செய்திகள்-12.06.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. காந்திநகர் உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்
2. விமான நிலைய ஆன்மீகப் பணியாளர்களுக்கு திருத்தந்தை உரை
3. திருத்தந்தை பிரான்சிஸ், போலந்து பிரதமர் Kopacz சந்திப்பு
4. குடும்ப அமைப்பு முறையைப் பாதுகாப்பதற்கு ஆப்ரிக்க ஆயர்கள் உறுதி
5. அமெரிக்கக் கோப்பை 2015ல் மனித வர்த்தகத்தைத் தடைசெய்க
6. காலநிலை மாற்றம் வருங்கால வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல்
7. தமிழகத்தில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது
8. ரூ.1,400 கோடியில் சூரிய மின் உற்பத்தி திட்டம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. காந்திநகர் உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்
ஜூன்,12,2015. இந்தியாவின் காந்திநகர் உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, அகமதபாத் மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் Thomas Ignatius Macwan அவர்களை இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குஜராத் மாநிலத்தின் காந்திநகர் உயர் மறைமாவட்டத்தின் மேய்ப்பராகப் பணியாற்றிய 76 வயதாகும் பேராயர் Stanislaus Fernandes அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயரை நியமித்துள்ளார்.
காந்திநகர் உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Thomas Ignatius Macwan அவர்கள், 1952ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி Nadiadவில் பிறந்தார். இவர், 1988ம் ஆண்டில் குருவாகவும், 2003ம் ஆண்டு சனவரி 11ம் தேதி Ahmedabad ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
காந்திநகர் உயர் மறைமாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. விமான நிலைய ஆன்மீகப் பணியாளர்களுக்கு திருத்தந்தை உரை
ஜூன்,12,2015. இறைவனின் எல்லையில்லா கருணை தெளிவாக வெளிப்படும், ஒப்புரவு மற்றும் திருநற்கருணை அருளடையாளங்கள் வழியாக, நல்ல ஆயராம் கிறிஸ்து விமான நிலையங்களிலும் தம் மக்களைப் பராமரிக்க விரும்புகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விமான
நிலையங்களில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணியாளர்கள் மற்றும்
உறுப்பினர்களுக்கான 16வது அனைத்துலக கருத்தரங்கில் கலந்து கொள்ளும் எண்பது
பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் இறைவார்த்தையைக் கேட்கும் ஆவலைத் தூண்டுவது விமான நிலைய ஆன்மீகப் பணியாளர்களின் மறைப்பணி என்று கூறினார்.
வர்த்தகம், சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காகப் பயணம் மேற்கொள்ளும் மக்களை மட்டுமல்லாமல், சிறப்புக் கவனம் தேவைப்படும் புலம்பெயர்வோர், குடிபெயர்வோர், சிறாரும், வயதானவர்கள், சிறார் என பலதரப்பட்ட மக்களையும் விமான நிலையங்களில் சந்திக்க வேண்டியிருப்பதால், பன்மையில் ஒற்றுமை என்ற இடத்தில் மறைப்பணியாற்ற ஆன்மீகப் பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
விபத்து, விமானக்
கடத்தல் போன்றவற்றால் கடுமையாய்ப் பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு
மற்றும் உளவியல் முறையில் பணியாற்ற வேண்டியிருப்பதையும் குறிப்பிட்ட
திருத்தந்தை, இறைவார்த்தை மூலம் ஆறுதல் அளிக்குமாறும், இறைவனின் இரக்கத்தில் மக்கள் நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
சாட்சிய வாழ்வு மூலம், மக்கள் தங்கள் இதயங்களைக் கிறிஸ்துவுக்குத் திறப்பதற்கு உதவுமாறு கூறிய திருத்தந்தை, மக்கள் மத்தியில் அன்பு, உரையாடல், உடன்பிறப்பு உணர்வு, அமைதியான சமூகச் சூழல் போன்றவை நிலவும் இடங்களாக விமான நிலையங்கள் அமையுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன்,10, இப்புதனன்று தொடங்கியுள்ள இக்கருத்தரங்கு, ஜூன்,13 வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும்.
2013ம்
ஆண்டில் ஏறக்குறைய 300 கோடியாக இருந்த விமானப் பயணியர் எண்ணிக்கை கடந்த
ஆண்டில் 310 கோடியாக உயர்ந்தது. இன்று உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 2
கோடியே 92 இலட்சம் பயணியர் மற்றும் எண்பதாயிரம் வர்த்தக விமானங்கள்
இயக்கப்படுகின்றன. 2020ம் ஆண்டில் 20 கோடி வர்த்தக விமானங்கள் இயக்கப்படும்
என எதிர்பார்க்கப்படுகின்றது
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ், போலந்து பிரதமர் Kopacz சந்திப்பு
ஜூன்,12,2015. போலந்து நாட்டுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் உறவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, போலந்து பிரதமர் Ewa Kopacz அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.
இதற்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளிவிவகாரத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் திருப்பீடத்தில் சந்தித்தார் போலந்து பிரதமர் Kopacz.
2016ம் ஆண்டில் போலந்தில் நடைபெறவிருக்கும் உலக கத்தோலிக்கர் இளையோர் தினத் தயாரிப்புகளில் திருஅவைக்கும், போலந்துக்கும் இடையே ஒத்துழைப்பு சிறப்பாக இடம்பெறுகின்றது என்று இச்சந்திப்பில் பேசப்பட்டதென்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.
இன்றைய உலகின் நிலைமைகள் குறித்து, சிறப்பாக உக்ரெய்ன் பற்றியும், போலந்தின் தற்போதைய சமூக-பொருளாதாரச் சூழலில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் பற்றியும், சில அறநெறிக் கூறுகள் பற்றியும் இச்சந்திப்பில் பேசப்பட்டதென்று கூறிய அச்செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.
2016ம் ஆண்டில் கிராக்கோவில் இடம்பெறவிக்கும் உலக இளையோர் தின நிகழ்வுகளில் திருத்தந்தை கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. குடும்ப அமைப்பு முறையைப் பாதுகாப்பதற்கு ஆப்ரிக்க ஆயர்கள் உறுதி
ஜூன்,12,2015. ஆப்ரிக்காவில் திருஅவையின் பணியை ஊக்குவிப்பதற்கும், குடும்ப அமைப்பு முறையைப் பாதுகாப்பதற்கும் அக்கண்டத்தின் கத்தோலிக்கத் திருஅவை, நம்பிக்கைக்குரிய ஒரே குரலாக இணைந்து செயல்படுவதற்குத் தீர்மானித்துள்ளது என்று ஆப்ரிக்க ஆயர்கள் தெரிவித்தனர்.
திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் பேராயத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் இச்செவ்வாயன்று கானா நாட்டில் திருஅவைத் தலைவர்களுக்கு ஆற்றிய உரைக்குப் பின்னர் இவ்வாறு ஆப்ரிக்க ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.
வருகிற
அக்டோபரில் வத்திக்கானில் குடும்பம் குறித்து நடைபெறவிருக்கும் உலக ஆயர்
மாமன்றத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால்
சாரா அவர்கள், ஆப்ரிக்காவில் குடும்பத்தை அழிக்கும் நோக்கத்தில், குடும்பத்தின் புனிதத்தன்மை பல கருத்தியல்களால் தாக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.
திருமணம் குறித்த திருஅவையின் போதனைகளை வலியுறுத்த அஞ்ச வேண்டாம் எனவும் ஆயர்களைக் கேட்டுக்கொண்ட கர்தினால் சாரா அவர்கள், குடும்பம்
குறித்த நேர்மறை விழுமியங்கள் ஊக்குவிக்கப்படுவதற்கு இடையூறாய் நிற்கும்
தேசிய மற்றும் பன்னாட்டுக் கொள்கைகளுக்கு எதிராய்க் குரல் எழுப்புமாறும்
கூறினார்.
குடும்பம் குறித்த உலக ஆயர் மாமன்றம், வருகிற அக்டோபர் 4 முதல் 25ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. அமெரிக்கக் கோப்பை 2015ல் மனித வர்த்தகத்தைத் தடைசெய்க
ஜூன்,12,2015. சிலே நாட்டில் அமெரிக்கக் கோப்பை 2015 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாள்களில், சிலே மற்றும் அர்ஜென்டீனா நாடுகளில் மனித வர்த்தகத்தைத் தடைசெய்வதற்கு கத்தோலிக்க நிறுவனங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இலத்தீன் அமெரிக்க நாடான சிலேயில் இவ்வியாழனன்று அமெரிக்கக் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளவேளை,
அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் சுற்றுலா ஆணைக்குழு தலைமையில் பல்வேறு திருஅவை
மற்றும் பொது அமைப்புகள் மனித வர்த்தகத்தைத் தடைசெய்யும் நடவடிக்கைகளில்
இறங்கியுள்ளன.
மனித வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு பொது மக்களைத் தூண்டி வரும் கத்தோலிக்க நிறுவனங்கள், மனித வர்த்தகத்தைத் தடைசெய்க, பாலியல் தொழிலுக்கு எதிர்ப்பு என்ற வார்த்தைகள் அடங்கிய விளம்பரங்களையும் எழுதி வெளியிட்டுள்ளன.
உலக கோப்பை விளையாட்டுப் போட்டிகள் சமயத்தில் மனித வர்த்தகம் அதிகரிக்கின்றது என்றும், ஜெர்மனியிலும்
தென்னாப்ரிக்காவிலும் இப்போட்டிகள் நடைபெற்றபோது இந்நாடுகளில் முறையே 30
மற்றும் 40 விழுக்காடுகள் அதிகரித்தன என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூன்,11ம் நாளன்று ஆரம்பித்துள்ள அமெரிக்கக் கோப்பை 2015, ஜூலை 4ம் தேதி நிறைவடையும்.
ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
6. காலநிலை மாற்றம் வருங்கால வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல்
ஜூன்,12,2015.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் சரியான கொள்கைகள்
வகுக்கப்பட்டால் ஆறு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று உலக
தொழில் நிறுவனம் கூறியுள்ளது.
ஜெனீவாவிலுள்ள ILO உலக தொழில் நிறுவனத்தின் தலைமையிடத்தில், உலக தொழில் நிறுவனத்தின் மாநாட்டை இவ்வியாழனன்று தொடங்கி வைத்து உரையாற்றிய அந்நிறுவனத் தலைவர் Guy Ryder அவர்கள், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்று கூறினார்.
காலநிலை மாற்றத்தை தற்போது கட்டுப்படுத்தாமல் இருப்பது, வருங்காலத் தொழில் உலகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்த Ryder அவர்கள், வறட்சியின் பாதிப்பை சில நாடுகள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
7. தமிழகத்தில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது
ஜூன்,12,2015. உலகில் அனைத்துச் சிறாருக்கும் தரமான கல்வி வழங்குவது உறுதி செய்யப்படுவதே, சிறார் தொழில்முறையை ஒழிப்பதற்குச் சிறந்த யுக்தியாக இருக்கும் என்று, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் யூனிசெப் தலைவர் Job Zachariah அவர்கள் தெரிவித்தார்.
அனைத்துலக சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தினமான ஜூன் 12, இவ்வெள்ளியன்று, இவ்வாறு கூறிய Job Zachariah அவர்கள், அனைத்துச் சிறாரும் தவறாமல் பள்ளிக்குச் செல்வது உறுதி செய்யப்பட்டால், நாட்டில் சிறார் தொழிலாளர்களே
இருக்க மாட்டார்கள் என்றும் கூறினார். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்
சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் குறைந்துள்ளது என்றும் அவர்
கூறினார்.
மேலும், இந்திய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்(MHRD) ஆய்வறிக்கையின்படி, தமிழகத்தில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது என்றும், 2014ம்
ஆண்டில் பள்ளிப்படிப்பை இடையிலே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையும்
மிகவும் குறைந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. 6 வயதுக்கும் 14
வயதுக்கும் உட்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது 99.3 விழுக்காடு உறுதி
செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வுலக நாளில், ILO உலக தொழில் நிறுவனமும், உலகெங்கும் சிறார்க்குத் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்டுள்ளது.
2002ம் ஆண்டிலிருந்து ஜூன் 12ம் தேதி உலக சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
‘குழந்தைத் தொழில் முறையைத் தவிர்ப்போம், தரமான கல்வியை ஊக்குவிப்போம்’ என்ற தலைப்பில் 2015ம் ஆண்டின் இவ்வுலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆதாரம் : Indian Express / வத்திக்கான் வானொலி
8. ரூ.1,400 கோடியில் சூரிய மின் உற்பத்தி திட்டம்
ஜூன்,12,2015. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,400
கோடி ரூபாய் முதலீட்டில் 200 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய
மின் பூங்காவை அமைக்க தமிழக அரசுடன் அதானி குழுமம் மின் கொள்முதல்
ஒப்பந்தம் செய்துள்ளது.
இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக (TANGEDCO) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விரைவில்
தமிழகத்தில் 1000 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்
தொழிற்சாலையைத் தொடங்குவது குறித்தும் மாநில அரசுடன் அதானி குழுமம் ஆலோசனை
நடத்தி வருகிறது.
200
மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலைக்கான ஒப்பந்தம்
இவ்வாரத்தில் கையெழுத்தாகியது. ஒரு மெ.வா மின்சார உற்பத்திக்கு ரூ.6.5 கோடி
முதல் ரூ.7 கோடி வரை முதலீடு செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின் உற்பத்தி
மற்றும் பகிர்மானக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த
மூன்று ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தியை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட
இலக்கில் தமிழக அரசு 5% உற்பத்தியை மட்டுமே அடைந்துள்ளது.
தமிழ்நாடு
சூரிய சக்திக் கொள்கை 2012-ல் ஆண்டுக்கு 1000 மெகவாட்டாக மூன்றாண்டுகளில்
மூவாயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பு மற்றும் உள்நாட்டிலேயே சூரிய
ஆற்றல் கருவிகளை உருவாக்கிடும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கை
முன்மொழியப்பட்டது.
மரபுசாரா
மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள
புள்ளி விபரத்தில் கடந்த மே மாதம் வரை சூரிய மின் பூங்காக்கள் தொடங்கப்பட்ட
வகையில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.
ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment