் கிறிஸ்தவர்களையும், சிறுபான்மை மதத்தவரையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் அவசியம் என்று கூறினார்.
பிரதமர் மோடி அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதி, வாக்குறுதியாக மட்டுமே உள்ளது, எனினும், பிரதமர் மோடி அவர்களின் உரை, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பிற தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அரசின் அர்ப்பணத்துக்கு உறுதி அளிப்பதாக உள்ளது என்றும் கூறினார் கர்தினால் டோப்போ.
இந்தியாவில் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து வாழ்வது, நாட்டில் கிறிஸ்தவத்தின் இருப்புக்கு முக்கியமானது என்றும் கூறியுள்ளார் கர்தினால் டோப்போ.
இதற்கிடையே, கர்தினால் டோப்போ அவர்களுக்கு கடந்த வாரத்தில் விடுத்த மரண அச்சுறுத்தல் தொடர்பாக, சந்தேக நபர் ஒருவரை இத்திங்களன்று காவல்துறை கைது செய்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் ICN / வத்திக்கான் வானொலி
7. வயதானவரின் உரிமைகளுக்கு ஆதரவாக பொதுவில் குரல் எழுப்ப அழைப்பு

ஜூன்,16,2015. வயதானவர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் தனிப்பட்ட அமைப்புகளிலும், வெளியில் தெரியாமலும் இடம்பெற்றுவரும்வேளை, வன்முறை மற்றும் உரிமை மீறல்களிலிருந்து விடுபட்ட சுதந்திரமான வாழ்வு வாழ்வதற்கு இவர்களுக்கு இருக்கும் உரிமைகளுக்கு ஆதரவாக மக்கள் பொதுவில் குரல் எழுப்புமாறு கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.
வயதானவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்த உலக விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்ட ஜூன் 15, இத்திங்களன்று இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள பான் கி மூன் அவர்கள், இன்றைய நம் உலகில் வயதான தலைமுறைகள் புறக்கணிக்கப்படுவதும், அவர்களின் உரிமைகள் மீறப்படுவதும் கவலை தருகின்ற உண்மை நிகழ்வுகளாக உள்ளன என்று இவ்வுலக தினத்திற்கென வெளியிட்ட தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் வயதானவர்கள் 20 விழுக்காட்டுக்கு மேல் இருப்பார்கள் என்றும், அனைவருக்கும் மாண்பு நிறைந்த வாழ்வை அமைத்துக்கொடுப்பதற்கு உறுதி எடுப்போம் என்றும் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.
1995ம் ஆண்டில் அறுபதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 54 கோடியே 20 இலட்சமாக இருந்தனர், இவ்வெண்ணிக்கை 2025ம் ஆண்டில் ஏறக்குறைய 120 கோடியாக உயரும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளது. 

ஆதாரம் UN / வத்திக்கான் வானொலி

8. மருத்துவத் தொண்டுக்காக பிரித்தானிய அரசின் விருது பெற்ற இலங்கைத் தமிழர்

ஜூன்,16,2015.  இலங்கை மட்டக்களப்பில் பிறந்து பாப்புவா நியூகினியில் மருத்துவராகப் பணியாற்றும் மருத்துவர் ஆதித்தன் செல்வநாதன் அவர்களுக்கு பிரித்தானிய அரசு OBE விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சிறிய நாடான பாப்புவா நியூகினியிலுள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக பாராட்டுப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாப்புவா நியூகினியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் அவர், விமானங்களில் பறப்பவர்களின் உடல்நிலை குறித்த சிறப்பு மருத்துவப் படிப்பை படித்துள்ளார்.
பாப்புவா நியூகினியில் போதிய உயர்தர மருத்துவ வசதிகள் இல்லையென்றும், உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர் உயர் சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கோ அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கோ செல்லவேண்டிய நிலை உள்ளது எனவும் ஆதித்தன் செல்வநாதன் கூறினார்.

ஆதாரம் பிபிசி / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment