Tuesday, 16 June 2015

செய்திகள்-15.06.15

செய்திகள்-15.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : மத்தியக் கிழக்கில் அருள் பணியாளர்களின் சேவை தொடரட்டும்

2. செக் குடியரசின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவுடன் திருத்தந்தை

3. கொலம்பியா அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

4. திருத்தந்தை: உலக இரைச்சல்களிலிருந்து விடுதலைப் பெற்றதாக நம் இதயம் இருக்கட்டும்

5. வேறு தீர்வுகள் எதுவும் இல்லாதபோதே முதியோர் இல்லம் - திருத்தந்தை

6. திருத்தந்தை :  நம்பிக்கைக்கு உயிரளிக்கிறது இறையன்பு

7. இறைவனின் படைப்பைக் காக்க வேண்டிய மனிதர்களின் பொறுப்பு

8. இந்தியாவில் 2 ஆண்டுகளில் 40,000 டன் தானியம் வீண்

9. ஐரோப்பாவில் வெளிநாட்டவர்கள் மீதான 'வெறுப்புணர்வு அச்சம்'
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : மத்தியக் கிழக்கில் அருள் பணியாளர்களின் சேவை தொடரட்டும்

ஜூன்,15,2015. கீழைவழிபாட்டுமுறை அருள் பணியாளருக்கும், மறைமாவட்டங்களுக்கும் உதவிவரும் ROACO என்ற அமைப்பின் உறுப்பினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினருக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் முடிவுறாத மோதல்கள் மற்றும் மக்களின் துன்பங்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டத் திருத்தந்தை, இம்மக்களின் துன்பக் குரலுக்குச் செவிமடுக்கும், மற்றும் அவர்களிடையே உதவிகள் புரியும் அருள் பணியாளர்களின் சேவை தொடரட்டும் என்று வேண்டிக் கொண்டார்.
கிழக்கு ஐரோப்பாவில் மக்களிடையே கீழைவழிபாட்டு முறை திருஅவைகள் ஆற்றிவரும் பணிகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
துன்புறும் மக்களின் அழுகுரலை நம்முடையதாக ஏற்றுக்கொள்ளும்போதுதான், பாராமுகம் என்ற சுவரை உடைத்து, தன்னலத்தை நம்மால் வெற்றிகொள்ள முடியும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ பிறரன்பை போதித்துச் செயல்படுத்தும் ஒவ்வொருவரும், மனித மாண்புக்கு ஊறு விளைவிக்கும் ஒவ்வொன்றையும் எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார், திருத்தந்தை.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

2. செக் குடியரசின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவுடன் திருத்தந்தை

ஜூன்,15,2015. கிறிஸ்தவ மறையின் சீர்திருத்தவாதிகளுள் ஒருவரும், செக் குடியரசைச் சார்ந்தவருமான Jan Hus அவர்கள் இறந்ததன் 600ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, உரோம் நகர் வந்திருந்த செக் குடியரசின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவைச் சார்ந்தவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
Prague பல்கலைக் கழகத்தின் அதிபராகவும், புகழ்பெற்ற மறையுரையாளராகவும் விளங்கிய Jan Hus அவர்கள், ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர், மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து, தன் வருத்தத்தை அக்குழுவினரோடு பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, Jan Hus அவர்கள் குறித்த ஆய்வுகள், இன்றைய கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளுக்கு பெரும் தூண்டுகோலாக உள்ளன என்றும் தெரிவித்தார்.
தன் அழைப்புக்கு பிரமாணிக்கமாக இருக்கும் திருஅவை, ஒன்றிப்பை நோக்கி நடைபோடுவதன் அடிப்படையாக, திருஅவையின் புதுப்பிக்கும் பணி அமைந்துள்ளது என்றும், செக் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவினரிடம் தெரிவித்தார், திருத்தந்தை.
அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் ஒன்றிணைந்து, ஒரே திருஅவையாகச் செயல்படுவது, நாம் அறிவிக்கும் நற்செய்திக்கு நம்பத்தகுந்த ஒரு சாட்சியமாக விளங்கமுடியும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

3. கொலம்பியா அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஜூன்,15,2015. கொலம்பியா நாட்டு அரசுத் தலைவர், Juan Manuel Santos Calderón அவர்கள், இத்திங்கள் காலை, வத்திக்கானுக்கு வருகை தந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.
வத்திக்கானுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், கொலம்பியாவில், மனித வளர்ச்சி, மற்றும் சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதென, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.
கொலம்பியா நாட்டில் நிலவும் இறுக்கமானச் சூழலைத் தீர்வுக்குக் கொணர, பல்வேறு குழுக்களும், திறந்த மனதுடன், ஒப்புரவு, உரையாடல் ஆகிய பாதைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டுமென்று இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
திருத்தந்தையைச் சந்தித்தபின், கொலம்பியா அரசுத் தலைவர் Santos Calderón அவர்கள், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை: உலக இரைச்சல்களிலிருந்து விடுதலைப் பெற்றதாக நம் இதயம் இருக்கட்டும்

ஜூன்,15,2015. இறையருளைப் பெறுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும்படி, இவ்வுலகின் ஆசைகள் மற்றும் இரைச்சல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கிறிஸ்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையருளை நாம் பெறவேண்டுமெனில், இவ்வுலக ஆசை மற்றும் வீண் இரைச்சல்களிலிருந்து நம் இதயம் சுதந்திரம் பெற்றதாக இருக்கவேண்டும் என்றார்.
கோவிலுக்குச் செல்வதும், திருப்பலிகளில் பங்கேற்பதும் மட்டும் போதாது, கிறிஸ்தவர்களாக நாம் வாழ்ந்துகாட்ட வேண்டும், இல்லையெனில் நாம் பிறருக்கு இடறலாக இருப்போம் எனவும் கூறினார் திருத்தந்தை.
கண்ணுக்கு கண்என அலையும் உலகில் 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு' என வருவதே இறைவனின் குரல் எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாழ்ச்சியுடைய இதயத்தை நாம் கொண்டிருப்பதுடன், நம் செயல்கள் வழியே பிறருக்கு இடறலாக இல்லாமல் இருப்பதும் மிகவும் முக்கியம் என மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. வேறு தீர்வுகள் எதுவும் இல்லாதபோதே முதியோர் இல்லம் - திருத்தந்தை

ஜூன்,15,2015. நம் ஆன்மாக்களை சிறைப்படுத்தும் தத்துவங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக, பெற்றோரும், குடும்பங்களும் எதிர்த்து நிற்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
உரோம் மறைமாவட்டம் ஏற்பாடு செய்த ஆன்மீக ஆண்டு கருத்தரங்கில் பங்குபெற வந்துள்ளோரை, ஞாயிறு மாலை, வத்திக்கான் பேதுரு வளாகத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு ஊழல்களால் துன்புறும் உரோம் நகருக்கு ஓர் ஆன்மீக மறுபிறப்பு தேவைப்படுகின்றது என்று எடுத்துரைத்தார்.
தவறான கொள்கைகளின் பாதிப்புக்களிலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்பட, குடும்பங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நடவடிக்கைகள் இல்லையெனில், உன்னதக் கொள்கைகளின்றி வளரும் வருங்கால தலைமுறையால், மனித சமுதாயமும், நாடும், குடும்பங்களும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதென்று தெரிவித்தார்.
தவிர்க்கமுடியாதச் சூழல்களால் பெற்றோர்கள் பிரிய நேர்ந்தாலும், ஒருவர் மற்றவரைக் குறித்து ஒருநாளும் தவராகப் பேசாதீர்கள், ஏனெனில், பெற்றோரிடமிருந்தே குழந்தைகள் மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.
குடும்பங்களில் வயதில் முதிர்ந்தோர் அன்பு கூரப்பட்டு, மதிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர் இல்லம் என்பது, வேறு தீர்வுகள் எதுவும் இல்லாதபோது, நாடப்படும் கடைசி புகலிடமாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

6. திருத்தந்தை :  நம்பிக்கைக்கு உயிரளிக்கிறது இறையன்பு

ஜூன்,15,2015. சிறு விதையானது பெரிய மரமாக வளர்வதுபோல், சிறியனவாக இருப்பனவற்றையும், இறையன்பும், வாழ்வுதரும் வார்த்தைகளும் புளிக்காரமாகச் செயல்பட்டு, பெரியனவாக மாற்றுகின்றன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விதைகள் முளைவிடுவது, மற்றும் கடுகு சிறியதாயினும் பெரிய மரமாக வளர்வது போன்ற உவமைகளை மேற்கோள்காட்டி இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உவமைகள் வழி, வாழ்வுதரும் இறைவார்த்தையின் வலிமை குறித்து இயேசு நமக்கு கற்பிக்க விரும்புகிறார் என்றார்.
இறைவனின் வார்த்தை நம்முள் வேரூன்றி முளைவிடுவதற்கு உதவும் நோக்கில், அவ்வப்போது நற்செய்தி வாசகங்களை வாசிக்கப் பழகவேண்டும், அதற்கு நாம் எப்போதும் கையடக்க விவிலியப் பிரதிகளைக் கொண்டிருப்பது அவசியம் எனவும் கூறினார் திருத்தந்தை.
இறையரசு என்பது இறைவன் நமக்கு வழங்கும் கொடை, அதற்கு நம் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது எனவும் தன் மூவேளை செப உரையில் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் எத்தனை இடர்பாடுகளைச் சந்தித்தாலும் இறையன்பு என்பது நம்பிக்கைக்கு உயிரளிப்பதாகச் செயல்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. இறைவனின் படைப்பைக் காக்க வேண்டிய மனிதர்களின் பொறுப்பு

ஜூன்,15,2015. இறைவனின் படைப்பைக் காக்க வேண்டிய மனிதர்களின் பொறுப்பு குறித்த தன் சுற்றுமடல், வரும் வியாழனன்று வெளியிடப்படும் என்பதை தன் மூவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சுற்றுச்சூழல் அழிவுக்குள்ளாகி வரும் இந்நாட்களில், நம்முடைய புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணம், பெரிய அளவில் தேவைப்படுகின்றது என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் நமக்கு வழங்கியுள்ள பொது வீடாகிய இவ்வுலகிற்கான நம் கடமைகளை வலியுறுத்த தன் சுற்றுமடல் உதவும் என நம்புவதாகவும் கூறினார்.
இஞ்ஞாயிறுன்று உலகில் சிறப்பிக்கப்பட உலக இரத்ததான தினம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இரத்த தானம் செய்வோருக்கு தன் நன்றியை வெளியிடுவதாகவும், இவர்களின் முன்மாதிரிகையை இளையோர் அனைவரும் பின்பற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. இந்தியாவில் 2 ஆண்டுகளில் 40,000 டன் தானியம் வீண்

ஜூன்,15,2015. கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும், இந்திய உணவு தானிய கழகத்திற்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த 40.000 டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
தானியக் கிடங்குகளில் போதிய அளவு பராமரிப்பு இல்லாததே இதற்குக் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய வீணடிப்புகளால், வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய வறட்சியை சந்திக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

9. ஐரோப்பாவில் வெளிநாட்டவர்கள் மீதான 'வெறுப்புணர்வு அச்சம்'

ஜூன்,15,2015. ஆப்பிரிக்காவிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் ஐரோப்பாவுக்கு பெருமளவில் மக்கள் குடிபெயர்ந்துவரும் சூழ்நிலையால் வெளிநாட்டவர்கள் மீதான நியாயமற்ற வெறுப்புணர்வுடன் கூடிய அச்சம் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக ஐ.நா.வின் குடியேற்றதாரர் தொடர்பான பிரதிநிதி பீட்டர் சதர்லேண்ட் கூறினார்.
குடியேற்றதாரர், பெரும்பாலும் சிரியாவிலிருந்தும் எரித்திரியாவிலிருந்தும் வெளியேறுகின்றவர்கள் என்றுரைத்த சதர்லேண்ட் அவர்கள், இவர்கள் இறுதியாக சென்று சேருகின்ற ஐரோப்பிய நாடுகளிடம் தஞ்சம் பெறுவதற்கு அவர்கள் உரிமையுடையவர்கள் என்றும் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் தஞ்சம் அளிக்கப்படும் குடியேற்றதாரர் எண்ணிக்கை தொடர்பில் புதிய நடைமுறை அவசியம் என்றும் ஐ.நா. பிரதிநிதி தெரிவித்தார்.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...