Friday, 26 June 2015

செய்திகள்-24.06.15

செய்திகள்-24.06.15

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : உரையாடல்கள், உடன்பிறந்தோர் உணர்வை விதைக்கும்

2. கிறிஸ்தவ சபைகளின் உலக அவைக்கு திருத்தந்தையின் செய்தி

3. ஆயர்கள் பொது மன்றத்தில் பயன்படுத்தக்கூடிய நடைமுறை ஏடு

4. மூதாதையரின் ஊர் தந்த வரவேற்பினால் திருத்தந்தை மகிழ்வு

5. தூரின் பேராலயத்தில் புனிதத் துணியின் பொதுவணக்கம் நிறைவு

6. 'இறைவா உமக்கே புகழ்' திருமடலுக்கு பாகிஸ்தானில் வரவேற்பு

7. திருமடலின் கருத்துக்கள், வியட்நாம் கலாச்சரத்துடன் தொடர்புடையவை

8. 'பருவநிலை மாற்றம் 50 ஆண்டு நல முன்னேற்றங்களை பாதிக்கலாம்'
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : உரையாடல்கள், உடன்பிறந்தோர் உணர்வை விதைக்கும்

ஜூன்,24,2015. போரினாலும், வெறுப்பினாலும் காயப்பட்டிருக்கும் நம் இன்றைய உலகில், உரையாடல்களை வளர்க்க மேற்கொள்ளப்படும் சிறு செயல்பாடுகள், அமைதியையும், உடன்பிறந்தோர் உணர்வையும் இவ்வுலகில் விதைக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கத்தோலிக்க, புத்த உரையாடலில் கலந்துகொள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வருகை தந்துள்ள உறுப்பினர்களை, இப்புதன் காலை, திருத்தந்தை, அருளாளர் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு, தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
ஜூன் 23, இச்செவ்வாய் முதல், 27, வருகிற சனிக்கிழமை முடிய, உரோம் நகருக்கு அருகே அமைந்துள்ள காஸ்தல் கந்தோல்போ என்ற இடத்தில் Focolare என்ற அமைப்பினரின் தலைமையகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஆஞ்சலஸ், மற்றும் வாஷிங்க்டன் ஆகிய நகரங்களிலிருந்து உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர்.
பல்சமய உரையாடல் திருப்பீட அவை, Focolare அமைப்பு, மற்றும் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழு ஆகியவை இணைந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கினை, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran அவர்கள் துவக்கி வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கிறிஸ்தவ சபைகளின் உலக அவைக்கு திருத்தந்தையின் செய்தி

ஜூன்,24,2015. துன்புறும் மனித சமுதாயத்திற்குப் பணியாற்ற, நமது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, உரையாடல் முயற்சிகளைத் தொடரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று அனுப்பிய ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையும், கிறிஸ்தவ சபைகளின் உலக அவையும், ஒருங்கிணைந்த முயற்சிகளில் ஈடுபட செயற்குழுவை உருவாக்கிய 50ம் ஆண்டு நிறைவையொட்டி, கிறிஸ்தவ சபைகளின் உலக அவையின் பொதுச் செயலர், அருள்திரு முனைவர், Olav Fykse Tveit அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இச்செவ்வாய் மாலை உரோம் நகரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch அவர்கள், திருத்தந்தை அனுப்பிய இச்செய்தியை, கூட்டத்தின் துவக்கத்தில் வாசித்தார்.
உலகில் தற்போது நிலவும் எதார்த்தங்கள், நாம் கொண்டிருக்கும் கருத்துக்களைவிட முக்கியமானவை என்று, Evangelii gaudium என்ற தன் அறிவுரை மடலில் கூறியுள்ளதை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க, கிறிஸ்தவ சபைகள் இன்னும் அதிகமான வழிகளில் உலகின் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு இன்று எழுந்துள்ள பிரச்சனைகளை கத்தோலிக்கரும், கிறிஸ்தவரும் திறந்த மனதுடன் சந்திக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை, இச்செய்தியில் விடுத்துள்ளத் திருத்தந்தை, அந்த ஒன்றிப்புக்காக ஒரு செபத்துடன் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஆயர்கள் பொது மன்றத்தில் பயன்படுத்தக்கூடிய நடைமுறை ஏடு

ஜூன்,24,2015. இவ்வாண்டு அக்டோபர் 4ம் தேதி முதல், 25ம் தேதி முடிய, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 14வது ஆயர்கள் பொது மன்றத்தில் பயன்படுத்தக்கூடிய, Instrumentum Laboris எனப்படும் நடைமுறை ஏடு, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.
திருப்பீடத்தின் செய்தித் தொடர்பகத்தில், செய்தியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், ஆயர்கள் பொது மன்றத்தின் பொதுச் செயலர், கர்தினால் லொரென்சோ பால்திசேரி, (Lorenzo Baldisseri), பொது மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர், கர்தினால் பீட்டர் எர்டோ (Peter Erdo), மற்றும் சிறப்புச் செயலர், பேராயர், ப்ருனோ ஃபோர்த்தே (Bruno Forte) ஆகியோர் இந்த ஏட்டைக் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தற்போது வெளியாகியிருக்கும் நடைமுறை ஏடு, பொது மன்றத்தில் கலந்துகொள்வோருக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும், இந்த நடைமுறை ஏட்டில் மூன்று பகுதிகள் உள்ளன என்றும் கர்தினால் பால்திசேரி அவர்கள் விளக்கினார்.
குடும்பம் விடுக்கும் சவால்களுக்குச் செவிசாய்ப்பது, குடும்பம் என்ற அழைப்பை பகுத்துணர்வது, இன்றைய உலகில் குடும்பம் என்ற பணி, ஆகியவை இந்த மூன்று பகுதிகள் என்பதை கர்தினால் பால்திசேரி அவர்கள் செய்தியாளர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
வெளியிடப்பட்டிருக்கும் இந்த நடைமுறை ஏடு, எவ்வகையிலும் திட்டவட்டமான முடிவுகளைக் கூறும் ஏடு அல்ல என்றும், நடைபெறவிருக்கும் பொது மன்றத்தில் கருத்துப் பரிமாற்றங்களைத் துவக்கிவைக்க மட்டுமே இந்த ஏடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், செய்தியாளர்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
"திருஅவையிலும், இன்றைய உலகிலும் குடும்பங்களின் அழைப்பும், பணியும்" என்ற மையக் கருத்துடன் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் பொது மன்றத்தின் அமர்வுகள், எவ்வகையில் நடைபெறும் என்பதும், இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் விவரிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மூதாதையரின் ஊர் தந்த வரவேற்பினால் திருத்தந்தை மகிழ்வு

ஜூன்,24,2015. தன் மூதாதையரின் ஊரில் தனக்குக் கிடைத்த வரவேற்பு தான் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக இருந்ததென்றும், அது தன்னை மிகவும் மகிழ்வடையச் செய்ததென்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
ஜூன் 21, 22 ஆகிய இருநாட்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் தூரின் நகரில் மேற்கொண்ட பயணத்தின்போது, அவரது உறவினர்கள் அறுவரின் குடும்பங்களைச் சேர்ந்த 30 பேரைச் சந்தித்தது குறித்து, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் வெளியிட்ட குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தந்தை, மாரியோ பெர்கோலியோ அவர்கள், 1908ம் ஆண்டு, திருமுழுக்கு பெற்ற புனித தெரேசா ஆலயத்தில் சிறிது நேர செபத்தில் ஈடுபட்டத் திருத்தந்தை, குடும்பத்தை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது மன்றத்திற்காக தன் மூதாதையரின் கோவிலில் செபித்ததாகக் கூறினார்.
திருத்தந்தையின் தூரின் நகரப் பயணத்தையும், புனித தோன் போஸ்கோ அவர்கள் பிறந்ததன் 2ம் நூற்றாண்டு நிறைவையும் ஒட்டி, தூரின் நகரில் பாதுகாக்கப்பட்டு வரும் இயேசுவின் அடக்கத்தின்போது, அவரது உடலை மூடியிருந்த புனிதத் துணி, ஜூன் 24, இப்புதன் முடிய மக்களின் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட்டிருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. தூரின் பேராலயத்தில் புனிதத் துணியின் பொதுவணக்கம் நிறைவு

ஜூன்,24,2015. திருமண உறவு, புனிதமானது, பிரிக்க முடியாதது என்பதை வலியுறுத்த, புனித திருமுழுக்கு யோவான் தன் உயிரைத் தியாகம் செய்தார் என்று தூரின் நகரப் பேராயர் Cesare Nosiglia அவர்கள் கூறினார்.
இயேசுவின் அடக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்ட புனிதத் துணி, இவ்வாண்டு ஏப்ரல் 19, ஞாயிறு முதல், தூரின் நகரின் பேராலயத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பொது வணக்கம், ஜூன் 24, இப்புதனன்று கொண்டாடப்பட்ட திருமுழுக்கு யோவான் பிறந்த நாளன்று நிறைவுக்கு வந்தது.
இப்புதன் காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிறைவுப் பலியை தலைமையேற்று நடத்திய பேராயர் Nosiglia அவர்கள், ஒருவர் கொண்டிருக்கும் ஆழமான விசுவாசத்தையும் அன்பையும் பறைசாற்றத் தேவையான துணிவிற்கு, திருமுழுக்கு யோவான் தலை சிறந்த எடுத்துக்காட்டு என்று, தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூரின் நகருக்கு வருகை தந்தது, அவ்வூர் மக்களின் விசுவாசத்தை உலகறியச் செய்வதற்கு ஒரு தகுந்த தருணமாக அமைந்தது என்பதையும், பேராயர் Nosiglia அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.
தூரின் நகரில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், தொடர்ந்து நம்பிக்கையோடு நாம் பயணம் செய்வதற்கு, திருத்தந்தையின் வேண்டுதல்களும், திருமுழுக்கு யோவானின் பாதுகாவலும் நமக்கு உண்டு என்று, பேராயர் Nosiglia அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. 'இறைவா உமக்கே புகழ்' திருமடலுக்கு பாகிஸ்தானில் வரவேற்பு

ஜூன்,24,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இறைவா உமக்கே புகழ்' (Laudato sì) என்ற திருமடலை, பாகிஸ்தான் தலத்திருஅவை மிகுந்த மகிழ்வுடன் வரவேற்கிறது என்று பாகிஸ்தான் பேரவையின் நீதி அமைதிப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் ஜோசப் அர்ஷத் (Joseph Arshad) அவர்கள் கூறினார்.
Fides கத்தோலிக்கச் செய்திக்கு, ஆயர் அர்ஷத் அவர்கள் அனுப்பியுள்ள ஒரு குறிப்பில், ஏழைகள், மற்றும் தேவையில் இருப்போர் உரிமைகளுக்காக, திருத்தந்தை இம்மடல் வழியே குரல் கொடுத்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
பூமிக் கோளத்தைக் குறித்து எழுப்பப்படும் பல கவலைகளை, தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளத் திருத்தந்தை, இறைவனின் படைப்பு, வாழ்வின் மதிப்பை வலியுறுத்துகிறது என்பதையும் திருத்தந்தை விளக்கிக் கூறியுள்ளார் என்று ஆயர் அர்ஷத் அவர்கள் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் இறுதியில் பாரிஸ் மாநகரில், ஐ.நா. அவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காலநிலை மாற்றம் குறித்தக் அகில உலகக் கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல், பெரிதும் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக ஆயர் அர்ஷத் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

7. திருமடலின் கருத்துக்கள், வியட்நாம் கலாச்சரத்துடன் தொடர்புடையவை

ஜூன்,24,2015. பொருளாதார முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டிருக்கும் வியட்நாம் நாடு, சுற்றுச் சூழலுக்கு பெரும் ஆபத்துக்களை உருவாக்கி வருகிறது என்று வியட்நாம் தலத்திருஅவை கவலை வெளியிட்டுள்ளது.
'இறைவா, உமக்கே புகழ்' (Laudato sì) என்ற திருமடலின் பின்னணியில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்புடன் வியட்நாமின் ஹோ சி மின் நகரில் கருத்தரங்கு ஒன்றை தலத்திருஅவை ஏற்பாடு செய்தது.
"நாம் யாரும் இயற்கையைப் படைக்கவில்லை, இயற்கையின் வளங்கள் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் சொந்தமானதே தவிர, ஒரு சில செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல" என்று, 2009ம் ஆண்டு, கர்தினால் Pham Minh Man அவர்கள் வெளியிட்ட வார்த்தைகள், இக்கருத்தரங்கின் துவக்கத்தில் கூறப்பட்டது.
திருத்தந்தை வெளியிட்டுள்ள 'இறைவா, உமக்கே புகழ்' என்ற திருமடலின் கருத்துக்கள், வியட்நாம் கலாச்சரத்துடன் தொடர்புடைய கருத்துக்களாக உள்ளன என்று கிறிஸ்தவர் அல்லாதவரும் கூறி வருகின்றனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஹோ சி மின் நகரைச் சுற்றி இயங்கிவரும் 100க்கும் அதிகமான பன்னாட்டு தொழிற்சாலைகள், ஒவ்வொரு நாளும், 13,40,000 கன மீட்டர் கழிவு நீரை Dong Nai நதியில் கலக்கிறது என்று இக்கருத்தரங்கில் புள்ளி  விவரம் ஒன்று வெளியிடப்பட்டது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

8. 'பருவநிலை மாற்றம் 50 ஆண்டு நல முன்னேற்றங்களை பாதிக்கலாம்'

ஜூன்,24,2015. கடந்த ஐம்பது ஆண்டுகளில் மனிதகுலம் அடைந்துள்ள உடல் நல முன்னேற்றங்களை பருவநிலை மாற்றம் மீண்டும் பின்னோக்கி நகர்த்திவிடும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
The Lancet எனப்படும் அறிவியல் இதழில் (the Lancet/UCL commission) எழுதியுள்ள ஐரோப்பிய மற்றும் சீன அறிவியலாளர்கள், மோசமான காலநிலை மாற்றங்கள், தொற்று நோய்களும், சத்துக்குறைபாட்டு நோய்களும், மனஅழுத்த நோய்களும் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.
பெட்ரோலிய எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற வழிகளில், பருவநிலை மாற்றத்தின் ஆபத்தைக் குறைக்கமுடியும் என்றும், நலவாழ்வுச் சூழலின் நன்மைகளை அடையமுடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
புவி வெப்பநிலைக் கூடுதல் இரண்டு டிகிரியை விட அதிகமாவதை தடுப்பதற்கு அரசுகள் தகுந் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கோரியுள்ளனர்.

ஆதாரம் : The Guardian/BBC / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...