Thursday, 11 June 2015

செய்திகள்-10.06.15

செய்திகள்-10.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால்கள் சிறப்பு குழுவின் பத்தாவது ஆலோசனைக் கூட்டம்

2. அடிப்படை மருந்துகள் மூன்றில் ஒரு பகுதியினருக்குக் கிடைப்பதில்லை

3. திருப்பீடத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் ஒப்பந்தம்

4. மதச் சுதந்திரமும், பன்முகக் கலாச்சாரமும் குடியரசின் அடிப்படை

5. முதுபெரும் தந்தையர் ஐவரும் வெளியிட்டுள்ள அறிக்கை

6. விவசாயிகளுக்கு அநீதி - கர்தினால் ஜார்ஜ் அலஞ்சேரி

7. மோசுல் நகரம் கைப்பற்றப்பட்டதன் முதலாம் ஆண்டு

8. பெண்களுக்கு மாண்பு, சமுதாய வளர்ச்சியின் அளவுகோல்
------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால்கள் சிறப்பு குழுவின் பத்தாவது ஆலோசனைக் கூட்டம்

ஜூன்,10,2015 திருப்பீடத்தின் நிதிநிலைமை மற்றும் பொருளாதாரம், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு, திருப்பீடத்தின் தொடர்புசாதனங்கள் ஆகியவை, திருத்தந்தையுடன் கர்தினால்களின் சிறப்பு குழு மேற்கொண்ட பத்தாவது ஆலோசனைக் கூட்டங்களில் பேசப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர் பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
உலகின் பல நாடுகளிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தேர்தெடுக்கப்பட்டு, கடந்த ஈராண்டளவாய் செயலாற்றிவரும் ஒன்பது கர்தினால்களின் சிறப்புக் குழு, ஜூன் 8, இத்திங்கள் முதல் 10, இப்புதன் முடிய வத்திக்கானில் மேற்கொண்ட 10வது ஆலோசனைக் கூட்டங்களில் திருத்தந்தையும் பெருமளவில் கலந்துகொண்டார் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் இப்புதன் மதியம் செய்தியாளர்களிடம் கூறினார்.
திருப்பீடத்தின் நிதிநிலைமை மற்றும் பொருளாதாரம் குறித்து, கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்களும், சிறுவர் சிறுமியரின் பாதுகாப்பு குறித்த விவரங்களை கர்தினால் ஷான் பாட்ரிக் ஒ'மாலி அவர்களும் அறிக்கைகள் சமர்ப்பித்தபின், அவை குறித்த விவாதங்கள் நடைபெற்றன என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.
திருப்பீடத்தின் தொடர்புசாதன நிறுவனங்களாக இயங்கும் வத்திக்கான் வானொலி, வத்திக்கான் தொலைக்காட்சி, L'Osservatore Romano என்ற நாளிதழ் ஆகியவை இன்னும் தகுந்த முறையில் ஒருங்கிணைக்கப்படும் முயற்சிகள் குறித்த ஆய்வுகளுக்கு கர்தினால்கள் குழு ஆதரவு தெரிவித்துள்ளது என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.
சுற்றுச்சூழல் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் எழுதப்பட்டு, விரைவில் (ஜூன் 18) வெளியாகவிருக்கும் சுற்றுமடல் குறித்த விவரங்கள், கர்தினால்கள் குழுவின் இறுதி அமர்வில் பேசப்பட்டன என்றும், இக்கர்தினால்கள் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் மாதம் 14 முதல் 16 முடிய நடைபெறும் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. அடிப்படை மருந்துகள் மூன்றில் ஒரு பகுதியினருக்குக் கிடைப்பதில்லை

ஜூன்,10,2015 தேவையான, அடிப்படை மருந்துகளும், தடுப்பூசிகளும் உலக மக்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்குக் கிடைப்பதில்லை என்று ஐ.நா.நலவாழ்வு நிறுவனமான WHO கூறுவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், உலக வர்த்தக நிறுவனமான WTO, ஜெனீவாவில், ஜூன் 10, இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள், வறுமை, கல்வியறிவின்மை, குழந்தைகள் மரணம் என்ற மூன்று விடயங்களில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
மில்லென்னிய இலக்குகள் நோக்கி இவ்வுலகம் நடைபயின்றாலும், வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் உதவிகள் இன்னும் தீவிரமடையாவிடில், அந்நாடுகள் மில்லென்னிய இலக்குகளை அடைவது கடினம் என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

3. திருப்பீடத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் ஒப்பந்தம்

ஜூன்,10,2015 திருப்பீடத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் அரசு சார்ந்த ஓர் ஒப்பந்தம் முதன்முறையாகக் கையெழுத்திடப்பட்டிருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
'வரி ஏய்ப்பு விடயங்களுக்கு எதிராக போராடுதல்' என்ற கருத்தில், திருபீடத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தம் குறித்து, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் (Paul Richard Gallagher) அவர்கள் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
கடந்த ஐந்தாண்டளவாக, பண விடயங்களில் வெளிப்படையான, நேர்மையான வழிகளை உறுதிசெய்ய, திருப்பீடமும், வத்திக்கான் அரசும் முயன்று வருகின்றன என்று குறிப்பிட்ட பேராயர் காலகர் அவர்கள், தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள இவ்வொப்பந்தம் இம்முயற்சிகளை மீண்டும் உறுதி செய்வதாக அமையும் என்று கூறினார்.
அயல்நாட்டுக் கணக்கு வழக்குகளில், வரி ஏய்ப்பு முயற்சிகள் இடம்பெறாவண்ணம், திருப்பீடமும், அமெரிக்க ஐக்கிய நாடும் செய்துள்ள இவ்வொப்பந்தம், இவ்விரு நாடுகளின் அரசியல் வரலாற்றில் முதல் முயற்சி.
இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில், திருப்பீடத்தின் சார்பில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு சார்பில், அமெரிக்க அரசின் திருப்பீடத் தூதர், கென்னெத் ஹெக்கெட் (Kenneth F. Hackett) அவர்களும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

4. மதச் சுதந்திரமும், பன்முகக் கலாச்சாரமும் குடியரசின் அடிப்படை

ஜூன்,10,2015 உண்மையான மதிப்புடனும், திறந்த மனதுடனும் மதப் பாரம்பரியங்களுக்கிடையே மேற்கொள்ளப்படும் சந்திப்புக்கள், சமுதாயத்திற்கும், அரசியல் உலகிற்கும் நன்மை பயக்கும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
போஸ்னியா-ஹெர்சகொவினா நாட்டின் தலைநகர் சரயேவோவில் இத்திங்களன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் சரயேவோவில் நடைபெறவிருக்கும் பன்னாட்டு சமய, கலாச்சார கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யும் வகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 'அனைவரையும் உள்ளடக்கும் சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்' என்ற தலைப்பில், பேராயர் காலகர் அவர்கள் உரையாற்றினார்.
மனித இயல்பைக் குறித்து, பழம்பெரும் மதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில்தான் மனிதக் கலாச்சாரம் வளர்ந்துள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது என்று பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
உலகின் குடியரசுகள் நலமாக இயங்குவதற்கு, மதச் சுதந்திரமும், பன்முகக் கலாச்சாரமும் அடிப்படையான அம்சங்கள் என்பதை, பேராயர் காலகர் அவர்களின் உரை வலியுறுத்தியது.

ஆதாரம் : VIS / வத்திக்கான் வானொலி

5. முதுபெரும் தந்தையர் ஐவரும் வெளியிட்டுள்ள அறிக்கை

ஜூன்,10,2015 சிரியா நாட்டைவிட்டு வெளியேறும் கிறிஸ்தவர்களை நாங்கள் கண்டனம் செய்யவில்லை; அதேவேளையில், கிறிஸ்தவராய் வாழ்வதென்பது, பெரும் துன்பங்களை எதிர் கொள்வதற்குத் தரப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று, அந்தியோக்கு கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையர் ஐவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மெல்கத்திய கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை, 3ம் கிரகரி லஹாம், மாரனைட் முதுபெரும் தந்தை, கர்தினால் பெக்காரா புத்ரோஸ் ராஹி, சிரியக் கத்தோலிக்க முதுபெரும் தந்தை, 3ம் இக்னேசியஸ் யுனான், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, யோவான் யாஸிகி, மற்றும் சிரியக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, இரண்டாம் இக்னேசியஸ் ஆப்ரேம் ஆகிய ஐவரும் சிரியாவின் தமஸ்கு நகரில் கூடிவந்தபோது, இவ்வறிக்கையை வெளியிட்டனர்.
பொதுவாக, முதுபெரும் தந்தையரின் ஆண்டுக் கூட்டம் லெபனானில் நடைபெறும் என்றும், இவ்வாண்டு, தமஸ்கு நகர் கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையி, இக்கூட்டம் அந்நகரில் நடத்தப்பட்டது என்றும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
பன்னாட்டு அரசுகளின் ஆக்கப்பூர்வமான தலையீடு, மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் ஒற்றுமை ஆகிய இரு கருத்துக்களும், முதுபெரும் தந்தையரின் கூட்டத்தில் சிறப்பாக விவாதிக்கப்பட்டன என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி

6. விவசாயிகளுக்கு அநீதி - கர்தினால் ஜார்ஜ் அலஞ்சேரி

ஜூன்,10,2015 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்த கேரள அரசு, அவர்களுக்குரிய தொகையை மூன்று மாதங்களாக தராமல் இருப்பது அநீதி என்று சீரோ மலபார் திருஅவைத் தலைவர், கர்தினால் ஜார்ஜ் அலஞ்சேரி அவர்கள் கூறினார்.
சரியான விளைச்சலும், அறுவடையும் இன்றி, துன்பத்தில் வாடும் விவசாயிகளுக்கு உரியத் தொகையை அரசு இன்னும் அளிக்காமல் இருப்பது, விவசாயிகளை இன்னும் அதிகத் துன்பத்தில் ஆழ்த்தும் என்று கர்தினால் அலஞ்சேரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
கேரளாவின் குட்டநாடு எனுமிடத்தில் விவசாயிகள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கர்தினால் அலஞ்சேரி அவர்கள், அண்மித்துவரும் மழைக்காலம், விவசாயிகளின் வறுமையை இன்னும் அதிகரிக்கும் என்று எடுத்துரைத்தார்.
கேரள அரசு, விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல்லுக்கு உரியத் தொகையாக, 375 கோடி ரூபாய் தரவேண்டியுள்ளது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

7. மோசுல் நகரம் கைப்பற்றப்பட்டதன் முதலாம் ஆண்டு

ஜூன்,10,2015 சிரியா நாட்டின் மோசுல் நகரிலிருந்து வேரோடு அகற்றப்பட்ட கிறிஸ்தவர்களின் மனங்களைப் புண்படுத்தும் முயற்சிகளில், ISIS தீவிரவாதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று மோசுல் மறைமாவட்டத்தைச் சேர்ந்த, சிரிய கத்தோலிக்க அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
2014ம் ஆண்டு ஜூன் 9,10 ஆகிய தேதிகளில், ISIS தீவிரவாதிகளால் மோசுல் நகரம் கைப்பற்றப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், புனித எப்ரேம் பெயரைத் தாங்கிய சிரிய கத்தோலிக்க ஆலயத்தை, ஒரு மசூதியாக மாற்றும் முயற்சியில் ISIS அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகையச் செயல்கள், ஏற்கனவே புண்பட்டிருக்கும் கிறிஸ்தவ மனங்களை இன்னும் காயப்படுத்துகின்றன என்று சிரிய கத்தோலிக்க அருள் பணியாளர் Georges Jahoula அவர்கள் கூறினார்.
மோசுல் நகர், ISIS தீவிரவாதிகள் பிடியில் சிக்கியபின், அங்கு பாதுக்காக்கப்பட்டு வந்த கிறிஸ்தவ பாரம்பரியச் சின்னங்கள் அனைத்தும், கடந்த ஓராண்டில், முற்றிலும் அழிவுறும் நிலையில் உள்ளன என்று, அனைத்துலக சமயச் சுதந்திரக் கழகம் இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 1700 ஆண்டுகளுக்கும் மேலாக, கிறிஸ்தவம் வேரூன்றி வளர்ந்துவந்த மோசுல் நகரில் வாழ்ந்த 5 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள், அந்நகரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வெளியான இவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி

8. பெண்களுக்கு மாண்பு, சமுதாய வளர்ச்சியின் அளவுகோல்

ஜூன்,10,2015 பெண்களுக்குரிய மாண்பை வழங்குவதே ஒரு சமுதாயம் தகுதியான வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நிர்ணயிக்கும் அளவுகோல் என்று அர்ஜென்டீனா ஆயர்கள் கூறியுள்ளனர்.
அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் பொதுநிலையினர் மற்றும் மேய்ப்புப்பணி பணிக்குழு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, அந்நாடு பெண்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமைகளை வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.
பெண்கள் சந்திக்கும் வன்முறைகளின் பெரும்பகுதி, அவர்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்து எழுவது வேதனை தருகிறது என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 26.2 விழுக்காட்டினர் வறுமையில் துன்புறுகின்றனர் என்று, அர்ஜென்டீனாவிலிருந்து அண்மையில் வெளியான ஓர் அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment